உலகம் நாகரிகம் அடைய தொடங்கியதிலிருந்து பெண் போராடிக் கொண்டு தான் இருக்கிறாள். நாகரிகம் ஏற்படுத்திய பல பெண்களுக்கு போராட்டத்தை கொடுத்தது . இதில் பெண்களின் ஆடையும் அடங்கும். ஆடையால் போராட்டாமா ? ஆம் ஆடை நாகரிகத்தின் வெளிபாடாக உடலை மறைக்க உதவும் கருவியாக இருந்தாலும், அது வழி நெடுகிலும் பல போராட்டத்தை கொடுத்தது என்பதும் உண்மை. பண்டைய காலங்களில் ஆண், பெண் இருவரும் ஆடையின்றியே காட்டில் வாழ்ந்தார்கள். பின், பரிணாம வளர்ச்சியினால் இலைகளை உடுத்திக்கொண்டனர். இப்படியே வளர்ந்த நாகரிம், இனக்குழுவின் பிரிவால் வெவ்வேறு கலாச்சாரம், மொழி, பண்பாடு என்று வளர்ந்தது. ஆடை பிறப்புறுப்பை மட்டும் மறைப்பதுயின்றி பெண்களின் மார்பகங்களும் மறைக்க வேண்டியதாயிற்று. இன்று எல்லாப் பெண்களும் உடுத்தும் மேலாடைக்கு பின்னால் ஓரு அரசியல் இருக்கிறது. என்ன, ஆடையில் அரசியலா? ஆம், இந்தியாவில் அப்போதைய மதராஸ் பிரசிடென்சியிலிருந்த திருவாங்கூர் சமஸ்தானத்தில் (தற்போதைய கேரளம் மாநிலம்) பெண்கள் அணியும் மேலடைகளுக்கு வரி வசூல் செய்தது. அதுவும் எல்லாப் பெண்களுக்கும் அல்ல.
வரலாற்றில் எப்போதும் பெண்களுக்கு உரிமை மறுக்கபட்டு வந்தாலும் அதன் பின் ஏற்ற தாழ்வு என்பது சாதியின் அடிப்படையில் ஆடையிலும் புகுந்தது. பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் என்ற சொல்லப்படுகிற ஓரு சில மக்களுக்கு மட்டுமே இவ்வரியானது விதிக்கப்பட்டது. ஆண்கள் மீசை வைத்து கொள்ள வரி, தலை பாகை அணிய வரி, பெண்கள் போட்டு கொள்ளும் அணிகலனுக்கு வரி, பொது இடத்தில் மேலாடை உடுத்த வரி என்று வினோதமான சட்டங்கள் இருந்தது. இதில் வருத்தம் என்னவெனனில் பெண்கள் தங்களின் மார்ப்பங்களை மறைப்பதற்கு என்பது தான். இதை ” முலை வரி அல்லது முலக்கரம் ” சட்டம் என்று அமல்படுத்தியது திருவாங்கூர் சமஸ்தானம்.
நாம் இன்று உடுத்தியிக்கும் மேலாடைக்கு பின்னால் 200 ஆண்டு சரித்திரம் ஒளிந்திருக்கிறது. சுமார் 1803 முதல் இந்த “முலை வரி ” சட்டமென்பது அமலில் இருந்து இருக்கிறது. பெண்கள் பூப்பெய்தியுடன் அரசாங்கம் அவர்களின் வீட்டின் வாசலில் நின்று பெண்ணின் மார்பின் அளவுக்கு ஏற்ப வரி வசூல் செய்தது. இந்த முலை வரி சட்டம் என்பது தாழ்த்தப்பட்ட சமூகம் உயர்குடி மக்களுக்கு செய்யும் மரியாதை தரும் செயல் என்று அப்போதைய மன்னரால் அமல்படுத்தப்பட்டுயிருக்கிறது. இந்த மரியாதையும் கூட பல படிநிலைகளை கொண்டுயுள்ளது. நாயர் குலப் பெண்கள் நம்பூதிரிகளிடம் மார்பை மறைக்க கூடாது. நம்பூதிரி பெண்கள் கடவுளிடம் தங்களது மார்பை மறைக்கக் கூடாது.
இதில் தாழ்த்தப்பட்ட சாதி என சொல்லப்படுகிற எழவா, நாடார் உள்ளிட்ட சமூகப்பெண்கள் மேல் குறிப்பிட்ட எந்த சாதியினரிடமும் மார்பகங்களை மறைக்க கூடாது என்பதே இதன் பொருள். பின் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிறிஸ்துவம் உள்ளே நுழைகிறது. அதன் பின் நாடார் சமூகம் தங்களை கிறிஸ்துவத்திற்குள் இணைத்துக் கொண்டனர். பின் 1813 முதல் 1859 வரை பல கட்ட போராட்டங்கள் நடைப்பெற்றது. அப்போதும் அரசாங்கம் தாழ்த்தப்பட்டபெண்கள் மேலாடை உடுத்துவதை தீட்டாகப்பார்த்து அது அரசாங்கத்தை கலங்கப்படுத்தும் என்று வாதியிட்டது. சுமார் 40ஆண்டுகள் போராடி இந்தச் சட்டம் முடிவுக்கு வந்தது.
அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கும் காரணமும் உண்டு. தற்போது கேரள மாநிலத்தில் படகுப் போட்டிக்கு பிரசத்திப்பெற்ற ஆலப்பூழா மாவட்டத்தில் உள்ள சேச்தலா அருகே முலச்சிப்பரம்பு என்ற கிராமத்தில் பிறந்த அழகிய பதுமை நங்கேலி என்ற ஈழ எழவா சமுகத்தை சேர்ந்தப்பெண் இந்த வரிக்கு எதிராக குரல் கொடுத்த முதல் பெண். அரசாங்கத்தை எதிர்த்து வரிப்பணம் செலுத்தால் அரசாங்கம் இரட்டை வரி விதித்தது. அதை கட்டத்தவறியதால் அரசாங்க அதிகாரிகள் நங்கேலியின் வீட்டிற்கு சென்று அவளின் ஆடை ஆவிழ்க்க சொன்னது .பின் வீட்டிற்குள் சென்ற நங்கேலி வெளிய அறுவாளுடன் வந்து ஓரு வாழை இலையில் தன் இரு மார்ப்பங்களை வெட்டிக் கொடுத்தார். பின் இறந்தும் போனார்.
தன் மனைவியின் உயிர் பிரிவை தாங்க முடியாமல் சிறுகன்டனும் துயரத்தினால் உடன் கட்டை ஏறினார். முதன் முதலில் உடன் கட்டை ஏறிய ஆணும் இவரே. இதனால் அதிர்ந்த திருவாங்கூர் சமஸ்தானம் அந்த சட்டத்தை உடனே ரத்தும் செய்தது. இப்போது முலைச்சிபரம்பு என்ற கிராமம் தற்போது பெயர் மாற்றப்பட்டு மானோரமா காவால என்ற அழைக்கப்பட்டு வருகிறது. முப்பது வயது கூட நிரம்பாத நங்கேலியின் உயிர் தியாகம் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட கருப்பு சரித்திரம். இன்று நாம் அணியும் ஆடை, ஆடை சுதந்திரம் என்று பேசும் போது நங்கேலி என்ற போராளியின் குரலும் அடங்கியிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.