வில்லியம்ஸ் கவிதைதேசத்தின் தினசரி பசியை
நியாயவிலைக் கடைகளின் வழியே
தீர்த்தவர்களுக்கு
துக்க நிவாரணியாய்
தூக்குக் கயிறிருக்கிறது
அரிசியைக் கப்பலேற்றி
அந்நிய செலாவணி ஈட்டிய
அன்றாடங் காய்ச்சிகளின்
கழுத்தை நெறிக்க
தவணை தவறிய கடனிருக்கிறது
அதிகாலைக் கோப்பையில்
ஆவிபறக்கும் தேநீரை
உலகம் முழுக்க விநியோகித்தவனின்
உள்நாக்குத் தாகம் தீர்க்க
முதலாளிகள் இருக்கிறார்கள்
இயற்கை பரிந்துரைத்த
பசிய மாத்திரைகளை
சமையலறைக்கு அனுப்பியவன்
கடைசிக் கையிருப்பையும் பிடுங்க
புதிய வரிகளிருக்கின்றன.
நிறங்களை உடுத்தி
நிர்வாணம் மறைத்தவனின்
அரைக் கச்சையையும் உருவ
அவசரச் சட்டங்கள்
தயாராய் இருக்கின்றன.
உடல் வளர்த்தவனின்
உயிர் வளர்த்தவனின்
முதுகெலும்பு உடைக்க
தலைநகரில் நிற்கிறாரகள்
கவச வண்டிகளில் காவல் வீரர்கள்
Image
வில்லியம்ஸ்