எழுத்தாளர்களையும்,   பதிப்பாளர்களையும், வாசகர்களையும் கெளரவப்படுத்தி, ஊக்கமளிப்பதற்காக 1995-ம் ஆண்டு,  பாரீஸில் நடந்த யுனஸ்கோ – வின் பொது மாநாட்டில் முடிவு செய்ததுதான் உலகப் புத்தக தினம். புத்தக வாசிப்பின் இன்பத்தை அனைவரும், குறிப்பாக இளைய சமுதாயம் அடைய வேண்டும் என்பதற்காக நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தும் நாளாகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் உலகெங்கிலும் இத்தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவதற்கான முன் தயாரிப்புகளையும், திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஏதாவதொரு நாடு பொறுப்பெடுத்துக் கொள்கிறது.அவ்வகையில் இவ்வாண்டில் உலகப் புத்தகங்களின் தலைநகராக மலேசியாவின் கோலாலம்பூர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
    இதுகாறும் இலக்கியத்திற்கும், எழுத்திற்கும் பெருமை சேர்த்து அழியாப் புகழடைந்தவர்களின் மறைந்த தினத்தை நினைவு கூரும் வகையிலும்  இத்தினம் கொண்டாடப்படுகிறது. நாம் அனைவரும் அறிந்த ஷேக்ஸ்பியர் மறைந்த தினம் ஏப்ரல் 23. அவர் பிறந்த தினமும் ஏப்ரல் 23, என்று ஒரு புறமும், இல்லை ஏப்ரல் 26 தான் என்று இன்னொரு புறமும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.
  இதே ஏப்ரல் 23-ல் தான் ” டான் குவிக்ஸாட் ” என்ற நாவலை எழுதிய ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மிகைல் சர்வான்டேயின் நினைவு தினமும், கொலம்பஸ் அமெரிக்காவை அடைவதற்கு முன் தென் அமெரிக்காவின் பெரு நாட்டின் வரலாற்று ஆவணத்தை எழுதிய இன்கா கார்ஸிலாஸோ டி லா வேகா வின் நினைவு தினமும் கடைபிடிக்கப்படுகின்றன. ஏப்ரல் 23 உலகக் காப்புரிமை தினமுமாகவும் கொண்டாடப்படுகிறது.
‌    ஷேக்ஸ்பியரின் படிப்பறிவைப் பற்றிப் பல புனைகதைகள் உள்ளன. அவரது சமகால நாடகவியலாளர்களான பென் ஜான்சன், ராபர்ட் க்ரீன் போன்று அவர் ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலை கழங்களுக்குச் சென்று பட்டம் வாங்காததால்,  அவரது அறிவுத்திறன் குறைத்தே மதிப்பிடப்பட்டு வந்தது. ஏன், இன்றும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஷேக்ஸ்பியர் முறையாகக் கல்வி கற்றவரில்லை என்றே பல நேரங்களில் கற்பிக்கப்பட்டு வருகிறது. படித்து பட்டம் வாங்குவது மட்டும் கல்வி கற்றதற்கு அடையாளமல்ல. நம் வாழ்க்கையை செப்பனிட்டுக் கொள்வதற்கான அறிவுத் திறனை அடைவதே உண்மையான கல்வி என்பதற்கு அவரது வாழ்க்கையே சாட்சி.
Inside the Weird World of Shakespeare Conspiracy Theories - InsideHook
    அந்தக் கல்வியைப்பெறுவதற்கு ஷேக்ஸ்பியர் தனது பள்ளிப்  பருவத்திலேயே தயாராகி விட்டார் என்று எழுதுகிறார் அறிவியல், பயணங்கள், மொழி சார்ந்து எழுதுவதில் வல்லவரான பில் ப்ரைசன். அவர் தனது ” ஷேக்ஸ்பியர் ” என்ற நூலில் இதை விரிவாகப் பதிவு செய்துள்ளார். ஏழு வயதில் கடுமையான விதிகளுடன் இயங்கி வந்த ஸ்ட்ராட் ஃபோர்ட் இலவச இலக்கணப் பள்ளியில் சேர்ந்தார். காலை 6 மணிக்குப் பள்ளி ஆரம்பித்தால் மாலை 6 மணி வரை பள்ளி நடைபெறும். வாரத்தில் 6 நாட்களும் பள்ளி இயங்கும். மீதம் ஒரு நாளில் மதம் சம்பந்தமான வகுப்புகள் நடைபெறும். இலவசக் கல்வி எனினும் ஏழைகளும், பணக்காரர்களும் இணைந்து படிக்கக் கூடிய அளவில் உயர்ந்த பாடத்திட்டம் இருந்ததால் தான்  கற்றல், கேட்டல், எழுத்துத் திறன்களில்  அவரால் சிறந்த பயிற்சி பெற முடிந்தது.
 அதனால்தான், பின்னாட்களில் இத்தகையப் பெரும் நாடகக் காவியங்களை உருவாக்க முடிந்தது. குறிப்பாக லத்தீன் மொழியில் தேர்ச்சி பெற்றவராக  விளங்கினார். தான் நாடகங்கள் எழுதுவதற்குப் பெரும் துணையாக அவர் கற்றுத் தேர்ந்த ” ஜெனிவா பைபிள் 1580 ” ஐ லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யுமளவிற்கு லத்தீன், ஆங்கில மொழிகளில் சிறு வயதிலேயே புலமை பெற்றிருந்தார். 42 புத்தகத் தொகுப்புகளைப் படித்து முடித்திருந்த ஷேக்ஸ்பியர் தன்னுடைய நாடகங்களில் 1200 பைபிள் பதிவுகளைப் பயன்படுத்தியுள்ளார்.குறிப்பாக ஆதாம் ஏவாளின் கெயின், ஏபல் என்ற இரட்டைப் பிறவிகளின் கதையைத் தன்னுடைய நாடகங்களில் 25 முறை குறிப்பிட்டிருக்கிறார்.
 ஷேக்ஸ்பியரைப் பெரிதும் ஈர்த்த ஈசாப் கதைகள் குறிப்பிடப்பட வேண்டியவை. பழம்பெரும் கிரீஸ் நகரில் 620 லிருந்து 564 பொது ஊழிக்கு முன் (BCE) வரை வாழ்ந்த ஈசாப் என்ற அடிமை எழுதிய சுமார் 650 கதைகளிலிருந்து மதம் , அரசியல் சார்ந்த கருத்துக்களை எளிமையான முறையில் தன் நாடகங்கள் மூலம் மக்களுக்குப் புரிய வைக்கும் திறமையை ஷேக்ஸ்பியர் இக்கதைகளிலிருந்தும் பெற்றிருக்கக் கூடும். விலங்குகளையும், பிராணிகளையும் மையமாக வைத்து எழுதப்பட்ட இக் கதைகள் முதலில் வயதில் பெரியவர்களுக்குத்தான் எழுதப்பட்டன. ஏனெனில் அக்கதைகளின் பிரதான அம்சங்களாக மதம், சமூகம், அரசியல் சார்ந்த கருத்துக்களே இருந்தன. மறுமலர்ச்சிக் காலத்திலிருந்துதான் அவை குழந்தைகளுக்கான நீதிக்கதைகளாக உருவாக்கப் பட்டன. அக்கதைகளிலிருந்து ” எறும்பும், வெட்டுக்கிளியும் ” என்ற கதையை தன் காலத்தின் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு எழுதினார்.
Aesop's Fables for Children | Memoria Press - Classical Education
1588-ம் ஆண்டு இங்கிலாந்தின் மேல் 130 கப்பல்களைக் கொண்ட ஸ்பெயின் நாட்டின் கப்பற்படை படையெடுத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது அதை எதிர்கொள்ள நாட்டின் நகரத் தந்தை, காவல் துறை அதிகாரிகள், உயர்குடி மக்கள் மட்டுமே ஆலோசனைக் கூட்டங்களில் பங்கெடுத்தனர். இங்கிலாந்து மேட்டுக்குடி மக்களுக்கானது மட்டுமல்ல, நாட்டில் குடியிருக்கும் அனைத்து சாமான்ய மக்களுக்கு மானதுதான். அதனால் வெட்டுக்கிளியைப் போல் அவசியம் ஏற்பட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்றில்லாமல் , எறும்பைப் போன்று வரும் பிரச்சினையை சமாளிக்க முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும் என்று தன் நாடகத்தில் சுட்டிக் காட்டினார்.
      தனது நாடகங்கள் சாதாரண மக்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக அரிய கருத்துக்களை எளிய வார்த்தைகளில் பயன்படுத்தினார்.  அதற்கு ஈசாப் கதைகள் ஷேக்ஸ்பியர்ககு மிகவும் கை கொடுத்தன.
     அடுத்து பொ.ஊ.மு. 43 ம் ஆண்டில்  பிறந்த ரோமானியக் கவிஞர் ஓவிட்  லத்தீனில்
 15 புத்தகங்களாக எழுதிய மெடமார்ஃபசெஸ் எனும் காப்பியம் அவரால் ஆழ்ந்து வாசிக்கப்பட்டது. இந்தக் காப்பியத்திலிருந்து பல ரோமான்யப் புனைவுக் கதைகளையும், ஒப்புமைகளையும்  ரோமியோ அன்ட்  ஜூலியட், எ மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம், தி டெம் பெஸ்ட், தி காமெடி ஆப் எரர்ஸ் போன்ற நாடகங்களில் பயன்படுத்தினார்.
Romeo and Juliet | EW.com
ப்ளேக் காலகட்டத்தில் கவிதையின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பிய ஷேக்ஸ்பியர் ஓவிட்டின்
 காப்பியத்தை முன்வைத்து ” வீனஸ் அன்ட் அடனிஸ் ” என்ற கவிதையை எழுதினார். அவருடைய சானெட்ஸ் என்ற 154 கவிதைகளுக்கும் ஓவிட்டின்  காதல் கவிதைகள் பின்புலமாயிருந்திருக்கின்றன.
ஓவிட் உடையதைப் போன்று சிசரோ,, வர்ஜில், செனிகா போன்ற மற்ற ரோமான்ய எழுத்தாளர்களின் படைப்புகளும் அவர் படித்தப் புத்தகங்களின் பட்டியலில் அடங்கும்.
ஜெஃப்ரி சாஸர்(Jeffry Chaucer) ஆங்கிலக் கவிதைகளின் தந்தை என்றழைக்கப்படுபவர். 17,000 வரிகளை உள்ளடக்கிய  24 கதைகளை கான்டர்பரி டேல்ஸ் ( Canterbury Tales) என்ற நீள் கவிதையை 1387 – 1400 களில் எழுதியவர். இதையும், சாஸரின் இன்ன பிற படைப்புகளையும் ஷேக்ஸ்பியர் விரும்பிப் படித்துள்ளார். லத்தீன், ப்ரெஞ்ச், இத்தாலி போன்ற மொழிகளே கோலோச்சியிருந்த காலத்தில் ஆங்கிலத்தில் கவிதைகளை எழுதி அம்மொழிக்கு மதிப்புக் கூட்டியவர். இந்த கான்டர் பரி டேல்ஸ் , கான்டர்பரியில் உள்ள தாமஸ் பெக்கெட் என்ற புனிதரின் தேவாலாயத்திற்குச் சென்று கொண்டிருக்கும் புனித யாத்ரீகர்களைப் பற்றியது.
Geoffrey Chaucer - The Canterbury Tales - Unabridged - MP3 ...
அந்த யாத்ரீகர்கள் அனைவரும் பலதரப்பட்ட மக்கள், பல வர்க்கங்களைச் சார்ந்தவர்கள். அலர்கள், இருப்பினும் ஒன்று கூடி தங்களது பிரச்சினைகளைப் பகிர்ந்து கொண்டு ஒரே நோக்கத்திற்காகப் பயணப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். ஷேக்ஸ்பியரும் இதே போன்று சாமான்ய மக்களை எ மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம், ஆஸ் யு லைக் இட், போன்ற நாடகங்களில் முக்கியக் கதை மாந்தர்களாக்கினார். சாஸரைப் போலவே தன்னுடைய நாடகங்களில் அதிக எண்ணிக்கையில் கதை மாந்தர்களைப் படைத்துள்ளார்.குறிப்பாக ஷேக்ஸ்பியர் தன்னுடைய வரிகளில் ஐயாம்பிக் பென்டா மீட்டர் ( Iambic Pentameter) என்ற கவிதை நடையை சாஸரிடமிருந்து உள்வாங்கி அறிமுகப்படுத்தியுள்ளார்.
   ஷேக்ஸ்பியர் படித்துப் பயன்படுத்திய அனைத்துப் புத்தகங்களையும் பட்டியலிடுவது என்பது சாத்தியமில்லை . இருப்பினும் சுருக்கமாகவாவது மேலும் ஒன்றிரண்டு விவரங்களைத் தர வேண்டியுள்ளது. ஷேக்ஸ்பியர் இங்கிலாந்தை மையப்படுத்தி எழுதிய தன்னுடைய சரித்திர நாடகங்களுக்குப் பின்புலமாக ரெஃபேல் ஹாலின்ஷெட் எழுதிய க்ரானிக்கல்ஸ் ஆஃப் இங்லண்ட், ஸ்காட்லன்ட், அயர்லன்ட் (1587) புத்தகங்களை வெகுவாகப் படித்து,  இரண்டாம் ரிச்சர்ட் , நான்காம் மற்றும் ஐந்தாம் ஹென்றி  போன்ற நாடகங்களில் மெருகேற்றியுள்ளார். ரோமான்ய சரித்திர ஆய்வாளரான ப்ளுடார்க் எழுதியப் புத்தகங்களின் மூலம் தனக்குக் கிடைத்த அனுபவங்களை, தன்னுடைய ரோமான்ய நாடகங்களான ஜூலியஸ் சீசர், ஆன்டனி அன்ட் க்ளியோபாத்ரா போன்றவற்றில் புகுத்தியுள்ளார்.
Antony And Cleopatra’s Tomb
ஒரு சிறந்த எழுத்தாளர் நல்ல வாசகராக இருக்க வேண்டும். அவ்வகையில் ஷேக்ஸ்பியர் ஒரு மிகச் சிறந்த வாசகராக விளங்கியிருக்கிறார்.  ஆங்கில மொழிக்கு 422 புதிய வார்த்தைகளைத் தந்திருக்கின்றார் என்கின்றனர் ஆய்வாளர்கள். அவருடைய நாடகங்களில் மருத்துவம், சட்டம், ராணுவம், இயற்கைச் சூழல், தத்துவம், கல்வி போன்ற பல துறைகளைச் சார்ந்த பல்வேறு சொற்களையும், சொற்றொடர்களையும் அவர் இயல்பாகக் கையாண்டிருப்பது வியப்புக்குரியதாகக் கருதப்பட்டாலும், அதற்கு அவருடைய பரந்த புத்தக வாசிப்பு  அனுபவம் ஒரு பெரும் காரணமாயிருந்திருக்கிறது. புத்தக வாசிப்பு என்பது அச்சகங்கள் விரிவடையாத அக்காலத்திலேயே ஷேக்ஸ்பியருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது எனும் பொழுது, புத்தகங்களால் நிரம்பி வழியும் நம் காலத்தில் நாமும் , சமூகமும் செல்ல வேண்டிய தூரம் தெரிகிறது, இது உலகப் புத்தக தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நமக்கு விடுக்கப்படும் செய்தி.
கட்டுரையாளர் சேலம் நகரில்  ஆங்கிலப் பயிற்சி மையமொன்றை நடத்தி வருகிறார்.
தொடர்புக்கு: sasi.sahas.gmail.com
One thought on “ஷேக்ஸ்பியரைச் செதுக்கிய நூல்கள் ( உலகப் புத்தக தின சிறப்புக் கட்டுரை)  இரா.சசிகலா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *