(மாண்டேக்கின் அரண்மணையில் மாண்டேக் மாண்டேக்கின் மனைவி
திருமதி மாண்டேக் மற்றும் அவர்களின் உறவினன் பென்வாலியோ
ஆகியோர் மட்டுமே அங்கே இருக்கிறார்கள்.)
மாண்டேக் : (பென்வாலியோவைப் பார்த்து) பழைய கலவரத்தை புதிய போராக மாற்றியது யார் ? ஆரம்பிக்கும் போதே
நீ இங்கிருக்கிறாயா ?
பென்வாலியோ : உங்கள் எதிரிகளின் வேலைக்காரர்களும் உங்களது வேலைக்காரர்களும் ஒரு சண்டைக்கு தயாராகி கொண்டிருந்த போது தான் நான் உள்ளே நுழைந்தேன்.
நான் என் கை வாளை உருவியது அவர்களை விலக்கி விடுவதற்குத்தான். ஆனால் ஆத்திரம் கொண்ட டைபால்ட் அங்கே எதிர்பாராமல் தோன்றி அத்தனை காரியங்களையும் கெடுத்து விட்டான். அது மட்டுமல்ல என்னை வாட்போருக்கும் அழைத்து அவமானப்படுத்தி விட்டான்.
காற்றின் மீது வாட்கள் மோதும் கிண் கிண் சப்தம்.
எங்கள் வாட்கள் அங்கங்கே மோதி வளைவுகள் காட்டியபோது. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்து விட்டது- பிறகு அரசர் அங்கே வந்து சேர்ந்த போது ஆரவாரம் அதிகமாகி விட்டது.
திருமதி மாண்டேக் : (பென்வாலியோவைப் பார்த்து ) எங்கே ரோமியோ? இன்று நீ அவனைப் பார்த்தாயயா? நல்ல வேளை அவன் இங்கே
இல்லை அந்த அளவிற்கு மகிழ்ச்சி தான்
பென்வாலியோ : ( திருமதி மாண்டேக்கிடம் ) அம்மா என் மனதில் ஏதேதோ எண்ணங்கள் .விடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கும் முன்பே நான்
விழித்து விட்டேன்.
அப்போதே நகரத்திற்கு மேற்கே அடர்ந்து கிடக்கும் அத்திமரத் தோப்பிற்கு உலாவச் சென்றேன்.
அங்கே எனக்கும் முன்பே வந்து உலாவிக் கொண்டிருந்தது இன்னொரு உருவம். கொஞ்சம் அருகில் சென்று பார்க்கிறேன்.
அடடா அது வேறு யாருமல்ல உங்கள் மகன் ரோமியோ தான்.
நான் அவனை நெருங்கிச் சென்றேன். நான் நெருங்குவதை அறிந்து கொண்டதும் அவன் அங்கிருந்த தோப்புக்குள் சென்று மறைந்து கொண்டான்.
அப்போது தான் அவனும் என்னுடைய மனநிலையிலேயே இருப்பதை அறிந்து கொண்டேன்.
தனிமை விரும்பியாக மாறி விட்ட அவன் அடுத்தவர்கள் அருகில் வருவதை முற்றிலுமாக தவிர்க்கிறான். தனிமை என்பது ஒரு மனநிலை.
நாம் அவனை எவ்வளவுக்கெவ்வளவு தேடிச் செல்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அவன் நம்மை விட்டு தள்ளிச் செல்கிறான்.
அவன் என்னை தவிர்க்க நினைப்பதை நான் உள்ளுணர்வால் அறிந்து கொண்டேன். அதனால் ஆச்சர்யப்படவில்லை ஆனந்தம் தான் கொண்டேன்.
ஆனந்தத்தின் ஆனந்தம் என்னவென்றால் அவன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு என்னையும் தனிமையில் விட்டுச்சென்றது தான்.
மாண்டேக் : (பென்வாலியோவைப் பார்த்து ) அந்த அதிகாலையிலேயே அவனை அங்கே அநேகர் அநேக நாட்கள் கண்டதாக கூறுகிறார்கள். கவலையாக இருக்கிறது.
அவன் அழுத கண்ணீர் துளிகள் எல்லாம் பனித்துளிகளாக மாறி புற்களின் மீது விழுகின்றனவாம்.
அவனது பெருமூச்சுக்கள் மேகத்தின் மீது பரவி பெரும் மழை மேகங்களை உருவாக்குகின்றனவாம்..
ஆனால் அதி உற்சாகமான சூரியன் தூர கிழக்கில் தோன்றி இரவுத்திரையை இழுத்து விட்டு ஆராவின் படுக்கை அறைக்குள் நுழைந்ததும் ரோமியோவை அந்த தோப்பிற்குள் காண முடிவதில்லை. அவன் நேராக அரண்மணைக்குள் நுழைந்து விடுகிறான்.
ஒரு வேளை அவன் ஒளிக்கு அஞ்சி ஒளிந்து கொள்ள இங்கே வந்து விடுகிறானோ என்னவோ ?
உள்ளே நுழைந்ததும் அவனது மாடி அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக்கொள்கிறான். அழகிய காலை வெளிச்சத்தை சிறிதும் அனுமதிப்பதில்லை.
அவனே ஒரு செயற்கையான இருளை உள்ளறைக்குள் உருவாக்கி கொள்கிறான்.
அவனது இந்த மனநிலை அவனுக்கு என்ன கெட்ட செய்தியை கொண்டுவரப் போகிறதோ எங்களுக்கும் தெரியவில்லை.
இப்போது அவனது உடனடித்தேவை ஆறுதல் மட்டுமே..
தகுதியான ஒரு உள்ளம் அவனுக்கு ஆறுதல் தர வேண்டும் .
அவன் விரைவிலேயே தேறுதல் பெற வேண்டும்.
பென்வாலியோ :(( மாண்டேக்கிடம் ) அருமை மாமா அவன் ஏன் அப்படி நடந்து கொள்கிறான் என்று உங்களுக்கு காரணம் தெரியுமா ?
மாண்டேக் : அவன் என்னிடம் ஏதும் கூறவில்லை. எனக்கு எதுவும் காரணம் தெரியாது.
பென்வாலியோ : இதன் காரணத்தை அறிந்து கொள்ள நீங்கள் எந்த முயற்சியும் செய்யவில்லையா ?
மாண்டேக் : முயற்சி செய்யவில்லையா யார் சொன்னது ?
எத்தனை எத்தனை முயற்சிகள் .?
நான் முயன்றேன் முடியவில்லை.
என் நண்பர்கள் முயன்றார்கள் முடியவில்லை.
யார் யார் முயன்றாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவன் அவனுக்கு மட்டுமே நண்பணாக இருக்க முயற்சிக்கிறான்.
அடுத்த நண்பர்களை நாடுவதில்லை.
அவன் அவனுக்கே நல்ல நண்பணாக இருக்கிறானா என்று கூட எனக்குத் தெரியாது.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அவனிடம் ஒரு ரகசியமிருக்கிறது. அந்த இரகசியத்தை அவன் அவனிடமிருந்தே ஒளித்து வைத்திருக்கிறான்.
அவன் ஒரு மொட்டைப்போல் இருக்கிறான். ஆனால் அந்த மொட்டு உலகத்தைப்பார்த்து இன்னும் மலரவேயில்லை.
காரணம் அந்த மொட்டுக்குள் இருக்கும் ஒட்டுண்ணிகள் அந்த மொட்டை உள்ளிருந்தே விசத்தால் தாக்கி கொண்டிருக்கின்றன.
அவன் ஏன் மகிழ்ச்சியற்று இருக்கிறான் என்ற காரணத்தை மட்டும் நாம் கண்டுபிடித்துவிட்டால் அவனை , அவன் சோகத்திலிருந்து வெளியேற்ற அவனுக்கு நாம் உதவ முடியும்
(ரோமியோ அப்போது அரண்மணைக்குள் நுழைந்து கொண்டிருக்கிறான்.)
பென்வாலியோ : (மாண்டேக் திருமதி மாண்டேக் இருவரையும் பார்த்து)
இதோ ரோமியோ வந்து கொண்டிருக்கிறான்.
உங்கள் இருவருக்கும் ஆட்சேபனை இல்லையென்றால்
நீங்கள் இருவரும் இந்த திரைமறைவில் ஒளிந்து கொள்ளுங்கள்.
நான் இன்று ரோமியோவிடம் காரணத்தை கண்டுபிடிக்கிறேன்.
மாண்டேக் : (திருமதி மாண்டேக்கிடம் ) வா இன்று ஒளிந்திருந்து உண்மையான காரணத்தை கண்டுபிடிப்போம்
அதிர்ஷ்டம் நம் பக்கம் தான் உள்ளே வா
(மாண்டேக் திருமதி மாண்டேக் இருவரும் திரைக்குப் பின்னால் மறைகிறார்கள்.)
பென்வாலியோ : குட்மார்னிங் ரோமியோ
ரோமியோ : என்னது இன்னும் நான் கண் திறக்கவில்லையா ?
பென்வாலியோ : இப்போது தான் மணி ஒன்பதாகிறது.
ரோமியோ : நண்பா நீ சோகமாக இருக்கும் போது மணி நத்தை போல நகர்கிறது. அது சரி அதற்குள்ளாகவே என் தந்தை இங்கிருந்து கிளம்பிவிட்டாரா ?
பென்வாலியோ : அது சரி அது என்ன சோகம் அது ?
என் ரோமியோவின் நேரத்தை இப்படி நீட்டித்துக் கொண்டே செல்கிறது ?
ரோமியோ : நேரத்தை பறக்க வைக்கும் மந்திரம் ரோமியோவிடம் இல்லை.
பென்வாலியோ : ரோமியோ நீ காதலுக்குள் இருக்கிறாயா ?
ரோமியோ : இல்லை வெளியே இருக்கிறேன்
பென்வாலியோ : காதலிக்கிறாயா ?
ரோமியோ : ஆம் நான் காதலிக்கிறேன். ஆனால் அவள் என்னை காதலிக்கவில்லை
பென்வாலியோ : மேலோட்டமாகப் பார்த்தால் காதல் மென்மையானதாக தோன்றும்.
ஆனால் அதை அனுபவித்துப் பார்த்தால் தான் அது எவ்வளவு கரடு முரடானது என்று புரியும்.
ரோமியோ : காதல் கண்ணற்றது தான் ஆனால் ஆச்சரியம்
பாதையில் நடப்பதையெல்லாம் அது தன் மனக்கண்ணால்
பார்த்தபடியே தான் இருக்கிறது.
ரோமியோ : சரி எங்கே உணவருந்தலாம்
(பென்வாலியோவின் கரங்களைப் பார்த்து திடுக்கிட்டு )
ஓ என்ன நடக்கிறது இங்கே ?
என்னிடம் நீ எதுவும் சொல்லாவிட்டாலும் கூட எல்லாம் தெரியும் எனக்கு.
இந்த இரத்தம் வெறுப்பினால் விளைந்தது தானே ?
ஆனால் அதைவிட வலிக்க கூடியது காதல் என்று தெரியுமா நண்பா ?
போரிடும் காதல் போரிடும் காதல்
காதல் என்பது வெறுப்பை நேசிப்பது
காதல் என்பது ஒன்றுமில்லாததில் இருந்து ஒன்று வருவது
ஓ அது ஒரு சோக மகிழ்ச்சி
தீவிரமான முட்டாள் தனம்
அழகிய வசந்தம் அது ஆனால் வெறுப்பில் பூக்கிறது
காதல் ஒரே நேரத்தில் எடையுற்றதாகவும் கனமானதாகவும் இருக்கிறது
ஒளியாகவும் இருளாகவும் இருக்கிறது . வெப்பமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது. ஆரோக்கியமாகவும் நோயுற்றதாகவும் இன்னும் விழிப்பாகவும் உறக்கமாகவும் உலவுகிறது.
காதல் எல்லாமாக இருக்கிறது காதலைய தவிர
இது தான் காதல். காதலைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்னை யாரும் காதலிக்கவில்லையென்றாலும் கூட
என்னைப் பார்த்து நீ சிரிக்கிறாயா ?
பென்வாலியோ : இல்லை நண்பா நான் அழுகிறேன்.
ரோமியோ : அடடா நீ ஏன் அழுகிறாய் ?
பென்வாலியோ : உன்னுடைய இதயம் அழுது கொண்டிருக்கிறதே அதற்காக
ரோமியோ : அது தான் காதலின் விதி.
துயரத்தின் எடை ஏற்கனவே என் இதயத்தை அழுத்திக்கொண்டு தான் இருக்கிறது.
பென்வாலியோ : இப்போது உன் இதயத்தை அழுத்திக்கொண்டிருக்கும் காதலின் துயரம்
என் இதயத்திற்குள் புகுந்து துயரத்தை கூட்டுகிறது.
ரோமியோ : பெருமூச்சுக்களில் எழும் பெரும் புகையே காதல்
இதயம் சுத்திகரிக்கப்படுவதால் காதலர்களின் கண்களில்
ஒரு சுடரின் ஒளி உலவுகிறது.
இதயம் நொறுங்குவதால் காதலர்களின் கண்களில் ஒரு கடல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.
காதல் என்பது வேறென்ன ஒரு புத்திசாலித்தனமான பைத்தியகாரத்தனம்
அது ஒரு அபூர்வமான சுவாசிக்கும் மூச்சுத்திணறல்
ஆனால் இனிக்கும் பாதுகாப்பு விடைபெறலாம் நண்பா
பென்வாலியோ : சரி நான் ஒன்று சொல்கிறேன்.
அதுவும் நீ அனுமதித்தால்
இல்லையென்றால் நீ எனக்கு தீங்கு செய்கிறாய்
சரி தானே ?
ரோமியோ : ஓ நானாக நானில்லை நண்பா
என்னையே நான் எப்போதோ இழந்து விட்டேன்
இங்கே நானில்லையே !
இந்த ரோமியோ எங்கே எவ்விடமோ அலைந்து கொண்டிருக்கிறான்.
பென்வாலியோ : அதே சோகத்தோடு சொல்லிவிடு
ரோமியோ நீ யாரைக் காதலிக்கிறாய் ?
ரோமியோ : என்னது துயரத்தை உன்னிடம் சொல்லிவிடவா ? ரோமியோ புலம்ப வேண்டுமா ?
பென்வாலியோ : புலம்ப வேண்டாம் சோகத்தை மட்டும் சொல்லிவிடு
ரோமியோ : நோயுற்ற மனிதனை அவனின் விருப்பப்படி துயரத்தில் உழல விடு. உயிரை வாதித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனிடம்
மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள்…
சோகம் சோகம் சோகம் நண்பா சொல்வதே சோகம்
நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்.
பென்வாலியோ : ஓ ரோமியோ நீ காதலிக்கிறாயா ?
ஓ நண்பா நான் யூகித்தேன் நீ உறுதிப்படுத்தி விட்டாய்
ரோமியோ : சரி தான் நண்பா நீ கண்டுபிடித்து விட்டாய். அவள் அழகி
பென்வாலியோ : அவள் அழகி அடடா என் அவதானிப்பு சரி
உன் காதல் விரைவில் வெற்றி பெறும் .
சரி சரி அம்பை விடு இலக்கை நோக்கி
ரோமியோ : காதலில் உன் இலக்கு தேறாது நண்பா
மன்மதனின் அம்பை அவள் அனுமதிக்கவில்லை.
அவள் டயானாவைப் போல அதிபுத்திசாலி.
அம்புகளை தன் மீது பாயவிடாமல் தன்னை சுற்றி
ஒரு கவசத்தை அமைத்திருக்கிறாள்.
ஆம் கற்பினால் அமைத்த ஒரு கவசம்.
ஆம் காதலின் குழந்தைத்தனமான பலவீனமான அம்புகளால்
ஓர் நாளும் அவளைத் உரசக் கூட இயலாது.
அவள் வசீகரிக்கப்படாமலேயே வாழ்ந்து வருகிறாள்.
அவள் காதலின் கனிவான முற்றுகையில் என்றும் இருப்பதற்கு ஆசைப்படவேயில்லை
மின்னல் தாக்கும் விழிகளின் சந்திப்புகளையும்
அவள் சற்றும் விரும்பவேயில்லை
தங்கத்தாலேயே அபிசேகம் செய்தாலும் காதலுக்கு அவள் மடியில்
சற்றும் இடமில்லை.
அவள் அழகி பணக்காரி ஆனால் உண்மையில் பரமஏழை
ஏனென்றால் அவள் உலகை விட்டு மறையும் போது அவள் அழகும் அவளுடனேயே மறந்து போகும் அல்லவா ?
பென்வாலியோ : அவள் கன்னியாகவே வாழ்ந்து விட வேண்டுமென்று சபதம் எடுத்திருக்கிறாளா ?
ரோமியோ : உண்மை தான் .கன்னியாகவே காலம் கழித்து
அவள் அழகை பாழாக்கி கொண்டிருக்கிறாள்.
அழகு அவளது அகம்பாவத்தால் பட்டினி கிடக்கிறது.
அவளது பிடிவாதம் அவளது அழகை
அத்தனை சந்ததியிடமிருந்தும் பிரித்து வைக்கப்போகிறது.
அவள் அழகி அதை விட புத்திசாலி
அதிபுத்திசாலித்தனத்திற்கும் அதிகமான அழகி
என்னை விரக்தியடையச் செய்தே அவள் பேரின்பம் பெறுகிறாள்.
அவள் என் காதலை துறந்து விட்டேன்
ஆதலால் நான் இறந்து விட்டேன்.
இறந்தவன் ஏன் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் தெரியுமா ?
அவளை பார்ப்பதற்கம் பேசவதற்கும் மட்டும் தான்.
பென்வாலியோ : நான் சொல்வதை கேள் . நீ அவளை நினைக்காதே
ரோமியோ : நினைப்பதை மறப்பதற்கு நீ எனக்கு பாடம் எடு
பென்வாலியோ : ஓ ரோமியோ உன் விழிகளை அகலமாக விரித்து இந்த வீதிகளெங்கும் உலவவிடு. அடுத்த அழகிகளை தேடலாம்.
ரோமியோ : நண்பா அடுத்த பெண்களை ரசிப்பது அவள் அழகைத்தான் அதிகப்படுத்துகிறது.
அழகிய பெண்கள் மகிழ்ச்சிக்காக முகமூடி அணிகிறார்கள்.
ஆனால் அந்த கருப்பு முகமூடி அதற்கு கீழே ஒளிந்திருக்கும்
அபரிதமான அழகைத்ததான் எப்போதும் நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது.
விதியினால் குருடானவன் அவன் பார்வை என்னும் பொக்கிஷத்தை பெற்றிருந்த காலத்தை ஒரு நாளும் மறக்க முடியாது.
அழகிய ஒரு பெண்ணை நீ எனக்கு காட்டு..
அந்த அழகியின் அழகு எனக்கு என்ன தரும் ?
ஒரு குறிப்பு மட்டுமே
அதுவும். என்ன குறிப்பு ?
என்னவளை விட அழகியை
எங்கேயும் காணமுடியாதென்ற குறிப்பு தான் அது.
மறப்பதை நீ எனக்கு மறந்தும் கற்பிக்க முடியாது.
பென்வாலியோ : எப்படி மறப்பதென்று நான் உனக்கு கற்பிக்கிறேன். இல்லையென்றால் அந்த காதலின் மீது ஆணையாக நான் இறந்து விடுகிறேன்.
( இருவரும் மறைகிறார்கள் )
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments