மன்னார்குடி ஏப்ரல் 23:

33 வார்டுகள்… 280க்கும் மேற்பட்ட பெரிய தெருக்கள்… 25000,ற்கும் மேற்பட்ட வீடுகள்..இவற்றில் காலனி…மாடிவீடுகளும் அடங்கும்.. 70000ற்கும் மேற்பட்ட மக்கள்தொகை… எந்தெந்த வீதிகள் எந்தெந்த வார்டுக்குள் அடங்கும் என்று கண்டுபிடித்து அதற்குள் தன்னார்வலரை அடையாளம் கண்டு.. நமது பணியின் தன்மை… நோக்கத்தை புரியவைத்து முடிக்கவே இருவாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இடையில் தேர்தல்…. அடுத்தடுத்து பணியாற்ற முன்வந்தோருக்கு கொரோனா கால இடர்பாடுகள்… 33 வார்டுகளுக்கு 33 பேரிடம் தலா 1000 நோட்டீஸ் வீதம் ஸ்பான்சர்… (அச்சகங்கள்+பள்ளிகள்) 500 பல வண்ண சுவரொட்டி ஸ்பான்சர். (எல்.ஐ.சி). அதை முழுவதுமாக ஒட்ட ஒரு போராட்டம்.. இரு நாள் ஆட்டோ மைக் விளம்பரம் செய்ய அனுமதிபெற தேர்தல் நடத்தை முறைகளால் கூடுதல் முயற்சி.. கடைசிநாள் வரைகூடவார்டு தொடர்பாளர் கிடைக்காமல் போன வார்டும் உண்டு.

தனது வார்டிலும் நோட்டீஸ் கொடுத்து. கூப்பிட்டபோதெல்லாம் பிறவார்டுகளுக்கும் கொஞ்சமும் முகம்சுழிக்காமல் ஓடோடி வந்த நண்பர்களின்றி முழுதும் நோட்டீசை வினியோகித்திருக்க முடியாது. பல வாராடுகளில் தன்னந்தனி ஆளாகவே எந்த ஒரு வீடும் விடுபட்டுவிடாமல் நூறு சதவீத சமூக அக்கறையுடன் முழுமன உற்சாகத்துடன் செயல்பட்டதற்கு நிச்சயம் சமூகத்திற்கு பலன் இன்றி போகாது. பெயர் குறிப்பிட்டால் பலபேரின் பெயர் விடுபட்டு விடலாம் என்பதால் தவிர்க்கிறோம்.

வீட்டிற்குள் இருந்து மிரட்டும் நாயுடன்.. தெரு நாய்களின் அட்டகாசம் வேறு.. அடிக்காத காலிங் பெல்லை அடித்துவிட்டு.. வீட்டிற்குள் அலறும் டி.வி. சப்தத்தில் இருந்து ஜனங்களை வெளியே கொண்டுவந்து சேர்த்தபின்.. தொண்டை தண்ணி வற்றிய பின்னும். கால்கடுக்க நடந்த பின்னும் பொறுமையாய் பேசி புரிய வைத்தபின் அவர்களின் அங்கீகார வார்த்தை நமது அசதியைப்போக்கும். இதுதான் ஒவ்வொரு ஊழியரின் அனுபவமாக இருக்கும்.

No description available.

என்ன ? செல்போனில் வைத்தகண் வாங்காமல் கேம்களில் ஆழ்ந்திருந்த சிறுசுகள்தான் நம்மை வில்லன்களாய் முறைத்தனர். எப்படியும் ஒவ்வொரு வார்டிலும் 10இடங்களிலாவது கும்பல்கும்பலாய் மரத்தடியில்..மாடிப்படியில்..பூட்டிக்கிடந்த வீட்டு வரண்டாவில் என செல்போன்பிசாசுகளிடம் சிக்கி.. நமது கூக்குரலைக்கூட கண்டுகொள்ளாமல் கும்மாளமிட்டனர். இவர்களை எப்படி…எதைவைத்து மீட்பது.. என்பதுதான் இன்றைய உலகம் எதிர்நோக்கும் தலையாயப்பிரச்னை.. பள்ளியில்லாததால் வீட்டில் உள்ள பிள்ளைகளை சமாளிக்க …பிள்ளைகளின் அடம்பிடிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்… குறிப்பாக அம்மா… செல்போனில் டேட்டா தீர்ந்த நிலையில் அதை உடனடியாக ரீசார்ஜ் செய்துதராத அம்மாவின் கையை கையில் கிடைத்த கட்டையால் ஒடித்துவிட்டு…. ரத்தம் வந்ததைப்பார்த்துவிட்டு அதே அம்மாவைக் கட்டிப்பிடித்து கொண்டு கதறி அழுத குழந்தையையும் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் பார்த்தோம்.

ஒரு பிரபல வக்கீல் இரவு 1.00மணிக்கு சிறுநீர் கழிக்க எழுந்துசென்ற போது அவரது மகன் செல்போனில் படம் பார்த்துக் கொண்டிருப்பதைக்கண்டு முதலில் அதிர்ந்து பின் ஆத்திரமடைந்து செல்லைப்பிடுங்கிய போது அவர் இதுவரை அவரது வாழ்நாளில் கேட்டிராத கெட்டவார்த்தைகளை எல்லாம் அவனது மகனின் வாயிலிருந்து கேட்டார்.. இன்று அவருக்கு கவுன்சலிங் நடக்கிறது.. இப்படி உண்மை சம்பவங்கள் மன்னார்குடி போன்ற சிறுநகரிலேயே இவ்வளவு இருந்தால்… மாவட்டத்தில்.. மாநிலத்தில்… தேசத்தில்… ஒட்டுமொத்த உலகத்தில் எவ்வ்வ்வளவு இருக்கும் என நினைத்தால் இந்தத்தலைமுறை என்ன ஆகப்போகிறதோ என கலக்கமாய் இருக்கிறது… டாஸ்மாக்மூலம் ஆண்கள்.. டி.வி.சீரியல்களில்.. மைக்ரோ ஃபைனான்ஸ் சிக்கலில் பெண்கள்… செல்களில் பிள்ளைகள்..ஏராளமான குழந்தைகள் ஏதாவது வேலை செய்து தினசரி பணம் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இனி கொரோனாவே முற்றிலும் ஒழிந்து முறையாக பள்ளிகள் ஆரம்பித்தாலும் அவர்கள் படிக்கவரப்போவதில்லை..புதிய கல்விக்கொள்கை எதிர்பார்த்தது ஜரூரராய் அமலாகின்றது.

இருளைப்பழித்துக்கொண்டிருப்பதைவிட சிறுவிளக்காவது ஏற்றுவோம் என்பதுதான் அறிவொளி வாசிப்பு இயக்கத்தின் உடனடி கடமையாக இருக்கவேண்டும் என
களம் சுட்டிக்காட்டுகிறது. நாமும் மக்களிடம் நிறையவே வாக்குறுதிகளைக் கொடுத்து நம்பிக்கைகளை விதைத்திருக்கிறோம். சிறு குழந்தைகள் மறந்து போன அ க ங ச.. ஏ சி சி டி … வாய்ப்பாடுகளை ஞாபகப்படுத்துவோம்.. இலக்கணப்பிழை இன்றி தமிழ், ஸ்போக்கன் இங்கிலீஷ்.. எளியமுறை கணிதம், விளையாட்டாய் அறிவியல் பரிசோதனைகள்,மரபுவழி விளையாட்டுக்கள்,மாதந்தோறும் பொது அறிவு வினாடி வினாப் போட்டி… அதுவும் வார்டுகளுக்கு இடையே… இரவு வானை தொலைநோக்கியால் அலாவுதல்..போன்று துளிர் இல்ல பாணி செயல்பாடுகள் ஒவ்வொரூ வார்டிலும் ஆரம்பிக்க வாய்ப்புக்கள் ஏராளம்.. ஆனால் அவற்றை நிறைவேற்ற வார்டு வாரியாக கருத்தாளர்களை கண்டுபிடித்து அவர்களை பயிற்சி தந்து உருவாக்கவைண்டும் இந்த கொரோனா கெடுபிடிகளுக்குள்ளும்.

No description available.

இந்த ஊரடங்கு சூழலில் பெற்றோரே தங்கள் குழந்தைகளுக்கு “முறையான” ஆசிரியராய் இருந்து செயல்பட வழிகாட்டப்பட வேண்டும். எழுத்தாளர் சங்கம்+அறிவியல் இயக்கம்+கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியன இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்திய 25,வாசிப்பு நிகழ்வு(125நூல்கள்
அறிமுகம்), மற்றும் புத்தகத் திருவிழாவின் நீட்சியே இந்த “ஒரே நேரத்தில் குறள் வாசிப்பு”என்ற நிகழ்வு… இதில் எல்லோரும் எல்லா வீடுகளிலும் வாசித்தார்களா..என்றால் நிச்சயம் இல்லை.. ஏனெனில் அதை கண்காணித்து கவனம் செலுத்த நேரமும் இல்லை.. ஆட்களும் இல்லை.. ஊடகங்களின் நிகழ்ச்ச்சிக்கு முன்பான விளம்பரமும்இல்லை. காலை 8.00மணி என்றிருந்தாலோ… அலுவலகங்களில் “நாளில்” என்றிருந்தாலோ.. பரவலாக ஆங்காங்கே ஒவ்வொரு வார்டிலும் கூட்டங்களாக நடத்தியிருக்கலாம். ஆனால் அதற்கு காவல்துறை அனுமதிக்கு வாய்ப்பில்லை. தேர்தல்முடிவுக்காக காத்திருக்கும்சூழலில் அரசு ரீதியிலும் -அரசியல் ரீதியிலும் தக்க உதவி இல்லை.. அதே நேரத்தில் இப்படியான சூழல் எல்லாக் கட்சிகளையும் ஈடுபடுத்த நல்வாய்ப்புதான்.ஆனால் இடதுசாரிகள், பெரியாரிஸ்டுகள், இஸ்லாமிய கல்வி அமைப்பினர், ஓய்வு பெற்ற தொழிற்சங்கவாதிகள், எல்.ஐ.சியின் அனைத்து தரப்பட்ட பிரிவினர், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர், தனியார் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர், ஆன்மீக அமைப்பினர், ஜேசீஸ், ரோட்டரி, தனிப்பட்ட சமூக நல விரும்பிகளின் பங்கு நாம் அவர்களை அணுகி அரைமணி நேரத்திற்கும் மேலாக உரையாடும் போது ஊர்ஜிதமாகிறது.

நாங்கள் எந்தத் தனிநபரையும்.. தனிப்பட்ட அமைப்பையும் முன்னிறுத்தவில்லை. இந்த இயக்கத்தின் வாட்சப் எண் மட்டுமே கொடுத்தோம்.. பண வசூல் கிடையாது. இந்த முறை நாங்கள் கற்ற படிப்பினைகளை வைத்து வருகிற ஆண்டில் முறையாக செயல்பட முழுதும் வாய்ப்புள்ள வார்டு தொடர்பாளரை போட்டு.. ஒவ்வொரு வார்டிலும் எல்லாத் தெருக்களையும் சேர்ந்த தொண்டராகளைக்கொண்ட குழு அமைத்து.. புத்தக தினத்தன்று வார்டுக்கு வார்டுக்கு 25% தள்ளுபடியில் புத்தக விற்பனைக்கு ஏற்பாடு செய்வோம். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வோம்!.

No description available.

அதற்கு முன்பாக ஆண்டு முழுதும் பிள்ளைகளை புத்தக உண்டியலில் பணம் சேர்க்க ஆவண செய்வோம்.

இந்த ஆண்டு நிகழ்வு ஒரு தொடக்கமாக இருக்கும்.

நோட்டீஸ் கொடுக்க ஆள் கிடைக்குமா? நல்ல கற்பனை….என்றெல்லாம் எச்சரித்தவர்களுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கும்.

எல்லா வீடுகளிலும் இன்றைக்குள் ஐந்து குறள்களாவது படித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு தொண்டனும் அத்தனை தூரம் நடைநடையாய் நடந்து…. அவ்வளவு நேரம் அக்கரையுடன் ஒவ்வொரு குடும்பத்தினருடனும் உரையாடியிரூக்கிறோம் ஒன்று நிச்சயம்… தன் குழந்தையின்
கல்வி… எதிர்காலம்… மனநலம்.. பற்றிய கவலை ஒட்டுமொத்தமாய் ஒரே நேரத்தில் ஏற்பட்டிருக்கிறது. இது நாடு முழுக்கத்தொற்றினால்…. பரவினால்……. செல்போன் பிசாசுகளிடமிருந்து பிள்ளைகளை மீட்டு அவர்களை நல்லபுத்தகங்களிடம் ஒப்படைப்போம். வீடுகள் தோறும் சிறு நூலகம்.. வார்டுகள்தோறும் துளிர் இல்லங்கள்.. இவற்றை நோக்கி இறங்குவோம். தொண்டர்களின் அனுபவப்பகிர்வுக் கூட்டத்தின் விமர்சனங்களை உள்வாங்குவோம்.

தன்னார்வத் தொண்டர்களின் தளரா உழைப்பு வீண் போகாது… வீண்போகக்கூடாது!..

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *