வராது வந்த மாமணி ‘விட்னஸ்’ திரைப்படம்
த.நீதிராஜன்

“இந்தியாவில் மனிதர் கழிவை மனிதர் அள்ளுவதைச் செய்வதால் அவர் தோட்டி அல்ல. அவர் அதைச் செய்யவில்லை என்றாலும் பிறப்பின் அடிப்படையில் அவர் தோட்டிதான்” – டாக்டர் அம்பேத்கர்

மனிதக் கழிவை மனிதரே உடல் உழைப்பால் அகற்றும் இழிவுக்கு எதிரான படைப்புகள் தொடர்ந்து அவ்வப்போது வெளியாகியிருக்கின்றன. இயக்குநர் அமுதன் ஆர்.பி. அவர்களின் ‘பீ’ ஆவணப்படமும், இயக்குநர் திவ்ய பாரதி, ஒளிப்பதிவாளர் பழனிக்குமார் ஆகியோரின் ‘கக்கூஸ்’ ஆவணப்படமும் சமீபத்திய வரவுகளில் முக்கியமானவை. அடுத்தகட்ட முன்னேற்றமாக, 2022 டிசம்பர் 9ஆம் தேதி சோனி லைவ் தொலைக்காட்சி மூலமாக வெளியான, இயக்குநர் தீபக் அவர்களின் ‘விட்னஸ்’ திரைப்படம் வெளிவந்துள்ளது. மக்களின் பிரச்சனைகளைக் காட்சிப்படுத்தி தீர்வுகளை விவாதிக்கும் சமூக அக்கறையான திரைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த வகையில் ‘வாராது வந்த மாமணி’ ஆக கொண்டாடவேண்டிய அரிய படைப்பு இது.

இந்தியாவின் சமூகப் பிரச்சனைகள் பற்றி 2012ஆம் ஆண்டில் ஸ்டார் டிவியில், இயக்குநர் சத்யஜித் பக்தல் இயக்கத்தில் நடிகர் அமீர்கான் நடத்திய ‘சத்யமேவ ஜெயதே’ எனும் தொடர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், ‘மனிதக் கழிவை மனிதர் அகற்றும் இழிவு’ தொடர்பான ஒரு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் மனிதக் கழிவு அகற்றுவோரின் மகளாகப் பிறந்து, படித்து முன்னேறி சமஸ்கிருத்தில் டாக்டர் பட்டம் முடித்து, தற்போது டெல்லி பல்கலைகழகத்தில் பேராசிரியை ஆக பணியாற்றும் கவுசல் பன்வார் பங்கேற்றார். மனிதக் கழிவு அகற்றுவோரின் மகனாகப் பிறந்து மனிதக் கழிவை மனிதரே உடல் உழைப்பால் அகற்றுதலுக்கு எதிரான போராட்டத்தை தேசிய அளவில் நடத்திக்கொண்டிருக்கும் திரு. பெசவாடா வில்சன் அவர்களும் பங்கேற்றார். உலகத்தில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, உலகின் பிற பகுதிகளில் ஒழிக்கப்பட்டுவிட்ட, இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டும் இன்னமும் நீடிக்கிற இந்தப் பிரச்சனை பற்றிய, தேசிய அளவிலான முதல் நிகழ்ச்சியாக இது இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

சென்னை மாநகரின் துப்புரவுத் தொழிலாளிகளின் போராட்டமான வாழ்க்கையைக் காட்சிப் படுத்தியிருக்கிறது ‘விட்னஸ்’ திரைப்படம். பெண் துப்புரவுத் தொழிலாளி இந்திராணி (ரோகிணி). அவரது 20 வயது மகனான பார்த்திபன் (தமிழரசன்) பகுதிநேர பணியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நீச்சல் பயிற்சியாளராக இருக்கிறார். அங்கே கழிவு நீர் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பை எடுப்பதில் அவரை கட்டாயப்படுத்தி இறக்கியதில் அவர் மரணம் அடைகிறார். நியாயம் கேட்டு போராடும் தாய்க்கு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் ஆதரவு அளிக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கட்டிட வடிவமைப்பாளர் பார்வதியும் (ஸ்ரத்தா ஸ்ரீநாத்) தாயின் போராட்டத்துக்கு உதவுகிறார். அரசு நிர்வாகமும் நீதித்துறையும் மனிதத்தன்மை இல்லாமல் மரத்துப்போயிருக்கின்றன. கொடுமைகளும் போராட்டமும் தொடர்கின்றன என்பதே படத்தின் செய்தி.

மனிதக் கழிவை மனிதர் அகற்றும் இழிவையும் துப்புரவு பணியாளர்களின் துயரமான வாழ்நிலையையும் மனங்களை அசைக்கும்வகையில் காட்சிகள் உள்ளன. துப்புரவு தொழிலாளியாக வரும் ரோகிணி படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். மனச்சாட்சியுள்ள உயர் நடுத்தரவர்க்கப் பெண்ணாக வரும் பார்வதி, மலக்குழி மரணங்களை அறவே ஒழிக்கும் வகையிலான, கட்டிட வடிவமைப்பை உருவாக்குகிறார். மேலதிகாரிகள் அதனை அலட்சியப்படுத்துகின்றனர். வாய்ப்புகள் இருந்தும் அறிவியல் வளர்ந்தும் மனித உயிர்கள் மீதான சாதிய, வர்க்கப் பார்வைக் கொடூரங்கள் நீடிக்கின்றன என்பதை இந்தக் காட்சிகள் உணர்த்துகின்றன.

“சாதியத்துக்கு எதிரான சக்திமிக்க திரைப்படம்” என்கிறது ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ். “மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைகளை கடுமையாக தாக்கியிருக்கிறது” என்கிறது தி இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ். “ ரொம்ப காலத்துக்கு பேசப்படுகிற படம் ” என்கிறது தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ். படத்தின் திரை மொழி, காட்சியமைப்புகள், வசனங்கள் என விரிவாக அலசி பாராட்டியிருக்கிறது தமிழ் இந்து நாளிதழ். உயர் நடுத்தர வர்க்கத்தின் மனச்சாட்சியை அசைப்பதில் இந்தப் படம் வெற்றிபெற்றுள்ளது என்பதற்கான ஆதாரங்களே இவை.

கோவையில் செயல்படும் ‘பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் சிந்தனைக் களம்’ அமைப்பு நடத்திய இயக்குநர் தீபக் அவர்களுக்கு இணைய வழியில் நடத்திய பாராட்டுவிழாவில் அம்பேத்கரிய அமைப்பின் தலைவர் ஒருவர் இயக்குநரை மிகவும் பாராட்டிவிட்டு “நாங்கள் பலகாலமாக பல வழக்குகளை கையாளுகிறோம். நீங்கள் படத்தில் எங்களை காட்டவில்லையே” என்று வேதனைப்பட்டார். படத்தின் கதை சென்னை மாநகரத்தில் நடப்பதால் அத்தகைய முறையில் இருக்கிறது” என்று இயக்குநர் பதில் அளித்தார். சென்னை மாநகரில் செங்கொடி இயக்கத் தலைவர் தோழர் சீனிவாசலு துப்புரவு தொழிலாளர்களின் போராட்டத்தின் முன்னணியில் தற்போது செயல்பட்டு வருகிறார். இரண்டாண்டு காலம் அவரோடு படக்குழுவினர் பயணித்தார்கள் என்றும் சீனிவாசலு தெரிவிக்கிறார். அவரது பாத்திரம் தான் படத்தில் ‘பெத்தராஜூ’ என்னும் பெயரில் வருகிறது. பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அரங்கேற்றப்பட்ட ‘மஞ்சள்’ நாடகத்தில் பெசவாடா வில்சன் பாத்திரத்தில் ஜி.செல்வா நடித்தார். இந்தப் படத்தில் செங்கொடி சங்கத் தலைவர் சீனிவாசலு பாத்திரத்திலும் அவரே சிறப்பாக நடித்துள்ளார்.

மனிதக் கழிவை மனிதரே உடல் உழைப்பால் அகற்றும் இழிவு என்பது, மனிதர்களிடத்தில் ஏற்படுத்திவருகிற கொடூரங்கள் மொத்தத்தையும் ஒரே படத்தில் சொல்லிவிடமுடியாது என்பதுதான் உண்மை. அதனை சினிமாவாக, மனங்களை அசைக்கும்வகையில் உருவாக்கியதில் பங்கேற்ற ஒவ்வொருவரும் போற்றுதலுக்கு உரியவர்கள். இது வெறும் சினிமா அல்ல. பெரும் படைப்பு. இந்த ஆரம்பம் இன்னமும் வலிமையடையும். பெருகி படரும். தமிழகத்திலும் தமிழகத்துக்கு வெளியிலும் இதனை ஒழிக்க போராடிக்கொண்டிருக்கும் அத்தனை பேரின் அனுபவங்களையும் உள்வாங்கிகொண்டு இத்தகைய பல படைப்புகள் வெளியாகும். அதற்கான கதவைத் திறந்திருக்கிறது ‘விட்னஸ்’ திரைப்படம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *