Image credits: theprint.in



வேறெந்த இந்தியப் பிரதமரை விடவும், சர்வதேச பாராட்டுக்கு ஏங்குபவராக நரேந்திர மோடி இருந்து வருகிறார். ஒழுங்கமைக்கப்பட்ட விளம்பர உத்தியின் ஒரு பகுதியாக அல்லாமல், தன்னிச்சையான அன்பு, பயபக்தியுடன் இந்த உலகமே ஹௌடி மோடி என்று முழங்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.  இந்தியாவில் அதிகாரம் முக்கியமானது என்றாலும்,  உலகத்தால் போற்றப்படுவது அவருக்கு அதனினும் முக்கியமானது. பொதுமக்களிடையே செல்வாக்கு என்ற அலை தன்னை எவ்வாறு உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்பதையும், பரவசமாகிப் போயிருக்கும் மக்களின் கைதட்டல்கள் தன்னை அங்கேயே எவ்வாறு வைத்திருக்கின்றன என்பதையும் இந்த உலகம் அறிந்து கொள்வது அவருக்கு மிகவும் முக்கியம்.

அதிகம் செலவழிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட ஹூஸ்டன் வெற்றி இப்போது மக்களின் நினைவிலிருந்து மங்கி விட்டது. இன்றைக்கு உலகெங்கிலும் பல பகுதிகளிலிருந்து மோடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். கொள்கைகளை வகுப்பதில் அவரிடம் வகுப்புவாத அணுகுமுறை இருப்பதை இந்த உலகம் இறுதியாகக் கண்டு கொண்டிருக்கிறது.  தற்போது நடைபெற்று வருகின்ற விவசாயிகளின் போராட்டமும், மோடி அதைக் கையாண்ட விதமும் கூடுதலாக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

போராடி வருகின்ற விவசாயிகளின் ஒழுக்கமான நடத்தை காரணமாகப் பல நாடுகளிடமிருந்தும் கணிசமான ஆதரவை அவர்கள் பெற்றிருப்பதில் ஆச்சரியமடைய ஏதுமில்லை. வெளிநாட்டில் உள்ள விமர்சகர்களை காலிஸ்தானியர்கள் என வர்ணித்திருப்பது பாஜகவின் உத்தியில் இருக்கின்ற மிகப்பெரிய தவறாக உள்ளது. பஞ்சாபில் சுதந்திர தேசத்தை நிறுவ முயன்ற அடிப்படைவாத சீக்கிய பிரிவினைவாத இயக்கத்திற்கு இந்தியாவில் ஒருபோதும் ஆதரவு இருந்ததில்லை. விமர்சகர்களை காலிஸ்தானியர்கள் என்று நிராகரித்ததன் மூலம் மோடியும் அவரது ஆதரவாளர்களும் தங்கள் சொந்த நிலையையே பலவீனப்படுத்திக் கொண்டுள்ளனர்.

அரசாங்கத்தின் கொள்கைகள் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று பொருத்தமான சட்டங்களின் அடிப்படையிலேயே இருக்கின்றன என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்து வருகின்றது. சட்டப்படி அது சரியாக இருக்கலாம். ஆனாலும் அந்த மசோதாக்கள் சட்டங்களாக நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து அனைவரிடமும் சந்தேகமே இருந்து வருகிறது. மாநிலங்களவையில் வாக்குகளை எண்ணுமாறு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தபோது, மாநிலங்களவை ​​துணைத்தலைவர் குரல் வாக்குகளைப் பயன்படுத்தி சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தார். அவரது அந்த தீர்ப்பு மாநிலங்களவையில் ஒரு பக்கத்திலிருந்தவர்கள் மற்றொரு பக்கத்திலிருந்தவர்களைவிட உரக்கக்  கத்தினார்கள் என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தது. விவசாயத் துறையை ஒழுங்குபடுத்த அரசாங்கம் அவசரச் சட்டங்கள் என்ற வழிமுறையைத் தன்வசம் எடுத்துக் கொண்டிருந்தது. அவர்களுக்கு வசதியாக இருக்கும்போது மட்டுமே பாராளுமன்றம் பயன்படுத்தப்படுகிறது; அவ்வாறான நிலைமை இல்லையென்றால் பாராளுமன்றம் முழுமையாக ஒதுக்கி வைக்கப்பட்டு விடுகிறது.

C:\Users\Chandraguru\Pictures\TJ George\Farmers issue after RD\2020_9$largeimg_70479652.jpg
Image Credits: tribuneindia.com

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விவசாயிகளுக்கு இருக்கின்ற பரவலாக ஆதரவிற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அவர்களுடைய கோரிக்கைகளில் இருக்கின்ற நியாயம், மற்றொன்று அவர்களுடைய அமைதியான பிரச்சாரம். ஆனால் அரசாங்கம் அதற்கு மாறாக எங்கேயும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்று பாசாங்கு செய்கிறது. குடியரசு தினம் வரையிலும் அது நீடித்தது. அன்றைய தினம் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பிரதிநிதிகள் தங்கள் அணிகளுடன் அணிவகுத்துச் சென்றனர். அதிகாரிகளால் பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவைக் காட்டிலும் அந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் அதிகமாக எண்ணிக்கையிலிருந்தனர். அரசாங்கத்தின் கைக்கூலிகள் நடவடிக்கையில் இறங்கினர். இறுதியில் கண்ணீர்ப்புகை, நீர் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனாலும் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தைக்  கைவிட மறுத்து விட்டனர். தான் இறங்கி வருவதை யாரும் அறிந்து கொள்ளாத வகையில், மோடி அரசு அந்த சட்டங்களை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க முன்வந்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது பற்றி அவர்கள் எதையும் குறிப்பிடவில்லை. புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு அதிக சுதந்திரத்தை வழங்கும் என்ற அரசாங்கத்தின் வாதத்தை நம்ப யாரும்  தயாராக இல்லை. இந்த புதிய சட்டங்கள் தங்கள் விளைபொருட்களுக்கான விலைகளைக் குறைத்து விடும் என்றும், பெருநிறுவனங்களின் கையகப்படுத்துதலால் விவசாயம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்றும் விவசாயிகள் நன்கு அறிந்திருந்தனர். ‘அரசியல்ரீதியாக இந்த அரசாங்கம் மிகப்பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு எதேச்சதிகார வழியைப் பயன்படுத்தியது’ என்று நிபுணர் ஒருவர் கூறினார். இந்தியாவில் நடந்திருப்பவை குறித்து உலகமே வருத்தப்படுகிறது. மற்றவர்கள் தன்னை எதிர்த்து நிற்பது, தன்னுடைய மதிப்பை இழந்து விட்டது குறித்த இப்போது வந்திருக்கும் இந்த உணர்வு மோடிக்கு நிச்சயம் புதிய அனுபவமாகவே இருக்கும்.

தன்னுடைய நாவன்மையால் மக்களை அவர் மயக்கிய நாட்கள் கடந்து போய் விட்டன. ​​ அவர் மிகப்பெரிய வாக்குறுதிகளை நாடகத்தனத்துடன் வழங்குவதை மக்கள் இப்போது விரும்பவில்லை. பயனுள்ள சீர்திருத்தங்கள் திறம்பட அறிமுகப்படுத்துவதையே அவர்கள் விரும்புகின்றனர். தங்களுக்கு வழங்கப்பட்ட உணவைப் பணிவுடன் மறுத்து தங்கள் போராட்டத்திற்கு  நடுவே சொந்தமாகச் சமைத்து உண்ண விரும்பிய விவசாயிகள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டதை, அவர்களுடைய கண்ணியத்தை மோடி நிச்சயம் கவனிக்காமல் தவற விட்டிருக்க மாட்டார். பெரியவர் அமித்ஷாவை எங்கும் காணவில்லை; தன்னுடைய விளையாட்டுக்கள் வெற்றி பெற முடியாத களம் இது என்பதை அவர் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.

C:\Users\Chandraguru\Pictures\TJ George\Farmers issue after RD\own food.jpg

வருடத்திற்கு சுமார் 12,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு இது. திருப்பிச் செலுத்த முடியாத கடன்கள், பொய்த்துப் போகும் அறுவடைகள், தவறான கணக்கீடுகள் என்று விவசாயிகளை விரக்தியில் தள்ளுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிய போதும், நமது பாராளுமன்றத்தை நடத்துபவர்களிடம் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவு குறித்த உண்மைகள் எந்தவிதமான அசைவையும் ஏற்படுத்தவில்லை.

இந்த மாதிரியான சூழலில் அதுபோன்றதொரு விவாதம் மிகச்சரியான செயலாகவே அமைந்திருக்கும். பாராளுமன்றம் என்பது அதற்கானது தான். ஆனால் இன்றைய இந்தியாவில் அது அவ்வாறாக இருக்கவில்லை. விவாதத்திற்கு உடன்பட மறுத்ததன் மூலம் அரசாங்கம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத தன்னுடைய நிலைப்பாட்டை அனைவரிடமும் அம்பலப்படுத்திக் காட்டியிருக்கிறது. எந்தவொரு வாதமும் இல்லை, விவாதமும் இல்லை, விளக்கமும் இல்லை. தான் சொல்வதை மட்டுமே அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. இதைக் கேள்வி கேட்பவர்கள் யார்? நிச்சயம் அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கம் இதுவல்ல. இது நரேந்திர மோடியின் கீழ் இந்தியா வீழ்ச்சி அடைந்திருப்பதையே சுட்டிக்காட்டுகிறது.

https://www.newindianexpress.com/opinions/columns/t-j-s-george/2021/feb/07/the-world-may-be-sorry-for-india-2260569.html

நன்றி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 2021 பிப்ரவரி 07 

தமிழில்: தா.சந்திரகுரு



One thought on “இந்தியாவிற்காக உலகம் வருந்தும் நிலை வரும் – டி.ஜே.எஸ்.ஜார்ஜ் | தமிழில்: தா.சந்திரகுரு”
  1. வாசித்தேன். புகழ்மோகிக்கோமாளி மோடியின் செயல்பாடுகளை உலகம் எப்படி பார்க்கிறது என்று வெளிப்படுத்திய பகிர்வு. ஊரார் சிரிக்கிறார்கள் என்ற. திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது.நன்றியும் வாழ்த்துகளும் தோழர் சந்திரகுரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *