நகரமயமாக்கலால் நரகவாழ்க்கை வாழும் உழைப்பாளி மக்கள் – தாமு DYFI

நகரமயமாக்கலால் நரகவாழ்க்கை வாழும் உழைப்பாளி மக்கள் – தாமு DYFI

 

கொரோனா பெரும் தொற்றால் உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் மாண்டுபோவதும், நோய் தொற்று ஏற்பட்டு அவதிக்குள்ளாவதும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது. குறிப்பாக கொரானா பாதிப்பு அனைத்து மனிதர்களையும் பாகுபாடு பார்க்காமல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்கிற வாதம் முன்னுக்கு வந்துள்ள நிலையில், பாதிப்பை தூலமாக அணுகி பார்க்கிற போது ஒரு விடயம் தெளிவாக காட்டுகிறது. அது என்னவென்றால், கொரானா பாதிப்பு அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தினாலும், பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு என்பது பெரும்பாலும் சமூக பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் உள்ளவர்களே அதிகமாக இருப்பதை காணமுடிகிறது. அதிலும் குறிப்பாக நல்ல ஊட்டச் சத்து உணவின்மை, முறையான வீட்டு வசதி, சீரான சுகாதார வசதிகள், போன்றவை ஏதுமில்லாமல் இருக்கும் பெரும்பாலான உழைக்கும் மக்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா பாதிப்பில் சென்னை தமிழகத்தின் மையமாக இருக்கிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் நான்கில் மூன்று பங்கு சென்னையின் பாதிப்பாகும். சென்னையில் ஏற்பட்டுள்ள கொரானா அனைத்து பகுதி மக்களையும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்று பொதுவாக கருதப்பட்டாலும், குறிப்பாக சென்னையின் உழைக்கும் மக்கள் பெரும் பேரிடரை சந்தித்து வருகிறார்கள். குடிசைப்பகுதி மக்கள் சென்னை மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆவர்.

குடிசைப்பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகளை எடுத்துக் கொண்டால், போதிய கழிப்பிட வசதி, சுகாதார வசதி, குடிநீர் வசதி, வீட்டு வசதி என ஏதுமில்லாமல் வெறும் பத்துக்கு பதினைந்து அல்லது பத்துக்கு இருபது என சதுர அடிக் கொண்ட வீடுகளாகவே உள்ளது. சென்னை தீவுத்திடல் அருகில் இருக்கின்ற காந்தி நகர் என்கிற பகுதியில் சுமார் 3000 வீடுகளுக்கு மேல் உள்ளன, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கே வசித்து வருகிறார்கள். இவ்வளவு பெரிய மக்கள் எண்ணிக்கை கொண்டுள்ள இந்த பகுதியில் கழிப்பிட வசதி எடுத்துக்கொண்டால், வெறும் 5 பொதுக் கழிப்பிடம் தான், அதாவது மொத்த கழிவறைகள் எடுத்துக் கொண்டால், வெறும் 68 தான் உள்ளது.

12 ஆயிரம் மக்கள் தொகை கொண்டுள்ள இந்த பகுதியில் உள்ள கழிவறையை ஒரே நேரத்தில் 68 பேர் மட்டுமே பயன்படுத்த முடியும். பல நேரங்களில் தண்ணீர் வருவது கிடையாது, சில நேரங்களில் தண்ணீர் இல்லாமல் பூட்டியே இருக்கின்ற நிலைமைகளும் ஏற்படும். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கையை கழுவ வேண்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால் உண்மை நிலை என்ன கழிப்பிடத்திற்கு கூட தண்ணீர் இல்லாத நிலை தான் உள்ளது. தனி மனித இடைவெளியோடு இருக்க வேண்டும் என்கிறது அரசு. 12 ஆயிரம் மக்களும் ஒரு சதுர கிலோ மீட்டர்க்குள்ளாக தான் வாழ்ந்து வருகிறார்கள், ஒரு வீட்டில் வாழும் 5 நபர்களுக்கும், பக்கத்தில் வீட்டில் வாழும் 5 நபர்களுக்கும் இருக்கின்ற இடைவெளி வெறும் 1 அடி தான். இங்கே எப்படி தனி மனித இடைவெளியோடு வாழ முடியும். நெருக்கடியோடு வாழ வீடுகளை அமைத்து கொடுத்துவிட்டு தற்போது தனிமனித இடைவெளியோடு இருங்கள் என்றால் எப்படி இருக்க முடியும்.

Slums in Chennai - Wikipedia

அந்த பகுதியில் கொரானா பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமூக பொருளாதார அடிப்படையில் முன்னேறியவர்கள் வாழும் குடியிருப்புகளில் கொரானா தடுப்பு பணியை மேற்கொள்வதற்கும், உழைப்பாளி மக்கள் கணிசமாக இருக்கின்ற குடிசைப்பகுதியில் கொரானா தடுப்பு பணியை மேற்கொள்வதற்கும் ஏராளமாக பாகுபாடுகளும், வேறுபாடுகளும் இருப்பதை காண முடிகிறது. ஒருத்தருக்கு ஒருவர் எவ்வித இடைவெளியும் இல்லாமல் வாழ்ந்து வரும் குடிசை பகுதியில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் வேகமாக மற்றவர்களுக்கு பரவத்துவங்கும், மேற்கண்ட காந்திநகரில் ஒரு தெருவுக்கு ஒருவர் என தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள். அரசோ அங்குள்ள மக்கள் அனைவருக்கும் சோதனை செய்யாமல் தொற்று ஏற்பட்டுள்ள குடும்பம்த்தாரை மட்டும் தனிமைப்படுத்தும் முயற்சி மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் கூட அரசு அம்மக்களுக்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்தி தரத நிலை தான் இருந்து வருகிறது.

இந்த பகுதியில் உள்ள அனைவரும் சமூக பாதுகாப்பு, நிரந்தர பணி என ஏதுமற்றவர்கள், தினக்கூலிகளாகவும், அல்லது ஆட்டோ ஓட்டுவது, மிதி வண்டி மிதிப்பது, வீட்டு வேலை செய்வது, கட்டிட வேலை ஈடுபடுவது, கடைகளில் பணியாற்றுவது என முறைச்சார தொழிலாளர்களாகவும் இருந்து வருபவர்கள், அன்றாடம் வேலைக்கு சென்றால் தான் அடுத்த நாள் அவர்களது வீடுகளில் அடுப்பெரியும் நிலை. ஊரடங்கு 3 மாதங்களை கடந்து விட்டது. இம்மக்கள் உணவுக்கு என்ன செய்வார்கள்? அரசு கொடுத்தது வெறும் 1000 ரூபாய் மட்டுமே, இந்த தொகை ஒரு வார உணவு செலவுக்கு கூட போதாது.

மீதி நாட்களுக்கு என்ன செய்கிறார்கள் இம்மக்கள், உணவு சமைப்பதற்காக வட்டிக்கு கடன் வாங்குவது, அல்லது ஆசையாக அணிந்திருந்த நகைகளைகளையும், இதர பொருட்களையும் கிடைக்கும் விலைக்கு விற்பது அல்லது அடகு கடையில் அடமானம் வைப்பது, மூன்று வேளை உணவு இரு வேளை உணவாக மாற்றுவது, உணவுகளின் அளவும் அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவும் குறைப்பது, குழந்தைகளுக்கு கடைகளில் வாங்கி கொடுக்கப்பட்ட பால் அளவு குறைப்பது, என குடிசைப்பகுதி மக்கள் உணவு தேவையை இவ்வாறு தான் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். இது தான் சென்னை நகரில் இருக்கின்ற குடிசைப்பகுதி மக்களின் இன்றைய நிலை.

அதே போல் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், கண்ணகிநகர் போன்ற இடங்களில் சென்னையில் வாழ்ந்து வந்த குடிசைபகுதி மக்களை அப்புறப்படுத்தி எவ்வித வாழ்வாத வசதிகளையும் ஏற்படுத்தாமல் மறு குடியமர்த்தப்பட்டார்கள், பெரும்பாhக்கம் குடிசைமாற்ற வாரிய குடியிருப்பில் மட்டும் இருக்கின்ற வீடுகள் எண்ணிக்கை 23,158, இவைத் தவிர கண்ணகி நகர், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளை எடுத்து கொண்டால் அங்கே பல்லாயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த பகுதிகளில் அமர்த்தப்பட்டவர்களின் வாழ்வதாரங்கள் அனைத்தும் சென்னைக்குள் தான் இருக்கிறது.

World bank aid of Rs 4647 crore to build 38,000 tenements for ...

ஆட்டோ ஓட்டுவது, வீட்டுவேலை செய்வது, கட்டிட பணியில் ஈடுபடுவது, கடைகளில் பணியாற்றுவது, என பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் முதல் அவர்கள் செய்யும் வேலை வரை அனைத்தும் அவர்கள் எங்கிருந்து அகற்றப்பட்டார்களோ அந்த பகுதியில் தான் இன்று வரை அமைந்திருக்கிறது. கொரானாவுக்கு முன்பு 20 அல்லது 30 கிலோ மீட்டர் கடந்து தான் சென்னைக்கு வந்து சென்று தங்கள் வாழ்வதாரத்திற்கான பொருளுதவியை பெற்று வந்தார்கள். கடந்த மூன்று மாதங்களில் பேருந்து வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதர வாகனங்களோ இயக்கப்படவில்லை, எப்படி அவர்கள் வயிற்றுப்பசியை ஆற்றிக் கொள்ள முடியும்? இது தான் சென்னையில் இன்றைய குடிசைப்பகுதிகளின் நிலையாக இருக்கின்றது. கொரானா மடடும் மல்ல எந்த பேரிடர்கள் ஏற்பட்டாலும் அதில் கணிசமாக பாதிக்கப்படுவர்களும், ஏற்படும் உயிரிழப்புகளும் சாதரண உழைப்பாளி மக்கள் பகுதியை சார்ந்ததாகவே உள்ளது.

சென்னையில் உள்ள குடிசைப்பகுதி மக்கள் ஏதோ நேற்று வந்தவர்கள் போல் அரசு அவர்களை பாராபட்சமாக நடத்துகிறது. சென்னை மதராசபட்டிணமாக இருக்கின்ற காலம்தொட்டே குடிசைப்பகுதி மக்கள் இருந்து வருகிறார்கள். ஆங்கிலேயர்கள் கோட்டையை கட்டி நகரத்தை உருவாக்கும் போது, கொடிய பஞ்சமும், வாட்டிய வறட்சியும், கிராமப்புற மக்களை நகரத்தை நோக்கி தள்ளியது. கிராமங்களில் வாழ்வதை காட்டிலும் நகரத்தில் சிறப்பாக வாழலாம் என்ற கனவுகளோடு சென்னைக்கு வந்தார்கள் அவ்வாறு வந்தவர்களுக்கு அன்றைய ஆங்கிலேயர்களும் சரி அதற்கு பிறகு வந்த ஆட்சியாளர்களும் சரி, இம்மக்களை கோட்டை கொத்தளங்கள் கட்டவும், அகலமான சாலைகள், பாலங்கள் போடவும், இரயில் இருப்பு பாதை அமைக்கவும் என சென்னை வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தி வந்தார்கள்.

இது வரை அடிப்படை வசதிகளை செய்து தரமாலேயே அம்மக்களை வைத்திருக்கிறார்கள். சென்னையில் உள்ள குடிசைப்பகுதிகளை எடுத்துக்கொண்டால் 100 ஆண்டுகள் 150 ஆண்டுகள் வரலாறு கொண்டாத இருக்கும். நவீனதாரளமயமும், நகரமயமாக்கலும் சென்னையின் பூர்வகுடிகளான குடிசைப்பகுதி மக்களின் உழைப்பை மட்டும் பயன்படுத்தி அவர்களை வெறும் சக்கைகளாக தூக்கியெறிந்து வருகிறது. சென்னை வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தி கொண்ட ஆட்சியாளர்களால் போதிய வீட்டு வசதியும், சுகாரதார வசதியும், வாழ்வாத வசதியும் ஏற்படுத்திதரதா காரணத்தினால் கொடிய கொரானாவால் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *