உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 6: கேன்டியின் மதிநுட்பம் (அமெரிக்கக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

மிசோரியின் ஒசார்க் பகுதியில் ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒரு சாரட் வண்டியில் ஊர் ஊராகப் பயணம் செய்வார்கள். சாரட் வண்டியில் வெள்ளிப் பிடி போட்ட அழகான ஒரு சவப்பெட்டி வைத்திருப்பார்கள். பயணம் செல்லும் வழியில் ஏதேனும் ஒரு பெரிய பணக்காரர் வீட்டைப் பார்த்தால் அந்த மனைவி தன் முகத்தில் வெண்மையாக ஒரு மாவைப் பூசிக் கொண்டு சவப்பெட்டிக்குள் சடலம் போல் படுத்துக் கொள்வாள்.

கணவன் அந்த வீட்டைத் தட்டி அன்றிரவு அந்த வீட்டின் மாட்டுத் தொழுவத்தில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்பான். பிறகு தான் ஒரு கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும், வெளியூரில் இறந்து போய் விட்ட தன் தங்கையின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்வதாகவும் அழுதபடியே கூறுவான். பிறகு, தனது தங்கையின் சவப்பெட்டி மாட்டுத் தொழுவத்தில் ஒரு இரவு முழுவதும் கிடந்தது என்பதை அறிந்தால் தனது வயதான பெற்றோர் வருந்துவார்கள் என்றும், அதனால் அந்தப் பெட்டியை மட்டும் வீட்டினுள் முன் வராந்தாவில் வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கெஞ்சுவான். அவர்களும் இரக்கப்பட்டு அனுமதிப்பார்கள். அன்றிரவு சவப்பெட்டியிலிருந்து அந்தப் பெண் வெளியே வந்து வீட்டின் கதவைத் திறந்து விடுவாள். அவன் உள்ளே நுழைந்து, வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் திருடிக் கொள்வான். இருவரும் அப்படியே ஓடிவிடுவார்கள். வீட்டுக்கார்ர்கள் யாராவது எழுந்து வந்துவிட்டால் அவர்களைக் கொன்று போட்டுவிடுவார்கள்.

இப்படித்தான் ஒரு நாள் ஆஷ்கிராப்ட் என்பவர் வீட்டிற்கு வந்தார்கள். அங்கு ஆஷ்கிராப்ட்டும் அவரது மனைவி கேன்டியும் மட்டும் வசித்து வந்தார்கள். கேன்டிக்கு இவர்களைப் பார்த்ததுமே சந்தேகமாக இருந்த்து. இருப்பினும் ஆஷ்கிராப்ட் இரக்க குணம் உடையவன். அப்போது மழை வேறு வருவது போல் இருந்தது. எனவே அவர்கள் சவப்பெட்டியை வீட்டு வராந்தாவில் வைக்க அனுமதித்தார்கள். அவனையும் உள்ளேயே படுத்துக் கொள்ளச் சொன்னார்கள். அவன் தான் நாள் முழுவதும் பயணம் செய்ததால் மிகவும் அழுக்காக இருப்பதாகவும், அதனால் மாட்டுத் தொழுவத்திலேயே படுப்பதாகவும் சொன்னான். மேலும் தனது தங்கையின் நகைகளும், மற்ற பொருட்களும் வேறு சாரட்டில் இருப்பதால், அதன் பக்கத்திலேயே இருப்பதுதான் பாதுகாப்பானது என்றும் சொன்னான்.

ஆஷ்கிராப்ட்டும், கேன்டியும் அவனுக்கு உணவு தந்தார்கள். வெளிச்சத்திற்காக ஒரு சிறு கைவிளக்கையும் தந்துவிட்டு, வீட்டை உள்ளே பூட்டிக் கொண்டு தமது அறைக்குச் சென்றார்கள். கேன்டி தன் கணவனிடம் மெல்லிய குரலில், ” எனக்கு என்னமோ சந்தேகமாக இருக்கிறது. அந்த சவப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது அந்தப் பிணம் கண் சிமிட்டியது போல் இருந்தது,“ என்றாள். ஆஷ்கிராப்ட், ” அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் போர்க்களத்தில் பல பிணங்களைப் பார்த்தவன். நீ இப்போதுதான் ஒரு பிணத்தை அருகில் பார்ப்பதால் உனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது,” என்று சமாதானம் சொன்னான். பிறகு, ”நீ காலையில் எழுந்து அவனுக்கு ஏதேனும் உணவு தயாரித்துக் கொடு, பாவம்,” என்றான். பின்னர் குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பித்தான்.

கேன்டிக்குத் தூக்கம் வரவில்லை. சத்தமின்றி மெதுவாக வாசல் பக்கம் சென்றாள். போகும்போதே சமையலறையிலிருந்து ஒரு சின்ன கோடரியையும் எடுத்துக் கொண்டாள். இவள் வராந்தா பக்கம் செல்லும் போது சவப்பெட்டி திறந்தது. உள்ளே இருந்து ஒரு பெண் எழுந்தாள். கேன்டி சட்டென்று கோடரியை ஓங்கி அவள் மண்டையில் போடவும் அவள் செத்து அப்படியே பெட்டிக்குள் விழுந்தாள். கேன்டி மெதுவாக தன் அறைக்கு வந்து கணவனை எழுப்பினாள். விஷயத்தைச் சொன்னாள். அவன் கோடரியை வாங்கிக் கொண்டான். போய் மெதுவாகக் கதவைத் திற என்று சொல்லிவிட்டு கதவின் பின்னால் கோடரியுடன் தயாராக நின்றான். கதவைத் திறந்ததும் சாரட்காரன் உள்ளே நுழைந்தான். இப்போது ஆஷ்கிராப்ட் கோடரியால் அவன் தலையில் ஒன்று போட, அவனும் செத்து விழுந்தான்.

விளக்கைக் கொண்டு வந்து பார்த்தார்கள். இறந்த இருவரிடமும் கத்தியும், துப்பாக்கியும் இருந்தன. சாரட்காரனின் இடுப்பு வாரில் ஏராளமான தங்கக் காசுகள் இருந்தன. அந்தப் பெண்ணின் இடுப்பில் இருந்த சிறு பையில் மூன்று வைர மோதிரங்கள் இருந்தன. சவப்பெட்டிக்கு அடியில் மேலும் நிறைய தங்க வெள்ளி நகைகள் இருந்தன. இரண்டு பிணங்களையும் அதே சவப்பெட்டியில் போட்டு, தோட்டத்தில் குழி தோண்டிப் புதைத்தார்கள்.  மறுநாள் காலையில்  சாரட் வண்டியை அடுத்த ஊருக்குச் சென்று விற்றுவிட்டார்கள்.  திருடர்களின் பணம், நகைகள், குதிரை ஆகியவற்றோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

அதன்பிறகு அந்தப் பகுதியில் எங்குமே திருட்டுப் போகவில்லை என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.