டென்மார்க் நாட்டின் ஒரு கோடியில் ஒரு ராணி இருந்தாள். அவள் ஒரு நாள் புதிதாய் விழுந்திருந்த பனியில் தன் பனிச் சறுக்கு வண்டியில் சென்றுகொண்டிருந்தாள். அப்போது திடீரென பனியின் காரணமாக அவள் மூக்கிலிருந்து ரத்தம் வரவும், வண்டியை நிறுத்திக் கீழே இறங்கி, ஒரு மரத்தடியில் நின்று மூக்கைத் துடைத்துக் கொண்டாள். அப்போது சில ரத்த்த் துளிகள் பனியில் விழுந்தன. பனியின் வெண்மையையும், அதில் ரத்தத் துளிகளின் சிவப்பையும் பார்த்த அவள். ‘எனக்கு இப்போது 12 புதல்வர்கள் இருக்கிறார்கள். ஒரு மகள் கூட இல்லை. இந்த பனியின் வெண்மையும், ரோஜாச் சிவப்பும் கலந்த நிறத்தில் ஒரு பெண்குழந்தை பிறந்தால் போதும். பிறகு என் மகன்களைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்,‘ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். அடுத்த நொடி அவள் முன்னால் ஒரு சூனியக்காரி தோன்றினாள். ”உனக்கு இந்தப் பனியின் வெண்மையும், ரோஜா சிவப்பும் கலந்த நிறத்தில் ஒரு மகள் பிறப்பாள். ஆனால், உன் 12 மகன்களும் எனக்கு சொந்தமாக வேண்டும். உடனே அவர்களை என்னிடம் ஒப்படைக்க வேண்டாம். மகளுக்கு ஞானஸ்நானம் செய்த பின் ஒப்படைத்தால் போதும்,” என்றாள்.

அதே போல் உரிய காலத்தில் ராணிக்கு பனியின் வெண்மையும், ரோஜாவின் சிவப்பும் கலந்த நிறத்தில் ஒரு பெண்குழந்தை பிறந்தது. அதன் காரணமாக அவளுக்கு பனிரோஜா என்று பெயரிட்டார்கள். எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ராணி சூனியக்காரிக்கு வாக்குக் கொடுத்ததை நினைத்து வருந்தினாள். உடனே அவள் ஆசாரியை வரவழைத்து பன்னிரண்டு இளவரசர்களுக்கும் 12 வெள்ளி ஸ்பூன் செய்து தருமாறு சொன்னாள். இளவரசிக்கும் ஒன்று செய்யச் சொன்னாள். இளவரசிக்கு ஞானஸ்நானம் நடந்த அன்று 12 இளவரசர்களும் திடீரென்று வாத்துகளாக மாறி, வானில் பறந்து மறைந்து விட்டார்கள். அவர்கள் எங்கு போனார்கள் என்றே தெரியவில்லை. எனினும், இளவரசி மிக அழகாக வளர்ந்தாள். அவள் எப்போதும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து சோகமாகவே இருப்பாள். யாருக்கும் காரணம் தெரியவில்லை.

ஒருநாள் மாலையில் ராணியும் தனது மகன்களைப் பற்றிய சிந்தனையில் மிக சோகமாக இருந்தாள். தன் மகளிடம், ”மகளே, நீ ஏன் எப்போதும் சோகமாக இருக்கிறாய்? எதனால் என்று என்னிடம் சொல், உனக்கு என்ன வேண்டும் என்றாலும், நான் செய்கிறேன்,” என்றாள்.

”அம்மா, எல்லா குழந்தைகளுக்கும், உடன்பிறந்தவர்கள் இருக்கிறார்கள். எனக்கு யாருமே இல்லை. அதனால்தான் நான் சோகமாக இருக்கிறேன்,“ என்றாள் மகள்.

”மகளே, உனக்கும் ஒருகாலத்தில் சகோதரர்கள் இருந்தார்கள். மொத்தம் பன்னிரண்டு அண்ணன்கள். ஆனால், நீ பிறப்பதற்காக அவர்களை நான் ஒரு சூனியக்காரிக்குத் தர நேர்ந்தது,” என்று பழைய கதையைச் சொன்னாள் ராணி.

இதைக் கேட்டதும் இளவரசி மிகவும் வருந்தினாள். அவர்கள் காணாமல் போனதற்கு தான்தான் காரணம் என்று நினைத்தாள். எனவே அவர்களைத் தேட, ராணிக்குத் தெரியாமல் அரண்மனையை விட்டு வெளியேறினாள். வெகு தூரமாக பல இடங்களுக்கும் சென்றாள். ஒரு நாள் ஒரு முழு இரவும் ஒரு அடர்ந்த காட்டில் தேடினாள். விடியும் நேரத்தில், மிகவும் களைப்படைந்து, ஒரு நதியோரமாகப் படுத்துத் தூங்கிவிட்டாள்.  தூக்கத்தில் அந்தக் காட்டில் வெகு தூரம் நடந்து ஒரு சின்ன குடிசையைப் பார்ப்பதாகவும், அதில் அவளது அண்ணன்கள் இருப்பதாகவும் கனவு வந்த்து. எழுந்ததும், எதிரே தெரிந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து  காட்டின் மையப் பகுதிக்குச் சென்றாள். அங்கு கனவில் வந்தது போலவே ஒரு குடிசை இருந்தது. 

குடிசைக்குள் நுழைந்தாள். உள்ளே யாரும் இல்லை. எனினும் பன்னிரண்டு கட்டில்கள் இருந்தன. பன்னிரண்டு நாற்காலிகள் இருந்தன. மேஜையில் பன்னிரண்டு ஸ்பூ’ன்கள் இருந்தன. அங்கு அவள் பார்த்த அனைத்துப் பொருளிலும் பன்னிரண்டு இருந்தன. அவை அனைத்தும் தன் அண்ணன்களுடையது தான் என்று அவளுக்கு ஒரே மகிழ்ச்சி. உடனே அவள் கணப்பில் தீயை மூட்டினாள். அந்த அறையை பெருக்கி சுத்தம் செய்தாள். படுக்கைகளை மடித்து வைத்தாள். தனக்குத் தெரிந்த அளவு சமையல் செய்தாள். சமைத்ததை மேஜை மீது வைத்து ஸ்பூன்களை வரிசையாக வைத்துவிட்டு தனது ஸ்பூனையும் அவற்றிற்கு அருகில் வைத்துவிட்டு,, ஒரு படுக்கைக்குக் கீழ் ஒளிந்து கொண்டாள்.

அப்போது காற்றில் பெரும் சலசலப்பு கேட்டது. பன்னிரண்டு வாத்துகள் பறந்து வந்தன. அறைக்குள் வந்த்தும் அவை அழகான இளவரசர்களாக மாறின. அவளது அண்ணன்கள் !

” வீடு அழகாக இருக்கிறது. யாரோ எல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சாப்பாடும் சுடச்சுட இருக்கிறதே !” என்று அவர்கள் வியந்தார்கள்.

“நமக்காக இந்த வேலைகளைச் செய்த அந்த நல்ல உள்ளத்தை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என்று சொல்லிவிட்டு, அனைவரும் தத்தமது ஸ்பூன்களை எடுத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்த போது. கூடுதலாக ஒரு ஸ்பூன் இருப்பதைப் பார்த்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“இது நம் தங்கையின் ஸ்பூனாகத்தான் இருக்க வேண்டும். அவள் இங்குதான் அருகில் எங்கோ இருக்கிறாள்.” என்றார்க்ள.

How to Draw a Queen (with Pictures) - wikiHow

“அவள் நமது தங்கை, இங்கு தான் இருக்கிறாள் என்றால், அவளைக் கொன்றுவிட வேண்டும். ஏனென்றால், நமது துன்பங்களுக்கு அவள்தான் காரணம்,” என்றான் மூத்த அண்ணன்..

“ இல்லை. அவளைக் கொல்வது பாபம். அவள் மீது எந்தத் தவறும் இல்லை. தவறு செய்தது நம் அம்மாதான்,” என்றான் கடைசி அண்ணன்.

குடிசை முழுக்கத் தேடி, அவளைக் கண்டுபிடித்து விட்டார்கள். பெரிய அண்ணன் அவளைக் கொல்லப் போனான். ஆனால், இளவரசி, ”நான் உங்களைத் தேடி பல இடங்களிலும் அலைந்தேன். என்னைக் கொல்வதன் மூலம் உங்கள் துன்பம் தீரும் என்றால், என்னைக் கொல்லுங்கள்,” என்றாள்.

“நீ நினைத்தால், எங்கள் துன்பம் தீரும். நீ உதவி செய்வதாக இருந்தால், நான் உன்னைக் கொல்லவில்லை,” என்றான் பெரிய அண்ணன்.

“என்ன செய்யவேண்டும்? உங்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன்,“ என்றாள் இளவரசி.

“நீ டான்டிலியன் பூக்களின் இதழ்களைப் பறித்து அவற்றை வைத்து எங்களுக்கு பன்னிரண்ட சட்டை, பன்னிரண்டு தொப்பி, பன்னிரண்டு கழுத்துப் பட்டி ஆகியவற்றை நெய்து தரவேண்டும். (டான்டிலியன் என்பது மேலைநாடுகளில் வளரும் ஒருவித காட்டுப்பூ. மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதன் இதழ்கள் உதிரும்போது, பஞ்சு போல் இருக்கும்- மொழிபெயர்ப்பாளர்) இந்த வேலையைச் செய்யும் காலம் முழுவதும் நீ பேசக்கூடாது, சிரிக்கக் கூடாது, அழக் கூடாது. அவ்வாறு செய்தால், நாங்கள் இந்த்த் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவோம்,” என்றான் அண்ணன்.

”ஆனால், அவ்வளவு டான்டிலியன் இதழ்களுக்கு நான் எங்கே செல்வேன்?” என்றாள் தங்கை. அண்ணன்கள் அவளை குடிசைக்குப் பின்புறம் அழைத்துச் சென்றனர். அங்கு கண்ணுக்கு  எட்டிய தூரம் வரையில் டான்டிலியன் பூக்கள் பூத்திருந்தன. இளவரசி அவ்வளவு பூக்களை இதுவரை இப்படிப் பார்த்ததே இல்லை. உடனே அவள் தன்னால் முடிந்த அளவு அந்தப் பூக்களைப் பறித்தாள் மாலையில் அந்த இதழ்களை நூலாக நூற்றாள். தினமும் தன் அண்ணன்களுக்கு சமைத்து வைத்துவிட்டு பூக்களைப் பறித்து நூற்பாள். அவர்கள் காலையில் வாத்துகளாக மாறி வெளியே பறந்து செல்வார்கள். இரவு வீட்டுக்கு வந்ததும் இளவரசர்களாக மாறிவிடுவார்கள். இது நீண்ட காலத்திற்கு நடந்தது.

கிட்டத்தட்ட சட்டை, தொப்பி, கழுத்துப் பட்டி தைக்கும் வேலை நெருங்கி முடிந்துவிட்டது. இன்னும் நிறைய பூக்களைப் பறித்து நூல் நூற்றால் வேலை முடிந்துவிடும் என்ற நிலையில் அவள் சந்தோஷமாகப் பூப் பறிக்கச் சென்றாள். அப்போது அந்த நாட்டின் அரசன் அந்தப் பக்கமாக வந்தான். அழகான ஒரு பெண் பூப் பறிப்பதைப் பார்த்து, அவள் யார் என்று கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை. இவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்த அவன் சேவகர்களிடம் அவளை தனது தேரில் ஏற்றுமாறு உத்தரவிட்டான். அவர்கள் அவளைத் தூக்க வந்தபோது, அவள் சட்டை முதலானவற்றை தைத்து வைத்திருந்த பையைக் காட்டி சைகை செய்தாள். உடனே அரசன் அந்தப் பையையும் தேரில் வைக்கச் சொன்னான்.  அரசன் மிக அழகாக, நல்ல பண்புள்ளவனாக இருந்ததால், பனிரோஜா மௌனமாகத் தன் சம்மத்த்தைத் தெரிவித்து அவனுடன் சென்றாள். அரண்மனையில் அரசனின் சிற்றன்னை – அவனது தந்தையின் இரண்டாவது மனைவி- பனிரோஜாவைப் பார்த்துப் பெறாமைப்பட்டாள். அவள் அரசனிடம், ” இவள் பேசுவதில்லை. சிரிப்பதில்லை, அழுவதில்லை. இவள் ஒரு சூனியக்காரி,” என்று சொன்னாள். ஆனால் அரசன் தன் சிற்றன்னை சொன்னதைக் கேட்காமல் பனிரோஜாவை மணந்தான். அவளும் பேசாமல் சட்டை முதலியவற்றைத் தைத்து முடிப்பதில் கவனம் செலுத்தினாள்.

ஓராண்டில், பனிரோஜாவிற்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. அரசனின் சிற்றன்னைக்கு பொறாமை இன்னும் அதிகமாகிவிட்டது. ஒரு நாள் இரவு, அவள் பனிரோஜாவின் குழந்தையை எடுத்துச் சென்று பாம்புகள் இருக்கும் ஒரு குழிக்குள் போட்டுவிட்டாள். பிறகு தனது விரலை வெட்டிக் கொண்டு, வந்த ரத்த்ததை பனிரோஜாவின் வாயில் பூசிவிட்டாள். பின்னர் அரசனிடம் சென்று, “உன் மனைவி எப்படிப்பட்டவள் என்று பார். தன் சொந்தக் குழந்தையையே தின்றுவிட்டாள்,” என்றாள். அரசன் மிகவும் வருந்தினான். ஆனால், அவரசப்பட்டு தண்டிக்க வேண்டாம் என்று எதுவும் செய்யவில்லை. 

அடுத்த ஆண்டு மற்றொரு ஆண்குழந்தை பிறந்தது. இந்த முறையும் சிற்றன்னை  முன்பு செய்ததைப் போலவே செய்தாள். அரசன் இந்த முறையும் வருந்தினான். ஆனால் தான் கண்ணால் பார்க்கவில்லை என்பதால் தண்டிக்கவில்லை.

அதற்கு அடுத்த வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. சிற்றன்னை முன்பு செய்ததைப் போலவே செய்துவிட்டு, அரசனிடம் கோள் மூட்டினாள். இந்த முறை அரசனால் கோபத்தைத் தாங்க முடியவில்லை. பனிரோஜாவை உயிரோடு எரித்து விடுமாறு கட்டளை இட்டான். பனிரோஜா தன்னை எரிக்கப்போகும் இடத்தைச் சுற்றி பன்னிரண்டு பலகைகளைப் போடவேண்டும் என்று சைகையால் கேட்டுக் கொண்டாள். அதைப் போலவே எரியும் நெருப்பைச் சுற்றி பன்னிரண்டு பலகைகள் போடப்பட்டன. அதில் ஒவ்வொன்றிலும் அவள் ஒரு சட்டை, ஒரு தொப்பி, ஒரு கழுத்துப் பட்டி ஆகியவற்றை வைத்தாள். கடைசி அண்ணன் சட்டையில் மட்டும் இடது கை தைக்கப்படாமல் இருந்தது. அதைத் தைத்து முடிப்பதற்கு அவளுக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. பலகையில் அவற்றை வைத்ததும் எங்கிருந்தோ பன்னிரண்டு வாத்துகள் பறந்து வந்தன. ஒவ்வொன்றும் ஒரு சட்டை, தொப்பி, கழுத்துப் பட்டி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பறந்து சென்றன.

”இப்போது தெரிகிறதா, இவள் சூனியக்காரி என்று ! காலம் தாழ்த்தாதே 1 இவளை உயிரோடு எரித்து விடு… விறகுகள் எல்லாம் வீணாக சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன,” என்றாள் சிற்றன்னை.

“கவலைப்பட வேண்டாம், நம்மிடம் நிறைய விறகுகள் இருக்கின்றன. அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்,” என்றான் அரசன். 

அப்போது மிக அழகான பன்னிரண்டு இளவரசர்கள் குதிரைகளில் வந்தார்கள். கடைசி இளவரசனுக்கு மட்டும் இடது பக்கம் கைக்கு பதிலாக இறகு இருந்தது.

”அரசே! என்ன செய்யப் போகிறீர்கள்?“ என்று இளவரசர்கள் கேட்டார்கள்.

“என் மனைவி ஒரு சூனியக்காரி. தன் சொந்தக் குழந்தைகளையே தின்றுவிட்டாள். அவளை உயிரோடு எரிக்கப் போகிறேன்,“ என்றான் அரசன்.

” அவள் அப்படிச் செய்பவள் அல்ல,” என்ற இளவரசர்கள், பனிரோஜாவிடம், ” தங்கையே ! எங்கள் சாபம் நீங்கிவிட்டது, இப்போது நீ பேசலாம்,” என்றார்கள்.

பனிரோஜா சிற்றன்னை குழந்தைகளை பாம்புக் குழியில் போட்டது, தன் வாயில் ரத்தத்தைப் பூசியது என்று அனைத்தையும்கூறினாள். எல்லோரும் அந்தப் பாம்புக் குழிக்குச் சென்று பார்த்தார்கள். அதில் மூன்று குழந்தைகள் பாம்புகளுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தன. அவை மூன்றும் வளர்ந்து அழகாக இருந்தன. அரசன் தன் சிற்றன்னையைத் தண்டித்தான்.

snowy rose uploaded by Iran Adler on We Heart It

பின்னர் எல்லோரும் பனிரோஜாவின் தாய் தந்தையர் நாட்டிற்குச் சென்று எல்லோரிடமும் நடந்த அனைத்தையும் கூறினர். தன் சகோதரர்களுக்காக பனிரோஜா செய்த தியாகத்தை அனைவரும் பாராட்டினர். பனிரோஜா தன் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்தாள்.

ச.சுப்பாராவ்

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/ilam-kudumbaththalaivi-series/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-youngest-girl-and-the-monster-a-scottish-tale/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-series-3-by-s-subbarao/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-american-children-stories/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-series-7-by-s-subbarao/

தொடர் 13ஐ வாசிக்க
தொடர் 14ஐ வாசிக்க
தொடர் 15ஐ வாசிக்க
தொடர் 16ஐ வாசிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *