ஒரு ஏழை கணவன் மனைவிக்கு நிறைய குழந்தைகள் இருந்தார்கள். எல்லா குழந்தைகளையும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. எனவே அவர்கள் தமது கடைசி மூன்று பெண் குழந்தைகளை காட்டில் சென்று விட்டுவிட்டார்கள். குழந்தைகள் மூவரும் காட்டில் இருட்டும் வரை நடந்துகொண்டே இருந்தார்கள். கடைசியில் ஒரு வீட்டை அடைந்தார்கள்.

அங்கு ஒரு பெண், ”உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றாள்.

”நாங்கள் வழி தவறிவிட்டோம். பசிக்கிறது. சாப்பிட ஏதாவது தருகிறீர்களா?” என்று குழந்தைகள் கேட்டன.

”இல்லை. என் கணவன் ஒரு ராட்சஸன். உங்களைப் பார்த்தால் கொன்றுவிடுவான். போய்விடுங்கள்,” என்றாள் அந்தப் பெண்.

”அம்மா, நாங்கள் அவர் வருவதற்குள் போய் விடுகிறோம்,” என்றன குழந்தைகள்.

அவள் அவர்கள் மீது இரக்கம் கொண்டு, சிறிது பாலும், ரொட்டித்துண்டுகளும் தந்தாள். அவர்கள் சாப்பிட ஆரம்பிக்கும்போது, வாசலில் கதவை இடிக்கும் சத்தம் கேட்டது. ஒரு கொடூரமான குரல், ”மனைவியே, இங்கே மனித வாடை வீசுகிறதே?” என்றது.

மனைவி,” யாரோ பாவம் மூன்று ஏழைக் குழந்தைகள் பசிக்கு உணவு கேட்டார்கள். தந்தேன்.  இப்போது போய்விடுவார்கள். அவர்களை விட்டுவிடுங்கள்,” என்றாள்.

ராட்சஸன் எதுவும் சொல்லவில்லை. வயிறு முட்டத் தின்றான். குழந்தைகள் இரவு அங்கேயே தங்கிச் செல்லலாம் என்றான்.  ராட்சஸனுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்களோடு தங்கச் செய்தான்.

ஏழைக் குழந்தைகளில் கடைசிப் பெண் பெயர் மோலி. அவள் மிகவும் புத்திசாலி. ராட்சஸன் தனக்கும், தன் அக்காக்களுக்கும், வைக்கோல் மாலையை அணிவித்ததையும், தனது சொந்த மகள்களுக்கு தங்க மாலையை அணிவித்ததையும் கவனித்தாள். எல்லோரும் உறங்கியதும், தங்கள் கழுத்தில் இருந்த வைக்கோல் மாலைகளை ராட்சஸனின் மகள்களுக்கு அணிவித்துவிட்டு, அவர்களது தங்க மாலையை தானும் அணிந்துகொண்டு, அக்காக்களுக்கும் அணிவித்தாள். பின்னர் சத்தமின்றி படுத்துவிட்டாள்.

நள்ளிரவில் ராட்சஸன் எழுந்து வந்தான். கையில் பெரிய குண்டாந்தடி. மெல்ல குழந்தைகளின் கழுத்தில் இருந்த வைக்கோல் மாலையைத் தடவிப்பார்த்துவிட்டு, குண்டாந்தடியால் அவர்களை அடித்துக் கொன்றான். நாளைக்கு செம விருந்து என்று நினைத்தபடி படுக்கச் சென்றான்.

மோலி தன் அக்காக்களை எழுப்பி, சப்தம் செய்யாது தன் பின்னால் வரும்படி சைகை செய்தாள்.  இருட்டிலேயே ஓடி அதிகாலையில் ஒரு அரண்மனையை அடைந்தார்கள். மோலி அரசனிடம் நடந்த அனைத்தையும் சொன்னாள்.

”மோலி, நீ மிகவும் புத்திசாலி. நீ அந்த ராட்சஸன் வீட்டிற்குத் திரும்பவும் சென்று, அவன் கட்டில் மேல் தொங்கும் மந்திர வாளை எடுத்து வந்தால் உன் பெரிய அக்காவை எனது மூத்த மகனுக்கு மணம் செய்து வைப்பேன்,” என்றான் அரசன்.

”முயற்சி செய்கிறேன்,” என்றாள் மோலி.

திரும்பவும், ராட்சஸன் வீடு சென்று அவன் கட்டிலுக்குக் கீழ் ஒளிந்து கொண்டாள். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய ராட்சஸன் வயிறு புடைக்க தின்று விட்டு கட்டிலில் படுத்து குறட்டை விட்டுத் தூங்கினான். மோலி சத்தம் செய்யாது, அவனது வாளை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தாள். ஏதோ அசைவை உணர்ந்து எழுந்துவிட்ட ராட்சஸன் துரத்தி வந்தான். மோலி வேகமாக ஓடி ஒரு சிறிய பாலத்தை அடைந்தாள். மோலி சிறுமி என்பதால் பாலத்தைக் கடந்துவிட்டாள். ராட்சஸனுக்கு பெரிய உருவம் என்பதால் அந்த சின்னப் பாலத்தைத் தாண்ட முடியவில்லை.

”மோலி, இனிமேல் நீ இங்கு வந்தால் அவ்வளவுதான்,” என்று கத்தினான் ராட்சஸன்.

மோலி, ”இன்னும் இரண்டு தடவை வருவேன்,” என்று கத்தியபடி ஓடிவிட்டாள்.

அரசனிடம் வாளைத் தந்தாள். அரசனும் சொன்னபடி அவளது பெரிய அக்காவை தனது மூத்த மகனுக்கு மணம் செய்து வைத்தான்.

”மோலி, ராட்சஸன் தன் தலையணைக்குக் கீழே தங்கத்தாலான மந்திரப் பை வைத்திருக்கிறான். அதைக் கொண்டுவா. உன் இரண்டாது அக்காவை என் இரண்டாவது மகனுக்குக் கல்யாணம் செய்து வைக்கிறேன்,” என்றான் அரசன்.

மோலி திரும்பவும் ராட்சஸன் வீடு வந்து அவன் தூங்கும் வரை ஒளிந்து நின்றாள். அவன் குறட்டை விட்டுத் தூங்கும் போது மெதுவாக தலையணைக்கடியில் கைவிட்டு, மந்திரப் பையை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தாள். இப்போதும் ராட்சஸன் எழுந்து விட்டான். துரத்தி வந்தான். ஆனால் அவனால் முன்பு போலவே அந்த குட்டிப் பாலத்தைத் தாண்ட முடியவில்லை.

”மோலி, இன்னொரு முறை நீ இங்கே வந்தால் சட்னிதான்,” என்றான் கோபமாக.

மோலி, ”இன்னும் ஒரே ஒரு முறை வருவேனே,” என்று கேலியாக்க் கத்தியபடி ஓடிவிட்டாள்.

அரசனிடம் மந்திரப்பையைத் தந்தாள். இரண்டாவது அக்காவின் திருமணம் அரசனின் இரண்டாவது மகனோடு சிறப்பாக நடந்தது.

”மோலி, நீ மிகவும் புத்திசாலி. ராட்சஸன் கையில் ஒரு மாயமோதிரம் அணிந்திருப்பான். அதை அணிபவர்கள் நினைத்தால் யார் கண்ணிலும் படாமல் மாயமாய் மறைந்துவிடலாம். அதை எடுத்துவா. உனக்கு என் கடைசி மகனைத் திருமணம் செய்து வைக்கிறேன்.“ என்றான் அரகன்.

மோலி மீண்டும் ராட்சஸன் வீடு சென்று அவன் கட்டிலின் கீழ் மறைந்து காத்திருந்தாள். ராட்சஸன் வழக்கம் போல் குறட்டை விட்டுத் தூங்கும்போது, மெதுவாக அவன் கையிலிருந்து மாய மோதிரத்தைக் கழற்றினாள். ஆனால், இம்முறை ராட்சஸன் சட்டென்று எழுந்து அவள் கையைப் பிடித்துவிட்டான்.

”நன்றாக மாட்டிக் கொண்டாய் மோலி. என் இடத்தில் நீ இருந்தால் என்ன செய்வாய்? நீ தான் பெரிய புத்திசாலி ஆயிற்றே. சொல்,” என்றான் ராட்சஸன்.

மோலி சட்டென்று யோசித்து,” ஐயா, உங்களை ஒரு பூனை, ஒரு நாயுடன் சேர்த்து, ஒரு சாக்கில் போட்டுக் கட்டி வைப்பேன். பிறகு, சாக்கை ஒரு சுவரில் சாய்த்து வைப்பேன். காட்டில் போய் பெரிய மரக்கட்டையைக் கொண்டு வந்து சாக்கிற்குள் நீங்கள் உயிரை விடும் வரை அடிப்பேன்,” என்றாள்.

”உனக்கான தண்டனையை நீயே சொல்லிவிட்டாய். நான் அப்படியே செய்கிறேன்,” என்றான் அவன். 

Giants and Dwarfs in Encyclopaedia of Mythology of Indo-European People

மோலியை ஒரு பூனை, நாயுடன் சேர்த்து ஒரு சாக்கில் போட்டுக் கட்டிவைத்துவிட்டு, பெரிய கட்டையைத் தேடி காட்டிற்குள் சென்றான். அவன் அந்தக் பக்கம் போனதும், மோலி, ”ஆஹா… ஆஹா… என்ன ஒரு அற்புதக் காட்சி,” என்று பாட ஆரம்பித்தாள்.

ராட்சஸனின் மனைவி, ” அப்படி என்ன தெரிகிறது?” என்று கேட்டாள்.

மோலி பதில் சொல்லாமல், என்ன ஒரு அற்புதக் காட்சி என்று பாடிக் கொண்டே இருந்தாள். ராட்சஸனின் மனைவிக்கு ஆர்வம் அதிகமாகி, கெஞ்ச ஆரம்பித்தாள். நானும் அதைப் பார்க்க வேண்டும் என்றாள் மோலி தன்னை சாக்கிலிருந்து வெளியே விடச் சொன்னாள். பிறகு ராட்சஸனின் மனைவியை சாக்கிற்குள் போகச் சொல்லி, சாக்கை இறுக்கமாக்க் கட்டிவிட்டாள்.

”ஒன்றுமே தெரியவில்லையே,” என்று ராட்சஸனின் மனைவி கத்தினாள். அதற்குள் மோலி கதவிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள். கட்டையோடு திரும்பி வந்த ராட்சஸன் சாக்கை ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்தான்.

உள்ளே ராட்சஸனின் மனைவி, ”அடிக்காதீர்கள். நான் உங்கள் மனைவி,” என்று அலறினாள். ஆனால் அடி விழுந்ததில் பூனையும், நாயும் சேர்ந்து ஊளையிட்டதால், அவளது அலறல் கேட்கவில்லை. ராட்சஸன் மனைவி மீது இரக்கம் கொண்ட மோலி, தனது  மறைவிடத்திலிருந்து வெளியே வந்து ஓட ஆரம்பித்தாள். வழக்கம் போலவே ராட்சஸன் துரத்தி வந்தான். வழக்கம் போலவே அந்த சிறிய பாலத்தை அவனால் தாண்ட முடியவில்லை.

” இனிமேல் நீ இங்கே வந்தால் உன்னை என்ன செய்கிறேன் பார்,” என்று ராட்சஸன் கூச்சலிட்டான்.

”இனி வரமாட்டேன்,” என்று பதிலுக்குக் கத்தினாள் மோலி.

அரசனிடம் மாயமோதிரத்தைத் தந்து அவனது கடைசி மகனைத் திருமணம் செய்துகொண்டாள்.

அதற்குப் பிறகு ராட்சஸன் வீட்டிற்கு அவள் போகவேண்டிய அவசியம் வரவே இல்லை.

ச.சுப்பாராவ்

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/ilam-kudumbaththalaivi-series/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-youngest-girl-and-the-monster-a-scottish-tale/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-series-3-by-s-subbarao/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-american-children-stories/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-series-7-by-s-subbarao/

தொடர் 13ஐ வாசிக்க
தொடர் 14ஐ வாசிக்க
தொடர் 15ஐ வாசிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *