தள்ளாடும் தடுப்பூசி திட்டம்  – அ. பாக்கியம்தடுப்பூசி தயாரிப்பதற்கு இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, அதையும் பெரும்பகுதி ஏற்றுமதி செய்துவிட்டு, இப்போது மோடியின் அமைச்சர்கள் ஜவடேகர், ஹர்ஷவர்தன் டிசம்பர் மாதம் 31க்குள் வயது வந்த அனைவருக்கும் அதாவது 108 கோடி மக்களுக்கு 216 கோடி மருந்துகள் தயாராகி தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படி என்று கேள்வி எழுப்பினால் நிதி ஆயோக் உறுப்பினர Dr.V.K.PAUL கீழ்க்கண்டவாறு பதிலளிக்கிறார்

COVISHIELD 75 கோடி, COVAXIN 55 கோடி, BIOLOGICAL E 30 கோடி, ZYDUS CADILA 5 கோடி, NOVAVAX இதிலிருந்து 20 கோடி, BB NASSL VACCINE 10 கோடி, GENNOVA mRNA 6 கோடி, 15 கோடி ஸ்புட்னிக் என்று கணக்கை கொடுத்து எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

மேற்கண்ட எட்டு தடுப்பூசிகளில் நான்கு தடுப்பூசிகள்( BIOLOGICAL E 30,  ZYDUS CADILA, NOVAVAX , BB NASSL VACCINE, GENNOVA mRNA) இன்னும் சோதனைகளை முடிக்கவில்லை. இதில் NOVAVAX என்ற தடுப்பூசி பரிசோதனை செய்வதற்கான அனுமதியை கூட பெறவில்லை.

இதையெல்லாம் வைத்துக்கொண்டு எப்படி டிசம்பர் மாசம் 31-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டு முடிக்க முடியும். ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 75 கோடி கோவிஷியல்ட் மருந்துகள் தயாரிக்க வேண்டுமென்றால் தினசரி 50 லட்சம் மருந்துகளை தயாரிக்க வேண்டும்.

என்னதான் வேகப்படுத்தினாலும் விரிவுபடுத்தினாலும் கோவிஷியல்ட் நிறுவனம் தினசரி 36.66 லட்சத்து தான் தயாரிக்க முடியும் தெரிவிக்கின்றன. பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பின்படி கோவாகசின் மருந்து வருடத்திற்கு 70 கோடி தான் தயாரிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். அதாவது தினசரி 19.4 லட்சம் மருந்துகள் தான் தயாரிக்க முடியும். இவர்கள் எப்படி 55 கோடி மருந்து தயாரித்துக் கொடுப்பார்கள். மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தற்போது மாதத்திற்கு 8 கோடி மருந்துகளும் அதாவது ஒரு நாளைக்கு 26.6 லட்சம் மருந்துகள் மே மாதம் தயாரிக்கப்படுகிறது. இந்த உற்பத்தி ஜூன் மாதம் 9 கோடியாக மாறும் அதாவது தினசரி 30 லட்சம் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கிறார்.
ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 216 கோடி தயாரிக்க வேண்டுமென்றால் மாதத்திற்கு 43.2 கோடி தயாரிக்க வேண்டும். அதாவது தினசரி 1.44 கோடி மருந்துகள் தயாரிக்க வேண்டும். இப்பொழுது தயாரிக்கப்படும் மருந்தின் அளவை விட 5 மடங்கு அதிகமாக தயாரிக்க வேண்டும். இதுவெல்லாம் நிதர்சனமான உண்மை. சோதனையில் இருக்கக்கூடிய மருந்துகளையும் பரிசோதனைக்கு அனுமதி பெறாத மருந்துகளையும் ஏதேதோ கணக்கு சொல்லி இந்திய மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். பொய் பிரச்சாரம் செய்வதில் புகழ் பெற்றவர்களாக மாறுகிறார்கள். இந்திய அரசு சில அந்நிய நிறுவனங்களிடம் இருந்து இறக்குமதி செய்யலாம் என்று கூறி வருகிறார்கள்.

தற்போது PFIZER,MODERNA, JOHNSON & JOHNSON கம்பெனிகளை அணுகிய பொழுது PFIZER மட்டும் ஜூலை முதல் அக்டோபர் வரை 5 கோடி மருந்துகள் கொடுப்பதாக ஒத்துக் கொண்டுள்ளது. மாடர்னா நிறுவனம் 2022ஆம் ஆண்டு தான் கிடைக்கும் என்று தெரிவித்து விட்டார்கள். இந்த கம்பெனிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய போதும் மேற்கண்ட கம்பெனிகள் தங்களுடைய உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்த பிறகு தான் வெளிநாட்டிற்கு அனுப்ப முடியும் என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்..

மோடி அரசு இந்தியாவில் உற்பத்தி செய்த தடுப்பூசி மருந்துகளை 6 கோடியே 60 லட்சம் மருந்துகளை 95 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு தனியார் கொள்ளைகளுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது. 216 கோடிக்கே இப்படி என்றால் இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு 15% வீனாகுதல் சேர்த்து 310 கோடி மருந்துகள் தேவைப்படும்.

இதை எப்போது தயாரிப்பார்கள் எப்போது மக்களுக்கு கொடுப்பார்கள் என்று தெரியாது ஆனால் அதற்கும் ஒரு கணக்கு சொல்வதற்கு கணக்கற்ற மந்திரிகள் இருக்கிறார்கள். இன்றைய தினம் இந்திய மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கு தடுப்பூசி மட்டும் தான் பிரதான ஆயுதமாக இருக்கிறது. அந்த தடுப்பூசியை தயாரிப்பதற்ககும் மக்களுக்கு அளிப்பதிலும் மோடி அரசு தள்ளாடிக் கொண்டிருக்கிறது.