இந்திய மரபணுவியல் உலக வித்தகர் பெனு பிரதா தாஸ் (Benu Brata Das)
தொடர் : 36 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
இந்திய அறிவியல் வளர்ப்பு சங்கம் என்னும் அமைப்பு ஒரு நிறுவனமாக கொல்கத்தாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணிபுரிபவர் தான் பெனு பிரதா தாஸ். ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்ட பொழுது இந்திய அறிவியல் இந்தியர்களுக்கு என்கிற முழக்கத்தோடு கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட மிக முக்கிய இந்திய ஆய்வு நிறுவனம் தான் இந்தியன் அசோசியேஷன் ஃபோர் கல்டிவேஷன் ஆஃப் சயன்ஸ் என்னும் உலக அளவில் அறியப்பட்ட அதி முக்கியமான நிறுவனம். இந்த நிறுவனத்தில் இருந்துதான் சர் சி வீ ராமன் தன்னுடைய ராமன் விளைவைக் கண்டுபிடித்தார். அதற்காக அவர் நோபல் பரிசு பெற்றார். அந்த நிறுவனத்தில் தற்போது ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் பெனு பிரதா தாஸ் என்னும் அறிஞர் மரபணுக்கள் பழுதடையும் பொழுது தங்களை தாங்களே எப்படி பழுது நீக்கம் செய்து கொள்கின்றன என்பதை கண்டுபிடித்து இன்று உலக அளவில் பேசப்படுகிறார்.
பெனு பிரதா தாஸ் கொல்கத்தாவில் பிறந்தவர். இவர் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் பயோலஜி என்னும் நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவிலுள்ள தேசிய புற்றுநோய் கல்வியகத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்து 2012 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். இளம் வயதிலேயே முதுமை அடைதல் புற்றுநோய் மற்றும் NEURODEGERATION என்று அழைக்கப்படும் மரபணு நோய்களுக்கான தீர்வை கண்டுபிடிக்கும் தீவிர ஆராய்ச்சியில் தற்போது கல்கத்தாவின் இந்தியன் அசோசியேஷன் ஃபார் தி கல்டிவேஷன் ஆஃப் சயன்ஸ் நிறுவனத்தில் மூலக்கூறு உயிரியல் என்னும் ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானியாக இருக்கிறார்.
விஞ்ஞானி தாஸ் கண்டுபிடிப்பு என்ன? மரபணுக்கள் தங்களை தாங்களே பழுது நீக்கம் செய்து கொள்வது என்பது எதை குறிக்கிறது? இவற்றையெல்லாம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
நம்முடைய தாயின் கருவறையில் ஒரு மிக சிறிய கண்ணுக்கு தெரியாத நீர் துளியாகத்தான் நம்முடைய பிறப்பு தொடங்கியது. ஆனால் ஒரு செல் இரண்டு செல்லாகி பிறகு நான்கு ஆகி நான்கு பிறகு 16 ஆகி இப்படி நாம் வளர்ந்து கொண்டே வந்து ஒற்றை செல்லாக இருந்தவர்கள் கை கால்களுடன் உடல் முழுவதும் உறுப்புகளுடன் தாயின் கருவறையை விட்டு வெளியே வந்தோம். நாம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை மரபணுக்கள் தங்களுக்கு தாங்களே உருவாக்கிக் கொண்டன. பூனைகளுக்கு பிறக்கும் குழந்தைகள் எப்போதுமே பூனைகள் ஆகவும் யானைகளுக்கு பிறக்கும் குழந்தைகள் யானைகளாகவும் இருப்பதற்கு அவர்களினுடைய மரபணுக்கள் தான் காரணம்.
மரபணு என்றழைக்கப்படும் டி என் ஏ ஒரு பிரம்மாண்ட மூலக்கூறு ஆகும். நம் வாழ்க்கைக்கான நடத்தை விதிகள் அனைத்தையும் தகவலாக தங்களுக்குள் வைத்துள்ளன. இந்த தகவல்கள் நம் உடலுக்கு தேவையான புரதங்களை தயாரிக்கும் சமையல் குறிப்புகள் போல நம்முடைய செல்களுக்குள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒரு செல் இரண்டாக பிரியும் பொழுது ஒரு டிஎன்ஏவும் இரண்டாக பிரிக்கிறது. கட்சிதமான இரண்டு பிரம்மாண்ட தகவல் பிரதிகளை நாம் பெறுகிறோம். டி என் ஏ என்பது சுருட்டி சுருட்டி ஒரு செல்லுக்குள் கண்ணுக்கு தெரியாத ஒரு இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட மூலக்கூறு ஆகும்.
மனித வாழ்க்கையின் அனைத்துவகை செயல்பாடுகளிலும் பங்கு பெற்றுக் கொண்டிருக்கும் இந்த டிஎன்ஏக்கள் பழுதடையும் பொழுது மிக கொடூரமான நோய்கள் ஏற்படுகின்றன. அதன் விளைவுகள் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். டி என் ஏ மூலக்கூறுகளின் சேதத்தை அடையாளம் கண்டு தங்களுக்கு தாங்களே அதை சரிசெய்து கொள்ளும் ஒரு செயல்முறை அந்த உயிரணுக்களுக்குள் இருக்கிறது என்பதை தான் விஞ்ஞானி தாஸ் கண்டுபிடித்திருக்கிறார்.
முதலில் ஒரு ஒரு மரபணு ஏன் பழுது பட வேண்டும்? சாதாரண வளர்சிதை மாற்ற செயல்பாடுகள் மற்றும் கதிர்வீச்சு ஆலைகளில் இருந்து வெளியேறுகின்ற நச்சுகள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளால் டி என் ஏ பாதிப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். இதன் விளைவாக நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான தனிப்பட்ட மூலக்கூறு புண்கள் ஏற்படலாம். இந்த புண்கள் பல டி என் ஏ மூலக்கூறுகளின் கட்டமைப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்துகின்றன மற்றும் பாதிக்கப்பட்ட டி என் ஏ குறியாக்கம் செய்யும் மரபணுவை படி எடுக்கும் களத்தில் பல வகையான திறன் மாற்றங்களை இவை கொண்டு வரலாம். தீங்கு விளைவிக்கும் மரபணு பிரழ்வு எனும் கொடுமையை நோக்கி இது தூண்டப் படுகிறது. உயிரணுவின் மரபணுவில் தீங்கு விளைவிக்கின்ற இது போன்ற தூண்டல்கள் உயிர் வாழ்வை மிக மோசமாக பாதிக்கின்றன. டிஎன்ஏ பழுது பார்க்கும் விதம், செயல் வகை, செல்லின் வயது, மற்றும் பிற செல்லுலார் சூழல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை விஞ்ஞானி தாஸ் ஆய்வுசெய்து இவை தங்களை தாங்களே எப்படி பழுது நீக்கம் செய்து கொள்கின்றன என்பதை கண்டுபிடித்து அறிவித்தார்.
உதாரணமாக சில சமயம் சூரியனிலிருந்து வெளியேறும் கதிர்கள் நம்முடைய உடலை மிக மோசமாக பாதிக்கின்றன. ஒரு செல் இரண்டாக பிரியும் பொழுது டி என் ஏ பிரதியாக்கம் செய்வதில் பல வகையான குளறுபடிகள் ஏற்படுகின்றன. ஆனால் அந்தசெல் தன்னத்திற்குள்ளே REPAIRING DNA எனும் அற்புதமான அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதை தான் தாஸ் கண்டுபிடித்தார். இந்த பழுது பார்ப்பதற்கான அமைப்பில் விஞ்ஞானி தாஸின் கூற்றுப்படி TOPO ISOMERASES இன்னும் என்சைம்கள் டி என் ஏக்களை பழுது பார்ப்பு வேலையில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை டாக்டர் தாஸ் உலகிற்கு அறிவித்தார். இந்த என்சைம்கள் டி என் ஏ மூலக்கூறுகளினுடைய மேல் புறத்தில் ஒட்டிக்கொள்கின்றன. பிறகு சில நொடிகளில் பெரிய அற்புதங்களை நிகழ்த்துகின்றன. அந்த டி என் ஏ வின் உள்ளே இருக்கக்கூடிய ஒட்டுமொத்த அம்சம் வெளியேற்றப்பட்டு அந்த டி என் ஏ முன்பிருந்த அதே கோணத்தில் புதிதாக பிறக்கிறது.
ஆனால் TOPO ISOMERASES என்சைம்கள் மிக அதிகமாக உற்பத்தியாவது ஒரு மனிதனுக்கு புற்றுநோயை ஏற்படுத்தலாம். இப்படி அதில் அதிக ஆபத்தும் உள்ளது ஆனால் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய செல்கள் பல வகை மரபணு மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடியவையாக இருப்பதால் இந்த என்சைம்களை மட்டுமே நம்பி இல்லாமல் நாம் அவற்றை திருத்தம் செய்வதற்காக சில மருந்துகளை கண்டுபிடித்து நம்முடைய உடலுக்குள் செலுத்தினோம் என்றால் இந்த சிக்கலை எளிதில் தீர்க்க முடியும் என்பது விஞ்ஞானி தாசின் அரிய கண்டுபிடிப்பாகும். இதற்காக வேறு வகையான என்சைம்களை அவர் ஆய்வுக்கு உட்படுத்தினார் TDP1 எனும் வகை மைட்டோகாண்ட்ரியாக்களில் உள்ள மரபணுக்கள் இந்த பழுது பார்க்கும் வேலையில் அதை விட சிறப்பாக செயல்படுகின்றன. இந்த விளக்கம் நமக்கு SCAN1 வகையான நோய்களுக்கு உட்படும் பொழுது நியூரான்கள் ஏன் வேகமாக இறந்து விடுகின்றன என்பதை விளக்குவதாகவும் இருந்தது. ஏனெனில் TDP1 என்னும் மரபணு ஒரு செல்லை பழுது பார்க்கும் பொழுது நியூரான்கள் விஷயத்தில் மோசமாக நடந்து கொள்கிறது. இப்படிப்பட்ட நோய்களுக்கு உட்படும் பொழுது ஒருவர் சக்கர நாற்காலியிலேயே 12 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் இருக்கவேண்டிய கொடுமையான நோய்கள்க்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
இவற்றை சரிசெய்வதற்கு விஞ்ஞானி தாஸ் இன்னொரு வகையான என்சைம்களை அடைந்தார். அவைகளுக்கு பாலிமரேஸ் (PARP1) என்சைம்கள் என்று பெயர். PARP1 ம் ஒரு ஆபத்துக்கு உதவும் அற்புதமாக உள்ளது அதனைக்கொண்டு அதனுடைய அடிப்படை கட்டமைப்பை முழுமையாக அறிந்து அவர் நோய்களுக்கான மருந்துகளை தயாரித்தார், அதில் வெற்றியும் பெற்றார். தன்னுடைய அற்புதமான கண்டுபிடிப்பின் மூலம் மிகவும் விபரீதமான புற்றுநோய்களுக்கு தீர்வை வெளியிட்ட டாக்டர் தாஸ் 2020 ஆம் ஆண்டுக்கான நேஷனல் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் வழங்கும் பிரேம் நாத் வஹி விருது பெற்றார். விஞ்ஞானி தாஸ் தேசிய அறிவியல் அக்காடமியினுடைய உறுப்பினராகவும் தேர்வு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகறிந்த இந்திய நானோ அறிவியல் விஞ்ஞானி ரவிசங்கர் நாராயணன் (Ravishankar Narayanan)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.