பெண்கள் அவசியம் படிக்கவேண்டிய மநுஸ்மிருதி – மயிலைபாலு

பெண்கள் அவசியம் படிக்கவேண்டிய மநுஸ்மிருதி – மயிலைபாலுவள்ளுவன்செய் திருக்குறளை மருவற நன்கு உணர்ந்தவர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி  – மனோன்மணீயம் சுந்தரனார்

மனுநீதி, மநு தர்மம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் இதன் பூர்வீகப் பெயர் மநுஸ்மிருதிதான்.
ஸ்மிருதி என்றால் எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டியது என்று பொருள்.
இந்த ஸ்மிருதியை மநுவிடம் யார் கேட்டார்கள்? தேவ ரிஷிகள். இந்த பூமிக்கே சம்பந்தமில்லாத இவர்கள் யாருக்காக கேட்டார்கள்? பொதுவாக மக்கள் நலம் பெற கேட்கவில்லை.
“பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற நான்கு வருணத்தாரும் அனுலோமன், பிரதிலோமன், அந்தராளன், விராத்தியன் முதலான சங்கரசாதிகளும் பின்பற்றவேண்டிய தர்மங்களைக் கிரமமாக சரியாய் முழுமையும் எங்களுக்குச் சொல்ல வேண்டும்” என்று கேட்கிறார்கள்.

நால் வருணத்தார் மனிதர்களுக்குப் பிறந்தவர்கள் இல்லை என்கிறது சுருதி(வேதம்)யும், ஸ்மிருதியும். பிரம்மாவின் தலை, தோள், தொடை, பாதங்களில் பிறந்தவர்கள் இவர்கள். தலை என்றால் மூளை; தோள் என்றால் பலம்; தொடை என்றால் வணிகம்; பாதங்கள் என்றால் அடிமை வேலை என்று மனிதர்களைப் பிறப்பிலேயே பேதப்படுத்தி இதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் மறக்காதீர்கள் என்று சொன்னதுதான் மநுநீதி; மநுதர்மம்
இந்த நால் வருணத்தாரில் மூன்று வருணத்தார் மற்ற வருணத்துப் பெண்களுடன் உடலுறவு கொண்டு பிறந்தவர்கள் அநுலோமர்கள். நான்காம் வருணத்தவர் மற்ற வருணத்துப் பெண்களுடன் உறவு கொண்டு பிறந்தவர்கள் பிரதிலோமர்கள். இந்த அநுலோமர்களும் பிரதிலோமர்களும் தங்களுக்குள் பெண் உறவு கொண்டு பிறந்தவர்கள்தான் பாகிய ஜாதியார். (தீண்டத்தகாதவர் – பஞ்சமர்)

ஆண்களின் இச்சைக்குப் பெண்களை இரையாக்கி அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை மேலும் மேலும் இழிவாக்கி வருண வேரிலிருந்து சாதிகளைக் கொப்பும் கிளையுமாக விரித்து நம்புங்கள் என்றதுதான் மநுதர்மம்! காலம் காலமாக இவற்றை நிலைநிறுத்த தலை வருணத்தாரை ஏஜென்டாக நியமித்துக் கொண்டான் மநு.

MANUSMRITI IS VARNA NEUTRAL – 7 ⋆ Making India

இயல்பான ஆண்-பெண் உறவையும் சாதிகளின் தோற்றத்திற்கு வழியாக்கி அதனை வாழவைத்துக் கொண்டிருக்கும் மநுஸ்மிருதி ஏற்க வேண்டியதா? எதிர்க்க வேண்டியதா?
அரசியல் சட்டத்தைப் படித்தவர்கள் அரசியல் சட்டத்தின் பேரால் உறுதி ஏற்றுக் கொண்டவர்கள் கூட அதனை மதிக்கத் தயாரில்லை என்பதுதான் கண்முன் விரியும் காட்சிகள்.

” நீ பஞ்சாயத்துத் தலைவராக இருக்கலாம்; ஆனால் தலித் பெண் என்பதால் தேசியக்கொடியை ஏற்றக் கூடாது” என்று ஆணவத்தோடு தடுக்கத் தூண்டியது சட்டமா? மூளையா?
” நீ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பஞ்சாயத்து அலுவலகத்தில் நாற்காலியில் அமரும் தகுதி உனக்கு இல்லை. ஏனென்றால் நீ ஒரு பெண்; அதிலும் தலித்” என்று தரையில் அமரச் சொல்லும் திமிரைத் தந்தது சட்டமா? மூளையா?

“நீ படித்திருக்கலாம்; பணம் சம்பாதிக்கலாம்; பங்களாகூட வைத்திருக்கலாம்; பதவியும் உயர்ந்ததாக இருக்கலாம்; சாதிக் கலப்பு செய்து பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முயன்றால்…….” என்று கத்தியைத் தீட்டுவதும் கூலிப்படையை ஏவிக் கொலை செய்யத் தூண்டுவதும் சட்டமா? மூளையா?

அரசியல் சட்டமும் அதன் வழியாக உருவாக்கப்பட்ட பிற சட்டங்களும் இப்படியெல்லாம் தூண்டமுடியாது. மூளைதான் தூண்டுகிறது. இந்த மூளைத் தூண்டுதலுக்கு மூலகாரணம் எது? மநுஸ்மிருதி போன்ற சாஸ்திரங்கள்தான். இதையெல்லாம் மக்கள் கல்விக் கூடங்களில் கற்றுக் கொண்டார்களா? இல்லை. மூளையில் பிறந்தவர்களால் மக்களின் மூளையில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள்தான் உள்ளிருந்து உசுப்புகிறது.

வலதுசாரி, பழமைவாத, சனாதனக் கட்சிகளுக்குக் காவுகொடுக்கும் பலியாடுகளாகப் பெண்களே இருக்கிறார்கள் என்பது கண்கூடு. ஒவ்வொரு குடும்பத்திலும் கட்டுப்படுத்தப்படுபவள் பெண்தான் என்பது எதார்த்தம். கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?
பெண்ணைக் கொடியாக்கி அவள் படர ஆணைக் கொழுக்கொம்பாக்கி ஆண்துணையில்லாமல் பெண் வாழமுடியாது; வாழக்கூடாது என்ற கருத்து தானாகக் குடும்ப மூளையில் உதித்ததல்ல.

“இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையானபின் மக்கள் (மகன்கள்) இவர்கள் காவலின்றி பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது” என்று ஆண்களின் கட்டுக்குள்தான் எப்போதும் பெண்கள் இருக்க வேண்டும் என்பதை அறுதியிட்டுக் கூறுகிறான் மநு (அத்தியாயம் 5; சுலோகம் 148)

“ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக
வாழ்வம் இந்த நாட்டிலே”
என்ற பாரதியின் கருத்தை மண்ணுக்குள் புதைத்து மீண்டும் முட்புதராய் முளைக்கிற மநுநீதி ஏற்க வேண்டியதா? எதிர்க்க வேண்டியதா?

” பெண் ஒரு பொருள்; அவளை ஒருவனுக்குக் கொடுத்துவிட்டால் அதன்பின் பெற்றவனுக்கு யாதொரு அதிகாரமும் இல்லை” (அத்தியாயம் 8 சுலோகம் 204 )

“பெற்றோரை இழந்தபின் அவர்களின் மகன்கள் பொருளைப் பிரித்துக் கொள்க” (அத்தியாயம் 9 சுலோகம் 104)

என்று குறிப்பிட்டு ஒரு பக்கத்தில் பெண்ணைப் பொருளாக ஆணிடம் விற்கவும், கணவன் தேடிய பொருளாயினும் அதில் மனைவிக்கோ மகளுக்கோ உரிமை இல்லை என்று சொத்துரிமையிலிருந்து முற்றாக விலக்கி வைக்கவும் கற்றுத் தந்தது யார்? மநுநீதி போன்ற சாஸ்திரங்கள்தானே!

” பாணிக்கிரகணம் மந்திரம் சொல்லி மணந்தால்தான் அந்த மனைவி தர்ம பத்தினியாவாள்” (அத்தியாயம் 8 சுலோகம் 227) என்றால் மற்ற வகையில் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள்

யார்? இந்தக் கேள்வியைத்தான் தந்தை பெரியார் எழுப்பினார்; அண்ணல் அம்பேத்கர் எழுப்பினார்; பெண்களை மனுஷியாக மதிக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்கள் எழுப்பினார்கள்.

Debunking Fake Narratives on Manusmriti on Women; Here Are Facts

“கணவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அவனைத் தெய்வமாகப் பேணவேண்டும்” (அத்தியாயம் 5 சுலோகம் 154) என்று மநு சொன்னதை மறக்காமல் வைத்திருக்க உதவுவதுதானே ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்’ என இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமொழி!

கணவன் இறந்து போனால் பெண் கைம்மை நோன்பிருந்து, உடல் வருத்தி, உள்ளம் நொந்து நொந்து சாகச் சொன்னவன் மநு.

“கற்பரசிகளுக்கு மறுமணம் எங்கும் விதிக்கப்படவில்லை” (அத்தியாயம் 5 சுலோகம்162) என்றால் மறுமணம் செய்துகொண்டால் அந்தப் பெண் கற்பரசி என்ற பட்டத்தைப் பறிகொடுப்பாள். இந்த அச்சம்தானே கைம்மைக்கும், சதி எனும் உடன்கட்டை ஏறுதலுக்கும், ஏற்றுதலுக்கும் காரணமானது.

மனைவியை இழந்த கணவனுக்கும் இதே நீதியா? அதுதான் இல்லை. “அவன் விதிப்படி திருமணம் செய்துகொண்டு வாழ்வின் இரண்டாம் பகுதியை இல்லறத்தில் கழிக்கவேண்டியது” (அத்தியாயம் 5 சுலோகம் 164) என அனுமதி அளித்து ஆணாதிக்கத்தை நிலை நிறுத்துகிறான் மநு.

“கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடி போக வேண்டும்” என்பதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர் அண்ணல் அம்பேத்கர். சாதி ஒழிப்புக்கு சமமாகப் பெண் விடுதலைக்கும் அவர் சமர் புரிந்தார். அந்தச் சமரின் விளைவுதான் அரசியலமைப்பு நிர்ணய சபையில் தொடங்கி அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு சட்ட அமைச்சராக இருந்தபோதும் நாடாளுமன்றத்தில் அவர் நடத்திய பெண்ணுரிமைகளுக்கான போராட்டம்.

அம்பேத்கர் கொண்டு வந்த இந்து கோட் எனும் சமூக சீர்திருத்த, குறிப்பாகப் பெண்ணுரிமைகளுக்கான சட்ட மசோதாவை நிறைவேற்ற இயன்றவரை போராடினார். நிறைவேறாத வேதனையில் சட்ட அமைச்சர் பதவியையும் உதறி எறிந்தார்.

இந்த மசோதாவை சமர்ப்பித்த உடனேயே கொதித்துப் போனார்கள் மூளையில் பிறந்தவர்களும் அவர்களின் அடிவருடிகளும். நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாதும் இதில் அடக்கம்.

Manusmriti: An Analysis. Manusmriti is one of the most important… | by  Ritwik Tyagi | Legal Jumble | Medium

சட்டமேதை, சமூகப் போராளி அம்பேத்கரின் மசோதாவை இந்துக்களுக்கு எதிரானது என்று கூறி மதவெறி சாமியார்களும் ஆர்எஸ்எஸின் சங்பரிவாரமும் போராட்டக்குழுவை அமைத்தார்கள். இந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் “தர்ம வீரர்கள்” என்றும் இதனை “தர்மயுத்தம்” என்றும் சொல்லிக் கொண்டார்கள். எந்த தர்மத்தைப் பாதுகாக்க இவர்கள் யுத்தம் நடத்தினார்கள்? மநு தர்மத்தைத்தான்.

அம்பேத்கரின் மசோதாவை “இந்து சமூகத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டு” என்றார்கள். அப்படிப்பட்ட அணுகுண்டுக்குள் என்னதான் இருந்தது?

“பெண்களுக்கு சொத்துரிமை, வாரிசு சொத்துரிமை, திருமண உரிமை, மணமுறிவுக்கான உரிமை, கணவன் கைவிட்டால் வாழ்வாதார (ஜீவனாம்ச) உரிமை தத்தெடுக்கும் உரிமை…. போன்றவை

இதெல்லாம் அணுகுண்டுகளுக்கு சமமானவையா? இல்லைதான். ஆனால் சனாதன தர்ம சாத்திரங்களும் மநுநீதியும் பெண்களுக்கு மறுத்த உரிமைகளை எல்லாம் அம்பேத்கர் கேட்டால் அவர்களைப் பொருத்தவரை அணுகுண்டுதானே!

இந்து சாஸ்திரங்கள்படி இந்த மசோதாவின் ஒரே ஒரு பிரிவு இருந்தால் ஒட்டு மொத்த மசோதாவையும் ஏற்றுக்கொள்வதாக சவால் விட்டார்கள். இருக்காது என்பதுதான் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியுமே! இது அம்பேத்கருக்கும் தெரிந்ததால்தான் நூறு ஆண்டுகளுக்கு முன்பே மநுஸ்மிருதியை பொதுவெளியில் எரித்தார்.

அந்த நெருப்புப் பயன்படாமல் போகவில்லை. விதைத்தவர் இல்லாவிட்டாலும் விழுந்த விதைகள் சும்மா இருக்குமா?

அம்பேத்கர் அன்று விதைத்த விதைகள்தான் சனாதனப் பாறைகளைப் பிளந்துகொண்டு, “சிறப்புத் திருமணச் சட்டம், வாரிசுரிமைச் சட்டம், தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்புச் சட்டம், வரதட்சணை தடைச்சட்டம், சதி தடைச்சட்டம்… ” என வேறு வேறு காலங்களில் முளைத்து வளர்ந்திருக்கின்றன.

இத்தனைக்குப் பிறகும் “சாதி, சமய, நிற, மத பேதமில்லாமல் பெண்களுக்கான பாதுகாப்பை மிகவும் மதிப்புடன் குறிப்பிடும் அனைவருக்குமான மகத்தான நூல் மநுஸ்மிருதி” என்று 2014ஆம் ஆண்டில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அளித்தத் தீர்ப்பில் கூறியிருக்கிறார் என்றால் எவ்வளவு ஆழப்பதிந்திருக்கிறான் மநு என்பதை அறியமுடியும்.

பெண்களுக்கு எப்படிப்பட்ட ‘பாதுகாப்பு’ மநுதர்மத்தில் அளிக்கப்பட்டுள்ளது என்பது மேலே பார்த்தவை. “பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுவனவற்றையும் கேட்பீராக!” (அத்தியாயம் 9; சுலோகம் 19)
இதுதான் பெண்களுக்கு மநு அளித்துள்ள ‘மதிப்பு’!

ஏற்கனவே உள்ள முற்போக்கான சட்ட திட்டங்களையெல்லாம் அழித்து வருகின்ற சனாதன சங்பரிவார நடுவண் அரசு பெண்களின் உரிமைகளையும் அரித்து அழித்துவிடக் காலம்பார்த்திருக்கிறது.

எனவே அருவமாய் மக்கள் மனங்களுக்குள் புகுந்து பழமைவாதத்தைப் பாதுகாக்க உந்திக்கொண்டே இருக்கும் மநுதர்மம் எதிர்ப்போம்!

போராடிப் பெற்ற சுதந்திரத்தால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டம் பாதுகாப்போம்!

மயிலைபாலுLeave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *