உழவன் டைரி – வில்லியம்ஸ் உழவன் டைரி
¬¬¬¶¶¶~~~
நிலக்கிதாரின் நரம்புகள்
தளர்ந்து கிடக்கிறது
மேழிச் சுதி சேர்ந்தால்
காலதாளத்துடன்
தானியராகமிசைக்கலாம்
¬¬¬¶¶¶~~~
இம்முறையும்
கட்டியங்கூறி வந்தது
ஆகாயமார்க்கப்
பெருங்காற்றுப்படை
நீர்க்கணைகள் பாய்ந்து
நிறைமாத நாற்றுக்கள்
நிர்மூலமாயின
எதிர்வரும் தையில்
புதுப்பானைப்
பொங்கல் படைப்பான்
பீனிக்ஸ் உழவன்
¬¬¬¶¶¶~~~
சிறுதானியக்
கூழருந்திச் செழித்த
மடிக்கணினிக் குழந்தைகளுடன்
பிறந்தகமேகும்
அடுக்ககத் தாய்
கழுத்து மணிகள் குலுங்க
உழவுக் காளைகள் நின்ற
அருங்ககத்தை
தொழுவம் என்று அறிமுகப்படுத்துவாள்
¬¬¬¶¶¶~~~
அதர்மமழிந்த
குருஷேத்திர புராணத்தை
நினைவூட்டும்
தலைநகரக் குளிருத்தம்
முடிவுக்கு வருகையில்
சரித்திரத்தின் உதடுகள்
வரப்புயர நீருயரும் பாடலை
குரலுயர்த்திப்பாடும்..
¬¬¬¶¶¶~~~
வில்லியம்ஸ்