Women Liberation : A Must (பெண் விடுதலை வேண்டும்) இப்புத்தகத்தின் ஆசிரியர் கன்னியாகுமரி மாவட்டத்தின் குழித்துறையை சார்ந்த கத்தோலிக்க திருச்சபையை சார்ந்தவர். அந்த மாவட்டத்தின் விலவங்கோடு தாலுக்காவில் உள்ள பெண்களுக்கு சமூக மற்றும் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட அரும்பாடுப்பட்ட மறைந்த அருட்தந்தை ராஜாமணி அவர்களுடன் நெருக்கமாக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். இப்புத்தகம் தவிர, மேலும் 15 புத்தககளை இவர் எழுதியுள்ளார்.
இந்த சமூகத்தின் சரிபாதியாக திகழும் பெண்கள் விழிப்புணர்வு பெறுவதும் சமூக மற்றும் பொருளாதாரரீதியாக பெண்கள் வலுபெறுவதையும் தவிர்த்து சமூக மாற்றம் என்பது வெறும் கற்பனையே என்பதை ஆணித்தரமாக தனது எழுத்துக்களின் மூலம் இப்புத்தகத்தில் வலியுறுத்துகிறார் ஆசிரியர்.
பன்னிரண்டு அத்தியாயங்களில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இப்புத்தகம் அணிந்துரைகள், முகவுரை, மொழிப்பெயர்ப்பாளர் உரை ஆகியவற்றுடன் சேர்ந்து 108 பக்கங்கள் கொண்டதாக இருப்பினும், நூல் ஆசிரியர், 68 பக்கங்களில் புத்தகத்தின் கருத்தை முழுமையாய் வெளிக்கொண்டுவருவதில் வெற்றிப்பெற்றிருக்கிறார் எனக் கூறலாம். இந்தியாவில் பெண்ணுரிமையும், அது எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகளையும் விவாதிப்பதுடன், பெண்களுக்கான சட்டங்களை வரையறுப்பதில் துவங்கி, பெண்களின் சர்வதேச நிலை மற்றும் சர்வதேச சட்டங்களை வரையறை செய்வது வரை ஆசிரியரின் விசாலமான பார்வை நீள்கிறது.
இப்புத்தகத்தைப் பற்றி மிக முக்கியமாக பதிவு செய்ய வேண்டியது என்னவெனில், பெண்கள் என்பவர்கள் மனித குலத்தின் சரி பாதி, ஆகவே, மனித குலத்திற்கு பொதுவான அனைத்துமே பெண்களுக்குமானது’ எனும் நீதி, புத்தகம் நெடுகிலும் இழையோடி உள்ளது. சமூகத்தில் மற்றும் குடும்பங்களில் பெண்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை பதிவு செய்யும்பொழுது நூல் ஆசிரியர் ஆதாரப்பூர்வமான குறிப்புகளுடன் பதிவு செய்கிறார். தேசிய அளவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். அரசியல், கல்வித்துறை, நீதித்துறை என அனைத்து துறைகளிலும் பெண்கள் படும் அவதிகளை இன்னல்களை எடுத்துரைக்கும் ஆசிரியர் பணிபுரியும் இடங்களில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்களை தடுக்க நடைமுறையில் இருக்கும் சட்ட வடிவங்களையும் அவைகளை எப்படி செயல்முறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார்.பெண்களுக்காக இயற்றப்பட்டுள்ள இந்த நாட்டின் சட்ட திட்டங்கள் மட்டுமன்றி சர்வதேச சட்ட வரையறைகளை பற்றியும் விளக்கி கூறுகிறார் நூலாசிரியர்.
பெண்களின் நிலையை குழந்தையாக அவர்கள் கருவில் உருவாவதில் துவங்கி இந்த உலகில் போராடி வாழ்ந்து மடிவது வரை பெண்கள் எதிர்கொள்ளும் கிட்டத்தட்ட அனைத்து விதமான பிரச்சனைகளையுமே இந்த நூலில் அலசி ஆராய்ந்து அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என விவரித்து கூறுவதுடன் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தொடர்ச்சியாக புத்தகங்களின் பக்கம் முழுவதிலும் வலியுறுத்தி இருக்கிறார்.
குடும்பத்தில் பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஒரு நல்ல குடும்பம் என்பது அறங்களின் பிறப்பிடமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அங்கே பாலின சமத்துவம் என்பது மிக நல்ல முறையில் பின்பற்றப்படும். ஆனால், உண்மை நிலைமையோ அப்படி இருப்பதில்லை. ஆகவே ஒரு நல்ல குடும்பம் அமைவதற்கு குடும்பத்தின் தலைமை பொறுப்பில் உள்ள ஆணும் பெண்ணும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் எப்படி எல்லாம் அறம் பேண வேண்டும் என பட்டியலிடுகிறார் நூலாசிரியர்.
மேலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவற்றையும், இளம் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களையும, வலியுறுத்துவதுடன் பெண்கள் சுய உதவி குழுக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுகிறார். பெண்கள் சுய உதவிக் குழுக்கள், வெறும் பொருளாதார ஆலோசனைகள் மற்றும் பொருளாதார உதவிகளுக்கு மட்டும் செயல்படாமல் பெண்களின் உரிமைக்காகவும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை எதிர்த்தும் அரசியல் முதிர்ச்சியோடும் செயல்படவேண்டும் எனக் கூறுகிறார். மேலும், பெண்கள் தாங்கள் பயிலும் கல்வியால் அறிவார்ந்தவர்களாக இருக்க வேண்டுமேயொழிய கடமைக்காக பயில்வது என இருக்கக் கூடாது. குறிப்பாக பெண் பேராசிரியர்கள் மற்றும் பெண் கல்வியாளர்கள் ஆகியோர் பெண்ணுரிமை மற்றும் பாலின சமத்துவம் குறித்த புரிதலை மிக மிக அத்தியாவசமாக வளர்த்து கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்.
இறுதியில் இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் எது தீர்வாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆண்களும் பெண்களும் இளம் வயதில் இருந்து தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அது. குறிப்பாக இந்திய மாணவர் சங்கம, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போன்ற வெகுஜன ஸ்தாபனங்களில் இணைந்து செயல்படும் போது படிப்படியாக இந்த நிலைமை எல்லாம் மாறி பாலின சமத்துவத்துடன் சரியான சமுதாயம் மலரும் எனும் தன் நம்பிக்கையை இந்த நூலின் வழியாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். ஊடகங்களின் வாயிலாகவும் கலை மற்றும் இலக்கியங்களின் வாயிலாகவும் மாற்று கலாச்சாரம் மற்றும் சமூகத்தை கட்டமைக்க வேண்டியது முற்போக்கு எழுத்தாளர்களின் மிக முக்கியமான கடமை எனவும் கூறுகிறார் நூலாசிரியர். இந்தப் பணியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கங்கள் மிக சீரிய முறையில் செய்து வருவதையும் நூல் ஆசிரியர் குறிப்பிட தவறவில்லை.
இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பத்தியையுமே மேற்கோள்களாக கையாளும் அளவிற்கு ஆழமான பெண்ணிய சிந்தனைகளை கொண்டுள்ளன. பெண்ணியத்தின் முதல் அலையிலிருந்து நான்காம் அலை வரை அனைத்து அலைகளையும் ஒன்று சேர்த்து ஓரே கருத்துப் பெட்டகத்தில் அடைத்தது போல் இந்த புத்தகம் விளங்குகிறது என்றால் அது மிகை இல்லை.
நூலின் விவரங்கள்:
புத்தக தலைப்பு : Women Liberation : A Must (பெண் விடுதலை வேண்டும்)
நூலாசிரியர் : அருள் திரு. வி.ராபர்ட்
மொழியாக்கம்: E.ஜேம்ஸ் R டேனியல்
பதிப்பு : Indian University Press (பாரதி புத்தகாலயம்)
விலை: ரூ. 120
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
எழுதியவர் :
முனைவர் ஆ. தே. ரேவதி,
உதவிப் பேராசிரியர், மெய்ப்பொருளியல் துறை,
பச்சையப்பன் கல்லூரி, சென்னை
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
