பெருங்கை அளாவிய கூழ் – வில்லியம்ஸ்.பெருங்கை அளாவிய கூழ் 
***************************
கருக்கருவா
செதுக்கியெடுத்த
பனி உருண்டைக்குள் கனிச்சாறு
தளும்பி நிற்கும்
பனங் கொழுக்கட்டை நுங்கு
பத்து சால் உழத
செம்மண்ணை
குக்கரில் குழைய வேகவைத்து
பச்சைத் தாளில் சுற்றிய
பன்னீர்ச் சோறாய் தர்ப்பூசணி
தங்கத் தோரணத்தில் தொங்கும் வெண்ணிற விதைக்கூடு உள்ளிருக்க
அச்சில் வார்த்த சற்றே பெரிய
சந்தனப் பணியாரம் போல்
மஞ்சள் பூசிய முலாம்பழம்
பங்குனி வெயிலில் சுட்ட
பச்சை முறுக்காய்
பற்களுக்குள் நொறுங்கும்
பூனை முடிபாவி
கீற்றுவரியோடிய
வெள்ளரிப்பிஞ்சு
சாலை நெடுக
பார்க்கும் இடமெல்லாம் நின்று
காய்ந்து போன நாக்கை
கண்ணடித்துக் கூப்பிடுகிறது
கோடை கால பதார்த்தங்கள்
வெயில் சதமடிக்கும்
வேர்வைத் திருவிழாவில்
முழங்கைக்கு ஏற்றிய
வளையல் கை அளாவி
பால் சொம்பில் ஏந்தும்
சிறுதானியகு கூழுக்கு
நெடுஞ்சாலையில் காத்திருக்கிறேன்..
வில்லியம்ஸ்.