உலக மீன்வள தினம் (நவம்பர் 21) சிறப்பு கட்டுரை
மீன்வளப் பொருளியலை ஊக்குவிப்போம்!
இல.சுருளிவேல்
மீன்வளப் பொருளியல் என்பது மீன்வளத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான உற்பத்தி நடவடிக்கைகளையும், அவற்றின் பகிர்வையும், அவற்றின் நுகர்வையும் பற்றி படிப்பதாகும். இதில் உள்நாட்டு மீன் வளம், கடல் சார் மீன்வளம், மீனவர்களின் பொருளாதாரம் நடவடிக்கைகள், நிதி சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும். நிலம் (Land), உழைப்பு (Labour), மூலதனம் (Capital), தொழில் முனைவு (Entrepreneur) ஆகிய நான்கு காரணிகளை வைத்து மீன் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இயற்கை தந்த நன்கொடைகளான கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற இயற்கை தந்த நன்கொடைகள் எல்லாம் நிலத்திற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
மீன் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள், மீன் விவசாயிகள் ஆகியோர் ஊதியம் கருதி உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதால் தொழிலாளர் என்று எடுத்துக் கொள்ளலாம். மீன் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் கருவிகளை மூலதனம் என்று எடுத்துக் கொள்ளலாம். உற்பத்தி செய்யப்பட்ட மீன்கள் நுகர்வோருக்கு சென்றடைவதற்கு காரணமாக இருப்போரை தொழில் முனைவோராக கருதலாம். இந்தியாவைப் பொறுத்தவரை மீன்வளம் என்பது கதிரெழுச்சித் துறையாக (Sunrise sector) கருதப்படுகிறது. மற்ற துறைகளை விட முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்தியாவில் நிலவளம், நீர்வளம், மனிதவளம் உபரியாக இருப்பது மீன்வளபொருளியலுக்கு மிகப்பெரிய உந்துதலாகும். அதனை முழுமையாக பயன்படுத்துவது நமது கடமையாகும். மீனவ வளத்தின் முக்கியத்துவம் கருதியே 1997 ஆண்டு முதல் மீன்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான(2024) கருப்பொருள்: “India’s Blue Transformation: Strengthening Small Scale and Sustainable Fisheries” அதாவது “இந்தியாவின் நீல மாற்றம்: சிறிய அளவிலான மற்றும் நிலையான மீன்வளத்தை வலுவாக்குதல்” என்பதாகும்.
மீனவத்தின் தற்போதைய நிலை
இந்தியா உலகின் மீன்வளத்தில் மூன்றாம் இடத்தையும், நீர்வாழ் உயிரின வளர்ப்பில் இரண்டாம் இடத்திலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 விழுக்காடு, வேளாண்மையில் 6.7 விழுக்காடும், 2022-23 இல் மீன் ஏற்றுமதி மதிப்பில் ₹ 63,969.14 கோடி ஏற்றுமதி செய்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மீன்வளத்தின் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு பெற்று, நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்று, வருமானத்திற்கும், மனித வாழ்விற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி தனி மனிதனின் முன்னேற்றத்தை பொருத்தே அமைகிறது. நமது அறிவியல் கண்டுபிடிப்பு அவற்றின் பயன்பாடு அனைத்தும் மானுட வளர்ச்சிக்கு உதவ வேண்டும். உலக புகழ் பெற்ற அறிவியல் விஞ்ஞாணி ஐன்ஸ்டீன் சொன்னது போல “கல்வி என்பது ஒரு தனிப்பாடம் அல்ல, அது ஒரு சமூகம் தொடர்பானது. ஒருவனுக்கு கல்வி புகட்டும் போது ஒரு சமூகம் பற்றிய பார்வையை உருவாக்காமல் வெறும் துறை சார்ந்த அறிவை மட்டும் புகட்டினால் அது ஒரு தொழிலுக்காக பயிற்சி கொடுக்கப்பட்ட நாய் போன்றது” என்கிறார். அந்த வகையில் நமது கல்விமுறை வெறும் வருமானத்தை மையமாக மட்டுமில்லாமல் சமூக முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும்.
மீனவர்கள்:
இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் என பல்வேறு சமூக குழுக்கள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டாலும், மீன்பிடித் தொழிலை மட்டும் முழு நேரத் தொழிலாக நம்பி வாழும் சமூகங்கள் சில மட்டுமே. மற்றவர்கள் பகுதி நேரமாகவும், வாழ்க்கைத் தேவைக்கு ஏற்பமீன்பிடித் தொழிலை செய்கின்றனர். பொதுவாக மீனவர்களை உள்நாட்டு (Inland) மீனவர்கள், கடற்சார் (Marine) மீனவர்கள் என்றும் பிரிக்கலாம். 2022-23 புள்ளிவிபரப்படி மொத்த மக்கள்தொகையில் 2.1 % மீனவ மக்கள் ஆவர்.
அதில் 82 விழுக்காடு உள்நாட்டு மீனவர்கள். 18 விழுக்காடு கடல்சார் மீனவர்கள். அதில் 56 விழுக்காடு ஆண்களும், 44 விழுக்காடு பெண்கள் உள்ளனர்.
இந்தியாவில் மீனவர்களை ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். உள்நாட்டு மீன்பிடித் தொழிலில் சில சமூகங்கள் ஈடுபடுகின்றனர். அவர்கள் தங்களின் வருவாய், உணவுத் தேவைக்காகவும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர். பெரிய அணை, ஆறு, குளங்கள் தவிர உள் நாட்டு மீனவர்கள் மீன் பிடித்தொழிலை முழுநேர தொழிலாக நம்பி வாழ்வது குறைவு. மற்ற தொழிலையும் அதிகம் சார்ந்து வாழ்கின்றனர். கடற்கரைப்பகுதியைப் பொருத்தவரை மீன்பிடித் தொழிலை முதன்மைத் தொழிலாக முழு நேரமாக நம்பி வாழும் மீனவ சமூகங்களை பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை பட்டினவர், செம்படவர், பர்வத ராஜகுலம், முக்குவர், பரவர் மற்றும் வளையர்; கேரளாவில் முக்குவர், அஞ்சுட்டி, தீவாரா, மற்றும் பய்ஸ்லான்; ஆந்திராவில் வடபலிஜர், ஜலரி; பட்டப்பு மற்றும் பல்லியர் ; ஒரிசாவில் ஜலரி, வடபலிஜர், காய்பர்டாஸ், கான்தாயர் மற்றும் ராஜ்பான்ஸ்; மேற்கு வங்கத்தில் காய்கர்டர் குஜராத்தில் கர்வர், கோலி மற்றும் மச்சியரர் மகாராஸ்டிரா மாநிலத்தில் கோலி; கர்நாடாகாவில் மகாவீரர் ஆகியோர் பாரம்பரிய மீனவ சமூகமாக உள்ளனர். இவர்களை தவிர கடற்கரை பகுதி கிராமங்களில், நன்னீர் பகுதிகளில், சிலர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மக்களும், மீன் பிடித்தொழிலிலை சூழ்நிலைக்கு ஏற்ப முழுநேரமாகவும், பகுதி நேரமாகவும் செய்து வாழ்கின்றனர்.
தமிழ்நாடு மீன்வளம்:
இந்தியாவில் மிக நீண்ட கடற்கரைப் பகுதியை கொண்ட மாநிலத்தில் இரண்டாம் இடத்தையும் (1076 கி.மீ), 14 கடற்கரை மாவட்டங்கள் (சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி), 301 மீன்பிடி இறங்குதலங்கள், 608 மீனவ கிராமங்கள், 1,283,751(1.6%) மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டு பொருளாதாரத்தில் மீன் வளத்தின் பங்கு முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இம்மாநிலம் மீன் ஏற்றுமதியில் முக்கிய இடம் வகிக்கிறது. இறால் ஏற்றுமதியினால் அந்நிய செலாவணி கையிருப்பு பெருகியுள்ளது.
மீன் வளத்திற்கான திட்டங்கள்:
மீன் வளத்தின் முக்கியத்துவம் கருதி மீன் வளத்திற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக மீன்வள மேம்பாட்டு திட்டங்கள், மீனவர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மீனவர்கள் நலன் கருதி மத்திய மாநில அரசுகள் மீன்வளத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும் மீன் உற்பத்தியில் ஏற்பட்ட முன்னேற்றம் மீனவ மக்களின் வாழ்க்கை தரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தற்போதைய பொருளாதார நிலைக்கு ஏற்ப வருவாய் உயர்ந்திருக்கலாம் ஆனால் அவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கை தரம் உயரவில்லை. அடிப்படை கட்டமைப்பு முக்கியமாக குடிநீர், சாலை வசதி, கல்வி நிலை, சுகாதார வசதி மற்ற சமூகங்களோடு ஒப்பிடும்போது இன்னும் முன்னேற வேண்டியுள்ளது.
விவசாயத் தொழிலுடன் ஒப்பிடும் போது மீன்பிடித் தொழிலில் இடர்பாடுகள் அதிகம். இயற்கை பேரிடர் காலங்களில் மீனவர்களின் நிலை பரிதாபமானதாகும். மீன்பிடி தடை, மீன் பிடி குறைவு காலங்களில் கிடைக்கும் நிதி உதவி மீனவர்களுக்கு உதவியாக இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் அது போதுமானதாக இருக்கும் என்று கூற முடியாது. அரசின் திட்டங்கள் பல இருந்தாலும் மீனவ மக்கள் ஏன் இன்னும் சமூக, பொருளாதார நிலையில் அதிகம் பேர் பின்தங்கிய நிலையில் வசிக்கின்றனர் என்ற கேள்வி எழுகிறது. மத்திய கடற்சார் மீன்வள ஆய்வு நிறுவனம் (CMFRI) வெளியிட்ட 2010 அறிக்கையின் படி மொத்த கடற்கரைப்பகுதி மீனவர்களில் 1,27,425 (66 %) குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பதாக தகவல் கூறுகிறது. இது இந்தியாவின் சராசரி வறுமைக்கோட்டின் அளவைவிட மூன்று மடங்கு அதிகமாகும். மீனவர்களின் கல்வி மற்றும் வீட்டுவசதி மற்ற சமூகத்தினரை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. போதுமான வருவாய் இருந்தும், அரசின் நலத்திட்டங்கள் இருந்தும் ஏன் இன்னும் கல்வியில் பின்தங்கியே காணப்படுகின்றனர் என்ற கேள்வி எழுகிறது.
இந்நிலையில் ரவுண்டிரி (1901) அவருடைய வறுமை நிலைப் பற்றிய கோட்பாடு நினைவுக்கு வருகிறது. அவர் குறிப்பிடுவது முதல் நிலை வறுமை, இரண்டாம் நிலை வறுமை. முதல் நிலை வறுமை என்பது அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையை முதல்நிலை வறுமை எனவும், இரண்டாம் நிலை வறுமை, குடும்பங்களின் சம்பாத்தியம் வாழ்க்கை நடத்த போதுமானதாக இருந்தும், உபயோகமற்ற செலவுகளுக்காக ஈர்க்கப்பட்டும், குறிப்பாக மது அருந்துதல், சூதாட்டம், சமூக விழாக்களுக்கு அதிக செலவுகள் செய்தல், திறமையற்ற குடும்ப நிர்வாகம் போன்ற காரணங்களாலும், அவசியம் இல்லாத காரியங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தருவதால் வறுமை நீடிக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
இது மீனவர்களுக்கும் பொருந்தும். மீனவர்களின் குடும்ப அளவு சராசரியாக 4 நபர்களுக்கு மேல் உள்ளனர். இதில் கல்வி கற்றோரின் எண்ணிக்கை 63 விழுக்காடு மட்டுமே இது மாநில அளவில் கல்வி கற்றோரரை விட குறைவே. இதனால் கல்வி, வாழ்க்கைத் தரமேம்பாடுகளுக்கு முக்கியத்துவம் தர முடியாத நிலை இயல்பாக ஏற்படுகிறது. போதுமான கல்வியறிவு இல்லாத சமூகம் எவ்வளவு தான் வருமானம் ஈட்டினாலும் அவற்றினால் பெரிய பயன் ஏற்படப்போவது இல்லை.
இது ஒருபுறம் இருக்க, இயற்கை சீற்றங்கள், நகரங்கள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கடலில் அதிகம் கலப்பதால் பல்வேறு அறிய வகை மீன் இனங்கள் அழிவதோடு மட்டுமின்றி மீன் உற்பத்தி மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் அதிகம் பாதிக்கப்படுகிறது. கடல் மீன் உற்பத்தி குறைந்து வருவதை சமீபத்திய புள்ளி விவரங்கள் உறுதிபடுத்துகின்றன. 1980-81 இல் கடல் மீன் உற்பத்தி 64 விழுக்காடும், உள்நாட்டு மீன் உற்பத்தி 36 விழுக்காடும் இருந்தது. கடந்த 2022-23 ல் கடல் மீன் உற்பத்தி 25 விழுக்காடும், உள்நாட்டு மீன் உற்பத்தி 75 விழுக்காடும் இருக்கிறது. இதன் மூலம் கடல் மீன் உற்பத்தி குறைந்து வருவதை தெரிந்து கொள்ள முடியும். இது கடல்சார் மீனவர்களுக்கும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும் சவாலாக இருக்கிறது. எனவே கடல் வளத்தை காப்பதில் எல்லோருக்கும் சமூக பொறுப்பு உண்டு.
மீனவர்களுக்கான இட ஒதுக்கீடு:
மீனவர் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மின்வளப் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள மீனவர் சமூகத்தில் முக்கியமாக பரவர், மீனவர் (பட்டினவர், பர்வத ராஜகுலம், செம்படவர்), முக்குவார்/முக்காயர் ஆகிய சமூகங்களில் இருந்து இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கு 5 ஐந்து விழுக்காடு முன்னுரிமை அடிப்படையிலும், 15 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மீன்வளக் கல்வியில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை மீனவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம். இது தவிர பல்வேறு திட்டங்கள் மற்றும் கல்வி, வேலை வாய்ப்புகளில் சேர்வதற்கு, தொழில் முனைவோர் பயிற்சிகளை, வழிகாட்டுதலை மத்திய அரசு மற்றும் மாநில அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் செயல்படுத்தி பட்டு வருகிறது. மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் ஆலோசனை பெறலாம். விழிப்புணர்வு அதிகம் பெறுவதற்கான சூழ்நிலையை மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அதிகம் ஏற்படுத்த வேண்டும்.
முடிவுரை:
இந்தியாவில் “மீன்வளம்” நாட்டின் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமன்றி, வேலைவாய்ப்பு, வருவாய், அன்னியச் செலாவணி கையிருப்பு போன்ற பொருளாதார நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி மீன்பிடித் தொழிலை முக்கியத் தொழிலாக நம்பி வாழும் மீனவர் குடும்பங்களுக்கு மீன்வளம் முக்கிய வாழ்வாதரமாக இருந்து வருகிறது. மொத்த மக்கள் தொகையில் மீனவர்கள் 2.1 விழுக்காடு இருந்தாலும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றனர். மனித வளத்தையும் நீர் வளத்தையும் முழுமையாக பயன்படுத்தும் போது மீன்வளம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதன்மை இடத்தில் வரும். மீனவர் வாழ்வாதாரம் மேம்பட கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்தலாம்.
மீன்வளம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கலாம். மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மீன் உணவு மிக அவசியமாகிக் கொண்டிருக்கிறது. அதற்கான நீண்ட கால திட்டங்களை வகுக்கலாம். நீல புரட்சி மீன் உற்பத்தியை பெருக்குவதோடு மட்டுமல்லாமல், மீன் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும். மீன் உணவின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பெருகும் போது மீன் நுகர்வு அதிகரிக்கும். எனவே மீன் உற்பத்தி, பகிர்வு, நுகர்வை பெருக்கி, உள்நாடு மற்றும் கடல்சார் பொருளாதாரத்தை ஊக்குவிப்போம் என உலக மீன்வள தினத்தில் ( நவம்பர் 21) அனைவரும் உறுதி ஏற்போம்.
நன்றியுடன்,
முனைவர் இல.சுருளிவேல்,
உதவிப் பேராசிரியர், மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை,
டாக்டர் எம். ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், பொன்னேரி-601 204,
திருவள்ளூர் மாவட்டம்
மின்னஞ்சல்: [email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.