உலகம் அறிந்த இந்திய உயிர் அணு உயிரியலாளர் சஞ்சீவ் கலண்டே
தொடர் 69 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
சஞ்சீவ் கலண்டே பூனேவிலுள்ள இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உயிரியல் துறையில் ஆய்வு மேம்பாட்டு டீனாக பணியாற்றி வருகிறார். பூனேவில் சஞ்சீவ் கலண்டே ஆய்வகம் என்றே தனியாக குரோமாட்டின் உயிரியல் மற்றும் ஏபிஜெனடிக்ஸ் ஆய்வகம் ஒன்று உள்ளது என்றால் இவருடைய பெருமை என்ன என்பது நமக்கு விளங்கும். CHROMATIN அமைப்பாக்கத்தின் மரபணுவில் லேசான இடம் சார்ந்த மாற்றங்கள் உடலியல் ரீதியில் எவ்வகை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்த உலகறிந்த ஆய்வுகள் ஆய்வு முடிவுகள் அவருடையவை.
அறிவியலாளர் சஞ்சீவ் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுகளின்போது மார் பைண்டிங் புரோட்டீன்கள் (The MAR-binding protein ) என்பது குறித்த ஆய்வை எடுத்துக்கொண்டார். இவற்றினுடைய மரபணுக்களின் ஊடாக ஏற்படுகின்ற பிறழ்வுகள் எவ்விதம் உருவாக்குகின்றன என்பது குறித்த கருப்பொருளை அவருடைய முனைவர் பட்ட ஆய்வறிக்கை கொண்டிருந்தது. கார்சினோஜெனிசிஸ் என்றழைக்கப்படுகின்ற புற்றுநோயின் உருவாக்கம் அல்லது ரத்தக் கட்டிகளின் உருவாக்கம் குறித்த துறையில் கை தேர்ந்த நிபுணராக இவர் விளங்குகின்றார் சாதாரண செல்கள் புற்றுநோய் செல்களாக எப்படி மாற்றம் அடைகின்றன என்பது குறித்த நடைமுறை தான் கார்சினோஜெனிஸிஸ் என்று அழைக்கப்படுகிறது.

இந்த செயல்முறை செல்லுலார் மரபணு மற்றும் எபிஜெனடிக் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அசாதாரணசெல் பிரிவு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இது கிட்டத்தட்ட அனைத்து திசுக்களிலும் நிகழக்கூடிய அதீதமான வளர்ச்சியைக் குறிக்கிறது. பொதுவாகத் திசுக்கள் மற்றும் உறுப்புகளின் இடையிலான அப்போடோசிஸ் என்றழைக்கப்படும் வடிவத்தில் உயிரணு இறப்பு மற்றும் பிறப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். புற்று நோய் நோயாளிகளிடம் இந்த சமநிலை சிதைக்கப்படுகிறது. டி என் ஏ வில் ஏற்படும் பிறழ்வுகள் இந்த சமமற்ற நிலையை ஏற்படுத்தி ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கின்றன இது கட்டுப்பாடற்ற செல் பிரிவு மற்றும் உடலின் இயற்கை தெரிவின் மூலம் உயிரணுக்களின் பரிணாம வளர்ச்சியில் எவ்விதம் ஒரு கால கட்டத்தில் ஏற்படத் தொடங்கியது என்பது தான் விஞ்ஞானி சஞ்சீவ் அவர்களுடைய ஆய்வுகள் ஆகும். மனிதனின் பரிணாமவியல் வரலாற்றில் எந்த இடத்தில் புற்றுநோய் தொடங்கியது என்பது குறித்து ஒரு டார்வினியவாதியாக அவர் எழுதி இருக்கும் ஆய்வுக் கட்டுரை உலகப் பிரசித்தி பெற்றதாகும்.

இது குறித்த மூன்று முக்கியமான கோட்பாடுகளை அவர் கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார் அவற்றில் முதன்மையானது செல்லுலார் சிக்கெனலின் பாதைகளைச் சிதைப்பது குரோமாட்டின் அளவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதாகும். பூனேவிலுள்ள IISER ஆய்வகத்திற்கு அவர் சென்ற பிறகு அவர் பல்வேறு அடிப்படை மூலக்கூறுகளின் எபிஜெனடிக் ஒழுங்குமுறையில் தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கினார். CAENORHABDITIS எனும் வகையிலான புழுக்கள் DROSPHILIA எனும் பழ ஈக்கள் ZEBRA FISH எனும் மீன்வகை மற்றும் மனிதர்கள் இவர்களுக்கு இடையே ஆன உயிரியல் மாதிரிகளைக் கொண்டு படி எடுத்தல் மரபணு ஒழுங்குமுறை செல் பெருக்கம் சுய புதுப்பித்தல் மற்றும் மீள் உருவாக்கம் போன்ற உயிரியல் செயல்முறைகளைத் தீவிரமாக ஆய்ந்து அறிந்து T CELL என்று அழைக்கப்படும் வகையான செல்களின் வளர்ச்சி சீராக இல்லாமல் மாறுபாடு அடையும் பொழுது புற்றுநோய் ஏற்படுகிறது என்பதை உலகிற்கு அறிவித்தார் விஞ்ஞானி சஞ்சீவ்.
விஞ்ஞானி சஞ்சீவின் அடுத்த முக்கியமான கண்டுபிடிப்பு கர்ப்ப கால நீரிழிவு நோய் குறித்ததாகும் கர்ப்பகால நீரிழிவு நோய் உள்ள பெண்களின் சந்ததிகளில் நீரிழிவு நோய்க்கான இடைநிலை நிரலாக்கம் மீண்டும் அதே T- CELL விஷயத்தில் வளர்ச்சி மற்றும் வேறுபாட்டின் குரோமாட்டின் அமைப்பு ஒன்றைப் பாதித்து பிறகு அது புற்றுநோய்க்கான எக்ஸ் செயலிழக்கத்தை அமைப்பிற்கு வழங்குகிறது என்பது விஞ்ஞானி சஞ்சீவின் முக்கிய கண்டுபிடிப்பாகும். மூலக்கூறு உயிரியல், செல் உயிரியல், உயிரி தகவலியல் என பல துறைகளில் பலவகை ஆய்வுகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானி சஞ்சீவ் புரோடியோமிக்ஸ் என்னும் துறையில் மட்டுமே 14 ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி இருக்கிறார்.
புரோட்டியோமிக்ஸ் என்பது புரதங்கள் பற்றிய பெரிய அளவிலான ஆய்வுத்துறை ஆகும். புரதங்கள் அனைத்து உயிரினங்களின் முக்கிய செயலூக்கிகள் ஆக இருப்பவை ஆகும். இந்த துறை தசை திசுக்களின் கட்டமைப்பு இழைகளை உருவாக்குதல் உணவின் நோதி செரிமானம் மற்றும் டி என் ஏவின் பிரதியாக்கம் ஆகியவற்றில் புரதங்களின் பங்கு என்ன என்பதை ஆய்வு செய்கிறது. உடலுக்கு வழங்கப்படுகின்ற அன்டிபையோடிக் என்கின்ற ஒரு வகை மருந்துகளை எவ்விதம் செயல்படுகின்றன அவை புரதங்களை உயிரணுக்களாக எப்படித் தூண்டுதல் பெற வைக்கின்றன போன்ற தகவல்களை விஞ்ஞானி சஞ்சீவின் ஆய்வுக் கட்டுரைகளில் நாம் பார்க்க முடிகிறது.
விஞ்ஞானி சஞ்சீவ் 1967 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவிலுள்ள பூனாவில் பிறந்தார். சாவித்ரிபாய் பூலே பூனா பல்கலைக்கழகத்தில் தன்னுடைய இளம் அறிவியல் பட்டத்திற்கும் முதுகலை பட்டத்திற்கும், உயிரிவேதியியல் எடுத்து படித்தார்.1996 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாரன்ஸ் பர்க்லீ தேசிய ஆய்வகத்தில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்கு பிறகான ஆய்வு மேற்கொள்ள செல்வதற்கு முன் பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை பெற்றார். குரோமாட்டின் என்னும் துறையின உலகின் ஒப்பற்ற நிபுணராக கருதப்படும் விஞ்ஞானி சஞ்சீவ்,இந்திய தேசிய அகாடமியின் கெளரவ உறுப்பினராக இருப்பதோடு இந்தியன் அகாடமி ஆஃப் சயின்சஸ் நிறுவனத்திலும் கௌரவ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு J D BIRLA விருது பெற்றார். மிகச்சிறந்த மருத்துவ பங்களிப்புகளைக்காக 2010 ஆம் ஆண்டு அவருக்கு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரையாளர்:

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் வியக்கும் இந்திய நரம்பியல் விஞ்ஞானி சந்தியா கௌஷிகா
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

