உலக சிட்டுக்குருவிகள் தினம் – பா. அசோக்குமார்உலக சிட்டுக்குருவிகள் தினம்

திருஷ்டிக்காக
புதுமனையின் போர்டிகோவில்
கட்டப்பட்ட வெண்பூசணிக்காய்
காலச்சூழல் மாற்றத்தால் சுருங்கி
வாடி வதங்கி வற்றிய
நிலையில் நின்றிருக்க

எங்கிருந்தோ வந்து
நாளும் அதனைக் கொத்திக் கொத்தி விளையாடத் தொடங்கின சிட்டுக்குருவிகள் சில…

உதிர்ந்த பூசணி விதைகளையும்
காய்ந்த பரங்கிப் பட்டைகளையும்
அனுதினமும் சுத்தம் செய்வதே
பெருஞ்சுமையாக கருதிய தருணத்தில்…

சின்னஞ்சிறு வைக்கோல் பிரிகளை
செல்ல அலகுகளில் கவ்வி வந்து
காய்ந்த பூசணியின் தூரில்
வைக்க ஆரம்பித்தன அந்தச்
செல்லச்சிட்டுக்கள்….

வைத்துவிட்டுச் செல்வதெல்லாம்
வீசும் காற்றில் அடித்து கீழே விழ விழ
பார்க்கும் நாங்களோ பரிதவித்து தவிக்க
பட்சிகளோ மனந்தளராமல்
பறந்தோடி விரைந்தோடி
கட்டி முடித்தன
தமது இல்லக் கூட்டினை…
எமது இல்லத்திலும் உள்ளத்திலும்.

கட்டித் தொங்கும் கொச்சைக் கயிற்றிலும்
அந்துக் தொங்கும் விளக்கின் வயரிலும்
சிட்டுக்குருவிகள் மாறி மாறி உட்கார்ந்து
கீச்சொலி உதிர்க்கும் போதெல்லாம்
எம்வீட்டு செல்லக்குழவி

‘குழலிசை வெண்பா’ உதிர்க்கும்
“தத்தே….தத்தே…தாத்தே… தத்தே…”
என்ற அசைச் சொல்லின் பேரானந்தத்தை
அளவிடும் அளவுகோல் உண்டோ
இந்த அவனியிலே….

*உலகச் சிட்டுக்குருவிகள் தின நல்வாழ்த்துக்கள்* .

பா. அசோக்குமார்
மயிலாடும்பாறை.