ஜெல்லிமீன் ஒரு கடல்வாழ் உயிரினமாகும். இது உலகின் அனைத்துக் கடல் பகுதிகளிலும் வாழ்கிறது. இது ஆழம் குறைவான கடற்பரப்பின் மேல் பகுதியில் மிதந்து கொண்டிருக்கும். அதே சமயத்தில் கடலில் மிக ஆழமான பகுதிகளிலும் ஜெல்லிமீன் காணப்படுகிறது. ஜெல்லி மீன் (Jellyfish) என்ற பெயர் 1796 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது.
சொறி மீன்
ஜெல்லி மீன் ஒரு மீன் இனம் கிடையாது. சுமார் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக கடலில் வாழ்கிறது. இது டைனோசர்களை விட பழமையானது. இது கடல் உயிரினங்களிலேயே மிகவும் அழகானது. இது கடற்கரையில் ஒதுங்கிக் கிடக்கும் போது மிக அழகாக இருக்கும். ஆனால் கடலுக்குள் நீந்திக் கொண்டிருக்கும் சமயத்தில் தீங்கு விளைவிக்கும்.
உலக அளவில் சுமார் 2000 ஜெல்லிமீன் இனங்கள் உள்ளன. இவை ஜெல்லிகள் அல்லது கடல் ஜெல்லிகள் என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகின்றன. இவை மனித உடலில் சிரங்கு, சொறி மற்றும் அழற்சியை உண்டாக்குகின்றன. ஆகவேதான் இதை சொறிமீன் என அழைக்கின்றனர்.
உடல் அமைப்பு
ஜெல்லி மீன் முதுகெலும்பு இல்லாத உயிரினமாகும். இது குழியுடலி வகையைச் சேர்ந்தது ஆகும். ஜெல்லிமீன்களுக்கு தலை, கண்கள், காதுகள், மூக்கு, நுரையீரல், இதயம், சிறுகுடல், பெருங்குடல், கணையம், கல்லீரல் என பல முக்கியமான உறுப்புகள் கிடையாது. மத்திய நரம்பு மண்டலத்தை மட்டுமே கொண்டுள்ளது.
இதன் உடல் 95 சதவீத நீரால் ஆனது. இதன் உடலுக்குள் பசை போன்ற ஒரு பொருள் உள்ளது. இதன் காரணமாகவே இந்த உயிரினம் ஜெல்லி மீன் என்ற பெயரைப் பெற்றது. இது குடை அல்லது வட்டு போன்ற வடிவில் காணப்படும். குடை போன்ற அமைப்புடைய ஜெல்லிமீன்களின் நடுவில் நீளமான தண்டு போன்ற அமைப்பு காணப்படும்.
தண்டின் ஒரு முனைப்பகுதியில் வாயும், மற்றொரு முனைப் பகுதியில் கழிவை நீக்கும் உறுப்பும் உள்ளது. இதன் வாய் சதுர வடிவமானது. வாயின் ஒவ்வொரு முனையில் இருந்தும் ஒரு கை என 4 முதல் 8 கைகள் இருக்கும். இவற்றை வாய்க் கரங்கள் அல்லது வாய் நீட்சிகள் என்கின்றனர். இவை உணவை வாயினருகில் கொண்டு வருவதற்கு உணர்நீட்சிகளுடன் (Tentacles) இணைந்து உதவுகின்றன.
பெரும்பாலான ஜெல்லி மீன் இனங்களின் உடல் அளவு 2 முதல் 40 சென்டிமீட்டர் விட்டம் வரை இருக்கும். சில இனங்கள் இதைவிட சற்று பெரியது. இந்த ஜெல்லி மீன்கள் கரையோரத்தில் அடிக்கடி அலைந்து திரிந்து கொண்டிருப்பதைக் காணலாம். மேலும் 2 மீட்டர் விட்டம் கொண்ட பெரிய ராட்சத ஜெல்லிமீன்களும் பெருங்கடலில் உள்ளன.
ஜெல்லிமீன் பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் காணப்படுகிறது. இதன் உடல் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது. இது சிவப்பு ஊதா, மஞ்சள் மற்றும் காவி போன்ற நிறங்களிலும் உள்ளது. ஏறக்குறைய 50 சதவீத ஜெல்லி மீன் இனங்கள் பயோ லூமினெசன்ட் எனப்படும் ஒளி உமிழும் தன்மைக் கொண்டது. அதாவது ஒளியை உருவாக்க முடியும்.
இவை இருட்டில் துடிப்பான, வண்ணமயமான ஒளியை வெளியிடுகின்றன. வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்கவும், இரையை ஈர்க்கவும் இந்த ஒளியைப் பயன்படுத்துகின்றன. இவை தண்ணீரில் மிதக்கும் சிறிய உயிரினங்களான பிளாங்க்டனை உண்ணுகின்றன. மேலும் மீன், இறால், நண்டுகள் மற்றும் சிறிய தாவரங்கள் ஆகியவை ஜெல்லிமீன்களின் முக்கிய உணவாகும்.
மீன்கள், ஆமைகள், கடல் பறவைகள் போன்ற பல கடல் விலங்குகள் ஜெல்லிமீன்களை வேட்டையாடுகின்றன. ஆகவே இவை உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுமார் 70 ஜெல்லிமீன் இனங்கள் விஷத்தன்மை கொண்டவை. ஆஸ்திரேலிய நாடுகளில் காணப்படும் பெட்டி ஜெல்லிமீன்கள் ராஜநாகத்தின் விஷத்தை விட கொடிய நஞ்சு கொண்டவையாக உள்ளன.
ஜெல்லிமீன்களின் உடலில் உள்ள மிகச் சிறிய துளைகள் வழியாக தண்ணீரிலுள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சி, அதே துளைகள் வழியாக கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. ஜெல்லிமீன்களின் ஆயுட்காலம் என்பது சில நாட்கள் முதல் 6 மாதக் காலம்வரை நீளும். ஆனால் சிங்கப்பிடரி ஜெல்லிமீன்களின் ஆயுட்காலம் என்பது 2 ஆண்டுகள் ஆகும்.
பெட்டி ஜெல்லிமீன்
பெட்டி ஜெல்லிமீன்கள் (Box jellyfish) மற்ற ஜெல்லிமீன் இனங்களை விட மேம்பட்டவை. இவை பெட்டி போல் கனசதுர வடிவம் கொண்டவை. இந்த ஜெல்லிமீன்களுக்கு கண்கள் உள்ளன. இவற்றின் நரம்பு மண்டலமும் நன்கு வளர்ந்துள்ளன. இவை மற்ற ஜெல்லிமீன்களை விட வேகமாக நகர்கின்றன. ஒரு நிமிடத்திற்கு 6 மீட்டர் (20 அடி) வேகத்தில் நீந்துகின்றன.
சிங்கப்பிடரி ஜெல்லிமீன்
சிங்கத்தின் மேனி ஜெல்லிமீன் (Lion’s mane jellyfish) என்பது ஒரு ராட்சத ஜெல்லிமீன் ஆகும். இது கடலில் வாழும் உயிரினங்களில் மிக முக்கியமானது. ஏனெனில் வாழும் உயிரினங்களில் இது மிகப் பெரிதாக வளரக்கூடியது. இது 120 அடி நீளம் வரை வளரும். சில சமயம் நீலத் திமிங்கிலத்திற்கு போட்டியாக வளர்கிறது.
இது ஒளிரும் பயோ லூமினெசன்ட் திறனைக் கொண்டுள்ளது. அதாவது இருள் நிறைந்த இடத்தில் சொந்தமாக ஒளியை உருவாக்கிக் கொள்ளும். இந்த ஜெல்லிமீன் மணி போன்ற வடிவம் கொண்டது. இதன் அடிப்பகுதியில் 800 முதல் 1200 உணர்நீட்சிகளும் உள்ளது. இது சிங்கத்தின் பிடரி மயிர் போன்ற அமைப்புக் கொண்டது. ஆகவே சிங்கப்பிடரி ஜெல்லிமீன் என அழைக்கப்படுகிறது.
உணர்நீட்சிகளில் நச்சுத்தன்மை உள்ளது. இதன் உதவியால் மீன்களைப் பிடித்து உண்ணுகிறது. இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப் பெரிய மாதிரி 1870 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் கடற்கரையில் அளவிடப்பட்டது. இது 7 அடி விட்டமும், 120 அடி நீளமும் கொண்டது. இதுதான் உலகின் மிக நீளமான உயிரினம் என்ற சாதனையைப் படைத்தது.
உணவு
பல கலாச்சாரங்களில் ஜெல்லிமீன் மனிதர்களால் உண்ணப்படுகிறது. சில ஆசிய நாடுகளில் ஒரு சுவையான உணவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக சீனா, ஜப்பான் மற்றும் கொரியா உள்ளிட்ட நாடுகளில் ஜெல்லிமீன் உணவாகப் பயன்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் 12 வகையான ஜெல்லிமீன்கள் மட்டுமே உணவுக்காக அறுவடை செய்யப்படுகிறது.
ஜெல்லிமீன் கெட்டுப் போகாமல் இருக்க உலர்த்தப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட ஜெல்லிமீன் 94 சதவீதம் நீர் மற்றும் 6 சதவீதம் புரதத்தைக் கொண்டுள்ளது. புதிதாக பதப்படுத்திய ஜெல்லிமீன் வெள்ளை மற்றும் கிரீமி நிறத்தில் இருக்கும். இது நீண்டகால சேமிப்பின் போது மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக மாறிவிடும். ஜெல்லிமீன் சீன மருத்துவத்திலும் பயன்படுகிறது. மேலும் விண்வெளி ஆராய்ச்சியிலும் பயன்படுகிறது.
உலக ஜெல்லிமீன் தினம்
ஜெல்லிமீன்கள் பற்றி பலர் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். கடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அவை உதவுகின்றன. அவை நீரில் இருந்து கழிவுப் பொருட்களை அகற்றி மற்ற கடல் உயிரினங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றன. இவை கடல் உணவுச் சங்கிலியின் முக்கிய அங்கமாக விளங்குகின்றன. மேலும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் ஜெல்லிமீன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
காலநிலை மாற்றம் மற்றும் கடல் மாசுபாட்டால் இவை அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன. ஜெல்லிமீன்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கடல்சார் உயிரியலாளர்கள் விரும்பினர். இவர்கள் உலக ஜெல்லிமீன் தினத்தை (World Jellyfish Day) 2014 ஆம் ஆண்டில் நிறுவினர். இத்தினம் நவம்பர் 3 அன்று கொண்டாடப்படுகிறது.
இந்த தினம் நிறுவப்பட்ட சில ஆண்டுகளில், உலகம் முழுவதும் ஒரு முக்கிய நிகழ்வாக மாறியது. ஜெல்லிமீன்களின் அழகையும், அதன் பன்முகத்தன்மையையும் கொண்டாடுவதற்கு இத்தினம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஜெல்லிமீன்கள் மற்றும் அவற்றின் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட மக்களால் இந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
எர்ன்ஸ்ட் ஹேக்கலின்
எர்ன்ஸ்ட் ஹெக்கல் (Ernst Haeckel) என்பவர் ஒரு ஜெர்மன் விலங்கியல் நிபுணர், இயற்கை ஆர்வலர், மருத்துவர், உயிரியலாளர், ஓவியர் மற்றும் கடல்சார் பேராசிரியர் ஆவார். இவர் டார்வின் கோட்பாட்டைப் பின்பற்றினார். ஜெர்மனியில் சார்லஸ் டார்வினின் பணியை ஊக்குவித்து பிரபலப்படுத்தினார்.
இவர் ஆயிரக்கணக்கான புதிய இனங்களைக் கண்டுபித்தார். ஆவற்றிற்கு புதிய விலங்கியல் பெயர் சூட்டி, விவரித்து எழுதினார். அனைத்து வாழ்க்கை வடிவங்களையும் தொடர்புபடுத்தும் ஒரு மரபியல் மரத்தை வரைபடமாகத் தயாரித்தார். இவர் ஜெல்லிமீன்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட புதிய ஜெல்லிமீன் இனங்களையும் கண்டுபிடித்தார்.
இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்குகளை வண்ண ஓவியமாக வரைந்தார். இந்த ஓவியங்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்களின் வண்ண விளக்கப்படங்களும் உள்ளன. இந்த ஓவியங்கள் இன்றைக்கும் ஆராய்ச்சியளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. இவரைக் கௌரவிக்கும் வகையில் உலக ஜெல்லிமீன் தினம் அறிவிக்கப்பட்டது.
விழிப்புணர்வு
காலநிலை மாற்றம், அதிகப்படியாக மீன்பிடித்தல் மற்றும் மாசுபாடு ஆகியவை ஜெல்லிமீன் இனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகும். இந்த அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். ஜெல்லிமீன்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே இத்தினத்தின் (உலக ஜெல்லிமீன் தினம்) முக்கிய நோக்கமாகும்.
கட்டுரையாளர்:
ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.