தொடர்- 6 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
உலகறிந்த இந்திய உயிரியலாளர் புத்திசாகர் திவாரி (Buddhisagar Tiwari)
இந்த கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் பில்லியன் கணக்கான மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றை மரணம் என்பதா தற்கொலைகள் என்பதா.. ஆனால் இந்த மரணங்களுக்காக யாரும் அழுவதில்லை தங்களுக்கு பேரழிவை அவை உருவாக்கிக் கொள்கின்றன தான் இறந்து போவதன் மூலம் அவை நம்மை உயிரோடு வைத்திருக்கின்றன. நம் ஒவ்வொருவரின் உள்ளே இருக்கும் செல்கள் தான் அவை. ஒவ்வொரு நொடியும் நம்முடைய உடலில் டிரில்லியன் கணக்கான செல்கள் பிறந்து. ஏதாவது ஒன்று இரண்டு சேவைகளை கூட நிகழ்த்தாமல் தானாகவே தங்களுக்கு மரணத்தை ஏற்படுத்திக்கொள்கின்றன.
தங்களைத் தாங்களே உணவாக உட்கொள்கின்றனவா என்று கூட உலகம் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதை விஞ்ஞான உலகம் PROGRAMMED CELL DEATH என்று அழைக்கிறது. இந்த வினோதமான அறிவியல் உலகில் தன்னுடைய ஆய்வின் மூலம் பல உன்னதமான கண்டுபிடிப்புகளை இந்த உலகத்திற்கு வழங்கியிருக்கும் இந்திய உயிரி தொழில்நுட்ப வித்தகர் தான் புத்திசாகர் திவாரி. திவாரி உண்மையில் தாவரவியல் துறையைச் சேர்ந்தவர். தாவர செல்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுவந்தவர். தாவரங்களில் மண்ணிலிருந்து தண்ணீரை எடுத்து வேர்களின் வழியாக மேல் நோக்கி கிளைகளுக்கு அனுப்புகின்ற வேலையை XYLEM செல் என்கிற செல்கள் நிகழ்த்துகின்றன. இந்த செல்கள் உயிரற்ற செல்கள் ஆகும். ஆனால் இவை உருவாகும் போது உயிரற்ற செல்களாக உருவாகவில்லை இவை உயிருள்ள செல்களாக உருவாகி பிறகு மரணத்தை தழுவ அதன் மூலம் தாவரத்திற்கு உதவுகின்றன.
இந்த வகையான சைலம் செல்கள் இரண்டு வகையாக உள்ளன. வாஸ்குலார் தாவரங்களில் இந்த வகை திசுக்கள் வேர்களிலிருந்து தண்டு மற்றும் இலைகளுக்கு தண்ணீரை தந்துகிக கவர்ச்சி மூலம் மேல் நோக்கி எடுத்துச் செல்கின்றன. இது மிகவும் வினோதமான விஷயமாகும். இந்த திசுக்கள் புவியீர்ப்பு விசைக்கு எதிராக செயல்பட வேண்டும். ஒவ்வொரு மரமும் சைலம் திசு மரம் ஆகும். தாவரவியலின் முக்கிய அம்சமான இறந்த செல்களையும் ஒரு குறிப்பிட்ட பணிக்கு பயன் படுத்துகின்ற ஆற்றல் என்பது பல நூற்றாண்டுகளாகவே விஞ்ஞானிகளுக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுத்து வந்திருக்கிறது. மூங்கில் மரங்கள் தோன்றும் பொழுதே மூங்கில் மரங்களினுடைய விதைகளிலேயே SUSPENSOR என்கிறவகை செல்கள் இணைக்கப்படுகின்றன. மூங்கில் விதை கருவை சுற்றியுள்ள மிக முக்கியமான சக்திவாய்ந்த பல சத்துகளை கண்டு பிடித்து உறிஞ்சுவதன் மூலம் அவற்றை விதைக்குள்ளே வளர்ச்சிக்கான ஆற்றலாக இணைக்கின்றன. இந்த செல்கள் அவ்விதம் அனைத்து ஊட்டச்சத்துகளும் விதைக்குள் சேகரிக்கப்பட்ட பிறகு இந்த spensor செல்கள் தங்கள் கடமை முடிந்தது என்று உடனடியாக இறந்து போகின்றன.
இன்னொரு உதாரணமும் சொல்லலாம் தவளைகள் பிறக்கும்போதே முழுதவளையாக பிறப்பது இல்லை அவை முட்டையிலிருந்து புரிந்து தண்ணீரில் வாழும் மீன்களை போலத்தான் உடலைப் பெறுகின்றன. தண்ணீரில் நீந்தி பல நாட்கள் அவை வாழ வேண்டியிருக்கிறது. எனவே அவைகளுக்கு வால் போன்ற அமைப்பு பிறந்த உடன் கொடுக்கப்படுகிறது. தண்ணீருக்குள் நீந்துவதற்கும் உணவு தேடுவதற்கும் இது பயன்படுகிறது. தண்ணீரை விட்டு வெளியேறும் அளவிற்கு அவை வளர்ந்த பிறகு வால்களை உருவாக்கிய செல்கள் இறந்து போகின்றன. எனவே வால் இல்லாமல் ஒவ்வொரு முறையும் தண்ணீரை விட்டு வெளியே நிலத்தை நோக்கி தவளை வந்து விடுகிறது.
இந்த செல்கள் இறந்து போக காரணம் என்ன? இறந்து போவதற்கு தூண்டப்படுகின்ற செல்லின் பகுதி எது ?ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான செல்கள் உடலில் தோன்றி மறைவதற்கு எது காரணம்? இது தான் புத்திசாகர் திவாரி ஆய்வு ஆகும். காந்தி நகர் உயர் உயிரியல் தொழில்நுட்ப ஆய்வு மையம் என்கிற உயிரி தொழில்நுட்ப ஆய்வகத்தில் அவர் இணை பேராசிரியராக இருக்கிறார். தாவரவியல் உயிரியல் இரண்டையும் கலந்து செல்களின் பொதுவான மரணம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து எந்த பொருள் செல்களின் தற்கொலைக்கு காரணம் என்பதை கண்டு பிடிக்கிறார். அவரது கண்டுபிடிப்பு உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி அவர் என்ன கண்டு பிடித்தார்…
செல்களில் மைட்டோகாண்ட்ரியா என்பது தான் செல்க்கான ஆற்றலை வழங்குகிறது. இப்படிப்பட்ட ஆற்றலை வழங்கும் பொழுது சில பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. மைட்டோகாண்ட்ரியா கெடுதியான திசுக்களையும் சேர்த்து உருவாக்குகிறது. இவை நம்முடைய மரணம் வரை சென்று பல வகையான கெடுதல்களை செய்கின்றன. மரபணுக்கள் கெடுதலுக்கு உட்படுத்தப்பட்ட செல்கள் உடனடியாக இறந்து போக வேண்டும். மைட்டோகாண்ட்ரியாவை பொறுத்த வரையில் இவற்றை கண்டுபிடித்து அழிக்க முடியாது. இந்த செல்கள் அழியாமல் போவது தான் புற்று நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என்பதை திவாரி கண்டுபிடித்தார்.
பச்சையமணி என்று நாம் அழைக்கும் chloroplast தாவரங்களில் உடனடியாக செல்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்ள தூண்டுதலை மேற்கொள்கிறது. விலங்குகளில் இதே போன்ற அமைப்புகள் செயல் படுவதை திவாரி நிரூபித்தார். தாவர செல்களில் தீவிரமாக நாம் ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது இறுதி ஊர்வல அமைப்புகள் என்னும் விலங்கு செல்லின் மரண தூதுவர்களை திவாரி கண்டு பிடித்து உலகிற்கு அறிவித்தார். இந்த மரண தூதுவர்கள் எப்படியாவது பாதிக்கப்பட்ட செல்களை அழித்துவிட வேண்டும். இல்லையேல் ஒருவருக்கு புற்றுநோய் வருவது உறுதி செய்யப்படும். இது புத்திசாகர் திவாரி அவர்களின் முதல் கண்டு பிடிப்பு.
தண்ணீரே இல்லாமல் உயிர் வாழும் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் திவாரி அவர்களின் அடுத்த முக்கியமான பங்களிப்பாகும். பொதுவாக தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. பாலைவன பகுதிகளில் வாழும் எலி இனங்கள் சிலபல மாதங்கள் கூட தண்ணீர் இல்லாமல் வாழ்கின்றன ஒட்டகங்களை போல தன் உடலிலேயே தண்ணீரை சேமிக்கும் விலங்குகளும் உண்டு. ஆனால் திவாரி கொடுத்திருக்கும் சில வினோத உயிரினங்கள் நம்மை ஆச்சரியப் படுத்துகின்றன. உதாரணமாக பேக்கரின்நொதி என்னும் நுரைமம் தண்ணீரே இல்லாமல் ஏறக்குறைய இறந்துபோன நிலையில் பல ஆண்டுகளை அப்படியே நீட்டித்திருக்கிறது.
திடீரென்று தண்ணீர் கிடைக்கும் பொழுது பல பத்தாண்டுகள் ஆகி இருந்தாலும் அவை சட்டென்று தன்னை உயிர்ப்பித்துக் கொண்டு அன்றிலிருந்து வாழத் தொடங்குகின்றன. இப்படியான உயிரினங்களை anhydrobiote என்று அழைக்கிறார்கள். விண்வெளிக்கு சென்று அங்கு வாழும் மனிதர்களை பொறுத்தவரையில் இந்த ஆராய்ச்சிகள் தண்ணீர் இல்லாமல் அங்கு வாழ்வது குறித்த ஆய்வுகளை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் இந்த ஆய்வுகளுக்காக திவாரி இந்தியா சுவீடன் அமெரிக்கா சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளின் உயிரித்தொழில்நுட்ப அறிஞர்களோடு கைகோர்த்திருக்கிறார்.
புத்திசாகர் திவாரி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டத்திற்கு தாவரவியலையும் முதுகலை பட்டத்திற்கு உயிரி தொழில்நுட்பத்தையும் எடுத்துபடித்து. உயிர் அணுவியல் துறையில் (CYTOLOGY) முனைவர் பட்டம் பெற்றார். குஜராத்தின் காந்தி நகர் உயர் தொழில்நுட்ப உயிரியல் ஆய்வகத்தில் தனது ஆய்வுகளை தொடர்ந்து கொண்டிருக்கும் அவர் உலகளவில் இன்று பேசப்படும் அற்புத அறிஞர்களில் ஒருவர் என்பது நமக்கெல்லாம் பெருமை.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் : இந்த நூற்றாண்டின் இந்திய ராமானுஜன் பாமா சீனிவாசன்
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும் : thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
புற்றுநோய் செல்களுக்கும் மைட்டோகன்ரியாவிற்கும் உள்ள தொடர்பு வியப்பளிக்கிறது. திரு.திவாரியின் ஆராய்ச்சிகளின் விளைவாக மனித இனம் நோய்களை வென்று நலமுடன் வாழ உதவும். நன்றி.
ஐயா, தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள். உண்மையில் இந்திய அறிவியல் அறிஞர்களைப் பற்றி பொது மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் தகவல்களை அறிந்து கொள்ள தாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சி மிகவும் போற்றுதலுக்கு உரியது. Bookday.in மின் நூல் தளத்தின் இந்த ஆதரவும் சிறப்பானது. தங்களின் உழைப்பிற்கு நன்றி யைா.
Pingback: இந்திய மருத்துவ விஞ்ஞானி பிரக்யா யாதவ்
புவியில் உயிரி உருவானதே ஒரு அதிசயம் தான். நாம் நினைத்துக் கொண்டிருப்பதை விட பல சூழ்நிலைகளிலும் கண்ணுக்குத் தெரியாத அளவிலும் இருக்கும் நுண்ணுயிரி மற்றும் செல்களால் தான் தாவரங்கள் மற்றும் விலங்குகள் கட்டமைக்கப்படுகின்றன. இவருடைய ஆராய்ச்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். வேற்று கிரகத்தில் மனிதர்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க முயல்வதில்லை. அதற்கு பதிலாக கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளின் வித்துக்கள் எங்கேயாவது விடப்பட்டுள்ளனவா என்பதைத்தான் கண்டறிய முயற்சிக்கின்றனர். அப்படியே அவை கிடைக்கும் பொழுது வளர்வதற்கு சாதகமான சூழ்நிலை வந்தால் அவை அங்கே பெருகும். அது சில நாட்களாகவோ சில கோடி ஆண்டுகளாகவோ இருக்கலாம். இல்லையற்ற பிரபஞ்சத்தில் சிறிய உயிர்கள் தான் அனைத்திற்கும் ஆதாரம்
தாவரங்கள், கால் நடைகளைப்பற்றி பல அரிதான தகவல்கள்! “Xylem”, “இறுதி ஊர்வல அமைப்புகள்” போன்ற செல்களின் உயிர் தியாகம்தான் வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. அவற்றை நீடூழி வாழ்க என்று வாழ்த்துவதில் அர்த்தமில்லை ஏனென்றால் அவைதான் இறந்துபட்டவையே! இறந்தும் கொடை வள்ளல்களாகத் திகழ்கின்றன !