உலக வரைபடம் என்பது பூமியின் அனைத்து மேற்பரப்பின் வரைபடமாகும். இதில் அனைத்து கண்டங்கள், நாடுகள், பீடபூமிகள், மலைகள், பாலைவனங்கள் போன்ற இயற்கை அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. உலக வரைபடத்தில் பெருங்கடல்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் கடலடி நிலப்பரப்பு எப்படிப்பட்டது என்று பலருக்குத் தெரியாது. உலகப் பெருங்கடல் தளத்தை மேரி தார்ப் மற்றும் புரூஸ் ஹீசன் ஆகிய இருவரும் வரைபடமாக தயாரித்தனர். இதன் மூலம் கடலடி தளத்தின் சுற்றுச்சூழலை அறிய முடிகிறது. இந்த வரைபடத்தை உருவாக்கியதில் மிக முக்கிய பங்கு வகித்தவர் மேரி தார்ப் ஆவார்.
மேரி தார்ப்
மேரி தார்ப் (Maire Tharp) என்பவர் ஒரு அமெரிக்க புவியியல் அறிஞர், கடல்சார் ஆய்வாளர் மற்றும் கடல்சார் வரைபடவியலாளர் (Oceanographic Cartographer) ஆவார். கடல் தளத்தின் வரைபடத்தை உருவாக்கிய உலகின் முதல் பெண். மேலும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த முதல் பெண்களில் ஒருவர். அறிவியல் உலகில் பெண்களுக்கு வரவேற்பு இல்லாத காலகட்டத்தில் இவர் கடல் நிலப்பரப்பு ஆய்வில் ஈடுபட்டார். புதிய கண்டுபிடிப்பின் மூலம் புவியியல் விஞ்ஞானியாகப் போற்றப்படுகிறார்.
இவர் 1930 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று அமெரிக்காவின் மிக்சிகனில் உள்ள இப்சிலாண்டில் பிறந்தார். இவரது தாயார் பெர்தா லூயிஸ் தார்ப். இவர் ஜெர்மன் மற்றும் லத்தின் மொழி ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது தந்தை வில்லியம் எட்கர் தார்ப் ஆவார். இவர் அமெரிக்க விவசாயத் துறையின் மண் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். இந்த தம்பதியருக்கு மேரி தார்ப் ஒரே மகளாகப் பிறந்தார்.
இவரது தந்தை அமெரிக்க வேளாண்மைத் துறையின் மண் ஆய்வாளராகப் பணி புரிந்தார். அவர் சேகரித்த மண் தரவுகளின் அடிப்படையில் வரைபடங்களை உருவாக்கினார். இவரது தந்தையுடன் மேரி தார்ப் அடிக்கடி வயல்வெளிக்குச் சென்று வந்தார். இதனால் இவருக்கு சிறு வயதிலேயே வரைபடம் தயாரிப்பதில் ஈடுபாடு ஏற்பட்டது.
இவரது தந்தையின் பணியின் காரணமாக நாடு முழுவதும் பயணம் செய்தனர். ஆகவே இவர் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெறுவதற்கு முன்பு சுமார் 17 வெவ்வேறு பள்ளிகளில் பயின்றார். இவர் 1943 ஆம் ஆண்டில் ஓஹியோ பல்கலைக் கழகத்தில் இசை மற்றும் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
புவியியல்
இவர் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பணியில் சேர்ந்தார். அதே சமயத்தில் கல்லூரியில் புவியியல் வகுப்பிலும் சேர்ந்தார். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். இளைஞர்கள் போருக்குச் சென்றதால் ஆண்கள் இல்லாத நிலை மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டது. பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

மேரி தார்ப் (Maire Tharp)
மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் பெட்ரோலியப் புவியியல் திட்டத்தில் இவருக்கு வேலை கிடைத்தது. பிறகு மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் புவியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். மேலும் துல்சா பல்கலைக்கழகத்தில் கணிதத்திலும் இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் துல்சாவில் உள்ள ஒரு எண்ணெய் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
அவருக்கு அலுவலகத்தில் வேலை வழங்கப்பட்டது. அலுவலகத்தின் உள்ளே அடைபட்டுக் கிடந்து வேலை செய்ய வேண்டி இருந்தது. இந்த வேலை அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவருக்கு வழங்கப்பட்ட வேலை திருப்தியற்றதாக இருந்தது. ஆகவே அங்கு வயலுக்குச் செல்லும் ஆண்களுக்கான வரைபடங்கள் மற்றும் தரவுகளைச் சேகரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டார்.
அக்காலத்தில் நிலப்பரப்பின் வரைபடம் தயாரிப்பது என்பது மிகவும் கடனமான பணியாக இருந்தது. இது ஆண்களால் மட்டுமே செய்யக் கூடிய வேலை என்ற கருத்து நிலவியது. இது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையாக இருந்தது. பெண்களால் களப்பணியில் ஈடுபட்டு வரைபடங்கள் தயாரிக்க முடியாது என்று கருதப்பட்டது. ஆகவே பெண்கள் யாரும் இப்பணியில் ஈடுபடவில்லை. ஆனால் மேரி தார்ப் தனது தந்தையுடன் இணைந்து பல இடங்களின் வரைபடத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பணி
இவர் 1948 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்திற்குச் சென்றார். இலாமண்ட் புவியியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சி பணியில் சேர்ந்தார். தற்போது இது கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள இலாமண்ட் – தோரதி புவியியல் ஆய்வகமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் புவியியல் ஆய்வகத்தில் முதன் முதலாக கடலடி நிலப்பட வரைவியலாளர் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்ட பெண்களில் இவரும் ஒருவர் ஆவார். அதற்கு முன்பு வரை இந்தப் புவியியல் ஆய்வகத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த ஆய்வகத்தில் புவியியலாளர் புரூஸ் சார்லஸ் ஹீசன் (Bruce Charles Heezen) என்பவரைச் சந்தித்தார். புரூஸ் ஹீசன் ஒரு அமெரிக்க புவியியலாளர் ஆவார். இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடலடி நிலத்தோற்றம் பற்றிய ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். இவருக்கு உதவியாளராக மேரி தார்ப் நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இரண்டாம் உலகப் போரின் போது கீழே விழுந்த இராணுவ விமானங்களைக் கண்டறியும் வேலை இருவருக்கும் வழங்கப்பட்டது. புகைப்படத் தரவை வைத்து விமானங்கள் கடலில் விழுந்த இடத்தைக் கண்டுபிடித்தனர்.
ஆய்வு
மேரி தார்ப் மற்றும் புரூஸ் ஹீசன் ஆகிய இருவரும் இணைந்து கடல் தளத்தை வரைபடம் ஆக்குவதற்கான ஆராய்ச்சித் திட்டத்தில் ஈடுபட்டனர். 1950 ஆம் ஆண்டுகள் வரை கடல் தளம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. விஞ்ஞானிகளுக்கு கூட கடல் தளம் பற்றி தெளிவான புரிதல் இல்லை. கடற்பரப்பின் அமைப்பு பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்ட காலமாக இருந்தது. கடல் தளம் என்பது பெரும்பாலும் தட்டையானது மற்றும் எந்தப் பொருளும் இல்லாத இடமாகக் கருதப்பட்டது.
கடல் தளத்தின் வரைபடங்களை உருவாக்கும் முயற்சியில் சில விஞ்ஞானிகளும் ஈடுபட்டனர். ஆனால் கடலடியில் எடுக்கப்பட்ட தரவுகள் ஒரே இடத்தில் கிடைக்கவில்லை. எங்கு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறதோ அந்த இடங்களில் மட்டுமே தரவுகள் இருந்தன. அதாவது தரவுகள் பல்வேறு இடங்களில் பிரிந்து கிடந்தன. அவற்றை ஒன்று சேர்க்கும் பணி என்பது மிகவும் சிரமமானது. மேலும் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கப்பட்ட தரவுகள் மட்டுமே தேவைப்பட்டது.

இந்த ஆய்வகத்தில் பணியில் சேர்ந்த பெண்களுக்கு முக்கியமான ஆய்வுப் பணிகள் வழங்கப்படவில்லை. பெரும்பாலும் புத்தகக் காப்பாளர், கணிதப் பணி மற்றும் உதவியாளர்கள் போன்ற பணிகள் மட்டுமே வழங்கப்பட்டது. மேரி தார்ப் புவியியல் பட்டம் பெற்ற போதிலும் புரூஸ் ஹீசனுக்கு உதவியாளராகவே நியமிக்கப்பட்டார்.
பூமியின் மேற்பரப்பு வடிவத்தை வரைபடமாக (Map) மாற்றுவது ஒரு திறமை. அதே சமயத்தில் கடல் அடியில் உள்ள நிலப்பரப்பின் அமைப்பை வரைபடமாக மாற்றுவது என்பது மிக மிகக் கடினமானது. இப்படிப்பட்ட பணியில் தார்ப் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1950 ஆம் ஆண்டுகளில் ஆராய்ச்சி நடைபெறும் கப்பலில் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆகவே ஆராய்ச்சிக் கப்பல் மற்றும் ஆராய்ச்சி படகுகளில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. சில மாலுமிகள் கப்பலில் பெண்கள் பயணிகளாகப் பயணம் செய்வதைக் கூட துரதிர்ஷ்டசமானது என்று நம்பினர்.
அட்லாண்டிக் கடல் தளம்
அட்லாண்டிக் கடல் நீருக்கு அடியில் இருக்கும் பல்வேறு தகவல்களை சோனார் மற்றும் துல்லியமான ஆழம் பதிவிடும் கருவிகள் மூலம் விஞ்ஞானிகள் தொடர்ந்து பதிவு செய்தனர். அட்லாண்டிஸ் மற்றும் பிற ஆராய்ச்சி கப்பல்கள் மூலம் ஆயிரக்கணக்கான சோனார் அளவீடுகள் எடுக்கப்பட்டன. இந்த தரவுகளை புரூஸ் ஹீசன் சேகரித்து மேரி தார்ப்பிடம் 1952 ஆம் ஆண்டில் வழங்கினார். மேரி தார்ப் கடலுக்குச் சென்று வர வாய்ப்பு தரவில்லை. ஆனால் அளவிடப்பட்ட கடலின் ஆழம் பற்றிய தரவுகள் அனைத்தும் மேரிக்கு வந்து சேர்ந்தது.
பல்வேறு கப்பல்களில் இருந்து பெறப்பட்ட தரவுகள் சுமார் 3000 அடி நீளக் காகிதத்தில் இருந்தது. இந்த தரவுகள் அனைத்தும் அலை அலையான கோடுகளாக இருந்தது. இது பார்ப்பதற்கு சிலந்தி வலை போல் காட்சி தந்தது. இதனை வரைபடமாக மாற்றுவது மேரி தார்ப்பின் வேலையாக இருந்தது. பல வண்ண மை பேனாக்கள் மற்றும் வரைகோல்களைப் பயன்படுத்தி கடல் தரையில் என்ன இருக்கிறது என்பதை வரைந்தார்.
கடலுக்கு அடியில் இருந்து கிடைத்த தரவுகளை அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை அடிப்படையில் படத்தை வரைந்தார். வடக்கு அட்லாண்டிக் முழுவதும் மேற்கிலிருந்து கிழக்காக நீட்டிக்கப்பட்ட சுமார் ஆறு கோடுகள் இதில் இடம் பெற்றன. இது ஒரு நீளமான மலைத் தொடர் ஆகும். இது மிட் – அட்லாண்டிக் ரிட்ஜ் (Mid – Atlantic Ridge) என அழைக்கப்படுகிறது. இது அட்லாண்டிக் பெருங்கடலின் தரையில் அமைந்துள்ள ஒரு நடுக்கடல் முகடு ஆகும்.
இவர் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் முதல் வரைபடத்தை 1957 இல் வரைந்து முடித்தார். விஞ்ஞானிகள் கடல் தளத்தின் கட்டமைப்பைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருந்தனர். கடல் தளம் பெரும்பாலும் தட்டையான சமவெளி என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கடல் தளமானது பள்ளத்தாக்குகள், செங்குத்தான பள்ளத்தாக்குகள், எரிமலைகள், மலைகள், மலைக் குன்றுகள், கடல் மேடைகள்,மலைத் தொடர்கள், அகழிகள் மற்றும் சமவெளிப் பகுதிகள் என பலவகை நில அமைப்புகளால் ஆனது என்பதை தார்ப்பின் வரைபடம் வெளிப்படுத்தியது.
இவரின் வரைபடத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் 16,000 கிலோமீட்டர் நீளமான மலைத் தொடர் மற்றும் பிளவுப் பள்ளத்தாக்கும் இடம் பெற்றிருந்தது. மத்திய அட்லாண்டிக் ரிட்ஜ் ஒரு ஆழமான பிளவுப் பள்ளத்தாக்கை உள்ளடக்கியதாக இருந்தது. இது மேரி தார்ப்பின் கண்டுபிடிப்பாகும். இந்த பிளவுப் பள்ளத்தாக்கு ரிட்ஜின் அச்சில் கிட்டத்தட்ட அதன் முழு நீளத்திற்கும் செல்கிறது. இந்த பிளவு அருகில் உள்ள டெக்கானிக் தட்டுகளுக்கு இடையே உள்ள உண்மையான எல்லையை குறிக்கிறது.

பூமியின் உள்ளே இருந்து மாக்மா (Magma) மேலே வந்து, முகடுகளின் பக்கங்களைத் தள்ளி, புதிய மேலோடு உருவாகிறது என்பதை தார்ப் கண்டார். இது கடல் தளப் பரப்பு விரிகிறது என்பதற்கானச் சான்றாக இருந்தது. அதாவது கடல் தளப் பரவுதல் நடக்கிறது (Seafoor Spreading) என்பதை அறிய முடிகிறது. கடல் தளம் பரவும் விகிதம் ஆண்டிற்கு 1 முதல் 20 சென்டிமீட்டர் பரவுகிறது என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது கண்டங்கள் நகர்கிறது (Continental Drift) என்ற கோட்பாட்டை ஆதரித்தது.
அந்த சமயத்தில் பல விஞ்ஞானிகள் கண்டங்கள் கடல் தளத்தின் வழியாக நகர முடியும் என்ற கருத்தைக் கேலிக்குரியதாக கருதினர். பிளவுப் பள்ளத்தாக்குப் பற்றி ஹீசனுக்கு இவர் விளக்கினார். ஆனால் அவரோ இது ஒரு பெண்ணின் பேச்சு (Girl talk) எனக் கூறி நம்ப மறுத்தார். இலாமண்ட் ஆய்வகத்தில் உள்ளவர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள புவியியல் விஞ்ஞானிகளும் கண்ட சறுக்கல் அல்லது நகர்வு சாத்தியமற்றது என்று கூறினர். இருப்பினும் பல மாதங்களுக்குப் பிறகு மேரி தார்ப்பரின் கடலடி தள வரைபடம் மற்றும் பிளவு பள்ளத்தாக்கு ஆகியவை உண்மை என்று ஹீசன் ஏற்றுக் கொண்டார்.
தார்ப்பரின் வரைபடத்தைப் பல விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர் மற்றும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த கடல் தள வரைபடம் எளிதில் புரியும்படி இருந்தது. அமெச்சூர் மற்றும் சில வல்லுநர்கள் இந்த வரைபடத்தின் மூலம் கடலுக்கு அடியில் உள்ள நிலப்பரப்பை எளிதாக அறிய முடிந்தது. கடல் தளத்தின் விரிவான வரை படத்தை அமெரிக்க கடற்படையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆகவே வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் முதல் கடல் தள வரைபடம் 1957 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக வெளியிடப்பட்ட முதல் கடல் தள வரைபடம் ஆகும்.
இந்த வரைபடம் வெளிவந்தவுடன் இவர்கள் இருவரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்னர். ஆனால் அதிக எதிர்ப்பு பல்வேறு விஞ்ஞானிகளிடம் இருந்து வந்தது. ஜகுஸ் குஸ்தேவ் (Jacques Cousteau) என்ற ஆராய்ச்சியாளர் மேரி தார்ப்பரின் வரைபடம் கண்டிப்பாகத் தவறு என நினைத்தார். இவர் ஒரு பிரெஞ்சுக் கடற்படை அதிகாரி, அறிவியலாளர் மற்றும் ஒளிப்பட கலைஞர் ஆவார். இவர் கடல் பாதுகாப்பின் முன்னோடியாக விளங்கினார். இவர் கடலுக்குள் ஒரு சக்தி வாய்ந்த கேமராவை அனுப்பி பிளவுப் பள்ளத்தாக்கைப் படம் பிடித்தார்.
இவர் புகைப்படம் எடுத்த படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டார். இவை மேரி தார்ப்பின் வரைபடம் உண்மை என்பதை முதன் முதலில் நிரூபித்தது. இந்த வீடியோ காட்சிகள் பிளவுப் பள்ளத்தாக்கை நம்புவதற்கு நிறைய பேருக்கு உதவி புரிந்தது. இது கண்டங்கள் நகர்கிறது என்பதை உலக விஞ்ஞானிகளிடையே நிரூபிக்க துவங்கியது. அறிவியல் சமூகம் இந்தக் கண்டுபிடிப்பை மெதுவாக ஏற்றுக் கொண்டது. இது கண்டத் தட்டு நகர்வுக் (Plate tectonics theory) கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள வழிவகுத்தது.
பூமத்திய ரேகைக்கு அருகில் மத்திய அட்லாண்டிக் முகடு, வடக்கு அட்லாண்டிக் முகடு மற்றும் தெற்கு அட்லாண்டிக் முகடு ஆகியவற்றை ரோமன்சே அகழி (Romanche Trench) பிரிக்கிறது எனவும் கண்டறியப்பட்டது. இந்த அகழி 7,758 மீட்டர் (25,453 அடி) ஆழம் கொண்டது. இது அட்லாண்டிக் பெருங்கடலில் மிக ஆழமான பகுதிகளில் ஒன்றாகும்.
கண்டங்கள் நகர்வு
பூமியின் மீதுள்ள கண்டங்களும், கடற்பகுதிகளும் ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கின்றன என்ற கருத்தை ஆல்பிரட் வெக்னர் (Alfred Wegener) என்பவர் முன்மொழிந்தார். இவர் 1915 ஆம் ஆண்டில் கண்ட நகர்வுக் கோட்பாட்டை (Continental Drift) உருவாக்கினார். இதன்படி கண்டங்கள் நகர்ந்து கொண்டே இருக்கும். ஏற்கனவே பார்த்த இடத்தில் மீண்டும் அதைப் பார்க்க முடியாது.
இந்தக் கோட்பாடு தவறானது என பலர் எதிர்த்தனர். பல அமெரிக்க விஞ்ஞானிகள் இதை நம்ப முடியாது என்றனர். ஒரு செல்வாக்கு மிக்க புவியியலாளர் பெய்லி வில்லிஸ் என்பவர் இது விசித்திரக் கதை என்று கேலி செய்தார். மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் மேரி தார்ப் புவியியல் பயின்ற போது அவரது பயிற்றுனர்கள் கண்ட நகர்வுக் கோட்பாட்டிற்கு ஆதரவாக வாதிடவில்லை.
சர்வதேச கடல்சார் மாநாடு 1959 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த மாநாட்டில் புரூஸ் ஹீசன் கலந்து கொண்டு கண்டங்கள் நகர்தல் மற்றும் பிளவு பள்ளத்தாக்கு பற்றிய ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார். இதற்கு ஆதாரமாக மேரி தார்ப்பரால் வரையப்பட்ட கடல் தள வரைபடம் அமைந்தது. மேலும் ஜகுஸ் குஸ்தேவ் கடலுக்கு அடியில் பிளவு பள்ளத்தாக்கைப் படம் பிடித்த வீடியோவைக் காட்டினார். இந்த ஆதாரங்கள் கண்ட நகர்வுக் கோட்பாடு உண்மை என நிரூபித்தது. 1960 ஆம் ஆண்டில் ஹாரி ஹெஸ் என்பவர் கடல்களில் தரைப்பகுதி விரிவடைவதால் கண்டங்கள் நகர்கின்றன என்பதைச் சான்றுகளுடன் நிரூபித்தார்.
உலகப் பெருங்கடல் தளம்
பிளவு பள்ளத்தாக்கைக் கண்டுபிடித்ததன் மூலம் மேரி தார்ப் ஒரு விஞ்ஞானியாக உயர்ந்தார். உலகப் பெருங்கடல் தளத்தை வரையும் பணியில் ஈடுபட்டார். ஆனால் பாலினம் காரணமாக, அவள் தனது வரபடங்களை உருவாக்கப் பயன்படுத்திய கடற்பரப்புத் தரவுகளைச் சேகரிக்கும் கப்பல்களில் அனுமதிக்கப்படவில்லை. 1968 ஆம் ஆண்டில் முதன் முதலாக ஆய்வுக் கப்பலில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
மேரி தார்ப் மற்றும் ஹீசன் ஆகிய இருவரும் 25 ஆண்டு காலம் இணைந்து பணி புரிந்தனர். இவர்கள் உருவாக்கிய வரைபடங்களை ஒன்றாக இணைத்த போது அட்லாண்டிக் பெருங்கடலின் தரை தளத்திலிருந்து நீளமான மலைத்தொடர் நீருக்கடியில் நீண்டு செல்வதைக் கண்டனர். இது கடலடி மலைத்தொடர் ஆகும். இது நடுக்கடல் முகடு (Mid ocean ridge) என அழைக்கப்படுகிறது. இது நீருக்கடியில் உலகைச் சுற்றி விரிந்திருந்தது. இது 65,000 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மலைத்தொடர் சில பக்க கிளைகளையும் கொண்டிருந்தது. இதையும் சேர்த்துக் கணக்கிட்டால் மலைத்தொடர் ஏறக்குறைய 80,000 கிலோ மீட்டர் அளவுக்கு பரவியுள்ளது. இந்த மலைத்தொடர் உலகம் முழுவதும் மிகப் பெரிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன் பெரும் பகுதி சராசரியாக 8250 அடி ஆழம் கொண்ட ஆழ்கடல் பகுதியில் அமைந்துள்ளது. இது பூமியின் ஒரு அடையாளச் சின்னமாக விளங்குகிறது.
மேரி தார்ப் மூலம் பெருங்கடலில் உள்ள நீண்ட மலைத்தொடர் ஆவணப்படுத்தப்பட்டது. இது புவியியல் வரலாற்றில் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்றாகும். இவர் உலகில் உள்ள அனைத்துக் கடல்களின் தகவல்களைச் சேகரித்து வரைபடம் உருவாக்கினர். கடலில் மிகவும் ஆழமான பகுதி மரியானா அகழி (Mariana Trench) ஆகும். இது கடலின் மேற்பரப்பில் இருந்து 11,034 மீட்டர் ஆழம் கொண்டது. இந்த அகழியும் இந்த வரைபடத்தில் இடம் பெற்றது.
வரைபடம் தயாரிப்பதற்கு தேவையான அனைத்து தரவுகளையும் மேரி தார்பிடம் ஹீசன் வழங்கினார். தொடர்ந்து ஒத்துழைப்புக் கொடுத்து வந்தார். எதிர்பாராத விதமாக ஹீசன் 1977 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். இவரின் இறப்பு மேரி தார்பருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஹீசன் இறந்த பிறகு பெருங்கடல் தளத்தின் வரைபடத்தை முடிப்பதில் தனது முழு ஆற்றலையும் பயன்படுத்தினார்.
இந்தப் பெருங்கடல் தளத்தின் வரைபடத்தை வரைவதற்கு ஹெய்ன்ரிச் பெரான் (Heinrich Berann) என்பவரை இவர்கள் நியமித்திருந்தனர். இவர் ஒரு ஆஸ்திரிய ஓவியர் மற்றும் வரைபடவியலாளர் ஆவார். இவர் உலக புகழ்பெற்ற ஓவியர். 1962 ஆம் ஆண்டில் தேசியப் புவியியல் சங்கத்திற்காக எவரெஸ்ட் சிகரத்தை வரைந்து கொடுத்தார். இவர் எவரெஸ்ட் மலைக் காட்சிகளை வரைபடமாக தயாரிக்க சுமார் 600 மணி நேரம் உழைத்தார். இவர் மேரி தார்ப் மற்றும் புரூஸ் ஹீசன் ஆகியோருக்காக உலகப் பெருங்கடல் தளங்களின் நிரப்பரப்பை வரைபடமாக வரைந்துக் கொடுத்தார்.

இந்த வரைபடத்தில் நடுக்கடல் முகடு உலகம் முழுவதும் சுற்றி பரவி இருவதை மிகவும் அழகாக வரைந்துள்ளார். வரைபட காகிதத்தின் மேல் விரல்களை ஒட்டினால், மலைத்தொடர் எங்கு எழுகிறது மற்றும் எங்கு விழுகிறது என்பதை நம்மால் உணர முடியும். அந்தளவிற்கு இந்த வரைபடம் மிகவும் துல்லியமாகவும், அறிவியல் பூர்வமாகவும் வரையப்பட்டுள்ளது. இந்த வரைபடத்திற்கான காப்புரிமையை புரூஸ் ஹீசன் மற்றும் மேரி தார்ப் 1977 இல் பெற்றனர்.
இது உலகப் பெருங்கடல் தளம் (World Ocean Floor Map) என்ற பெயரில் வரைபடமாகத் தயாரிக்கப்பட்டது. இது 1977 ஆம் ஆண்டில் அமெரிக்க கடற்படை ஆராய்ச்சி அலுவலகத்தால் வெளியிடப்பட்டது. இது கடல் அடுப்பகுதியின் விரிவான நிலப்பரப்பு மற்றும் பல பரிணாம புவியியல் நிலப்பரப்பை வெளிப்படுத்தியது. இந்த வரைபடம் தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது.
சாதனை
இந்த உலகப் பெருங்கடல் தள வரைபடம் புவியியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. கடல் தளத்தை ஒரு புதிய கோணத்தில் பார்க்க உதவியது. மேலும் புவியியலாளர்கள் மற்றும் கடலியலாளர்கள் மத்தியில் பூமி பற்றிய சிந்தனையை மாற்றவும் வழி வகுத்தது. புவி இயற்பியலின் மிகப் பெரிய சர்ச்சைகளில் (கண்ட நகர்வு) ஒன்றைத் தீர்க்கவும் உதவியது.
மேரி தார்பரின் சாதனையைப் பாராட்டி பெண் முன்னோடிக்கான கடலியல் விருது உள்பட பல விருதுகள் வழங்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் 4 சிறந்த வரைபடக் கலைஞர்களில் ஒருவராக மேரி தார்ப் அறிவிக்கப்பட்டார். இவர் 2006 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 23 அன்று மறைந்தார். இவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமெரிக்க கடற்படை ஆராய்ச்சிக் கப்பலுக்கு “USNS மேரி தார்ப்” என பெயரிட்டது.
ஆசிரியர் பற்றியக் குறிப்பு:
தமிழ் மொழியில் நல்ல அறிவியல் நூல்கள் இல்லாத குறையைக் களைவதில் ஏற்காடு இளங்கோ முக்கியப் பங்காற்றுகிறார். 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது முதல் நூல் அதிசயத் தாவரங்கள். அன்றிலிருந்து 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து பல நூல்களை எளிய தமிழில் எழுதி வருகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட உதவிச செயலாளாராக 12 ஆண்டுகளும், மாவட்டச் செயலாளராக 8 ஆண்டுகளும் பணிபுரிந்துள்ளார். பின்னர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்டத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இவர் மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கிய காரணகர்த்தாவாகவும் உள்ளார்.
இவருடைய பழங்கள் மற்றும் செவ்வாய்க் கிரகமும் செவ்வாய் தோஷமும் ஆகிய இரண்டு நூல்கள் “அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற அமைப்பின் சார்பாக 38,000 பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிடும் துளிர் அறிவியல் மாத இதழின் ஆசிரியர் குழுவில் முக்கியமானவர். இவர் எழுத்துச் சிற்பி, அறிவியல் மாமணி, வல்லமைமிகு எழுத்தாளர். உழைப்பாளர் பதக்கம், ஏற்காட்டின் சாதனையாளர்கள் விருது, வாழ்நாள் சாதனையாளர்கள் விருது. சிகரம் தொட்ட சாதனையாளர் விருது ஆகிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார். 1992 ஆம் ஆண்டு ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரியில் மண்டிக் கிடந்த ஆகாயத் தாமரைகளை, மாணவர்கள், தொண்டு அமைப்புகள் மற்றும் பொது மக்கள் உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக, நீக்கி ஏரியைத் துப்புரவு செய்தார்.
இணையதளம் பொதுவகத்தில் 27 துணைப் பகுப்புகளின் மூலம் 22,360 படங்களை இணைத்துள்ளார். தொடர்ந்து விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பு செய்து வருகிறேன். விக்கிப்பீடியா நூலகத்திற்கு தகுதியானவர் என பாராட்டி 2023 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று வாழ்த்து அனுப்பியுள்ளது. மேற்கண்ட விக்கிப்பீடியா வாழ்த்து எனது எழுத்துப் பணியைத் தொடர்ந்து செய்ய மிகுந்த மனவூக்கத்தை அளிக்கிறது. ஏற்காடு மலையில் உள்ள தாவரங்களை வகைப்படுத்தி, பெயரிட்டு, அனைத்து புகைப்படங்களையும் இணையதளம் பதிவிட்டுள்ளார். இணைத்துள்ளார். இதுவரை 3100 தாவரங்களின் 12,391 பொதுவகத்தில் படங்களை iNaturalist தளத்தில் 2023ஆம் ஆண்டு ஆகஸ்டு 22 முதல் தாவரங்களின் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்யத் தொடங்கினார். 2024 மார்ச் வரை 1115 படங்களை இணைத்துள்ளார். பிரிதிலிபி என்னும் இணையத்தில் 128 கட்டுரைகளை எழுதி உள்ளார். இதுவரை 22,716 பேர் கட்டுரைகளைப் படித்துள்ளனர்.
பிரிதிலிபி தளத்தில் 1,00,000 வார்த்தைகள் எழுதியமைக்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவரின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையைப் பாராட்டி பிரிதிலிபி சார்பாக கோல்டன் பேட்ஜ் சான்றிதழ் (29-11-2023) வழங்கியுள்ளனர். ப்ரீ தமிழ் இ புக்ஸ் மூலம் 42 புத்தகங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஜூன் 2015 டிசம்பர் 2023 வரை 10,00,050 பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. சிறிய அளவிலும் பெரிய அளவிலும் 116 புத்தகங்களை இதுவரை எழுதியுள்ளார். தொடர்ந்து அறிவியல் நூல்களை எழுதி வருகிறார். இவர் சிறந்த அறிவியல் எழுத்தாளர் ஆவார்.
Reference
1.Wikipedia
2.Marie Tharp:Pioneering Mapmaker of the Ocean Floor – WHOI Women’s Committee
3.About Maire Tharp/Lamont-Doherty Earth Observatory – Columbia University
4.Geologist Marie Tharp mapped the ocean floor and helped solve one of science’s biggest controversies – Jenny McGrath.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
கடல் தள வரைபடம் தயாரிக்கும் முயற்சிகள் கடுமையான பனிகள் அவர் செலுத்திய ஆற்றல் வியக்க வைக்கிறது.மேரி தாரப் அவர்களின் பனிஈடு இனணயில்லாத அரும்பனி.