நிலப்பரப்பின் மீது வாழக்கூடிய விலங்குகளில் மிகப் பெரியது யானை, இரண்டாவது பெரிய விலங்கு நீர் யானை. அதற்கு அடுத்தபடியாக மூன்றாவது மிகப் பருத்த உருவம் கொண்ட விலங்கு காண்டாமிருகம் (Rhinoceros) ஆகும். இந்த விலங்கை நாம் எளிதாக காண முடியாது. சில குறிப்பிட்ட தேசியப் பூங்காக்களில் மட்டுமே காண முடியும். தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் காண்டாமிருகத்தைக் காணலாம்.
காண்டாமிருகம்
காண்டாமிருகம் பருத்த உடல் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் கால்கள் குட்டையாகவும், பருத்தும் காணப்படும். நன்கு முதிர்ச்சியடைந்த காண்டாமிருகத்தின் எடை 1,000 கிலோவிற்கு மேல் இருக்கும். ஆனால் இதன் மூளையின் எடை 400 முதல் 600 கிராம் மட்டுமே இருக்கும்.
காண்டாமிருகம் (Rhinoceros) தடிமனான மற்றும் கடினமான தோலைக் கொண்டுள்ளது. தோல் சற்று தளர்ச்சியாகத் தொங்கிக் கொண்டிருக்கும். தோல் 1.5 முதல் 5 சென்டிமீட்டர் அளவிற்கு தடிமன் கொண்டது. தோள் பட்டை மற்றும் தொடை ஆகிய இடங்களில் ஆழ்ந்த மடிப்புகளாக இருக்கும். பூச்சிகள் மற்றும் சூரிய வெப்பத்திற்கு எதிராக ஒரு இயற்கைப் பாதுகாப்பாக செயல்படுகிறது. முட்கள் மற்றும் கூர்மையான கிளைகளால் ஏற்படும் காயத்தைத் தடுக்கும் வகையில் தோல் அமைந்துள்ளது.

இதன் கடினமான தோலுக்கு அடியில் கொழுப்பு அடுக்கைக் கொண்டுள்ளது. இது உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. தோலில் மயிர் எங்கோ ஒன்றிரண்டு இருக்கும். இதன் முகத்தில் மூக்கின் மையக்கோட்டில் கொம்பு இருக்கும். கொம்பு ஒன்று அல்லது இரண்டு இருக்கலாம். இந்தக் கொம்பு எலும்புகளால் ஆனதல்ல.
இது கெரட்டின் என்ற பொருளால் ஆனது. இது முடி மற்றும் நகங்களை உருவாக்கும் பொருளாகும். மயிர்கள் கற்றையாக ஒன்று சேர்ந்து கொம்பாக வளர்ந்துள்ளது. இந்தக் கொம்பு மிகவும் கெட்டியானது மற்றும் கூரானது. இந்தக் கொம்பு புதர்களை வேரோடு பறித்துத் தள்ளும் கருவியாகவும், பகைவர்களிடமும் இருந்து தன்னைப் தற்காத்துக் கொள்ளவும் பயன்படுகிறது.
காண்டாமிருகத்தின் கண் பார்வைக் குறைபாடு கொண்டது. இதனால் வெகு தூரம் வரை பார்க்க முடியாது. அதே சமயத்தில் சிறந்த வாசனை மற்றும் செவிப்புலன் உணர்வுகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் அபாயத்தைக் கண்டறிய முடிகிறது. இதன் கால் ஒவ்வொன்றிலும் மூன்று விரல்கள் உண்டு. விரல் நுனியைக் குளம்பு மூடிக்கொண்டு இருக்கும்.
இது பார்ப்பதற்கு அமைதியாக தோன்றும். ஆனால் ஆபத்து ஏற்படும் போது ஆக்ரோஷமாக மாறும். இது வேகமாக நடக்கக் கூடியது. சில சமயம் சிறு தூரம் வரை மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். வெப்பமான நாட்களில் சேறு குட்டையில் உருண்டு சேற்றை அப்பிக் கொள்ளும். இது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
காண்டாமிருகம் பழம், புல், இலை என தாவரங்களை மட்டுமே உணவாக உண்ணுகிறது. இது தங்கள் எல்லைகளைக் குறிக்க குறிப்பிட்ட இடங்களில் சாணக் குவியல்களை விட்டு செல்கிறது. இது மற்ற காண்டாமிருகங்களுடன் மோதலைத் தவிர்க்க உதவுகிறது. இது வாழும் சூழலுக்கு ஏற்ப 35 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழும். உயிரியல் பூங்காக்களில் வளர்க்கப்படும் காண்டாமிருகத்திற்கு பாதுகாப்பும், கவனிப்பும் கிடைக்கிறது. ஆகவே அவை நீண்ட காலம் வாழ முடிகிறது.
இனங்கள்
காண்டாமிருகம் ரைனோசெரோடிடே (Rhinocerotidea) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இது மூக்குக் கொம்பன் எனவும் அழைக்கப்படுகிறது. காண்டாமிருகத்தில் பல இனங்கள் முன்பே அழிந்து விட்டன. தற்போது 5 இனங்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் 2 இனங்கள் ஆப்பிரிக்காவையும், 3 இனங்கள் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவையும் பூர்விமாகக் கொண்டுள்ளன.
வெள்ளை காண்டாமிருகம்

இது உண்மையில் சாம்பல் நிறம் கொண்டது. இது மற்ற இனங்களை விட மிகப் பெரியது. இது 3.5 முதல் 4.6 மீட்டர் நீளம் கொண்டது. ஆண் காண்டாமிருகத்தின் எடை 2,400 கிலோவும்,பெண்ணின் எடை 1,600 கிலோவும் இருக்கும். இதற்கு சதுர வடிவ உதடு உள்ளது. இதன் மூக்கில் இரண்டு கொம்புகள் உள்ளன. முன் கொம்பு பெரியது. இது 90 முதல் 150 சென்டிமீட்டர் நீளம் வரை வளரும்.
கருப்பு காண்டாமிருகம்

இது கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவைப் பூர்வமாகக் கொண்டது. இது 3.5 முதல் 3.9 மீட்டர் நீளம் கொண்டது. இதன் உடல் எடை 8,50 முதல் 1,600 கிலோ வரை இருக்கும். ஆண்களை விட பெண் காண்டாமிருகம் சிறியது. இரண்டு கொம்புகள் இதன் மூக்கில் காணப்படும். முன் கொம்பு பொதுவாக 50 சென்டிமீட்டர் முதல் 140 சென்டிமீட்டர் வரை வளரும். சில நேரங்களில் மூன்றாவதாக ஒரு சிறிய கொம்பும் உருவாகலாம். இதன் மேல் உதடு கொக்கி போல் அமைந்திருக்கும்.
இந்த காண்டாமிருகம் 1960 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சுமார் 70,000 இருந்தது. இது 1995 ஆம் ஆண்டில் 2410 ஆக குறைந்தது. இதன் பின்னர் தான் இதன் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 2010 ஆம் ஆண்டின் இறுதியில் 4,880 ஆக உயர்ந்தது. இந்த காண்டாமிருகம் அழிந்து வரும் நிலையில் உள்ளது.
இந்திய காண்டாமிருகம்

இது இந்தியா மற்றும் நேபாளத்தில் காணப்படுகிறது. இது பெரிய ஒரு கொம்பு காண்டாமிருகம் என அழைக்கப்படுகிறது. இதன் கொம்பு 25 முதல் 60 சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும். இதன் தடித்த தோல் இதற்கு ஒரு கவச தோற்றத்தை அளிக்கிறது. ஆண் காண்டாமிருகம் 2,500 முதல் 3,600 கிலோ எடையைக் கொண்டிருக்கும். பெண் காண்டாமிருகத்தின் எடை சுமார் 1,900 கிலோ வரை இருக்கும்.
ஜாவான் காண்டாமிருகம்

இது இந்தோனேசியாவில் ஜாவாவில் மட்டுமே காணப்படுகிறது. இது 1.5 முதல் 1.7 மீட்டர் உயரமும், 3.1 முதல் 3.2 மீட்டர் நீளமும் கொண்டது. இது 9,00 முதல் 1,400 கிலோ எடை கொண்டது. இதற்கு ஒரு கொம்பு மட்டுமே உள்ளது. கொம்பு 26 சென்டிமீட்டர் நீளம் வரை வளரும். ஒரு காலத்தில் இது ஆசியா முழுவதும் பரவலாக இருந்தது. தற்போது ஜாவாவில் 60 காண்டாமிருகங்கள் மட்டுமே உள்ளன.
சுமத்ரான் காண்டாமிருகம்
காண்டாமிருக இனங்களில் இது மிகச் சிறியதாகும். இது போர்னியோ மற்றும் சுமத்ராவில் மிக உயரமான இடங்களில் காணப்படுகிறது. இதன் உடலில் அதிக முடிகள் காணப்படும். முடி சிவப்பு மற்றும் பழுப்பு நிறம் கொண்டது. இது 1.3 மீட்டர் உயரம் கொண்டது. இது சுமார் 2.4 முதல் 3.2 மீட்டர் நீளம் உடையது. இது 7,00 முதல் 1,000 கிலோ எடையைக் கொண்டிருக்கும்.
இதற்கு இரண்டு கொம்புகள் உள்ளன. முன்புறத்தில் உள்ள பெரிய கொம்பு 25 முதல் 79 சென்டிமீட்டர் நீளமும், அதற்கு அடுத்த சிறிய கொம்பு 10 சென்டிமீட்டர் நீளமும் கொண்டது. ஆண்களுக்கு பெண்களை விட பெரிய கொம்பு உள்ளது. இந்த இனம் ஒரு காலத்தில் தென்கிழக்கு ஆசியா முழுவதும் காணப்பட்டது. ஆனால் தற்போது அழிவின் நிலையில் உள்ளது. 2011 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 216 குறைந்துள்ளது.
அழிவு
காண்டாமிருகத்தின் கொம்புகளுக்காகவும், இறைச்சிக்காகவும் வேட்டையாடப்படுகிறது. கொம்புகள் அதிக விலைக்கு கருப்பு சந்தையில் வாங்கப்பட்டு, விற்கப்படுகின்றன. இதனால் பெரும்பாலான உயிருள்ள காண்டாமிருகங்கள் அழிந்து வரும் நிலையில் உள்ளன. காண்டாமிருக கொம்புகள் மருத்துவக் குணம் கொண்டதாக நம்பப்படுகிறது. ஆனால் இது உண்மையில் ஒரு மூடநம்பிக்கையாகும். தற்போது உலகம் முழுவதும் 27,000 காண்டாமிருகங்கள் மட்டுமே உள்ளன.
உலக காண்டாமிருக தினம்
அழிந்து வரும் 5 காண்டாமிருக இனங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உலக காண்டாமிருக தினம் (World Rhino Day) கொண்டாடப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் உலக வனவிலங்கு நிதியம் 2010 ஆம் ஆண்டில் உலக காண்டாமிருக தினத்தை அறிவித்தது. 2011 ஆம் ஆண்டில் முதன்முதலாக உலக காண்டாமிருக தினம் அனுசரிக்கப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 அன்று உலக காண்டாமிருக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக காண்டாமிருக தினத்திற்கு திட்டமிட்டவர்கள் இரண்டு பெண்கள் ஆவர். ஜிம்பாப்வேயில் உள்ள சிஷாக்வே பண்ணையில் பணிபரிந்த லிசா ஜேன் கேம்பெல் ஏற்கனவே உலக காண்டாமிருக தினத்திற்காக திட்டமிட்டார். ஆன்லைனில் இதற்கான பணியைத் தொடங்கினார். அப்போது ரிஷ்ஜா என்ற பெண்ணின் ஆதரவு வலைப்பதிவைக் கண்டார். அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து உலக காண்டாமிருக தினத்தைக் கொண்டாட ஆதரவு திரட்டினர்.
இது NGO க்கள், உயிரியல் பூங்காக்கள், பல நிறுவனங்கள், வணிக அமைப்புகள், காண்டாமிருக ஆர்வலர்கள் என உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் அக்கறை உள்ள நபர்களை ஒருங்கிணைத்தது. இந்த முயற்சி சர்வதேச அளவில் வெற்றி பெறச் செய்தது. இதன் அடிப்படையில் உலக காண்டாமிருக தினம் 2011 இல் கொண்டாடப்பட்டது.
இந்த தினம் உலக வனவிலங்கு நிதியம் மற்றும் பல சர்வதேச அமைப்புகளால் கொண்டாடப்படுகிறது. ஐந்து காண்டாமிருக இனங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கை
பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இந்தியாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. உலகில் உள்ள இந்திய காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு இப்போது இந்தியாவில் அசாமில் அமைந்துள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் மட்டுமே உள்ளன.
இந்திய அரசாங்கம் சர்வதேச காண்டாமிருக அறக்கட்டளை போன்ற நிறுவனங்களுடன் இணைந்து காண்டாமிருக பாதுகாப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. காண்டாமிருகத்தின் மக்கள் தொகையைப் பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் இந்திய காண்டாமிருக விஷன் 2.0 எந்தத் திட்டத்தை உருவாக்கி உள்ளது.
இந்தியாவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 19 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை வெரும் 100 மட்டுமே இருந்தது. 2022 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 3,262 ஆக உயர்ந்தது. அசாமில் 2030 ஆம் ஆண்டுக்குள் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 4,500 முதல் 5,000 ஆக உயர்த்துவது என இந்திய காண்டாமிருக விஷன் 2020 முயற்சி எடுத்து வருகிறது.
கட்டுரையாளர்:

ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

