பிப்ரவரி 15 : உலக நீர்யானை தினம்

 பிப்ரவரி 15 : உலக நீர்யானை தினம்

 பிப்ரவரி 15 : உலக நீர்யானை தினம்


        பூமியின் நிலப்பரப்பில் வாழக்கூடிய விலங்குகளில் மூன்றாவது பெரிய விலங்கு நீர்யானை (Hippopotamus) ஆகும். அதாவது யானை மற்றும் காண்டாமிருகம் ஆகிய விலங்குகளுக்கு அடுத்த பெரிய விலங்கு இதுவாகும். இது அரை நீர்வாழ் (Semiaquatic) வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறது. இது ஒரு பாலூட்டி வகையைச் சேர்ந்தது.

 பிப்ரவரி 15 : உலக நீர்யானை தினம் (World Hippo Day) - Hippopotamus - large semiaquatic mammal https://bookday.in/


இனங்கள்


     இது ஹிப்போபொடாமிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஹிப்போபொட்டமஸ் என அழைக்கப்படுகிறது. பண்டைய கிரேக்க மொழியில் இதற்கு நதிக்குதிரை என்று பொருள். இது நதி நீர்யானை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இதற்கு ஹிப்போ என்ற பெயரும் உண்டு. இது பண்டைய காலம் முதலே அறியப்படக்கூடிய ஒரு விலங்காகும்.


     நவீன நீர்யானை சுமார் 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றியது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் குடும்பத்தில் 2 இனங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று பொதுவான நீர்யானை ஆகும். இதன் விலங்கியல் பெயர் ஹிப்போபொட்டமஸ் ஆம்பிபியஸ் (Hippopotamus amphibius) என்பதாகும். மற்றொரு இனம் பிக்மி நீர்யானை அல்லது சிறிய நீர்யானை ஆகும். இதன் விலங்கியல் பெயர் கோரோப்சிஸ் லிபெரியென்சிஸ் (Choeropsis liberiensis) என்பதாகும்.


உடல்


      நீர்யானையின் உடல் பீப்பாய் போன்ற வடிவம் கொண்டது. இது பருமனான உடல், பெரிய தலை, குறுகிய வால், தூண் போன்ற கால் மற்றும் ஒவ்வொரு காலிலும் 4 விரல்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு விரலுக்கும் ஆணி போன்ற குளம்பு உள்ளது. இதன் உடலின் பெரும் பகுதி சிறிய முடிகளைக் கொண்டுள்ளது. இதன் தோல் 6 சென்டிமீட்டர் தடிமன் கொண்டது.


      ஆண்கள் பொதுவாக 11.5 அடி நீளமும், 5 அடி உயரமும், 3,200 கிலோ எடையும் கொண்டிருக்கும். ஆண் நீர்யானை பெண்களை விட பெரியது. நீர்யானையின் வாய் அரை மீட்டர் அகலம் கொண்டது. இதற்கு கோரைப் பல் தொடர்ந்து வளரும். இது 40 முதல் 50 சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும். இது தந்தம் எனவும் அழைக்கப்படுகிறது.

 பிப்ரவரி 15 : உலக நீர்யானை தினம் (World Hippo Day) - Hippopotamus - large semiaquatic mammal https://bookday.in/


      உடல் சாம்பல் கலந்த பழுப்பு நிறமானது. கீழ்ப்பகுதி இளம் சிவப்பு நிமாக இருக்கும். இதன் கண்கள், காதுகள் மற்றும் நாசி ஆகியவை தலையின் மேல் உயரமாக அமைந்துள்ளன. இதன் உடலின் மற்ற பகுதிகள் நீரில் மூழ்கும் போது இந்த உறுப்புகள் நீர்ப்பரப்புக்கு மேலே இருக்க இது அனுமதிக்கின்றது. இதனால் நீந்த முடியாது. ஆனால் நீரின் அடியில் நடக்க முடியும்.

      இது நீருக்கு அடியில் முழுமையாக மூழ்கி 6 நிமிடங்களுக்கு தங்கள் மூச்சை பிடித்துக் கொள்ள முடியும். இதற்கு வியர்க்காது. இதன் தோல் எப்போதும் ஈரமாக இருக்க வேண்டும். ஆகவே ஆறுகள், ஏரிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் சேறு நிறைந்த பகுதியில் பொழுதைக் கழிக்கின்றன. சூரிய ஒளியின் போது இவை வெளியே வந்தால் இதன் தோல் உடைந்து விடும்.


      இதன் உடலில் எண்ணற்ற சுரப்பிகள் உள்ளன. அவை எண்ணெய் கலந்த சிவப்பு திரவத்தைச் சுரக்கின்றன. இது இரத்தத்தை வியர்வையாக வெளியிடுகிறது என பண்டைய காலத்தில் நம்பினர். இது ஒரு தவறான நம்பிக்கையாகும். இது சூரிய வெப்ப தடுப்பாகச் செயல்படுகிறது. மேலும் புற ஊதாக்கதிர் வீச்சை வடிகட்டுகிறது.


     இது மாலை நேரத்தில் உணவு தேடும். ஒரே சமயத்தில் 35 கிலோ வரை சாப்பிடும். இது ஒரு சமூகப் பிராணி. ஒரு மந்தையில் 10 முதல் 100 நபர்கள் வரை இருப்பர். இது வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை குட்டி போடும். இது மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். இது வாசனையால் மனிதனை அடையாளம் கண்டுபிடித்துவிடும்.


     நீர்யானைகள் எல்லைகளை வகுத்துக் கொள்கின்றன. இனப்பெருக்க காலத்தில் காளைகள் சண்டை இடுகின்றன. போரின் போது ஏற்படும் பலத்த காயம் உயிருக்கு ஆபத்தனவை. நீர்யானைகளின் கடிதிறன் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஒரு சதுர அங்குலத்திற்கு 1000 பவுண்டுகள் கடிக்கும் சிங்கத்துடன் ஒப்பிடுகையில், இதன் கடியின் அளவு ஒரு சதுர அங்குலத்திற்கு 2000 பவுண்டுகள் ஆகும். உப்பு நீர் முதலைகளுக்குப் பிறகு, உலகின் இரண்டாவது வலுவான கடிக்கும் விலங்காக இவை உள்ளன. இதன் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 50 ஆண்டுகள் ஆகும்.


குள்ள நீர்யானை


       குள்ள நீர்யானை 1849 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பல்லுயிர் அறிஞர்கள் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே குள்ள நீர்யானை வாழ்ந்ததற்கான ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது மேற்கு ஆப்பிரிக்காவின் காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களைப் பூர்வீகமாகக் கொண்டது. 19 ஆம் நூற்றாண்டு வரை மேற்கு ஆப்பிரிக்காவிற்கு வெளியே இது இருப்பது தெரியாது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல உயிரியல் பூங்காக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

 பிப்ரவரி 15 : உலக நீர்யானை தினம் (World Hippo Day) - Hippopotamus - large semiaquatic mammal https://bookday.in/

      இது 3 அடி உயரமும், 6 அடி நீளமும், 180 முதல் 275 கிலோ எடையும் கொண்டது. இதன் கால்கள் மற்றும் கழுத்து நீளமாகவும், அதன் தலை சிறிதாக இருக்கும். இதன் தோல் பச்சை – கருப்பு அல்லது பழுப்பு நிறமானது. உடலின் கீழ்ப்பகுதி வெளிறிய மஞ்சள் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். தோல் பல சென்டிமீட்டர் தடிமன் உடையது. இதன் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க தண்ணீரை நம்பி உள்ளது.


      இது இரவு நேரங்களில் உணவைத் தேடும். பெண் நீர்யானை வருடத்திற்கு ஒரு குட்டி மட்டும் ஈனும். இதன் சராசரி ஆயுட்காலம் 30 ஆண்டுகள் ஆகும். ஒரு சில நேரங்களில் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். அவற்றின் இறைச்சி காட்டுப் பன்றியின் இறைச்சியைப் போன்று சிறந்த தரம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. பொதுவான நீர்யானையின் பற்களுக்கு இருக்கும் விலை மதிப்பு, இதன் பற்களுக்கு கிடையாது.


அமெரிக்கா


    அமெரிக்காவில் நீர்யானைகளை அறிமுகப்படுத்தும் முயற்சி 20 ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்டது. லூசியானாவில் நீர்யானை வளர்ப்பை அறிமுகப்படுத்த 1910 ஆம் ஆண்டு அமெரிக்கன் நீர்யானை மசோதா (American Hippo Bill) கொண்டு வரப்பட்டது. நீர்யானை வளர்ப்பதன் மூலம் அமெரிக்காவின் இறைச்சி நெருக்கடியைத் தீர்க்க இது உதவும் எனக் கருதினர். ஆனால் இந்த மசோதா நிறைவேறவில்லை.


     பிரபல போதைப் பொருள் கடத்தல் தலைவர் பாப்லோ எஸ்கோபார் (Pablo Escobar) என்பவர் 1980 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக 4 நீர்யானைகளை இறக்குமதி செய்தார். அவர் கொலம்பியாவில் உள்ள தனது தோட்டத்திற்கு அதைக் கொண்டு சென்று வளர்த்தார். இந்த நீர்யானை ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டது. இதன் எண்ணிக்கை தற்போது 100 வரை உயர்ந்துள்ளது.


ஆபத்து


       நீர்யானைகள் அவற்றின் தோல், இறைச்சி மற்றும் தந்த பற்களுக்காகவும் நீண்டகாலமாக வேட்டையாடப்படுகின்றன. சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் மற்றும் கலைப் பொருட்கள் தயாரிப்புகளுக்கான தேவை ஆகியவற்றால் உந்தப்பட்டு வேட்டையாடுதல் தீவிரமடைந்துள்ளன.
ஆண்டுதோறும் நீர்யானையின் பற்கள் 530 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


     இது சில சமயம் விவசாய பயிர்களைச் சேதம் செய்வதால் வெறுப்படைந்தனர். ஆகவே மனிதர்கள்  இதனை வேட்டையாடினர். ஆனால் உண்மையில் அவற்றின் இறைச்சி, தோல், தந்தங்களிலிருந்து கிடைக்கும் லாபம் ஆகிய காரணங்களுக்காகவே கொல்கின்றனர். இதன் விளைவால் மூன்று ஆப்பிரிக்க நாடுகளில் பிராந்திய ரீதியாக நீர்யானைகள் அழிந்துவிட்டன.


      காடழிப்பு, நன்னீர் மாசுபடுதல், இயந்திர மயமாக்கப்பட்ட விவசாயம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் இதன் வீழ்ச்சிக்குக் காரணமாகும். கடந்த 10 ஆண்டுகளில் இதன் மக்கள் தொகை 7 முதல் 20 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது சுமார் 1,15,000 முதல் 1,30,000 வரை மட்டுமே பொதுவான நீர்யானை காடுகளில் உள்ளது. துரதிஷ்டவசமாக இதன் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.


     சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) 2006 ஆம் ஆண்டில் இது பாதிக்கப்படக்கூடிய இனமாக அறிவித்தது. இதேபோல் குள்ள நீர்யானையும் அழிந்து வரும் இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது நைஜீரியாவில் முற்றிலும் அழிந்துவிட்டது. குள்ள நீர்யானை தற்போது 2500 மட்டுமே காடுகளில் உள்ளது.

 பிப்ரவரி 15 : உலக நீர்யானை தினம் (World Hippo Day) - Hippopotamus - large semiaquatic mammal https://bookday.in/


உலக நீர்யானை தினம்


    பூமியின் பெரிய பாலூட்டிகளில் ஒன்றான நீர்யானை ஆபத்தான நிலையில் உள்ளது. நீர்யானைகளின் அவலநிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கும் உலக நீர்யானை தினம் (World Hippo Day) கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15 அன்று கொண்டாடப்படுகிறது.


     இந்த தனித்துவமான விலங்கு பற்றிய அற்புதமான உண்மைகளைப் பகிர்ந்து கொள்ள இது ஒரு சிறந்த நாள் ஆகும். சர்வதேச யானை தந்த தடைச் சட்டம் 1989 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த பிறகு, நீர்யானைகள் மீது வேட்டையாடும் அழுத்தம் அதிகரித்தது. 2009 முதல் 2018 வரை 77,579 நீர்யானையின் உதிரி பாகங்கள் மற்றும் தயாரிப்புகள் சட்டப்பூர்வமாக வர்த்தகம் செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


     நீர்யானையின் உடல் பாகங்கள் மற்றும் பற்களின் வர்த்தகத்திற்கு சர்வதேச அளவில் தடை விதிக்க வேண்டும். நீர்யானையின் இறைச்சி, தோல் பொருட்கள் மற்றும் தந்தம் போன்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் நீர்யானையைப் பாதுகாக்கலாம்.


     நீர்யானைகள் நமது சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நீர் நிலைகளை ஒட்டி வளரும் தாவரங்களை மேய்கின்றன. இதன் மூலம் தாவர வளர்ச்சியைத் தடுக்கின்றன. அவற்றின் சாணம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அவை தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கவும், மண் வளத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. எனவே நீர்யானைகள் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமிக்கின்றன.

கட்டுரையாளர் :
 பிப்ரவரி 15 : உலக நீர்யானை தினம் (World Hippo Day) - Hippopotamus - large semiaquatic mammal https://bookday.in/

ஏற்காடு இளங்கோ

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *