உலகம் போற்றும் இந்திய நரம்பியல் விஞ்ஞானி Dr. சுபா டோலே (Dr. Shubha Tole)
தொடர் 85: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
நரம்பியல் விஞ்ஞானி Dr. சுபா டோலே (Dr. Shubha Tole) மும்பையிலுள்ள டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்தின மூளை ஆராய்ச்சியின் முதன்மை ஆய்வாளர் ஆவார். ஆரம்ப கால மூளையினுடைய வளர்ச்சியில் மரபணுக்களின் பங்களிப்பை நேரடியாக ஆய்வு செய்து வெளியிட்டதன் மூலம் மற்றும் பாலூட்டிகளில் நீயோகார்டெக்ஸ் எனும் பகுதி மூளையில் எப்படி உருவாகிறது என்பதை ஆய்வு செய்து உலக அளவில் புகழ் பெற்றவர்.
சுபா டோலேவின் சமீபத்திய பிரம்மாண்ட சாதனை அவர் மூளை அறிவியல் துறையில் செய்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் 89 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச மூளை ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதாகும். மூளை ஆராய்ச்சித் துறையின் முதன்மை விஞ்ஞானியாக திகழும் டாக்டர் சுபா மூன்று முக்கியமான பங்களிப்புகளை இந்தத் துறைக்கு வழங்கியுள்ளார். இவற்றை நாம் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
LHX2 ஹோமியோ ஃபாக்ஸ் புரதம் என்று அழைக்கப்படுகிறது. இது மனிதர்களின் மூளையில் உள்ள ஆற்றல் மிக்க மரபணுக்களில் ஒன்று. இந்த மரபணு ஒரு பெரிய புரத குடும்பத்தைச் சேர்ந்த LIM டொமைன் எனும் பகுதியைச் சார்ந்ததாக உள்ளது. இந்த மரபணு முழுமையாக கட்டு உடைப்பு செய்யப்பட்டதற்கும் இதனுடைய பயன்பாடுகளை உலகிற்கு அறிவித்ததற்கும் டாக்டர் சுபாவின் பங்களிப்பு மகத்தானதாகும். மூளையில் அமிக்டாலா என்கிற ஒரு பகுதி உண்டு. இந்த பகுதி ஒரு கருவின் ஆரம்ப காலத்தில் வளர்ச்சி அடைய தொடங்கி மூளையின் இரு புறமும் மிக சிறிய அவரை விதை அளவிற்கு வளர்கின்ற முக்கியமான உறுப்பு.
பெருமூளை அரைக்கோளங்களில் இருக்கும் ஒரு ஜோடி அணுக்கரூ லிம்பிக் அமைப்பின் ஒரு பகுதி இது. ஒரு மனிதனின் முடிவெடுக்கும் ஆற்றல், நினைவாற்றல், உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு போன்ற செயலாக்கங்களுக்கு அமிக்டாலா முதன்மையான பங்கை கொடுக்கிறது. LHX2 மரபணு இந்த அமிக்டாலாவின் வளர்ச்சியோடு முக்கிய தொடர்புடையது என்கிற கண்டுபிடிப்பிற்காக உலக அளவில் அறியப்பட்டவர் தான் விஞ்ஞானி Dr. சுபா டோலே (Dr. Shubha Tole).
டாக்டர் சுபாவின் இரண்டாவது முக்கிய பங்களிப்பு பாலூட்டிகளின் மூளை வளர்ச்சி தொடர்பானதாகும். அதற்கு மூளையில் உள்ள நீயோ கார்டெக்ஸ் என்று அழைக்கப்படும், ஆறு அடுக்கு பூரணியை அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். பாலூட்டிகளின் பெருமூளைப் புறணியின் அடுக்குகளின் தொகுப்பு என்று இது அழைக்கப்படுகிறது அனைத்து விலங்குகளும் தாய்மை அடையும் பொழுது அந்த குறிப்பிட்ட சில மாதங்களுக்கோ அல்லது சில வருடங்களுக்கோ தன்னுடைய குட்டிகளின் மீது அளவற்ற பாசத்தை பொழிகின்றன. பாதுகாப்பு உணர்வை தீவிரமாக செயல்படுத்துகின்றன. இடம்சார்ந்த மூளையின் உயர் வரிசை செயல்பாடுகளில் இந்த ஈடுபாடு அதிகம் இருப்பதற்கான தூண்டுதல்கள் ஏற்படுகின்றன. நீயோகார்டெக்ஸ் பகுதியில் பரிணாமவியலின் காலகட்டத்தில் ஐசோகார்டெக்ஸ் என்னும் ஒரு துணை பிரிவு மூளையில் உதித்திருக்க வேண்டும் என்பது டாக்டர் சுபாவின் கண்டுபிடிப்பு. இந்த கண்டுபிடிப்பின் மூலம் பாலூட்டிகள் என்னும் வகையைச் சேர்ந்த விலங்கினங்கள் டார்வினியத்தின் அடிப்படையில் எப்படி பரிணாமம் அடைந்தன என்பதற்கான மரபணுவியல் விளக்கத்தை முதலில் கொடுத்தவராக டாக்டர் சுபா அறியப்படுகிறார்.
டாக்டர் சுபாவின் மூன்றாவது முக்கிய பங்களிப்பு ஆல் ஃபேக்டரி பல்பு (OLFACTORY BULB) என்று அழைக்கப்படுகின்ற மூளையின் நரம்பியல் அமைப்பாகும். இது மனிதனின் நுகர்வு இன்ற வகைப்படுத்தப்படும், வாசனை உணர்வை எப்படி நாசிகளில் தூண்டுகின்றது என்பது குறித்த அறிவியல். அமிக்டாலா ஆர்பிட்டோ ஃப்ரெண்ட்அல் கார்டெக்ஸ் OFC மற்றும் உணர்ச்சி நினைவாற்றல் கற்றல் ஆகியவற்றில் முக்கியமான பங்களிப்பை வழங்குகின்ற இப்போகாம்பஸ் எனும் பகுதிகளை உள்ளடக்கிய ஆராய்ச்சி ஆகும். மனித மூளையில் மின் விளக்கை போலவே ஆல் ஃபேக்டரி பல்பு எனும் ஒரு அமைப்பு உள்ளது. இது நம்முடைய கண் பார்வையையும் நம்முடைய நாக்கின் சுவைப் பகுதியையும், நம்முடைய மூக்கில் உள்ள நாசி துவாரங்களின் நுண்ணிய உணர்வு செல்களையும் இணைக்கின்ற கண்ணுக்கு தெரியாத ஒரு பல்பாக விளங்குகிறது. இது அமிக்டாலாவுடன் அனைத்து பிரதான உறுப்புகளின் உணர்வு செல்களையும் இணைக்கிறது. துணை ஆறு ஃபேக்டரி பல்பு, பிரதான ஆல் ஃபேக்டரி பல்பு என்று முதுகு புறத்தில் மேலே பின்புற பகுதியில் இதற்கான உணர்வு மண்டலம் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமை டாக்டர் சுபாவை சேரும்.
விஞ்ஞானி Dr. சுபா டோலே (Dr. Shubha Tole) 1967 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். அவருடைய தாயார் டாக்டர் அருணா டோலே மாற்று திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்குகின்ற மருத்துவராக இருந்தார். அவருடைய தந்தை இந்தியாவின் தலைசிறந்த மின் ஆராய்ச்சி பொறியாளர். மும்பையில் தன்னுடைய ஆரம்ப கல்வியை முடித்துவிட்டு, செயிண்ட் சேவியர் கல்லூரியில் உயிரிவேதியியலில் இளங்கலைப் பட்டத்திற்கு இணைந்தார் சுபா. அங்கேயே முதுகலை பட்டமும் பெற்று அந்த இறுதி ஆண்டில் கலிஃபோர்னியா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி எனும் அமெரிக்க கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டார். மூளை நரம்பியலில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட பிறகு சிக்காகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கு பிறகான மூளை குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார்.
1999 ஆம் ஆண்டு டாக்டர் சுபா மும்பையின் டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்தில் மூளை நரம்பியல் துறையில் ஆய்வாளராக இணைந்தார். பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இவர் ஆலோசனை குழுக்களில் இடம்பெற்றிருக்கிறார். அமெரிக்கன் சொசைட்டி ஃபார் செல் பயோலஜி இவரை கௌரவ வாழ்நாள் உறுப்பினராக தேர்வு செய்தது. இந்தியாவினுடைய நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் மற்றும் இந்தியன் அகாடமி ஆஃப் ஸைந்ஸஸ் ஆகிய அமைப்புகளில் கௌரவ உறுப்பினராக இருக்கிறார்.
இவர் பல்வேறு விருதுகளின் சொந்தக்காரர். 2010 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். 2014 ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் விருது இவருக்கு வழங்கப்பட்டது, இந்த விருது ₹55,00,000 விருதாகும். இது இப்போகேம்பஸ் என்கிற மூளையின் பகுதியை ஆய்வு செய்ததற்காக இவருக்கு வழங்கப்பட்டது.
1989 ஆம் ஆண்டு இந்தியாவினுடைய கோட்பாட்டு இயற்பியலாளர் சந்தீப் திரிவேதியை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது சர்வதேச மூளை அறிவியல் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது நம் அனைவருக்கும் பெருமை.
கட்டுரையாளர்:
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் : இந்திய கட்டமைப்பு உயிரியல் துறையின் வித்தகர் எஸ். ராமஸ்வாமி (Structural Biology Indian Scientist Dr. Ramaswamy Subramanian)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகச் சிறந்த சாதனையாளர். இந்தியன் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டியது. ஒரு கேள்வி உள்ளது. அனைத்து உறுப்புகளுக்கும் மூளையே பிரதானம். க்ளாகோமா (கண் நீரிழிவு நோய்) நாய்க்கு தீர்வு காணப்படாத ஏன்.