உலக யானைகள் தினம்
உலகில் வாழ்ந்து வரும் விலங்குகளில் மிகப் பெரியது கடலில் வாழும் நீலத் திமிங்கலம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக உருவத்தில் மிகப் பெரியது யானைதான். அதே சமயத்தில் நிலத்தில் வாழக்கூடிய விலங்குகளில் மிகப் பெரியது யானை என்பது குறிப்பிடத்தக்கது. கடலில் வாழும் நீலத் திமிங்கலத்தை நம்மால் பார்க்க முடியாது. ஆனால் யானையை நாம் உயிரியல் பூங்காக்களிலும், தேசியப் பூங்காக்களிலும் காணலாம்.
பூமியில் வாழக்கூடிய விலங்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட உடல் அமைப்பைக் கொண்டது யானை. யானைக்கு முகத்தில் இருந்து தொங்குகின்ற நீண்ட தும்பிக்கை என்னும் உறுப்பு உண்டு. இதன் உடலையும், தும்பிக்கையும் வைத்து யாவரும் யானையை எளிதில் அறிந்துக் கொள்ள முடியும். உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காண விரும்பும் ஒரு விலங்கு யானையே.
யானை
யானை நமது பூமியின் தனித்துவமான மற்றும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாகும். இது ஒரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. இது ஒரு தாவர உண்ணியாகும். யானை மிகப் பெரிய உடலையும், வலுவான தசைகளையும் கொண்டுள்ளது. இதன் உடல் எடை 2,000 முதல் 8,000 கிலோ வரை இருக்கும். இதன் உடல் எடையைத் தாங்குவதற்கு ஏற்ப கால்கள் பருத்து தூண் போல் இருக்கும்.
யானைக்கு சிறிய கண்கள் மற்றும் பெரிய காதுகள் உள்ளன. கண்கள் பார்வைத் திறன் குறைவானவை. ஆனால் காதுகள் பெரியதாக இருப்பதால் இதற்கு கேட்கும் திறன் அதிகம். இதன் செவித்திறன் மற்ற யானையுடன் தொடர்பு கொள்ளவும், தங்கள் சுற்றுச்சூழலில் பாதுகாப்பாக இருக்கவும் அனுமதிக்கிறது. பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்ற யானைகள் வெளியிடும் ஒலிகளுக்கு அவை எதிர்வினையாற்ற முடியும்.
மனிதர்களை விட யானைக்கு கேட்கும் திறன் மிக அதிகம். இதன் பெரிய காதுகள் கேட்பதற்கு மட்டுமல்லாமல், உடல் வெப்பநிலையைச் சீராக வைக்கவும் உதவுகின்றது. மற்ற யானைகள் அழைக்கும் திசை மற்றும் மனநிலையை கூட இதனால் கண்டறிய முடியும். யானைகள் நடக்கும் போது அவற்றின் காதுகள் முன்னும், பின்னும் நகரும். இதன்மூலம் சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறியும். இது ஆபத்தைக் கண்டறியும் போது அவற்றின் பெரிய காது மற்றும் காதுகளில் உண்டாகும் படபடப்பு ஆகியவை வேட்டையாடிகளைப் பயமுறுத்த செய்கிறது.
துதிக்கை
யானைக்கு தும்பிக்கை அல்லது துதிக்கை என்னும் விசித்திரமான உறுப்பு உள்ளது. இது மூக்கும், மேல் உதடும் இணைந்து நீளமாக வளர்ந்துள்ளது. இது ஆறடி நீளம் வரை இருக்கும். இதன் உள்ளே நெடுகிலும் மூக்குப் பாதைகள் இரண்டு துளைகளாகச் செல்லும். இதன் நுனியில் மூக்கின் புறத் தொலைகள் இரண்டும் தெளிவாகத் தெரியும்.
யானையின் தும்பிக்கை சுமார் 40,000 க்கும் மேற்பட்ட தசைகளைக் மேற்கொண்டுள்ளது. இது அன்றாட செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது எல்லா பக்கங்களிலும் மிக எளிதாக வளையக் கூடியது. யானையால் தனது தும்பிக்கையை நீட்டவும், உயர்த்தவும், தாழ்த்தவும், சுருக்கவும், சுருட்டவும், முறுக்கவும், சுற்றவும் முடியும். இது மிகவும் பலமான உறுப்பு. இதன் மூலம் ஒரு டன் எடையுள்ள மரத்தைத் தூக்கி எளிதாக எறிய முடியும். புலி, சிங்கம் போன்ற விலங்குகளைத் தூக்கி வீசும்.
துதிக்கையின் நுனியில் விரல் போன்ற நீட்சி உள்ளது. இது மிகவும் உணர்ச்சி மிக்க பகுதியாகும். விரல் மிக நுட்பமாக இயங்கக் கூடியது. இதனால் வேர்க்கடலை மற்றும் காசு போன்ற மிகச் சிறிய பொருட்களையும் பொறுக்கி எடுக்க முடியும். உயரமான விலங்குகள் தரையில் இருந்து உணவை எடுக்க நீண்ட கழுத்தைக் கொண்டிருக்கும். ஆனால் யானையின் தலை மிகவும் பெரியது மற்றும் கனமானது. ஆகவே கழுத்தை பயன்படுத்த முடியாததால், யானைக்கு துதிக்கை உதவுகிறது.
யானை தனது துதிக்கையின் மூலம் மரத்தில் உள்ள இலைகளையும், தரையில் உள்ள புற்களையும் பறிக்கும். பிறகு வாய்க்குக் கொண்டு செல்லும். மேலும் துதிக்கையின் மூலமே நீரை உறிஞ்சி வாய்க்குள் வைத்துப் பீச்சிக் கொண்டு விழுங்கும். இதில் 8 லிட்டர் தண்ணீர் வரை இருக்கும். துதிகை மூச்சு விடுவதற்கும் பயன்படுகிறது. யானை நன்றாக நீச்சல் அடிக்கும். ஒரு மணி நேரத்திற்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தும். அப்போது தனது துதிக்கையை நீருக்கு மேலே நீட்டிக் கொண்டு சுவாசிக்கும்.
மோப்ப சக்தி
யானைக்கு திறமையான மோப்ப சக்தி உள்ளது. அடிக்கடி துதிக்கையைத் தூக்கி உயர்த்தி, இங்கும் அங்கும் வளைத்து நீட்டி மோப்பத்தை அறிந்து கொண்டே இருக்கும். பல கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரைக் கண்டறிய முடியும். யானையின் வாசனை உணர்வு மனிதர்களை விட ஐந்து மடங்கு அதிகம். இதனால் பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உணவு ஆதாரங்களைக் கண்டறிய முடியும். மேலும் வேட்டையாடும் விலங்குகள் மற்றும் நீர் ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வாசனை உணர்வைப் பயன்படுத்துகிறது.
குளிர்ச்சி
துதிக்கையைப் பயன்படுத்தி பலவிதமான ஒலிகளையும் எழுப்பும். துதிக்கை என்பது யானைக்கு ஒரு பாதுகாப்பானக் கருவியாகவும் செயல்படுகிறது. யானை பெரிய விலங்கு என்பதால் வெப்பமான காலநிலையில் எளிதில் வெப்பமடையும். அது தனது உடலைக் குளிர்ச்சி அடைய செய்ய தும்பிக்கையில் தண்ணீரை உறிஞ்சி உடலில் தெளித்துக் கொள்ளும்.
தோல்
யானையின் தோல் மிகவும் தடிமனாக இருக்கும். இது 2.5 சென்டிமீட்டர் தடிமன் கொண்டது. தோலில் பல்வேறு மடிப்புகளும், சுருக்கங்களும் காணப்படும். தட்டையான சருமத்தை விட 10 மடங்கு தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும். இது யானையை குளிர்விக்க உதவுகிறது. யானை தனது சருமத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளும். நன்றாக வளர்ந்த ஒரு யானையின் தோல் ஒரு டன் எடை வரை இருக்கும்.
நடை
யானை எப்போதும் நடந்தே செல்லும். இது ஓட விரும்புவதில்லை. ஆனால் விரைவாக நடக்கும். ஒரு சாதாரண மனிதன் ஓடுவதை விட விரைவாக நடக்கும். இது ஒரு மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நடக்கும். தனது உடலை தூக்கிக் கொண்டு மலை மேல் ஏறி செல்லும். யானை எப்போதும் நின்று கொண்டே தூங்கும்.
நினைவாற்றல்
யானை பெரிய மூளையைக் கொண்டுள்ளது. இது 5 கிலோகிராம் எடை கொண்டது. சராசரி மனித மூளையை விட 3 மடங்கு பெரியது. இதன் மூளையில் சுமார் 300 பில்லியன் நியூரான்களைக் கொண்டுள்ளது. இது மனித மூளையை விட 3 மடங்கு அதிகம். இதன் மூளையின் அளவும், சிக்கலான தன்மையும் நமது கிரகத்தின் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாக ஆக்குகிறது.
யானை அறிவுடைய பிராணி. இதற்கு நல்ல நினைவாற்றல் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் கூட நினைவில் வைத்திருக்கும். அதன் நினைவகம் விரிவானதாகவும், பன்முகத்தன்மைக் கொண்டதாகவும் இருக்கிறது. அவற்றின் நுண்ணுறிவு மற்றும் நினைவாற்றல் மூலம் தங்கள் சுற்றுச்சூழலில் கண்ணுக்குத் தெரியாத ஆபத்துகள் குறித்து விழிப்புடன் இருக்க முடிகிறது.
யானை ஒரு கண்ணாடியில் தன்னை அடையாளம் காண முடியும். கண்ணாடியில் தன் பிரதிபலிப்பை அடையாளம் கண்டு சுய விழிப்புணர்வை வெளிப்படுத்தும் என ஆய்வுக் கூறுகின்றது. இது தனது உடலின் தனிப்பட்ட பாகங்களை அடையாளம் கண்டு கண்ணாடியில் அவற்றை நோக்கி சைகை செய்ய முடியும்.
சமூக விலங்கு
யானைகள் ஒரு சமூக விலங்காகும். இவை கூட்டம் கூட்டமாகவே வாழ்கின்றன. ஒரு கூட்டமானது இனத்தைப் பொறுத்து 4 முதல் 100 யானைகளைக் கொண்டிருக்கும். உணவுக்காக ஒன்று சேர்ந்து செயல்படுகின்றன. வேட்டையாடுபவர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒருவருக்கொருவர் உதவுகின்றன. இவை ஒரு சிக்கலான குரல் அமைப்பு மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கின்றன.
உணவு
யானைகள் புற்கள், இலைகள், புதர் தாவரங்கள், பழங்கள் மற்றும் வேர்களை உணவாக சாப்பிடுகின்றன. வறண்ட பகுதியில் இவை மரக்கிளைகள், கிளைகள், மரப்பட்டைகள் போன்றவற்றையும் அதிகம் உண்ணுகின்றன. யானைகள் ஒரு நாளைக்கு சுமார் 150 கிலோ வரை சாப்பிட வேண்டும். இவை அதிகளவு உணவு உண்பதால், ஒரு நாளில் முக்கால்வாசி நேரத்தை உணவு உண்பதற்கே செலவிட வேண்டி இருக்கிறது. மேலும் ஒரு நாளைக்கு 30 முதல் 40 கேலன் தண்ணீரைக் குடிக்கும். ஆகவே யானைக் கூட்டம் உணவு மற்றும் தண்ணீருக்காக இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும்.
ஆயுள்
யானையின் கர்ப்ப காலம் 22 மாதங்கள் ஆகும். இது மற்ற நில பாலூட்டிகளை விட மிக நீண்ட கர்ப்ப காலத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக ஒரு கன்று மட்டுமே பிறக்கும். கன்று பிறக்கும் போதே கண்கள் திறந்திருக்கும். பிறந்த 20 நிமிடங்களில் எழுந்து நிற்கும். மேலும் ஒரு மணி நேரத்திற்குள் நடக்க முடியும். ஆகவே தாய்க்கும் கன்றுக்கும் இடையே பந்தம் ஏற்பட அதிக நேரம் எடுக்காது.
யானையின் ஆயுட்காலம் நீண்டதாக இருக்கும். காடுகளில் வாழும் யானைகளின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள் ஆகும். சில யானைகள் 100 ஆண்டுகள் வரை உயிர் வாழும். அதற்கு மேலும் உயிர் வாழலாம் எனத் தெரிகிறது. ஆனால் சிறைபிடிக்கப்பட்ட யானைகள் 40 முதல் 50 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழும்.
இனங்கள்
தற்போது வாழ்ந்து வரும் யானைகள் எலிபான்டிடீ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை. இதில் லோக்சோடோன்டா மற்றும் எலிபாஸ் எனப்படும் இரண்டு பேரினங்கள் உள்ளன. லோக்சோடோன்டா பேரினத்தில் இரண்டு ஆப்பிரிக்க இனங்கள் உள்ளன. இதில் ஒன்று ஆப்பிரிக்க புதர் யானை மற்றொன்று ஆப்பிரிக்க வன யானை. எலிபாஸ் என்ற பேரினத்தைச் சேர்ந்த யானைகளை ஆசிய யானைகள் என்கின்றனர்.
ஆப்பிரிக்க யானைகள்
இதில் உள்ள இரண்டு இனங்களும் அழிந்து போகும் அபாயத்தில் இருக்கின்றன. இந்த யானைகளின் தும்பிக்கையில் இரண்டு விரல்கள் உள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டிற்கும் தந்தம் வளர்ச்சி அடைகின்றன. இந்த யானைகளின் முன் கால்களில் 4 அல்லது 5 நகங்களும், பின்புறக் கால்களில் 3 நகங்களும் இடம் பெற்றுள்ளன.
ஆப்பிரிக்க புதர் யானையை சவன்னா யானை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த யானையே பூமியின் நிலப்பரப்பில் வாழும் மிகப் பெரிய விலங்கு. இது 10 அடி உயரம் வரை வளரும். இதன் விலங்கியல் பெயர் லோக்சோடோன்டா ஆப்பிரிக்கானா (Loxodonta africana) என்பதாகும். இந்த யானையின் காதுகள் மிகப் பெரியவை. இது 7,000 – 8000 கிலோ வரை எடை கொண்டது. இவை துணை சகாரா ஆப்பிரிக்காவில் உள்ள காடுகள், சவன்னாக்கள், பாலைவனங்கள், ஈரநிலங்கள் மற்றும் ஏரிகளுக்கு அருகில் வாழ்கின்றன.
ஆப்பிரிக்க வன யானையின் விலங்கியல் பெயர் லோக்சோடோன்டா சைக்ளோடிஸ் என்பதாகும். இது 7 அடி உயரம் வரை வளரும். இது ஆப்பிரிக்க புதர் யானையைப் போன்றது. ஆனால் இதன் காது சிறியதாகவும், வட்டமாகவும் இருக்கும். இவைகளுக்கு மெல்லிய மற்றும் நேரான தந்தங்கள் உள்ளன. இந்த யானைகள் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் வாழ்கின்றன.
ஆசிய யானைகள்
ஆசிய யானையின் விலங்கியல் பெயர் எலிபாஸ் மேக்சிமஸ் (Elephas maximus) என்பதாகும். ஆண் யானைகளுக்கு மட்டுமே தந்தங்கள் இருக்கும். தந்தங்கள் என்பது பெரிதாக வளர்ச்சியடையும் வெட்டுப் பற்கள் ஆகும். அவை யானைகளுக்கு இரண்டு வயதில் தோன்றும். மேலும் தந்தங்கள் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
ஆசிய யானையின் தலை மிகப் பெரியது. துதிக்கையின் நுனியில் ஒரு விரல் மட்டுமே இருக்கும். இது ஆப்பிரிக்க யானையை விட மிகவும் சதுவானது. மேலும் எளிதில் பழகக் கூடியது. ஆசிய நிலப்பரப்பில் வாழும் மிகப் பெரிய விலங்கு இதுவாகும். ஆசிய யானைகள் அழியும் அபாயத்தில் உள்ளதாக பட்டியல் இடப்பட்டுள்ளது. இதில் இந்திய யானை, இலங்கை யானை, சுமத்ரா யானை மற்றும் போர்னியோ யானை என 4 துணை இனங்கள் உள்ளன.
இந்திய யானை
இது ஆசியாவின் நிலப்பரப்பை பூர்வீகமாகக் கொண்டது. ஆண் யானை 10 அடி உயரம் வரை வளரும். இது சுமார் 5,400 கிலோ எடையுள்ளதாக இருக்கும். இதன் விலங்கியல் பெயர் எலிபாஸ் மேக்சிமஸ் இண்டிகஸ் என்பதாகும்.
இலங்கை யானை இலங்கையை பூர்வீகமாகக் கொண்டது. இதில் சில ஆண்களுக்கு மட்டுமே தந்தங்கள் இருக்கும். இதன் விலங்கியல் பெயர் எலிபாஸ் மேக்சிமஸ் மேக்சிமஸ் என்பதாகும். 2019 ஆம் ஆண்டு கணக்கின்படி 7,500 யானைகள் மட்டுமே உள்ளன.
சுமத்ரா யானையின் அறிவியல் பெயர் எலிபாஸ் மேக்சிமஸ் சுமத்ரானஸ் என்பதாகும். இது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை பூர்வீகமாகக் கொண்டது. இந்த யானைகள் 2,000 முதல் 4,000 கிலோ வரை எடையைக் கொண்டிருக்கும். இது அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2,400 முதல் 2,800 யானைகள் மட்டுமே உள்ளன.
போர்னியோ யானையின் விலங்கியல் பெயர் எலிபாஸ் மேக்சிமஸ் போர்னென்சிஸ் என்பதாகும். இது மற்ற யானைகளை விட சிறியது. தற்போது சுமார் 1,500 யானைகள் மட்டுமே உள்ளன.
உலக யானைகள் தினம் (World Elephant Day)
கனடாவைச் சேர்ந்த பாட்ரிசியா சிம்ஸ், மைக்கேல் கிளார்க் ஆகிய இரண்டு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் தாய்லாந்தில் உள்ள யானை மறு அறிமுகம் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சிவபோர்ன் தர்தரானந்தா ஆகியோர் இணைந்து யானைகள் பாதுகாப்பிற்காக ஒரு திட்டத்தை 2011 ஆம் ஆண்டில் உருவாக்கினர். இவர்கள் உலக யானைகள் தினத்தைக் கொண்டாடுவது என முடிவு செய்தனர். இந்த முயற்சிக்கு திரைப்பட நடிகர் வில்லியம் சாட்னர் ஆதரவளித்தார்.
உலக யானைகள் தினம் (World Elephant Day) 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று முதன் முதலில் கொண்டாடப்பட்டது. அன்று வனத்திற்குள் திரும்பு (Return to the Forest) என்ற ஆங்கிலத் திரைப்படத்தை வில்லியம் சாட்னர் வெளியிட்டார். ஒரு தனியார் வளர்க்கும் யானையை, மீண்டும் காட்டுக்குள் விடுவது இப்படத்தின் கதையாகும். இது 30 நிமிடம் ஓடக்கூடியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 அன்று உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகள் வாழும் நாடுகள் இந்த தினத்தைக் கொண்டாடுகின்றன. ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகளின் அவலநிலை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும் தனியார் வளர்க்கும் யானைகளைப் பாதுகாப்பதும் இதன் நோக்கமாகும்.
ஆபத்து
யானைகளின் தந்தம், இறைச்சி, தோல் மற்றும் உடல் உறுப்புகளுக்காக இது வேட்டையாடப்படுகிறது. யானையின் தந்தம் தங்கத்தின் மதிப்பை விட அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக யானைகள் பெரும் ஆபத்தைச் சந்திக்கின்றன. மேலும் இதன் வாழிடமான காடுகள் அழிக்கப்படுவதால் வாழ்விடத்தை இழந்து அவதிப்படுகின்றன. இது போன்ற பல காரணங்களால் யானைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டன.
பாதுகாப்பு
நீண்ட காலமாக யானைகள் சர்க்கஸில் பயன்படுத்தப்பட்டு வந்தன. 2017 ஆம் ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் யானைகளை வைத்து நிகழ்ச்சி நடத்தும் சர்க்கஸ் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதை ரத்து செய்தது. மற்றொருபுறம் தனியார்களும், கோவில் நிர்வாகங்களும் யானைகளை வளர்த்து வருகின்றனர்.
இங்குள்ள யானைகளுக்கு போதிய நடை பயிற்சி இல்லை. யானைகள் பொதுவாக தினமும் 20 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கும் வழக்கம் கொண்டவை. மேலும் 70 க்கும் மேற்பட்ட தாவர உணவுகளை தினமும் உண்ணும். தனியார்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் வழங்கும் உணவு யானைகளுக்கு பொருத்தமானதாக இருப்பதில்லை. இதனால் உடல் பருமனும், நீரிழிவு நோயும் ஏற்படுகிறது. இதன் காரணமாக இதன் ஆயுட்காலம் குறைகிறது. ஆகவே இந்த யானைகளை மீண்டும் வனப்பகுதியில் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
எண்ணிக்கை உயர்வு
உலகில் ஆசிய யானைகளை விட 10 மடங்கு அதிகமாக ஆப்பிரிக்க யானைகள் உள்ளன. 1900 ஆம் ஆண்டில் சுமார் 10 மில்லியன் ஆப்பிரிக்க யானைகள் வாழ்ந்தன. இது 1979 இல் 1.3 மில்லியனாகக் குறைந்தது. 2015 ஆம் ஆண்டில் 4,15,000 ஆப்பிரிக்க யானைகள் எஞ்சியிருந்தன. 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 4,50,000 யானைகள் உள்ளன.
ஆசிய யானைகள் 1900 ஆம் ஆண்டில் 1,00,000 என்ற எண்ணிக்கையில் இருந்தன. ஆனால் அதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்தன. 2023 ஆம் ஆண்டில் சுமார் 40,000 முதல் 50,000 வரை மட்டுமே உள்ளன. இந்தியாவில் சுமார் 25,000 முதல் 30,000 யானைகள் தற்போது உள்ளன. இந்தியாவில் 33 யானைகள் காப்பகங்கள் இருக்கின்றன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை 2002 ஆம் ஆண்டில் யானைகளின் எண்ணிக்கை 3,737 ஆக இருந்தது. இது 2012 ஆம் ஆண்டில் 4,015 ஆக உயர்ந்தது. ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில், 2017 ஆம் ஆண்டு யானைகள் எண்ணிக்கை 2,761 ஆக குறைந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு 2,961 என்றிருந்த யானைகளின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 3,063 ஆக உயர்ந்துள்ளது. யானைகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் விழிப்புணர்வுக் காரணமாக யானைகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
– ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.