உலகம் அறிந்த இந்திய கடல் ஆய்வாளர் அதிதி பந்த் (Aditi Pant)
தொடர் 67 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
1983 அண்டார்டிக்காவுக்குப் பயணம் செய்த முதல் இந்தியப் பெண்மணி எனும் பெயரைப் பெற்றவர் அதிதி பந்த். தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக தற்போது பணியாற்றி வருகிறார். கடல் ஆய்வு எனும் தன்னுடைய துறையில் ஐந்து முக்கிய கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளை வைத்திருப்பவர் என்னும் பெருமையைப் பெற்ற இந்தியாவின் ஒரே பெண் விஞ்ஞானி.
67க்கும் மேற்பட்ட முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ள சர்வதேச கடல் விஞ்ஞானி அதிதி பந்த் எனக்கு அறிமுகமானது அறிவியலை வளர்ப்பதற்கான மகாராஷ்டிரா சமிதி என்கிற டாக்டர் தபோல்கரின் அமைப்பில் செயலராக பணியாற்றியவர் என்பதன் மூலம் தான். இந்திய மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காகவும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வருவதற்காகவும் அயராது பாடுபட்ட போராளிகளின் பட்டியலில் எப்போதுமே அதிதி பந்த் அம்மையாருக்கு ஒரு இடம் உண்டு.
பெருங்கடல்களில் உணவு சங்கிலி இயற்பியல்,வேதியியல் மற்றும் உயிரியல் தொடர்பான தகவல்களைச் சேகரித்து தட்ப வெட்ப மாறுதல் எனும் தற்கால மிகப்பெரிய சிக்கல் கடல் உயிரினங்களை எப்படிப் பாதிக்கிறது என்பது குறித்த இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் உலகெங்கும் கவனம் பெற்றவை. அதித்தி பாண்டின் அறிவியல் கடல் பாசிகளின் ஒளிச்சேர்க்கை சம்பந்தப்பட்டதாகும். கடல் அறிவியல் எனும் பிரம்மாண்டமான துறை கடல் வேதியியல், கடல் உயிரியல், கடல் இயற்பியல் என பல பிரிக்கப்படுகிறது. பெருங்கடல்களின் அறிவியல் ஒரு பிரம்மாண்ட துறையாகும்.
புவியின் பெரும் பரப்பு நீர்நிலைகளால் ஆனதாகும் புவி அறிவியலின் மிகப்பெரிய அங்கம் கடல் நீரோட்டங்கள் அலைகள் புவி இயற்பியலின் திரவ இயக்கவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை தன்னகத்தே கொண்டது கடலில் இருந்து கிடைக்கும் ரசாயனப் பொருட்கள் கடலின் சுற்றுச்சூழல் அவ்வப்போது நமக்கு நில அதிர்வை தருகின்ற கடலின் தட்டு டெக்டோனிக்ஸ் என்று இந்த துறை பறந்து விரிந்தது ஆகும். வானியல் உயிரியல் வேதியல் புவியியல் இவற்றோடு நீரியல் என்னும் துறையையும் வானிலை இயற்பியலையும் உள்ளடக்கிய இந்த துறையில் உலக அளவில் பேசப்படும் வல்லுநர்களில் ஒருவர் தான் அதிதி பந்த்.

கடல் ஆய்வுக்கான சர்வதேச கவுன்சில் 1902 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மத்திய தரைக்கடல் அறிவியல் ஆணையம் என்கிற ஒன்று 1919 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவை ஆரம்ப கால முயற்சிகள் ஆக இருந்தாலும் 1927 ஆம் ஆண்டிலேயே இந்தியப் பெருங்கடல் ஆய்வு ஆணையம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது இந்தியா ஒரு தீபகற்பம் மூன்று புறங்களை கடலால் சூழ்ந்திருக்கும் ஒரு நீர் பிராந்தியம் ஆகும். கடல் ஆய்வு என்பது இந்தியாவின் அறிவியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக மிக முக்கியமான ஒரு துறையாகக் கருதப்படுகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன் உணவு உற்பத்தித் துறை தான் இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது.
தொடக்கத்தில் அதிதி பந்த் அவர்களின் கவனம் முழுவதும் கடற்பாசி அல்லது மைக்ரோ ஆல்கா என்பது குறித்ததாக இருந்தது. கடற்பாசிகள் என்பவை மூன்று வகையானவையாக உள்ளன. ரோடோஃபைட்டா என்னும் சிவப்பு நிற பாசிகளும், பியோஃபைட்டா என்கிற பழுப்பு நிற பாசிகளும், க்ளோரோஃபைட்டா என்கிற பச்சை நிற பாசிகளாகவும் இதைத் தவிர இந்த நிறங்களின் கூட்டுக்கலவையாக இருக்கும் பாசிகளும் கடலில் உண்டு. இந்த பாசிகள் அதிகம் இருக்கும் இடத்தில் மீன் வளம் என்றுமே அதிகமாக இருக்கும். கடல் உயிரினங்களுக்கு அத்தியாவசியமான வாழ்விடத்தை இந்த பாசிகள் வழங்குகின்றன. உணவு ஆதாரங்களை பாதுகாக்கின்றன பிளாக் சோனிக் ஆல்கா போன்ற பிற இனங்களை இவை கட்டிக் காக்கின்றன. கடலின் 50 சதவிகித உயிரி என்று கடற்பாசியை அழைக்கிறார்கள். இப்படிப்பட்ட இத்தனை தகவல்களையும் நான் அதிதி பந்த் அவர்களின் கட்டுரைகளில் இருந்து தான் எடுத்திருக்கிறேன்.

அதிதி பந்த் அவர்களின் மிக முக்கியமான பங்களிப்பு நாமே கடற்பாசிகளை வளர்ப்பது தொடர்பானதாகும். உலகளாவிய விவசாய நடைமுறை போலவே கடலில் கடற்பாசிகளை வளர்ப்பது நம்முடைய மீன் வளத்தைப் பெருக்கிக் கொள்ளும் முக்கியமான அம்சமாக அவர் முன்வைத்தார். 1981 ஆம் ஆண்டு அதிதி பந்த் முன்வைத்த இந்த முக்கியத்திட்டத்தை அங்கீகரித்து அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் நாடுமுழுவதும் இதற்கான கடல் சார் நிறுவனங்களை உருவாக்கிக் கொடுத்தார் என்பது வரலாறு.
1983 ஆம் ஆண்டு அதிதி பந்த் அண்டார்டிக்காவுக்குப் பயணம் செய்ய தேர்வானார். இந்தியாவின் அண்டார்டிக்கா பயண ஒப்பந்தம் 1981 ஆம் ஆண்டு கையொப்பமானது. சர்வதேச அண்டார்டிக்கா ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்ட கையோடு இந்திய அண்டார்டிக்கா திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்தது. தேசிய அண்டார்டிக் மற்றும் கடல் ஆராய்ச்சி மையத்தின் கீழ் துருவ மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் அமைக்கப்பட்டது. இந்த கட்டமைப்பு கடலியலாளர் அதிதி பந்த் அண்டார்டிக்காவில் கால்பதித்த முதல் இந்தியப் பெண் என்று அறிவித்தது. அண்டார்டிக் பெருங்கடலில் உணவு சங்கிலியை ஆராய்வதற்காக அதிதி பந்த் கடுமையான தட்ப வெப்ப நிலைகளின்கீழ் நான்கு மாதங்கள் நிலப்பரப்பை ஆய்வுசெய்து அற்புதமான தகவல்களை வெளியிட்டார். பணியின்பொழுது அண்டார்டிக்கா துருவத்தில் இருந்து 2500 கிலோமீட்டர் தொலைவில் இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி தலமான தச்சின் கங்கோத்ரியை அமைப்பதற்கு தன்னுடைய பங்களிப்பைச் செலுத்தினார்.
1984 ஆம் ஆண்டும் மீண்டும் ஐந்தாவது பயணத்தில் அதிதி பந்த் அன்டார்டிகாவுக்கு பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. கடல்சார் இயல் புவியியல் போன்றவைகளில் பல ஆய்வுகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை அறிவித்தார். அதிதி பந்த் 1943 ஆம் ஆண்டு நாக்பூரில் பிறந்தார். அவருடைய தந்தை பிரிட்டிஷ் அரசாங்கத்தில் அயல் உறவு துறையில் பணியாற்றியவர். தாய் ஒரு மருத்துவர். சிறுவயதிலிருந்தே மிகப் பிடிவாதமாக அறிவியல் துறையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அதிதி பந்த் பூனா பல்கலைக்கழகத்தில் தனது இளம் அறிவியல் பட்டத்தை வேதியியலில் அவர் முடித்தார். தன்னுடைய குடும்ப நண்பர்களின் மூலம் அலிஸ்டர் ஹார்டி என்பவர் எழுதிய தி ஓபன் சி (THE OPEN SEA) எனும் புத்தகத்தை பற்றி அறிந்து அதை முழுமையாக தன்னுடைய பள்ளி இறுதி ஆண்டில் அவர் வாசித்தார். ஒரே ஒரு புத்தகம் அது அவருடைய வாழ்க்கையை புரட்டி போட்டது.
கடல்சார் கல்வியைக் கையிலெடுப்பது என்று பிடிவாதமாக முடிவெடுத்தார் இதற்காகத் தொகை சேரும் வரை காத்திருந்து ஹவாய் பல்கலைக்கழகத்தில் கடல்சார் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெறுவதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் உதவித்தொகையைப் பெற்றார் அவரது கல்வி ஆர்வம் கடற் பாசிகளின் ஒளிச்சேர்க்கை வெப்ப மண்டல கடற் பகுதிகளின் திரவ இயற்பியல் போன்றவை குறித்த ஆய்வுகளில் அவரை ஈடுபட வைத்தது.. பரிணாமவியல் காலத்தில் பைட்டோ பிலாங்டனிலிருந்து.. பாக்டீரியாவுக்குக் குறைக்கப்பட்ட கார்பன் ஓட்டத்தின் தன்மை மற்றும் அளவு குறித்து தன்னுடைய ஆய்வறிக்கையை எழுதி முனைவர் பட்டம் பெற்றார்.

திறந்த கடலில் இந்த வகை பாக்டீரியாக்களைச் சென்று அவை குறித்து ஆய்வு செய்வது மிகவும் சிக்கலாகவும் கடினமாகவும் இருந்தது. அவருடைய வழிகாட்டியான டாக்டர் எம் எஸ் தொட்டிங் என்னும் அறிஞர் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக அவருக்கு வெற்றி கிடைத்தது. கடல் பாக்டீரியாக்கள் பற்றி உலக அளவில் ஆய்வு செய்த முதல் அறிஞர் எனும் பெருமையை அதிதி பந்த் பெற்றார்.
கோவாவிலுள்ள நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஓசனோகிராபி (NIO) நிறுவனத்திற்கு அறிஞர் கே என் பணிக்கர் எனும் அறிஞரால் அவர் அழைக்கப்பட்டார். அப்போது இந்தியா திரும்பிய அவர் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார். இந்திய அரசாங்கத்தால் அண்டார்டிக்கா விருது வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார். கடல்சார் விஞ்ஞானியாக மட்டுமின்றி மூட நம்பிக்கைகளுக்கு எதிரான மிகப்பெரிய உயிர்த் தியாகம் செய்த டாக்டர் தபோல்கரின் தோழமை அமைப்பில் ஒரு போராளியாகத் தீவிரமாக இன்றும் பணியாற்றி வருபவர் என்பது அவர் வாழ்வின் முக்கிய செய்தியாகும்.
கட்டுரையாளர்:

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் போற்றும் இந்திய வண்ணத்துப்பூச்சியியல் நிபுணர் ஹரிஷ் கோன்கர்
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


கடல் வளம் நாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவு அதிசயங்களை கொண்டுள்ளது. புவியில் தாது பொருட்களை பற்றிய ஆராய்ச்சி போல் பல மடங்கு ஆராய்ச்சி 71% கடலில் சூழப்பட்டுள்ள கடலில் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய முக்கியமானதொரு பணியை செய்யும் அம்மையாரின் ஆராய்ச்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.