உலக சுகாதார நிறுவனமும், அமெரிக்காவின் அரசியலும்..! – மருத்துவர். இரா. செந்தில்

 

உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியை நிறுத்திக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருக்கிறார். கொரோனா தீ நுண்மியின் (வைரஸ்) தொற்று மிகப்பெரும் பொதுசுகாதார ஆபத்தாக உருவெடுத்து வரும் இந்தக் காலக்கட்டத்தில், உலக சுகாதார நிறுவனத்துக்கு முன் எப்போதையும் விட அதிக நிதி  தேவைப்படும் நேரத்தில், அமெரிக்கா எடுத்திருக்கும் இந்த முடிவு கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை உருவான ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 1948ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் நாள் உலக சுகாதார நிறுவனம்  (World Health Organisation- WHO) உருவாக்கப்பட்டது. இந்நாள் உலக சுகாதார நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் காலரா, பிளேக், மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்கள் கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது, அகில உலக சுகாதார மாநாடுகள் நடத்தப்பட்டன. முதல் மாநாடு 23.6.1851 அன்று நடைபெற்றது. அன்று தொடங்கி 1938 ஆம் ஆண்டு வரை 14 மாநாடுகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாகத் தான் உலக சுகாதார நிறுவனம் அமைக்கப்பட்டது.

உலக மக்கள் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு, பொது சுகாதாரத்துக்கு ஏற்படும் கேடுகள் குறித்த கண்காணிப்பு, சுகாதார அவசரநிலைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது, மனித சமூகம் உடல்நலத்தோடு வாழ்வதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அளிப்பது போன்றவை அதனுடைய முதன்மைப் பணிகள் ஆகும். உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் உலக நாடுகளின் சுகாதார ஆய்வறிக்கையை வெளியிடுகிறது. இந்த அறிக்கைகள், நாடுகள் தங்கள் சுகாதாரத் திட்டங்களை வகுப்பதற்கு வழிகாட்டுன்றன. பல்வேறு நோய்களைக் கையாள்வதற்கான நெறிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் இந்நிறுவனம் தருகிறது.

பல நூற்றாண்டுகளாக பல கோடி மக்களைக் கொன்று குவித்து, பல கோடி பேரை குருடாக்கிய பெரியம்மை நோயை இப்புவியில் இருந்து அகற்றியது உலக சுகாதார நிறுவனத்தின் சாதனைகளில் ஒன்று. அதேபோல போலியோ நோய் ஏறக்குறைய முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. காசநோய், எய்ட்ஸ், எபோலா, மலேரியா போன்ற தொற்று நோய்களுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளை WHO ஒருங்கிணைக்கிறது. தொற்றா நோய்களுக்கு எதிராகவும் உலக சுகாதார நிறுவனம் செயல்படுகிறது. தொற்றா நோய்கள் என்பவை ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் ஆகும். தொற்றா நோய்களைத் தடுப்பதற்காக துரித உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள கொக்கோ கோலா, பெப்சி போன்ற பானங்கள், மது, புகையிலை ஆகியவற்றிற்கு எதிராக  தீர்மானங்கள் நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், அவற்றை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. WHO வின் இத்தகைய நடவடிக்கைகள் கொக்கோ கோலா, பெப்சி, மெக்டொனால்டு, கேஎப்சி ஆகிய அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் கோபத்தை அதற்கு சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.

WHO head: 'Our key message is: test, test, test' - BBC News

உலக சுகாதார நிறுவனத்தின் மீது மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எதிரான மனநிலையும் கூட அமெரிக்காவில் நிலவுகிறது. அமெரிக்க நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த ஜார்ஜ் வாஷிங்டன்m அமெரிக்கா எந்த ஒரு நாட்டுடனும் நிரந்தர நட்புறவு பாராட்டக் கூடாது என்று கருத்து தெரிவித்தார். இன்று வரையிலும் அமெரிக்காவுக்கு இந்த ‘பெரியண்ணன்’ மனப்பான்மை இருந்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து அமெரிக்கா விலக வேண்டும் என்ற தீர்மானம் பலமுறை அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு (UN FCCC) ஒரு சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தை உருவாக்கியது. இதே வேகத்தில் புவி வெப்பமடைதல் தொடருமானால் 2050ஆம் ஆண்டு உலகம் பேரழிவை சந்திக்கும் என்பது சூழலியல் வல்லுனர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது. இந்த நிலையைத் தடுக்க பைங்குடில் வாயுக்கள் (Greenhouse gases) உருவாவதை ஒவ்வொரு நாடும் குறைக்க வேண்டும் என்பது அவர்களின் பரிந்துரையாகும். பைங்குடில் வாயுக்களை குறைப்பதற்கான கடுமையான விதிமுறைகளை UN FCCC பரிந்துரைத்தது. விதிகளுக்குக் கட்டுப்பட மறுத்து, அந்த அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா. புகையிலைக்கு எதிரான உலக சுகாதார நிறுவனத்தின் கட்டமைப்பு மாநாடு (WHO FCTC) விதித்த கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து அந்த அமைப்பிலிருந்தும் அமெரிக்கா வெளியேறியது. ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்திலிருந்தும் (UNESCO) அமெரிக்கா விலகிவிட்டது. உலகின் பல பகுதிகளில் அமெரிக்கா எடுத்து வரும் ராணுவ நடவடிக்கைகள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பில் (UNHRC) விவாதிக்கப் படக்கூடாது என்பதற்காக, அந்த அமைப்பின் கீழ் இருக்கக் கூடாது என்று அதிலிருந்தும் அமெரிக்கா விலகிக்கொண்டது.

கொரோனா தீ நுண்மியை சீனா கையாண்ட விதம் விவாதத்துக்குரியது. ஊஹான் அரசு மருத்துவமனையில் கண் மருத்துவராகப் பணியாற்றிய லீ வென்லியாங், டிசம்பர் மாத இறுதியில், அந்த மருத்துவமனையில் சார்ஸ் போன்ற ஒரு நுரையீரல் நோயால் பலர் பாதிக்கப்பட்டதை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். இந்த தீ நுண்மித் தொற்று மிக வேகமாகப் பரவக் கூடியது என்று எச்சரித்தார். அவருடைய செய்தி வைரலானது. உடனே காவல்துறை அவர் வீட்டுக்குச் சென்று தவறான செய்திகளைப் பகிர்வதாகத் தெரிவித்து, இச்செயலை அவர் தொடர்வாரானால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. மீண்டும் பணிக்குத் திரும்பிய லீ, 8.1.2020 அன்று கோரோனோ நோய் பாதிப்புக்குள்ளானார். மருத்துவமனையில் இருந்தபடியே தன் உடல்நிலை குறித்த செய்திகளை தினமும் தெரிவித்திருந்தார். இறுதியில் அவர் அந்நோயினால் இறந்து போனார். கொரோனா நோய்ப் பரவலின்  தொடக்கக் கட்டத்தில் நோயின் வீரியத்தையும், அது இவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் சீனா சரியாகக் கணிக்கவில்லை என்பதற்கான சான்று இது.

கொரோனா தீ நுண்மி விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்றும் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது என்றும், சீனா முதலில் கூறியது. இந்தத் தாமதங்களை சீனாவின் குற்றம் என்று உறுதியாகக் கூற முடியாது. மனிதகுலம் இதுவரை பார்த்திராத ஒரு புதிய நோய் தோன்றும்போது, யாருக்கும் அது பற்றிய முழுமையான அறிவு இருப்பதற்கான வாய்ப்பு இருக்காது என்ற கோணத்திலிருந்தே இதனை அணுக வேண்டும்.

WHO, Corona and Present Crisis | Diplomatist

கொரோனா நோய், கோவிட்-19 என்ற தீ நுண்மியால் ஏற்படுகிறது என்பதும், அந்நோய் சார்ஸ் போன்ற நுரையீரலைத் தாக்கக் கூடிய நோய் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சீனா விரைந்து செயலாற்றியது. ஊஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டது. நோய்க்குறி உள்ளவர்கள் தனிமைப் படுத்தப்பட்டார்கள். நோய்ப் பரவல் முழுமையாக தடுக்கப்பட்டது. சீனாவின் இந்த நடவடிக்கைகள் வெற்றி அடைந்தது மட்டுமல்லாமல், நோய்ப் பரவலை தடுப்பதற்கு மற்ற நாடுகளுக்கு வழிகாட்டுதல்களாகவும் இருக்கிறது.

ஆனால் இந்த தீ நுண்மிப் பரவலை அமெரிக்கா கையாண்ட விதம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. மருத்துவ நிபுணர்களும், அரசு அதிகாரிகளும் தந்த எல்லா எச்சரிக்கைகளையும் டிரம்ப் புறந்தள்ளினார். மார்ச் மாதம் வரையில் எல்லாம் கட்டுக்குள் இருப்பதாக பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டே இருந்தார். அரசு நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது தன் கடமை என்று அதற்கு விளக்கமும் தந்தார். கொரோனா நோய் வராமல் தடுப்பதற்காக தான் தினமும் ஹைட்ராக்சி குளோரோகுவின் மாத்திரைகளை உட்கொள்வதாகக் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு நடுவம், தான் அத்தகைய பரிந்துரை எதையும் அளிக்கவில்லை என மறுப்பு தெரிவித்தது.

முதல் நோயாளி கண்டறியப்பட்ட சில நாள்களிலேயே சீனா விழித்துக் கொண்டு, விரைந்து செயலாற்றியது. ஆனால் அமெரிக்கா இரண்டு மாதங்கள் தாமதமாகத்தான் செயலாற்றத் தொடங்கியது. அதன் விலையை அந்த நாடு இன்று கொடுக்கிறது. 84,570 நோயாளிகள், 4,645 சாவுகள் என்ற அளவோடு சீனாவில் கொரோனா பரவல் ஏறக்குறைய ஒரு கட்டுக்குள் வந்துவிட்டது. இன்று (31.05.2020) வரை 17,16,508 நோயாளிகள், 11,577 சாவுகள் என்ற எண்ணிக்கையோடு அமெரிக்க நாட்டில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டே வருகிறது. நோயைக் கட்டுப்படுத்தத் தவறிய தன் தோல்வியை மறைப்பதற்காக டிரம்ப், பழியை சீனாவின் மேல் போட முயல்கிறார். கொரோனா தீ நுண்மியை ‘சீன வைரஸ்’ என்று அழைத்தார். இந்த நோயை சீனா கையாண்ட விதத்தைப் பாராட்டிய அதே வாயால், கோவிட்-19  சீனாவால் உருவாக்கப்பட்ட உயிர் ஆயுதம் என்று கூசாமல் கூறினார். உலக சுகாதார நிறுவனம் கோவிட்-19  ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட தீ நுண்மி அல்ல என்று சான்றுகளின் அடிப்படையில் கூறியது அவரை கோபப்படுத்தியது. தன் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகவும், அமெரிக்கக் குடி மக்களின் கோபத்தைத் திசை திருப்பவும் டிரம்ப் WHO விற்கு அளிக்கப்பட்ட நிதி உதவியை நிறுத்தியிருக்கிறார்.

Trump escalates battle with World Health Organization over ...

உலக சுகாதார நிறுவனம், மனித சமுதாயத்தின் உடல் நலனுக்காக செயல்படும் அமைப்பாகும். நோய்களுக்கு எதிராகப் போராடும் உத்திகளை திட்டமிடுவது மட்டுமல்லாமல், மனிதர்கள் உடல் நலனோடு வாழ்வதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கிவருகிறது. துரித உணவுகள், கோக், பெப்சி போன்ற பானங்கள், புகையிலை, மது ஆகிய தீமைகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டோடு நின்று போராடி வருகிறது.

உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல்கள் மட்டுமே தர முடியும். அதன் அறிவுரைகளை ஏற்காத நாடுகளை தண்டிப்பதற்கு அதற்கு அதிகாரம் கிடையாது. உறுப்பு நாடுகள் அளிக்கும் நிதி உதவிகளினால் இந் நிறுவனம் செயல்படுகிறது. அதன் முதன்மைக் கொடையாளர் அமெரிக்க நாடு. எல்லா அகில உலக அமைப்புகளும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற சுயநலத்தின் அடிப்படையில், அப்படிச் செய்ய மறுக்கும் அமைப்புகளை செயலிழக்கச் செய்ய அமெரிக்கா முயலுகிறது.

போக்குவரத்துச் சாதனங்கள் அதீத வளர்ச்சியடைந்து, மனிதர்கள் தினந்தோறும் உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பயணங்கள் செய்து வரும் இந்தக் காலத்தில் நோய்கள் மிக எளிதாக உலகம் முழுவதும் பரவிவிடும். எனவே, நோய்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் உலகளாவியதாக திட்டமிடப்பட வேண்டும். ஆகவே உலக சுகாதார நிறுவனத்தின் தேவை முன் எப்பொழுதையும் விட அதிகமாக இருக்கிறது.உலக மக்களின் நல வாழ்வுக்காக இயங்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இன்றியமையாத அமைப்புகளில் ஒன்றான உலக சுகாதார நிறுவனத்துக்கு மேலும் அதிகமான அதிகாரங்கள் தந்து,  நிதி ஆதாரங்களை உருவாக்கி வளர்த்தெடுப்பது மனிதகுலத்தின் கடமையாகும்.

Image

மருத்துவர். இரா. செந்தில்

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினர்