உலகப் புகழ்பெற்ற இந்திய துகள் இயற்பியலாளர் ரோகிணி கோட்போலே (Rohini Godbole)
தொடர் : 38 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
ரோகிணி கோட்போலே பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் ஆய்வு கழகத்தில் உயர் ஆற்றல் இயற்பியல் மையத்தில் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். கடந்த முப்பது ஆண்டுகளாக துகள் இயற்பியல் என்பதன் நிலையான மாதிரி(STANDARD MODEL) மற்றும் அதன் பல்வேறு அம்சங்களை ஆராய்வதில் உலக அளவில் பேசப்படுகிறார். உயர் ஆற்றல் ஃபோட்டான்கள் கட்டமைப்பு என்று அழைக்கப்படும் அனுவின் உள்கட்டமைப்பு ஆய்வில் பல்வேறு ஆய்வு வழிமுறைகளை கண்டறிந்து அறிவித்தவர். அவர் அடுத்த தலைமுறை எலெக்ட்ரான் பாஸிட்ரான் மோதல்களின் வடிவமைப்பிலும் தன்னுடைய பங்களிப்பை செலுத்தியுள்ளார். இவர் இந்தியாவின் மூன்று அறிவியல் அகாடமிகள் மற்றும் உலகின் சர்வதேச அறிவியல் அகாடமி ஆகியவற்றில் கௌரவ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
CERN ஆய்வுக் கூடத்தில் சர்வதேச நேரியல் மோதல் எனும் ஆய்வில் கண்டறிவாளர் மற்றும் ஆலோசனை குழுக்களில் ரோகிணி காட்போல் இடம் பெற்றிருந்தார். இவருடைய ஆய்வு என்ன என்பதை புரிந்து கொள்வதற்கு நமக்கு அணுக்களைப் பற்றியும் அணுக்களின் உள்ளே உள்ள துகள்கள் குறித்தும் அடிப்படை அறிவு தேவைப்படுகிறது. ஒருகாலத்தில் எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவை என்று அறிவிக்கப்பட்டது. அணு என்கிற atom என்னும் சொல் கிரேக்க மொழியில் அதற்குமேல் பிரிக்க முடியாது என்னும் பொருளைக் கொண்டிருந்தது. ஒரு பொருளை பிளந்து கொண்டே போய் இறுதியில் நமக்கு கிடைக்கின்ற அந்த பொருளின் அம்சம் தான் அணு என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் காலப்போக்கில் அணுவானது எலெக்ட்ரான் நியூட்ரான் புரோட்டான் போன்றவற்றால் ஆனது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். பிறகும் ஒரு காலத்தில் இந்த எலக்ட்ரான்களுக்குள் துகள்கள் உள்ளன புரோட்டாங்களுக்குள் துகள்கள் உள்ளன என்பதை கண்டறிந்து அறிவித்தார்கள். உதாரணமாக இது குறித்த துகள் இயற்பியல் என்பது மிகவும் ஆச்சரியமான ஒரு மாற்றத்தை கண்டறிந்து அணுக்கள் என்பவை அதற்கு மேல் பிரிக்க முடியாதவை என்கிற அறிவியல் கூற்றை பழையது ஆக்கியது. போஸான்கள் குவார்க்குகள் போன்ற அணு உள் உறுப்புகளின் உலகிற்குள் நாம் நுழைந்தோம்.
இன்று பல வகையாக துகள்கள் அறியப்படுகின்றன. லெப்டான்கள் என்பவை எலெக்ட்ரான்களின் ஒரு வகையாக உள்ளன குவார்க்குகள். லெப்டான்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு விஞ்ஞானிகள் ஒரு பொது துகள்(standard model) மாதிரியை வெளியிட்டார்கள். நம்மை சுற்றியுள்ள அனைத்து பொருள்களும் எதனால் ஆனவை என்பதை அறிவதற்கு உலகம் இப்போது வேகமாக ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆய்வுகளை நிகழ்த்திக் காட்டி உலக அளவில் புகழ் பெற்றவர் தான் ரோகிணி கோட்போலே.
.jpg?crop=16:9&width=480&format=pjpg&auto=webp&quality=60)
இது இன்னொரு வகையாகும், நான் விவரிக்க முடியும் இந்த பூமியில் மட்டுமல்ல பிரபஞ்சம் முழுவதுமே நான்கு வகையான விசைகள் செயல்படுகின்றன. ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, பலவீனமான அணுவிசை, மற்றும் பலமான அணுவிசை என்பவைதான் அவை. மரத்தில் இருந்து ஆப்பிள் கீழே விழும் பொழுது ஈர்ப்பு விசை அதன் மீது செலுத்தப்படுகிறது. ஒரு மின் பல்பு எரியும் பொழுது அங்கே மின்காந்த விசை வேலை செய்கிறது. பலமான மற்றும் பலவீனமான அணு விசைகள் செயல்படுவதை நாம் கண்களால் காண முடியாது.. ஏன்? அவை அணுவுக்கு உள்ளே செயல்படுகின்றன. இந்த விஷயங்களை குறித்து ஆய்வுசெய்து உலகிற்கு அறிவித்த விஞ்ஞானி தான் ரோஹினி காட்போல்.
காட்போல் பின்வரும் அனைத்து ஆய்வுகளிலும் பங்காற்றியுள்ளார். லார்ஜ் ஹாய்டரோன் மோதல் என்று அழைக்கப்படும் CERN ஆய்வு அவற்றில் மிக மிக முக்கியமானது. CERN என்கிற ஆய்வுக் கூடத்தில் உள்ள சர்வதேச நேரியல் மோதியோடு அவர் தொடர்புடையவர் ஐ எல் சி டிடக்டர் வடிவமைப்பு குழுக்களில் அவர் இடம் பெற்றார். இந்திய அறிவியல் அகாடமியின் பெண்களுக்கான அறிவியலை முன்னெடுக்கும் பல குழுக்களில் அவர் தலைவராக செயலாற்றி உள்ளார். இந்தியாவின் பழங்காலத்தில் இருந்து இன்று வரையிலான பல பெண் விஞ்ஞானிகளின் கதைகளை லீலாவதியின் மகள்கள் என்ற ஒரு தொகுப்பாக வெளியிட்டதில் அவருக்கும் பங்கு உண்டு. அவரது ஆய்வுகளில் சூப்பர் சமச்சீர்மை என்கிற கோட்பாட்டு கட்டமைப்பில் அவருடைய பங்கு பெரிதும் போற்றப்படுகிறது. இது முழு எண் சுழற்சி எனும் போசான் துகள்கள் குறித்தது அவற்றோடு பெர்மியான் என்கிற அரை முழு சுழற்சி கொண்ட துகள்களின் சமச்சீர்மையை கொண்டு போய் இணைத்த பெருமை அவரை சாரும். சூப்பர் சமச்சீர்மையின் மீது பல சோதனைகளை அவர் நடத்தியுள்ளார் .
ஒரு சூப்பர் சமச்சீர் கோட்பாடு என்பது விசைக்கான சமன் பாடுகளுடன் பரு பொருளுக்கான சமன்பாடுகளை இணைக்கும் முயற்சி. கோட்பாட்டு மற்றும் கணித இயற்பியலில் தேர்ந்த ஒருவரால்தான் இந்த துறையில் செயல்பட முடியும். இன்று டஜன் கணக்கான சூப்பர் சமச்சீர் கோட்பாடுகள் உள்ளன. அந்த கோட்பாடுகளில் சூப்பர் சமச்சீர் கோட்பாடு என்பது இரண்டு அடிப்படை வகை துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி மற்றும் நேர சமச்சீர் போன்றவற்றை வகைப்படுத்துவது ஆகும். இந்த விஷயத்தில் உலக வல்லுனராக அவர் திகழ்கிறார் .போஸ் ஐன்ஸ்டின் புள்ளிவிவரங்களை பின்பற்றி அவர் யாருமே தொடாத பெர்மியான் துகள்கள் பற்றிய அற்புதமான ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டு உலகை கவர்ந்தார்.
ரோஹினி தற்போது பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றி வருகிறார் என்பதை முன்பே குறிப்பிட்டோம். புனே பல்கலைக்கழகத்தின் சர் பரசுராம் ராவ் கல்லூரியில் இயற்பியல் கணிதம் மற்றும் புள்ளியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டங்கள் பெற்றார். மூன்று இளங்கலை பட்டங்களை அடுத்தடுத்து வென்ற ஒரு விஞ்ஞானியாக அவர் தான் இருக்க முடியும். மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தனது ஆய்வுகளின் மூலம் அவர் முனைவர் பட்டம் பெற்றார். 1979 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்தில் ஒரு பேராசிரியராக இணைந்து கொண்டார்.. லீலாவதியின் மகள்கள் என்கிற ஒரு புத்தக முயற்சிக்காக இந்தியாவினுடைய போராடும் பெண் விஞ்ஞானிகளின் கதைகளை அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும் என்கிற ஒரு போராட்டத்திற்காக அவர் கண்டிப்பாக போற்றப்பட வேண்டும்.
துகள் இயல் குறித்த இவருடைய இரண்டு பாடப் புத்தகங்கள் உலகம் முழுவதும் இன்று மாணவர்களுக்கு பாடமாக நடத்தப்படுகின்றன என்பது நமக்கெல்லாம் பெருமை. அறிவியல் தொழில்நுட்பத்திற்காக இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் சத்யேந்திரநாத் போஸ் பதக்கம், மேக்நாத் சாகா பதக்கம் போன்றவற்றோடு 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் போற்றும் இந்திய கோட்பாட்டு இயற்பியலாளர் வீரேந்திர சிங் (#Virendra Singh)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Pingback: குவாண்டம் இயற்பியலாளர் ஷசங்க மோகன் ராய்
நவீன கால இயற்பியல் ஆய்வுகளில் இவரின் ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்து கொண்டது மகிழ்ச்சி. அதைவிட இயற்பியலின் ஆராய்ச்சி எப்படி அணுவுக்குள் அணு என்று பல்வேறு நுண்ணிய துகள்களாக ஆராயப்படுகிறது என்பதை கட்டுரை தெளிந்த நீரோடை போல் விலக்கி இருப்பது பள்ளிக்கூடம் மாணவர்கள் முதல் அறிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது.