பாத்திரங்கள் திருமதி கேபுலட் , செவிலி மற்றும் ஜூலியட்  
மேலும் மாளிகைப் பணியாளர்கள்

திருமதி கேபுலட்

செவிலி எங்கே என் மகள் ?
அவளை உடனே அழைத்து வா என்னிடம்

செவிலி ( வாய் நீளம் )

பன்னிரெண்டு வயதில் என் கற்பின் மீது
ஆணையாக சொல்கிறேன்.
நான் அவளை அப்பொழுதே வரச் சொல்லி விட்டேன்
ஆமாம் எங்கே அந்தப் பெண் ஜுலியட் ?
ஜுலி ஜுலி ….

( ஜுலியட் உள்ளே நுழைகிறாள் )

ஜுலியட் :
இங்கே யார் என்னை அழைத்தது ?

செவிலி :
உனது தாய்

ஜுலியட் :
அம்மா நான் வந்து விட்டேன்
உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் ?

திருமதி கேபுலட் :

நான் சொல்ல வந்தது என்னவென்றால்
( செவிலியைப்பார்த்து ) செவிலி நீ வெளியே செல்
( மறுபடி சற்று யோசித்து )
சரி சரி செவிலி நீ இங்கேயே இரு
உனக்குத் தான் எங்கள்
இரகசியமெல்லாம் தெரியுமே ?
என்னுடைய மகளைப் பற்றி அவள் குழந்தையாயிருக்கும் போதிருந்தே உனக்கு எல்லாம் தெரியுமே

செவிலி :

அம்மா இந்த நிமிடம் வரையிலும்
அவளுடைய வயது
என்ன என்பதை என்னால் சொல்ல முடியும்

திருமதி கேபுலட் :

இவளுக்கு பதினான்கு வயதே
இன்னும் நிரம்பவில்லையே !

செவிலி :

பதினான்கு வயது தான் என்று என்னாலும் சொல்ல முடியும்
ஆனாலும் அதற்கு ஆகஸ்ட் ஒன்று வர வேண்டுமே
ஆமாம் அதற்கு இன்னும் எத்தனை நாள் இருக்கிறது ?

திருமதி கேபுலட் :

அதற்கு இன்னும் இரண்டு வாரங்களும்
சில ஒற்றை நாட்களும் உள்ளன

செவிலி:

ஒற்றையாக இருந்தாலும் இரட்டையாக இருந்தாலும்
ஜுலை முப்பத்தி ஒன்று வந்தால் அவளுக்கு
பதினான்கு வயது ஆகிவிடும்

ஜுலியும் என் மகள் சூசனும்

(சூசன் அவள் ஆன்மா கடவுளுக்குள் அடங்கிவிட்டது ஆனால்
அவள் இறந்து விட்டாள் அவள் எனக்குள் அடங்காத அற்புதம் )

ஆமாம் நான் ஏற்கனவே சொன்னது போல
ஜுலை வந்தால் ஜுலியட்டிற்கு வயது பதினான்கு
ஆமாம் அவளுக்கு வயது பதினான்கு தான்
அது நன்றாக எனக்கு ஞாபகம் இருக்கிறது.

அது நடந்தது
ஆமாம் புவி அதிர்ச்சி நடந்து
பதினொரு ஆண்டுகள் கழிந்த பின்னர் தான்
அந்த நிகழ்ச்சி நடந்தது.

அன்று தான் அவள் என் மார்பிலிருந்து
பால் உறிஞ்சியதை நிறுத்தய நாள்.
அதை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது.

ஆமாம் அன்று தான் நான் என் மார்பில்
கசப்பு மருந்தை தடவிட்டு
புறா வீட்டுச்சுவரில் சாய்ந்தபடி
சிறிது நேரம் வெய்யிலில் உட்கார்ந்திருந்தேன்.

நீங்களும் உங்கள் கணவரும் அப்பொழுது
மாண்டுவாவில் இருந்தீர்கள்
ஓ எனக்குத் தான் என்ன அற்புதமான ஒரு நினைவாற்றல் !

ஆமாம் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
ஜுலியட் என் மார்புக்காம்புகளில் வாய் வைத்து
பால் குடிக்க முயற்சி செய்தாள் .

அது அப்படி கசந்தது விட்டது போல அவளுக்கு
அதன் மீது அவ்வளவு கோபம் வந்து விட்டது அவளுக்கு

அப்போது தான் நில நடுக்கம் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது .
புறா வீடே கட கடவென்று ஆடத் தொடங்கியது.

நீங்கள் என்னை அந்த வீட்டுக்குப் போகாதே என்று சொல்லவேயில்லை.
அது நடந்து பதினோரு வருடம் ஆகிவிட்டது.
ஆனால் நேற்று நடந்தது போல் நினைவில் நிற்கிறது.

ஜுலியட் அப்போது தான் எழுந்து நிற்கப் பழகியிருந்தாள். உண்மையைச் சொன்னால் எப்போதும்
அந்த இடத்தை சுற்றி ஓடி ஆடிக்கொண்டு தான் இருப்பாள்.

ஏனென்றால் அதற்கு முதல் நாள் தான்
அவள் கீழே விழுந்து தன் நெற்றியை
காயப்படுத்திக் கொண்டாள்.

என்னுடைய கணவர் ரொம் ஜாலியான பேர் வழி

( ஆனால் கடவுள் அவரை எடுத்துக் கொண்டார் )

அவர் ஜுலியட்டை தூக்கி விட்டு

‘’ முகம் குப்புற விழுந்திட்டியா ஜுலியட்
ஆனா நல்லா வளர்ந்ததுக்கு அப்புறம்
நீ குப்புற விழுக மாட்ட மல்லாக்க விழுவதான ?
என்று கிண்டலாக கேட்டார் .

உடனே அழுகையை நிறுத்திட்டு
இந்த குட்டி என்ன சொல்லுச்சு தெரியுமா
‘’ ஆமா ‘’ அப்டின்னு

அய்யோ எனக்கு சிரிப்புன்னா சிரிப்பு
அப்படி ஒரு சிரிப்பு
ஆயிரம் வருசம் ஆனாலும்
அதை என்னால மறக்கவே முடியாது பாருங்க

அவர் கேட்கிறார் இல்லையா ஜுலி ? அப்டின்னு
அவள் சொல்லுறா ஆமா ஆமா
( சிரிப்பு சிரிப்பு )

திருமதி கேபுலட்
போதும் நிறுத்து இந்தக் கதையை

செவிலி

சரி மேடம் ஆனா அதை நினைக்கும் போது
என்னால சிரிப்பை அடக்கவே முடியாது.
அவர் கேட்குறார் ‘’ இல்லையா ஜுலி ?’’

இவள் உடனே அழுகையை நிறுத்திட்டு
சொல்லுறா ஆமா ஆமா “

இவள் நெற்றியை பார்த்தா
பூசனிபோல பொம்முன்னு வீங்கியிருக்கு.
என்னோட புருசன் கேட்குறார்
‘’ முகம் குப்புற விழுந்திட்டியா ஜுலியட்
நல்லா வளர்ந்ததுக்கு அப்புறம் நீ மல்லாக்க விழுவதான ?

உடனே இந்தக்குட்டிப் பிசாசு
அழுகையை நிறுத்திட்டு சொல்லுது ‘’ ஆமா ஆமா ‘’

ஜுலியட்
அம்மா தாயே இந்தக் கதையை இத்தோட நிறுத்துறியா?

செவிலி

என் சிரிப்பு தன்னால நின்னு போச்சுன்னா
நான் நிறுத்திடறேன்.
இல்லேன்னா என்னால நிறுத்த முடியாது.

ஆனால் நான் வளர்த்த குழந்தைகள்ளயே
அழகான குழந்தை நீ தான்.
நீ கல்யாணம் பண்ணிக்கிறதை மட்டும்
நான் என் கண்ணால பார்த்துட்டேன்னா
என்னோட எல்லா ஆசையும் நிறைவேறிடும்

திருமதி கேபுலட்

சரி தான் சரிதான் திருமணத்தைப் பற்றி தான்
நான் உங்களோடு உரையாட வேண்டுமென்று
நினைத்திருந்தேன்.

ஜுலியட் என் செல்ல மகளே நீயே சொல்லு
திருமணம் செய்து கொள்வதைப்பற்றி
நீ என்ன நினைக்கிறாய் ?

ஜுலியட்

உண்மையைச் சொன்னா அதைப்பற்றி
நான் ஏதும் நினைக்கவேயில்லை

செவிலி

உண்மையைச் சொல் ஜுலி
நீ புத்திசாலிப்பெண் இல்லையா ?

அதுவும் என் மார்பிலிருந்து நீ பாலை உறிஞ்சிய போதே
எங்கிட்ட இருந்த அறிவையும் சேர்ந்து
உறிஞ்சிக்கிட்டவ தான நீ
இல்லையா ?

திருமதி கேபுலட்

ஆனால் திருமணத்தைப்பற்றி
இப்பொழுது யோசிக்க வேண்டும் ஜுலியட்

வெரோனாவில் உன்னை விட இளைய வயதுடைய
உயர்குடிப் பெண்களெல்லாம்
திருமணம் செய்து கொண்டு
ஏற்கனவே தாயாகி விட்டார்கள்

ஏன் உன்னுடைய வயதில் நானும்
உனக்கு தாயாகித்தான் இருந்தேன்.

ஆனால் நீ தான் இன்னும்
கன்னியாகவே இருக்கிறாய்

சுருக்கமாகச் சொன்னால்
வீரமிக்க கோமான் பாரிஸ்
உன்னை மணந்து கொள்ள
விருப்பமுடன் இருக்கிறார்.

செவிலி

ஆஹா மிக சிறந்த மனிதர்
செதுக்கி வைத்த சிலை போன்றவர்
உலகமெல்லாம் தேடினாலும்
உனக்கு இப்படி ஒரு ஜோடி அமையாது ஜுலிப் பெண்ணே

திருமதி கேபுலட்

வசந்தத்தில் இப்படி ஒரு மலர்
வெரோனாவில் மலர்ந்ததேயில்லை.

செவிலி
மலரா ? வெறும் மலர் என்று சொல்லாதீர்கள்
அழகிய மலர் என்று சொல்லுங்கள்

திருமதி கேபுலட்

என்ன சொல்கிறாய் ஜுலியட் ?
அவரை நீ காதலிக்கிறாயா ?
இன்று நமது வீட்டில் நடக்கும் இரவு விருந்தில்
அவரும் கலந்து கலந்து கொள்கிறார்.
அங்கே அவர் முகத்தை நீ நன்றாகப் பார்.
அவரது அழகை ரசி

எப்படி அவரது ஆளுமை
அவரது அழகை மெருகூட்டுகிறது என்பதை
கண்டு கொள்.
அவரது அழகு உன் கண்களுக்கு
தெரியவில்லையென்றால்
அவரது கண்களை உற்று நோக்கு

அவரது அழகு இன்னும்
முழுமையடையாமல் இருந்தால்
அதற்கு முழுக் காரணம்
அழகிய மணப்பெண் இன்னும்
அவருக்கு அமையவில்லை
என்பது தான் அர்த்தம்

எப்படி மீனானது கடலில் இருந்து மறைந்து கொள்ள முடியாதோ
அது போலத்தான் உன்னைப்போன்ற அழகிய பெண் அவரைப்போன்ற அழகனிடம் இருந்து
ஓர் நாளும் மறைந்து கொள்ள முடியாது.

அவரை அனைவரும் அழகன் என்றே சொல்கின்றனர்.
அவருக்கு யார் மணமகளாப் போகிறார்களோ
அந்த அதிர்ஷ்ட சாலியை அவர்கள் பேரழகி என்று
கொண்டாடப் போவது உறுதி.

நீ அவரை அடைவதால்
அனைத்தையும் பெற்றுக்கொள்வாய்
இதில் இழப்பதற்கு எதுவுமில்லை

செவிலி

இழப்பதற்கு ஒன்றுமேயில்லை.
ஆனால் அடைவதற்கு நிறைய உண்டு
முதலில் நீ குண்டாகி விடுவாய்.
ஆமாம் ஆண்கள் தானே
பெண்களை குண்டாக்குகிறார்கள்.

திருமதி கேபுலட்

பதில் சொல் ஜுலி
நீ அவரை காதலிக்கிறாயா ?

ஜுலியட்

நான் அவரை நேசிக்க வேண்டும் என்ற நினைப்பில் தான் அவரைப்பார்க்கப் போகிறேன்.
ஆனால் அந்தப் பார்வை என்னை அவரிடம்
அழைத்துச் சென்றால் அவரை விரும்புவேன்.
அப்படி இயற்கையாய் நிகழாத போது
நானாக என் இதயத்தை
அவரிடம் இழந்து விட மாட்டேன்.
உன் அனுமதி இல்லாமல் ஒரு நாளும்
நான் அவரிடம் நெருங்க மாட்டேன் அம்மா

பணியாள்.

சீமாட்டியே !
விருந்தினர்கள் எல்லாம் வீட்டிற்குள் வந்து விட்டனர்.
அவர்களுக்கு அங்கே உணவு பரிமாறப்படுகிறது.
உங்கள் விருந்தினர்கள் உங்களையும் ஜுலியட்டையும்
உடனே வரச்சொல்கின்றனர்.
அங்கே பணியாட்கள் எல்லாம் செவிலியை திட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

விசயங்கள் கை மீறிப்போய்க்கொண்டிருக்கின்றன.
நான் உடனே அங்கே சென்று
அவர்களுக்கு விருந்து பரிமாற வேண்டும்.
நீங்களும் உடனே அங்கே வரவேண்டும்.

( அப்போது பீட்டர் உள்ளே நுழைகிறான்.)

திருமதி கேபுலட்.

ஜூலி ! பிரபு பீட்டர் அங்கே உனக்காக காத்திருக்கிறார்

செவிலி

அங்கே செல் பெண்ணே
இனிய இரவுகள் உனக்கு
இனிய பொழுதுகளை உனக்குத் தரட்டும்

(அனைவரும் மேடையிலிருந்து மறைகிறார்கள்)

மூலம் : ஷேக்ஸ்பியர்
மொழயாக்கம் : தங்கேஸ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *