முன்னொரு காலத்தில் ஒரு பேரரசருக்கு மாலீன் என்ற ஒரு அழகான மகள் இருந்தாள். அவள் பக்கத்து நாட்டு இளவரசனைக் காதலித்தாள். ஆனால் பேரரசர் வேறொரு அரசனைத்தான் அவள் மணந்து கொள்ள வேண்டும் என்றார். மாலீன் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். அவள் தந்தைக்கு கோபம் வந்துவிட்டது.

சூரிய சந்திர ஒளி புகாத வகையில் ஜன்னல்களே இல்லாமல் ஒரு இருள் மாளிகையைக் கட்டினார். அதில் மாலீனை அடைத்து விட்டார். ”இதிலேயே நீ ஏழு ஆண்டுகள் இரு. அப்போதாவது உன் பிடிவாதம் குறைகிறதா என்று பார்ப்போம்,” என்றார்.

ஏழு ஆண்டுகளுக்குப் போதுமான உணவும், நீரும் அங்கு இருந்தன. ஒரு பணிப்பெண்ணும் சேர்த்து அடைக்கப்பட்டாள். இருவரும் இருளில் நாட்களைக் கடத்தினார்கள். மாலீனை காதலித்த இளவரசன் அந்த மாளிகையைச் சுற்றிச் சுற்றி வந்து மாலீன்… மாலீன் என்று கத்தினான். பெரிய கனமான சுவர்களைத் தாண்டி அவன் குரல் உள்ளே கேட்கவில்லை.

காலம் மெல்ல நகர்ந்தது. உணவு, குடிநீர் இருப்பு குறைவதை வைத்து ஏழாண்டுகள் முடியப்போவதை மாலீன் அறிந்தாள். மாளிகையை உடைக்கும் சம்மட்டி சத்தம் கேட்கிறதா என்று அவலோடு சுவரில் காது வைத்துக் கேட்டுக் கொண்டே இருந்தாள். ஒரு சத்தமும் இல்லை. உணவு முற்றிலுமாகத் தீர்ந்து போனதும், நாமே சுவரை உடைத்து வெளியே செல்லலாம் என்று முடிவு செய்தாள். அவளும், பணிப்பெண்ணும் ரொட்டி வெட்டும் கத்தியை வைத்து மாறி மாறி சுவரை பெயர்க்க ஆரம்பித்தனர்.

மிகவும் கடுமையாகப் பாடுபட்ட பின் ஒரு கல்லைப் பெயர்த்தெடுத்தார்கள். பிறகு ஒவ்வொரு கல்லாகப் பெயர ஆரம்பித்தது. மூன்றாம் நாள் மாளிகைக்குள் சூரிய வெளிச்சம் வருமளவு பெரிய ஓட்டை போட்டுவிட்டார்கள். வெளியே நீலநிற ஆகாயத்தையும், குளிர்ந்த காற்றையும் பார்க்க மகிழ்ச்சியாக இருந்த்து. ஆனால், மாளிகைக்கு சற்று தள்ளி இருந்த அவளது தந்தையின் கோட்டையும், ஊரும் பாழடைந்து போய் இருந்தன. அதனால்தான் யாரும் அவர்களை விடுவிக்க வரவில்லை என்று புரிந்தது.

நடந்து நடந்து பக்கத்து நாட்டிற்குச் சென்றபோது, எதிரிகள் அவளது நாட்டை சூறையாடிய விபரம் தெரிந்தது. பக்கத்து நாட்டில் ஒவ்வொரு வீடாகச் சென்று வேலை கேட்டார்கள். ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியில் அரண்மனை சமையல்காரர் தனக்கு உதவியாளராக அவளை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்.

HD wallpaper: la belle art forest horse Knight Love Mountains ...

தான் காதலித்த இளவரசனின் அரண்மனையில்தான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறோம் என்று மாலீனுக்குத் தெரியவில்லை. மாலீனின் காதலன் ஏழாண்டுகள் அவள் நினைவாகவே இருந்து திருமணம் செய்து கொள்ள மறுத்துக் கொண்டிருந்தான். கடைசியில் தாய் தந்தையரின் வற்புறுத்தலுக்காக அழகற்ற, குணமற்ற ஒரு இளவரசியை மணந்து கொள்ள சம்மதித்து விட்டான். மணமகள் திருமணத்திற்காக அந்த அரண்மனைக்கு வந்துவிட்டாள். தனது உருவத்தை நினைத்து அவளுக்கு அவமானமாக இருந்ததால், தனது அறையைப் பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தாள். உணவை தனது அறைக்குக் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டாள். மாலீன்தான் உணவு கொண்டு போய்த் தருவாள்.

திருமண நாள் அன்று, அந்த இளவரசி. மாலீனிடம், ” எனக்கு கால் சுளுக்கிக் கொண்டு விட்டது. தேவாலயத்திற்கு நடந்து செல்ல முடியாது. நீ எனது திருமண உடையை அணிந்து எனக்கு பதிலாகச் செல். உனக்கு நிறைய பரிசு தருகிறேன்,” என்றாள். மாலீன் மறுத்தாள். இளவரசி கடைசியாக உன் தலையைச் சீவச் சொல்லிவிடுவேன் என்று மிரட்டவும் பணிந்தாள்.

இளவரசியின் திருமண உடை, நகைகளை அணிந்து மாலீன் சென்றாள். எல்லோரும் அவள் அழகைப் பார்த்து வியந்தார்கள். ”இவள் என் மாலீன் போல் இருக்கிறாளே.. ஆனால் மாலீன் இப்போது இறந்திருப்பாளே!” என்று இளவரசன் நினைத்தான். அவள் கரம் பிடித்து தேவாலயம் நோக்கி நடந்தான். வழியில் குப்பைமேனிச் செடிப் புதர் இருந்த்து.

”குப்பை மேனியே, உன்னை வறுக்காமல் தின்றேன் நான். நீ எப்படி இங்கே வந்தாய்?” என்றாள் மாலீன்.

”என்ன சொன்னாய்?” என்றான் இளவரசன். ”ஒன்றுமில்லை,” என்றாள் மாலீன்.

இளவரசனுக்கு திகைப்பாக இருந்தது. ஒன்றும் பேசவில்லை. அப்போது ஒரு பாலம் வந்தது.

” பாலமே, உடைந்துவிடாதே. நான் உண்மையான மணப்பெண் அல்ல,” என்றாள் மாலீன்.

”இப்போது என்ன சொன்னாய்?” என்றான் இளவரசன்.

”மாலீன் பற்றி ஏதோ யோசனையில் இருந்தேன்,” என்றாள் மாலீன். ”உனக்கு மாலீன் பற்றித் தெரியுமா?” என்றான் இளவரசன். ”தெரியாது. கேள்விப்பட்டிருக்கிறேன்,” என்றாள் மாலீன்.

தேவாலய வாசல் அருகே வந்ததும். ”தேவாலயக் கதவே, உடைந்துவிடாதே. நான் உண்மையான மணப்பெண் அல்ல,” என்றாள் மாலீன்.

”இப்போது என்ன சொன்னாய்?” என்றான் இளவரசன்.

”நான் மாலீனைப் பற்றி ஏதோ யோசனையில் இருந்தேன்,” என்றாள் அவள்.

இளவரசன் அவளுக்கு விலையுயர்ந்த வைர நெக்லஸை அணிவித்தான். திருமணம் நடந்தது. அரண்மனை திரும்பியதும், மாலீன் மணப்பெண் அறைக்கு விரைந்து சென்றாள். நெக்லஸைத் தவிர மற்ற நகைகள், உடை அனைத்தையும் களைந்து விட்டு ஒரு பழுப்பு கவுனை அணிந்து கொண்டாள்.

இரவு வந்ததும், அழகற்ற இளவரசியை முதலிரவிற்கு அழைத்துச் செல்ல வந்தார்கள். தனது ஏமாற்று வேலை தெரிந்துவிடக் கூடாது என்று அவள் ஒரு முகத்திரை அணிந்துகொண்டு சென்றாள். முதலிரவு அறையில் இளவரசன், ” குப்பை மேனிச் செடியிடம் என்ன சொன்னாய்?” என்றான்.

”குப்பை மேனிச் செடியா? நான் செடிகளிடமெல்லாம் பேசமாட்டேன்,“ என்றாள் இளவரசி. பிறகு ஒரு கணம் யோசித்துவிட்டு, ” என் பணிப்பெண்ணிடம் கேட்கவேண்டும். அவள்தான் எனக்காக சிந்திப்பாள்,” என்றாள்.

மாலீனிடம் ஓடி வந்து ”குப்பை மேனிச் செடியிடம் என்ன சொன்னாய்,” என்றாள். மாலீன் தான் கூறியதைச் சொன்னாள். அதை அப்படியே இளவரசனிடம் ஒப்பித்தாள் இளவரசி. இது போலவே, பாலத்திடமும், தேவாலயக் கதவிடமும் கூறியது பற்றி இளவரசன் கேட்க, ஓடி ஓடிச் சென்று மாலீனிடம் கேட்டு வந்து அவனிடம் கூறினாள் இளவரசி.

Famous Medieval and Renaissance Couples

இளவரசன் சற்று யோசித்துவிட்டு, ”நான் தந்த நெக்லஸ் எங்கே?” என்றான்.

”அதை நானே உன் கழுத்தில் அணிவித்தேன். அது பற்றி நீ  சொல்லாவிட்டால், நீ உண்மையான மணப்பெண் அல்ல,” என்றான் இளவரசன். சொல்லிக் கொண்டே அவளது முகத்திரையை விலக்கினான். அவளது அழகற்ற முகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். ” நீ யார்? இங்கு எப்படி வந்தாய்?” என்று அதட்டினான்.

”நான்தான் உங்களுக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண். என் அழகற்ற முகம் கண்டு எல்லோரும் கேலி செய்வார்களே என்று எனது பணிப்பெண்ணை எனக்கு பதிலாக அனுப்பினேன்,” என்று உண்மையைச் சொன்னாள் அவள்.

”அவளை நான் பார்க்க வேண்டும். உடனே அழைத்து வா,”

மணமகள் அறைக்கு வந்த இளவரசி, மாலீன் தனது நெக்லஸை திருடிவிட்டதாக குற்றம் சொல்லி, அவளைக் கொல்ல ஆணையிட்டாள். வீர்ர்கள் அவளை இழுத்துச் செல்லும் போது மாலீன் அலறினாள். அவளது அலறல் கேட்டு வெளியே வந்த இளவரசன், இது யார், என்ன விஷயம் என்று விசாரித்தான். ”நீதானே நான் திருமணம் செய்து கொண்ட பெண். மாலீன் பற்றி ஏதோ சொன்னாயே. அது என்ன, உண்மையைச் சொல்,” என்று அதட்டினான்.

மாலீன்.” அன்பரே! நான்தான் உங்கள் மாலீன். ஏழாண்டுகள் இருண்ட மாளிகையில் இருந்ததால் உருவம் சற்று மாறிவிட்டது. பிறகு பணிப்பெண்ணாக வறுமையில் துன்புற்றேன். ஆனால் நான்தான் உங்கள் உண்மையான மனைவி,” என்றாள்.

இளவரசன் மாலீனை அணைத்து முத்தமிட்டான். மாலீனின் துன்பங்களுக்கு ஒரு முடிவு வந்தது.

 

ச.சுப்பாராவ்

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/ilam-kudumbaththalaivi-series/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-youngest-girl-and-the-monster-a-scottish-tale/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-american-children-stories/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-7-red-white-black-narmandi-story-s-subba-rao-in-tamil/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-series-8-by-s-subbarao/

தொடர் 9ஐ வாசிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *