எப்போதும் போல் பாரதி புத்தகாயலயத்தின் அரும்பு அரங்கில் உலகப் புத்தக தினக் கொண்டாட்டம் களைகட்டியது. மாலை 6 மணி நெருங்கும் சமயத்திலேயே ஏராளமான குழந்தைகள் அங்கு வந்து குழுமி விட்டனர். அரங்கம் நிறைந்து உட்காரவே இடமின்றிக் காணப்பட்டது.
சரியாக 6 மணிக்கு ‘குழந்தை’ எழுத்தாளர் ஆயிஷா நடராசன் குழந்தைகள் புடைசூழ மேடையில் ஏறினார். குழந்தைகள் நாற்காலிகளில் அமர்ந்து கொள்ள, நடராசன் அவர்களிடம் உரையாடலைத் தொடங்கினார். அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தார் நடராசன். அவர்கள் சமீபத்தில் எந்தப் புத்தகத்தைப் படித்தார்கள்? அதிலிருந்து அவர்கள் தெரிந்து கொண்டது என்ன என்பதை வினவினார். ஒவ்வொருவராக அவர்கள் படித்த புத்தகத்தையும், அதிலிருந்து கிடைத்த கருத்துக்களையும் சிறப்பாகத் தமது மழலை மொழியில் பகிர்ந்து கொண்டனர் குழந்தைகள்.
அடுத்ததாக, அவர் சில கேள்விகளை முன்வைத்தார். உங்கள் வீட்டில் யார் உங்களுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்கிறார்கள்? யார் உங்களுக்குப் புத்தகம் படிக்கத் தூண்டுதலாக இருக்கிறார்கள்? பல குழந்தைகள் தமது அம்மா, அப்பா என்றும், ஓரிருவர் தாத்தா என்றும் கூற, இரண்டு குழந்தைகள் தமது ஆசிரியையை சுட்டிக் காட்டினர். அவர் அவர்களுக்கு நூலகத்தில் அட்டை வாங்கிக் கொடுத்திருப்பதாகவும், அவர் தூண்டுதலில்தான் படிப்பதாகவும் அவர்கள் கூறி, அவர்கள் அங்கிருப்பதையும் அவர்கள் காட்டினர். அனைவரும் மகிழ, பெரும் கைதட்டல் பெற்றார் அந்த ஆசிரியை.
அடுத்தாற்போல் புத்தகங்களைப் பற்றி பார்வையாளர்களிடம் பேசத் தொடங்கினார் நடராசன். ரவீந்திரநாத் தாகூரை நினைவு கூர்ந்தவர், தாகூர் தமது ஏழாவது வயதிலேயே நிறையப் படித்ததையும், அவரை ஒழுங்காகக் கணக்குப் போடுமாறு கூறிய ஆசிரியரை வெறுத்து, ‘ஒரு மாணவனைப் படிக்கத் தூண்டாத ஆசிரியர் தமக்குத் தேவையில்லை’ என்று எழுதி வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டதைக் கூறி ஆச்சரியப்படுத்தினார். அதேபோல் நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமன் அவர்களின் புத்தக ஆர்வம் பற்றிப் பேசினார். கணிதமேதை ராமானுஜம் தமது எட்டு வயதிலேயே கல்லூரிப் படிப்புப் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவனிடம் இலவசமாக Trignometry புத்தகத்தைப் பெற்று இரண்டே நாளில் அதிலிருந்த அனைத்துக் கணக்குகளையும் போட்டு முடித்திருந்ததைச் சொன்னார்.
நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமன் வீட்டுக்கு வந்த சுப்ரமணியம் சந்திரசேகர் அவர் படிக்காத ஒரு புத்தகத்தைக் கேட்க, அந்தப் புத்தகம் ஒலியைப் பற்றியதாக இல்லையென்பதால் அதை அலட்சியமாக அவர் எடுத்துக் கொண்டு போகச் சொன்னதையும், அதைப் படித்த சந்திரசேகர் பின்னர் அதில் நோபல் பரிசு பெற்றதையும் பகிர்ந்தார். தாம் மிகுந்த மதிப்பு வைத்திருந்த சுப்ரமணியம் சந்திரசேகர், அமர்த்தியா சென், அப்துல் கலாம் ஆகியோரிடம் கையெழுத்துப் பெற்று அவற்றை பத்திரமாக இன்னும் வைத்திருப்பதையும் கூறி உற்சாகமூட்டினார். மேலும் கடைசிப் பத்தாண்டுகளில் மேதகு அப்துல் கலாம் அவர்களுடன் நெருங்கிப் பழகியதைக் கூறிய அவர், இரண்டு செய்திகளைக் கூறினார். சுப்ரமணியம் சந்திரசேகர் சென்னை வந்திருந்த போது அவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் சமயத்தில் அவரிடம் அவரது வேகத்துக்கு ஈடு கொடுத்துப் பேசிக் கொண்டே (ஓடிக் கொண்டே) கையெழுத்துக் கேட்டபோது அவர் தமிழில் கையெழுத்திட்டுக் கொடுத்ததைப் பெருமையுடன் கூறினார். அதேபோல் அப்துல் கலாம் அவர்கள் எப்போதும் தமது குறிப்புக்களைத் தமிழிலேயே வைத்திருப்பதையும், வெளிநாடுகளில் கூட அப்படித்தான் செய்வேன் என்று கூறிச் சிரித்ததையும் பகிர்ந்து கொண்டார். இந்தச் செய்திகள் பார்வையாளர்களுக்கு உற்சாகமூட்டின.
அடுத்து மீண்டும் ஒருமுறை குழந்தைகளிடம் அவர்கள் படித்த புத்தகங்கள் பற்றிப் பேசினார். இம்முறை குழந்தைகள் குறுக்கிட்டனர். ஏன் நாங்கள் கேள்வி கேட்கக் கூடாதா என அவர்கள் கேட்க, மைக் அவர்களிடம் சென்றது. அடுக்கடுக்கான கேள்விகளைக் குழந்தைகள் முன்வைத்தனர். ஆயிஷா பாத்திரம் உண்மையா? உங்களை எது எழுதத் தூண்டியது? எப்போது எழுதத் தொடங்கினீர்கள்? உங்களை ஆயிஷா கதை எழுதத் தூண்டியது எது? எனப் பல கேள்விகளை எழுப்பினர். அவர்களுடன் சேர்ந்து கொண்ட எழுத்தாளர் பாலபாரதி, எழுத்தாளர் ஆக என்ன செய்யவேண்டுமென்று கேள்வியை எழுப்பினார்.
ஆயிஷா கதை ஓரளவு உண்மையே என்று குறிப்பிட்டார் நடராசன். ஒரு குழந்தை அரசமரத்தின் கீழ் அமர்ந்து படிக்கலாமா என்று கேள்வி எழுப்ப, வெயிலில் உட்கார்ந்து படிக்காதே என்று சிரித்தார் அவர். தாம் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை 119 என்பதைக் கூற கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது. எந்தப் புத்தகத்தைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு அனைத்துமே பிடிக்கும் என்றார்.
எழுத்தாளர் ஆவதற்கு நிறையப் படிக்க வேண்டும். படிக்கப் படிக்க எழுத்து வரும் என்றவர், வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே செருப்பைக் கழற்றி விடுவது போல் செல்பேசியை எடுத்து வைத்து விட்டால், நிறைய படிக்க நேரம் கிடைக்கும், நிறைய நேரம் வீணாவதைத் தடுக்கலாம் என்றார்.
அடுத்துத் தொடங்கியது புத்தக வெளியீடு
மேடை ஏறிய நாகராஜன், இதே போன்ற புத்தக தினக் கொண்டாட்டம் நூறு இடங்களில் நடைபெறுவதையும், அதில் நூறு புத்தகங்கள் வெளியிடப் படுவதையும் கூறினார். அதன் ஒரு பகுதியாக இங்கு, சிறுவர் எழுத்தாளர் (அட உண்மைதான். எழுத்தாளர் ஒரு சிறுவன் தான்) அமிதநேயன் எழுதிய புத்தகம் வெளியிடப்படுவதை அறிவித்தார். கரகோஷத்துக்கு நடுவில் எழுத்தாளர் அமிதநேயனும், அவரது பெற்றோர் ஆதிவள்ளியப்பனும், அம்மாவும் மேடையேறினர். புத்தகத்தை மூத்த எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் வெளியிட, இரா.நடராசனும், பாலபாரதியும் பெற்றுக் கொண்டனர். வாழ்த்த வந்த பாலபாரதியும், தமிழ்ச்செல்வனும் எழுத்தாளர் தமிழில் எதிர்காலத்தில் எழுத வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். பாலபாரதி ஒருமுறை அமிதநேயன் அவர் வீட்டுக்கு வந்திருந்தபோது அமைதியாக கவனித்ததையும், பின்னர் வீடு திரும்பிய பின் அவர் எழுதிய ஒரு புத்தகத்திலிருந்து ஒரு சம்பவத்தைத் தேர்ந்தெடுத்து அதை ஓவியமாக்கி அனுப்பியதையும் பெருமையுடன் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
புத்தகத்தைப் பற்றிப் பேசிய இரா.நடராசன், அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு ஓவியத்தையும் எழுத்தாளரே வரைந்ததையும், ஒவ்வொரு பக்கத்திலும் என்ன இருக்க வேண்டும், என்ன எழுத வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்ததையும் கூறிப் பாராட்டினார். Silent comedy என்ற வகையில் நிறைய ஓவியங்கள் இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.
மேலும் சிறார் இலக்கியம் பற்றி அவர் பேசுகையில், தமிழில் சுமார் 1000 சிறுவர் புத்தகங்களை வெளியிட்ட பெருமை பாரதி புத்தகாலயத்துக்கே இருப்பதைக் குறிப்பிட்டார். குழந்தைகளைப் படைப்பாளிகளாக்க எதிர்காலத்தில் பட்டறை நடத்த வேண்டும் என்ற அவாவை வெளியிட்டார்.
நன்றி கூற வந்த அமிதநேயன், தமக்கு ஓவியத்தில் மிகுந்த ஆர்வம் இருப்பதையும், ரஸ்கின் பாண்ட் உள்ளிட்ட பலர் எழுதியதையும் படிப்பேன் எனவும் கூறினார். மேஜிக் பாட்டையும் விரும்பிப் படிப்பேன் என்றார்.
இரா.நடராசனிடம் மேலும் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்குப் பதிலளித்த அவர், பலர் எழுப்பும் கேள்விகள்தான் தம்மைத் தொடர்ந்து இயங்க வைக்கின்றன என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். கல்லூரி இரண்டாம் ஆண்டில் தாம் எழுதத் தொடங்கியதாகக் கூறினார். முதலில் தாம் அதிகம் படித்ததாகவும், அதுவே எழுதத் தூண்டியதையும் பகிர்ந்தார். சிறு வயதில் தாம் தம் வீட்டுக்கு அருகில் இருந்த சிறுவர் சிறுமியர்களுக்குப் பிரபலமான கதைசொல்லியாக இருந்ததையும், இட்டுக் கட்டிக் கதை விடுவதையும் நகைச்சுவையாகக் கூறினார். பின்னர் தாம் எழுதிய அனைத்தையும் எழுத்தாளர் சுஜாதா கேட்டதன் பேரில் அவரிடம் கொடுத்ததையும், அவர் அப்படியே மறந்து விட்டதையும் கூறினார். எனினும் பெங்களூரில் இருந்த ஒரு பதிப்பாளர் இவரது புத்தகத்தை முதலில் வெளியிட்டதைப் பகிர்ந்தார்.
தாம் குழந்தைகளுக்காக எப்போது எழுதத் தொடங்கினேன் என்பதை உணர்ச்சிகரமாகப் பகிர்ந்தார் நடராசன். மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் துளிர் பத்திரிகை தொடங்கும் முயற்சி எடுக்கப்பட்டதைக் குறிப்பிட்ட அவர் அங்கு தாம் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று ஆவேசமேகப் பேசியதையும், அதைக் கேட்டு எழுத ஒரு வறுமையான சிறுமி, அதெல்லாம் சரி, நாங்கள் படிக்க புத்தகம் எங்கே என்று கேட்க, அதிர்ந்து போனதையும் சொன்னார். அதிலிருந்து தான் சீரியசாக எழுதுவதைக் கைவிட்டு இனிக் குழந்தைகளுக்காகவே எழுதுவேன் என்று இறங்கி விட்டதையும் கூறினார். இப்போது அது தொடர்கிறது. 120 வது புத்தகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
அதேபோல் தாம் பார்த்த ஒரு குறும்படம் பெண் குழந்தைகள் பற்றி இரண்டே சம்பவங்களின் மூலம் புரட்டிப் போட்டதைக் கூறினார். அந்த வீட்டில் இருந்த ஆண் குழந்தை இப்போது தலைமை சமையல்காரராகவும், சிறுமி கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனையானதாகவும் அந்தப் படம் காட்டியது. அந்தச் சிறுமி – மிதாலி ராஜ். இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டில் முத்திரை பதித்த தலைவி. “why gender? Every child is a wonder” என்ற அழுத்தமான செய்தியுடன் அந்தப் படம் முடிந்ததைக் கூறி அனைவரின் சிந்தனையையும் தட்டி எழுப்பினார்.
அடுத்த நிகழ்வு, பாலபாரதியைத் தலைமையாகக் கொண்டு தொடங்கியது.
கவிஞர் இ.ரா.தெ.முத்துவும், நா.வெ.அருளும் வரவேற்க வந்தனர். நா.வெ.அருள் இதற்காகவே தாம் பரமார்த்தகுரு கதைகளைப் படித்து விட்டு வந்ததைச் சொல்லி ஒரு கதையையும் கூறி வரவேற்றார்.
தலைமை தாங்க வந்த பாலபாரதி, திடீரென தலைமை தாங்க இருந்தவர் வராததால் தாம் தலைமையேற்றதை உப்புமா என்று நகைச்சுவையுடன் கூறினார். தமது ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டதையும், அது குறுகிய ஒரே ஆண்டில் மூன்று பதிப்புகள் கண்டதையும் பெருமையுடன் குறிப்பிட்டார்.
மூத்த எழுத்தாளரும், தமுஎகசவின் மூத்த நிர்வாகியுமான எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் உரை தொடங்குவதற்கு முன் பாரதி புத்தகாலயத்தின் புக்டே இணைய இதழில் தொடர்ந்து எழுதுபவர்களுக்கு நினைவுப் பரிசு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புக்டே என்ற இணைய இதழ் கொரோனா காலத்தில் அனைவரையும் எழுத வைக்கும் முயற்சியிலும், புத்தகங்களை அறிமுகப்படுத்தவும், உற்சாகப் படுத்தவும் தொடங்கப்பட்டது. இப்போது சுமார் 3 லட்சம் வாசகர்களைக் கொண்ட பிரும்மாண்டமான ஒன்றாக வளர்ந்துள்ளது. சுமார் 512 பேர் இதுவரை எழுதியிருக்கிறார்கள். அவர்களில் இஸ்ரோ விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், அறிஞர்கள் எனப் பலரும் அடக்கம். அவர்கள் எதையும் எதிர்பார்த்துச் செய்யவில்லை என்றாலும், இனி வரும் காலத்தில் அவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று பாராட்டிப் பேசிய நாகராஜன், இது மக்கள் சொத்து, உங்கள் சொத்து தனியாருடையது அல்ல என்று கூறி புக்டேவை அறிமுகம் செய்தார். அடுத்த வருடம் அனைவரையும் ஒன்று சேர்த்து பெரும் விழாவாகக் கொண்டாடுவோம் என்றும் தனது ஆசையை வெளியிட்டார்.
அங்கு வந்திருந்த மூத்த மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான சுப்பாராவிடமிருந்து தொடங்கியது பரிசளிப்பு. இந்த எளியேனுக்கும் அந்தப் பரிசு கிடைத்தது எனது பெருமை. அதைவிடப் பெருமை எனது மொழிபெயர்ப்புக் கட்டுரை அடங்கிய புத்தகத்தை அனைவருக்கும் பரிசளித்தது. (இந்தியா @ 75) அத்துடன 500 ரூபாய்க்கான புத்தகக் கூப்பனும் அனைவருக்கும் அளிக்கப்பட்டது. அனைவரும் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
அடுத்து தமிழ்ச்செல்வன் பேச வந்தார். சிரிப்பலையில் அதிர்ந்து கொண்டே இருந்தது அரங்கு.
தாம் எப்போது படிக்கத் தொடங்கினேன் என்று தொடங்கினார் தமிழ்செல்வன். ”நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது என் பள்ளிக்கு எதிரில் ஒரு நூலகம் தொடங்கியதால் அங்குதான் முதலில் படிக்கச் சென்றேன். அந்தக் காலத்தில் கிராமத்தில் சற்றுப் படித்தவர்களை டீச்சர் என்றே அழைப்போம். எனவே அந்த நூலகத்தில் இருந்த நூலகரை டீச்சர் என்றே அழைத்தோம். படித்த நர்சை நர்ஸ் டீச்சர் என்றே அழைப்போம். அங்கு படித்த முதல் புத்தகம் தப்பாச்சி. அதில் ஒரு சிறுவனின் தலையில் நடுப்பகுதி மரமாக இருக்கும். நமக்கு எல்லோருக்கும் பிடிக்காத கணக்கு டீச்சர் கொட்டு வைத்தால் அவருக்குத் தான் வலிக்கும். என் நேரம், என் மனைவியே கணக்கு டீச்சர்தான். இப்படியே அந்தக் கதை நகைச்சுவையாகப் போகும். அடுத்ததாக அங்கேயே சோணகிரி என்ற புத்தகத்தைப் படித்தேன். அவை இரண்டும் என் நினைவில் அப்படியே தங்கி விட்டன.
பின்னர் நானும், என் நண்பர்களும் சேர்ந்து ஒரு நூலகம் தொடங்கினோம். அதற்கு ஒவ்வொருவரும் பத்து பைசா போட்டு கண்ணன் என்ற சிறுவர் பத்திரிகையை வாங்கினோம். அந்தப் புத்தகம் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த சாத்தூரில்தான் கிடைக்கும். பஸ்ஸில் செல்லக் காசு இருக்காது என்பதால் பேசிக் கொண்டே நடந்து போய் வாங்கி வருவோம். அந்தப் பத்திரிகைதான் என்னிடம் படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கியது.” என்று கதையைச் சொல்லத் தொடங்கினார்
ஆங்கிலத்திலும், கணக்கிலும் தான் பலவீனமாக இருந்ததையும், அதில் தேற பல சாமிகளை நம்பி உக்கி போட்டதையும் நகைச்சுவையுடன் பகிர்ந்தார். கணக்கு வாத்தியாரிடம் டியூஷன் சேர்ந்து, அவரது ஆடுகளைக் கவனித்துக் கொண்டு கணக்கில் தேர்வானதை சிரிக்கச் சிரிக்கச் சொன்னார். அரைகுறை ஆங்கிலத்தில் தாம் எழுதிய கட்டுரையை அவர் சொல்லச் சொல்ல விலா நோகச் சிரித்தனர் பார்வையாளர்கள். “my bus running. Opposite bus coming. Accident. Blood blood blood. Ambulance” என்று ஒரு பக்கம் கதை விட்டதையும், அவர் தானாகவே இதை எழுதியதால் எதற்கெடுத்தாலும் ஸ்கேலை எடுத்து அடிக்கும் ஆசிரியர் அவருக்கு 9.5/10 மதிப்பெண் கொடுத்ததையும் அவர் கூறினார்.
பின்பு நா.பா., குறிஞ்சிவேலன் என்றும் படித்ததையும், ஒரு காலத்தில் ஜே.கே.வின் முன்னணி ரசிகனாக இருந்ததையும் கூறினார். இராணுவத்தில் சேர்ந்த பின் அங்கு தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்காததால் ஒரே தாவாகத் தாவி கமலாதாஸ் போன்ற எழுத்தாளர்களைப் படிக்கத் தொடங்கினார். ஜே.கே. ஒரு நவீன அத்வைதத்தைத்தான் சொல்கிறார் என்பதை அறிந்ததும் அவரைக் கைவிட்டார். பின்னர் ஜெயகாந்தனைப் படிக்கத் தொடங்கி விரைவிலேயே விட்டு விட்டார். பிறகு வண்ணநிலவனின் கதைகளைத் தொடர்ந்து படித்ததைச் சொன்னார். இராணுவத்தில் விடுப்பில் வந்தபோது அங்கு கோவில்பட்டி பேருந்து நிலையத்துக்கு எதிரில் NCBH வண்டி நிற்பதைப் பார்த்து உள்ளே சென்றவர் தேடத் தொடங்க, அங்கிருந்தவர் இவர் எதைத் தேடுகிறார் என்று கேட்க, பகத்சிங் மரணத் தருவாயிலும் புத்தகம் படித்துக் கொண்டிருந்தாராமே, அந்தப் புத்தகம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவர் உடனே மாமேதை லெனினின் ‘அரசும் புரட்சியும்’ புத்தகத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார். அதைப் படித்து முடித்தவர், பின்னால் இருந்த பட்டியலில் இருந்த மார்க்சிய புத்தகங்களைப் படித்து அதனால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். எல்லையில் முதலாளிகளின் சொத்தைப் பாதுகாத்தது போதும், இங்கு மக்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது, மக்கள் சேவையில் இறங்குவோம் என்று முடிவெடுத்தவர் இராணுவத்திலிருந்து வெளியேறி இங்கு வந்து சேர்ந்தார். பின்னர் தபால்துறையில் சேர்ந்து, அங்கு தொழிற்சங்கத்தில் இருந்ததைக் கூறினார். புத்தகம் புறாவைப் போன்றது, அதன் சிறகுகள் பறந்து கொண்டே இருக்கும். அவை வாசிப்புச் சிறகுகள் என்றார். அப்போது வெண்மணி சம்பவம் குறித்தும் படித்திருக்கிறார். அதுதான் அவரை இராணுவத்திலிருந்து வெளியேறத் தூண்டியிருக்கிறது. இ.எம்.எஸ் எழுதிய புத்தகங்கள் தமக்குப் பொருளாதாரத்தைக் கற்றுக் கொடுத்ததையும், அந்தப் புத்தகங்களையும், ஏங்கல்சின் ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ ஆகிய புத்தகங்களை தாம் மீண்டும் மீண்டும் படிப்பதைச் சொன்னார்.
பின்னர் கதை எழுதத் தொடங்கியதைக் கூறினார். இப்போது புத்தகப் பைத்தியம் பிடித்ததை நகைச்சுவையாகக் கூறினார். படித்தாலும் பைத்தியம் பிடிக்கிறது, படிக்காவிட்டாலும் பிடிக்கிறது என்றார். ஒரு சமயத்தில் 10,000 ரூபாய்க்கு வாங்கி விடுவதையும், நாலு பதிப்பகத்தில் வாங்கினால் 40,000 ரூபாய் போய் விடுகிறது என்றாலும், விட முடியவில்லை. வைக்க இடமில்லை. எடுத்து சுத்தம் செய்து அடுக்குவதும் ஒரு பெரிய வேலையாக இருக்கிறது என்றாலும், இந்தப் பைத்தியம் விடவே விடாது என்பதைக் கூறினார்.
அதேபோல் இராணுவத்தில் சேர்ந்து இமயம் சென்றதும், செங்குட்டுவன் அங்கிருந்து கல்லைக் கொண்டு வந்து கண்ணகி சிலையைச் செய்ததாகச் சொன்னது பொய் என்று அறிந்து கொண்டதைத் தெரிவித்தார். இமயத்தில் இருக்கும் கற்கள் வலுவானவை அல்ல என்பதைத் தாம் தெரிந்து கொண்டதையும், கூறினார். தமிழைப் பற்றி அறிந்து கொள்ள நா.வானமாமலை, தொ.பரமசிவம் உள்ளிட்டோரின் புத்தகங்களைப் படிக்க வேண்டுமென்றார். ஒரு ஆத்திராக இருந்த தாம் இன்னொரு ஆத்திகர் பெரியாரைப் பழித்ததைக் கண்டே நாத்திகரானதாகவும், பின்னர் அவரது புத்தகங்களைத் தொடர்ந்து படிப்பதாகவும் கூறினார்.
தமது புத்தக அலமாரியைப் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்து ஏராளமான லைக் பெற்றதையும், ஆனால் பின்னர் தமது மனைவிக்கு அந்த வசதி இல்லாதது ஆணாதிக்க சமுதாயத்தால்தான் என்ற குற்ற உணர்வால் அதை விட்டதையும் கூறினார். அதேபோல் பெண்களைப் பற்றி அதிகமாக எழுதத் தொடங்கியதும் அப்போதுதான் என்றார்.
லாக்டவுனின் போது ‘தமிழ்சிறுகதையின் தடங்கள்’ புத்தகம் எழுத 900 கதைகளைப் படித்த போது, நாம் இன்னும் நல்லவனாக வாழலாம் என்ற உணர்வு ஏற்பட்டதையும், அந்த இடத்தில் கொண்டு வந்து அவை தம்மை நிறுத்தியதையும் குறிப்பிட்டு முடித்தார். வாசிப்பு தொடர்கிறது.
பின்னர் நாகராஜன் பாரதி புத்தகாலயத்தின் தூண்களான அதன் ஊழியர்களை அறிமுகப்படுத்தினார். ரமேஷ் நன்றி கூற சர்வதேச புத்தக தினக் கொண்டாட்டம் இனிதே முடிந்தது.