உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் 2026 அமெரிக்கா தேர்தல்
அமெரிக்கா அரசை வழி நடத்துபவை, 435 உறுப்பினர்கள் கொண்ட கீழவை மற்றும் 100 உறுப்பினர்கள் கொண்ட மேலவை. கீழவை இயற்றிய சட்டங்களை மேலவை அங்கீகரிக்க வேண்டும். கீழவையின் பதவிக்காலம் இரண்டு வருடம். மேலவைக்கு ஆறு வருடம். இதில் மூன்றில் ஒரு பங்கு இடத்திற்கு, சுழற்சி முறையில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இந்த வருடம், நவம்பர் 3, செவ்வாய்கிழமை, 435 கீழவை இடங்களுக்கும், 35 மேலவை இடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். தற்போது கீழவையில் அதிபரின் குடியரசுக் கட்சிக்கு 220 உறுப்பினர்களும், ஜனநாயக கட்சிக்கு 215 உறுப்பினர்களும் உள்ளனர். மேலவையில் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்கள், ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள். இந்த தேர்தலில், ஏதேனும் ஒரு அவையில் ஆளும் குடியரசுக் கட்சியின் பெரும்பான்மை குறைந்தாலும், சட்டங்களை இயற்றுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் சிக்கல் ஏற்படும்.
நம்முடைய நாட்டைப் போல் இல்லாமல், அமெரிக்காவில், கடந்த 180 வருடங்களாக நவம்பர் மாதம், செவ்வாய்கிழமை தேர்தல் நடத்தபடுகிறது. தேர்தல் தேதிக்கான சட்டம் இயற்றியவர்கள், நவம்பர் மாத முதல் செவ்வாய் கிழமை என்று குறிப்பிடாமல், நவம்பர் முதல் திங்கட்கிழமைக்குப் பிறகு வரும் முதல் செவ்வாய்கிழமை என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே, நவம்பர் 1ஆம் தேதி செவ்வாய்கிழமையாக இருந்தால், அந்த நாள் தவிர்க்கப்பட்டு, தேர்தல் அடுத்த செவ்வாய் கிழமை அன்று நவம்பர் 8 நடைபெறும்.
1845க்கு முன்னால், அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களும், டிசம்பர் மாதம் முதல் புதன் கிழமைக்கு முன்னால், 34 நாட்களுக்குள் அவர்களுக்கு சௌகரியமான நாளில் தேர்தல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதலில் தேர்தல் நடத்திய மாநிலங்களின், தேர்தல் முடிவுகள் மற்ற மாநில வாக்காளர்களின் மனதை மாற்றுவதாகவும் அதனால் தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையை மாற்ற அமெரிக்காவில் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்துவது என்று முடிவானது. இதற்கான சட்டம், ஜனவரி 23, 1845ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸில் இயற்றப்பட்டது.
ஏன் தேர்தலுக்கு நவம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டது? பண்டைய அமெரிக்கப் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயத்தை மையமாகக் கொண்டிருந்தது. ஆகவே, வசந்த காலம் மற்றும் கோடை காலத்தின் முற்பகுதியில் தேர்தல் நடத்துவது. பயிரிடும் காலத்தில் இருப்பதால், விவசாயிகளுக்கு இடையூறாக இருக்கும் என்று கருதப்பட்டது. அதைப் போலவே, கோடையின் பிற்பகுதி மற்றும் இலையுதிர் காலத்தின் முற்பகுதியில் தேர்தல் நடத்துவது, அறுவடையை பாதிக்கும் என்ற கருத்து நிலவியது. ஆகவே, இலையுதிரின் பிற்பகுதி, மற்றும் கடுமையான குளிர் காலம் வருவதற்கு முன்னால் தேர்தல் நடத்துவது சிறப்பானதாக இருக்கும் என்ற காரணத்தால் நவம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டது.
செவ்வாய்கிழமை தேர்வு செய்ய என்ன காரணம்? ஞாயிற்றுக் கிழமை பெரும்பாலான மக்கள் தேவாலயம் செல்வார்கள். ஆகவே, அந்த நாள் தவிர்க்கப்பட்டது. விவசாயத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கிராமப் புறத்தில் வசித்து வந்தார்கள். தேர்தலில் வாக்களிக்க அவர்கள் அருகிலிருக்கும் நகரத்திற்குச் செல்ல வேண்டும். அந்தப் பயணத்திற்கு ஒரு நாள் தேவைப்படும். புதன் கிழமை விவசாயிகளின் சந்தை தினம். ஆகவே, அன்று பயணம் செய்ய முடியாது. எனவே, வியாழக்கிழமை தேர்தல் நடத்த முடியாது. அதனால், ஞாயிற்றுக் கிழமை தேவாலயம் சென்று வழிபட்டு, திங்களன்று பயணம் செய்து, செவ்வாய்கிழமை அன்று தேர்தல் சாவடிக்குச் செல்வது மக்களுக்கு சௌகரியமாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. தேர்தலில் வாக்களித்து. புதன் கிழமை, விவசாயிகள் சந்தை தினத்திற்கு சொந்த ஊருக்குத் திரும்பி விடலாம்.
ஒரு முடிவை எடுக்கும் முன்னால், பல விஷயங்களையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்பதற்கு இந்த சட்டம் ஒரு முன்னுதாரணம். இந்த காரணத்தால், நூற்றாண்டைத் தாண்டியும், எந்த மாற்றமும் செய்யப்படாமல், அனைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக நவம்பர் செவ்வாய் கிழமை தேர்தல் நடந்து வருகிறது.
அமெரிக்காவில் கட்சிகளின் சின்னங்கள் விலங்குகள். ஜனநாயகக் கட்சியின் சின்னம் கழுதை, குடியரசுக் கட்சியின் சின்னம் யானை. இந்த சின்னங்கள் இன்று, நேற்றல்ல, கடந்த நூறு ஆண்டுகளாக மாறுபடாமல் இருந்து வருகிறது.
1829 முதல் 1837 வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஜாக்சன். அவரை எதிர்த்தவர்கள் அவரை “ஆண் கழுதை” என்று குறிப்பிட்டார்கள். சளைக்காத ஜாக்சன், கழுதையின் உருவத்தை, தன்னுடைய தேர்தல் சுவரொட்டியில் பதித்து, பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். எனவே, ஜனநாயகக் கட்சியுடன் கழுதை சின்னம் ஐக்கியமாகியது. அவருக்குப் பிறகு, 1870 தேர்தல் வரை தேர்தலில் கழுதை சின்னத்திற்கு இடமிருக்கவில்லை.
அமெரிக்காவின் உள் நாட்டுப் போர் 1861 முதல் 1865 வரை நடந்தது. இந்த உள்நாட்டுக் கலகத்தை மாநிலங்களிடையேயான போர் என்றும் சொல்வார்கள். இந்தப் போர் அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லும் வட மாநிலங்களுக்கும், அடிமைகள் வேண்டும் என்று சொல்லும் தென் மாநிலங்களுக்கும் இடையே நடந்தது. வட மாநில வீரர்கள் “சண்டையில் பங்கேற்றேன்” என்பதற்கு சங்கேதமாக “யானையைக் கண்டேன்” என்று சொல்வார்கள். இந்தப் போரில் வட மாநிலப் படைகளுக்குத் தலைமை தாங்கியவர் ஆபிரகாம் லிங்கன். ஒன்றிணைந்த அமெரிக்கா வேண்டும் என்று போராடிய லிங்கன், 1864 குடியரசுத் தலைவர் தேர்தல் சுவரொட்டிகளில் யானை உருவத்தை உபயோகித்தார். அதனால், லிங்கன் சேர்ந்த குடியரசுக் கட்சியின் சின்னம் யானை என்ற எண்ணம் உருப்பெற்றது.
1870 ஆம் வருடம் “அமெரிக்காவின் கார்ட்டூன் தந்தை” என்று வர்ணிக்கப்படும் நாஷ், “ஹார்பர்ஸ் வீக்லி” எனும் பத்திரிகையில் ஜனநாயக கட்சிக்கு கழுதைப் படத்தையும், குடியரசுக் கட்சிக்கு யானைப் படத்தையும் வரைந்து கார்ட்டூன் அமைக்க இந்த சின்னங்கள் பிரபலமாயின. அவருக்குப் பிறகு வந்தவர்கள் இரண்டு கட்சிகளையும் குறிக்க கழுதை மற்றும் யானை படத்தை தொடர்ந்து உபயோகிக்க இவை நிரந்தர சின்னங்களாக மாறி விட்டன.
📚எழுதியவர்:
சென்னை.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமையான தகவல்.நவம்பர் முதல் செவ்வாய்க்கிழமை தேர்தல் தொடர்ச்சியாக நடத்தப்படுவது நல்ல ஒரு முன்னுதாரணம்.மேலும் கழுதை யானை சின்னம் பற்றிய தகவல்கள் அருமை.நன்றி நன்றி நன்றி