2 ஆம் உலகப்போர் – 75 ஆம் ஆண்டு நினைவுதினம், படிப்பினைகள் – விளாடிமிர் புடின் (தமிழில் : எஸ்.நாராயணன்) 

 

[இந்தக் கட்டுரை இரண்டாம் உலகப்போரின் 75வது வெற்றி தினத்தை ஒட்டி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எழுதிய கட்டுரையின் (The National Interest – http://thenationalinterest.org – Viladimir Putin – The Real Lessons of 75 th Anniversary of World War II – June 18,2020) சுருக்கமான தமிழ் வடிவம்.]
இரண்டாம் உலகப் போர் முடிந்து 75ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று உலக வரைபடம் மாறிவிட்டது. நாஜிப் படைகளை அழித்து, ஒழித்து உலக அமைதிக்கு வழிகோலிய சோவியத் யூனியன் இன்று இல்லை. ஆனால் நம்மில் பலரும் அந்த மாபெரும் போரில் நேரில் பெற்ற அனுபவங்களை சுமந்து நிற்கிறோம். இன்று நமக்கு மீண்டும் அத்தகைய கொடூரம் நடைபெறாவண்ணம் தடுக்கும் பொறுப்பு உள்ளது.

இது பற்றிய உரையாடல்கள் இன்று ஐரோப்பாவிலும் பிற நாடுகளிலும் ஒரு கிளர்ச்சியை தூண்டிவிட்டுள்ளது. பல உணர்ச்சிகரமான வெளிப்பாடுகளும், பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்கிவிடும் என்ற அச்சமும், பலத்த குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. வழக்கம் போல சில அரசியல்வாதிகள் ரஷ்யா வரலாற்றை திருத்த முயல்வதாக புலம்புகின்றனர். ஆனால் அவர்கள் இதில் உள்ள ஆதாரங்களையோ, உண்மைகளையோ ஒன்றைக் கூட மறுக்கவோ, ஒதுக்கித் தள்ளி விடவோ , முடியவில்லை. அது கடினமானது மட்டுமல்ல, இயலாததும் கூட. ஏனெனில் அந்த ஆதாரங்கள் ரஷ்யாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் உள்ளன. எனவே உலக நாடுகளின் நன்மைக்காக அந்த போரின் பாடங்களை மட்டுமல்ல, துயரங்களையும், துரோகங்களையும், குழப்பமான நடவடிக்கைகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதற்காக உண்மை ஆவணங்களையும், சமகால சாட்சியங்களையும் வைக்க வேண்டியது அவசியமாகிறது.

இரண்டாம் உலகப் போருக்கான விதை முதல் உலகப்போரின் முடிவிலேயே விதைக்கப்பட்டுவிட்டது. வெர்செயில்ஸ் உடன்படிக்கையால் நேச நாடுகள் ஜெர்மனி மீது மிகப்பெரும் போர் நட்ட ஈட்டை சுமத்தி அதன் பொருளாதாரத்தை முடக்கின. அந்த ஒப்பந்தம் மூலம் மேற்கத்திய நாடுகள் ஜெர்மனியை சூறையாடுவதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த ஒப்பந்தம் குறித்து நேச நாட்டு படைகளின் தளபதியாக இருந்த பிரான்சு நாட்டு படைத்தலைவர் ஃபெர்டினான்ட் ஃபோக்ஸ், “இது அமைதிக்காக போடப்பட்டதல்ல. இருபதாண்டுகளுக்கு போடப்பட்ட தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை.” என்று கூறியுள்ளார்.

World War Ii Victory Stock Photos, Pictures & Royalty-Free Images

ஜெர்மனிக்கு ஏற்பட்ட இந்த தேசிய அவமானத்தை உலக நாடுகள் மீதான வெறுப்பாக மாற்றி, நாஜிக்கள் சாதுர்யமாக கையாண்டு, அதற்கேற்ப பிரச்சாரத்தை மேற்கொண்டு, ஜெர்மனியை வெர்செயில்ஸ் அவமானத்திலிருந்து மீட்டெடுக்கப் போவதாக அறிவித்து , மக்களை போருக்கு உந்தி தள்ளினர். பிரிட்டனும்,அமெரிக்காவும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இதற்கு உதவினர். அவர்களது நிதி நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் மிக வேகமாக ஜெர்மானிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அதுவும் ஆயுத உற்பத்தியில் முதலீடு செய்தன. ஜெர்மானிய உயர் அதிகார வர்க்கமும்,அரசு நிறுவனங்களும் மக்களின் உணர்வை ஆதரித்தனர். தேசியவாத இயக்கங்கள் ஐரோப்பிய நாடுகளில் தோன்றின.

வெர்செயில்ஸ் உடன்படிக்கை பல்வேறு முரண்பாடுகளையும், குழப்பங்களையும் கொண்டதாக இருந்தது. வெற்றி பெற்ற மேற்கத்திய நாடுகள், தோற்ற நாடுகளின் எல்லைகளை மறுசீரமைப்பு செய்வதிலேயே கவனம் செலுத்தின. இது நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்சினைகளை ஏற்படுத்தி எந்த நேரத்திலும் போராக வெடிக்கும் நிலையை உருவாக்கியது. முதல் உலகப் போரின் முக்கிய விளைவு சர்வதேச சங்கம் உருவானதுதான். இதன்மூலம் உலக நாடுகளுக்கிடையே அமைதியும், கூட்டு பாதுகாப்பும் உருவாகும் என நம்பின. அது, மீண்டும் ஒரு உலகப் போரை தவிர்க்கும் யுக்தி எனவும் நம்பினர். ஆனால் வெற்றி பெற்ற இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்த இந்த சங்கம் பயனற்றதாகி, வெறும் பேச்சு வார்த்தையில் காலம் கடத்தும் அமைப்பாகவே இருந்தது.

அப்போது சோவியத் யூனியன், ஒரு ‘சரிசமமான கூட்டு பாதுகாப்பு அமைப்பை’ உருவாக்க வேண்டும் என்றும், கிழக்கு ஐரோப்பிய ஒப்பந்தம் மற்றும் பசிபிக் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்றும் பலமுறை சர்வதேச சங்கத்தில் வலியுறுத்தியது. ஆனால் அந்த சங்கம் அவற்றிற்கு செவி சாய்க்கவே இல்லை. மேலும் இந்த சங்கம் பின்னர் உலக நாடுகளுக்கிடையே நடந்த எந்தப் பிரச்சனையையும் தடுக்கவோ, தீர்க்கவோ எந்த முன்முயற்சியும் எடுக்கவில்லை. எடுத்துக்காட்டாக இத்தாலி எதியோப்பியாவை ஆக்கிரமித்ததையும், ஜப்பான் சீனாவை ஆக்கிரமிப்பதையும், ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் விவகாரத்திலும் கண்மூடிக் கிடந்தது.

இதற்கெல்லாம் மேலாக செக்கோஸ்லோவாக்கியாவை ஹிட்லர்- முசோலினி, இங்கிலாந்து-பிரான்சு தலைவர்கள் கூட்டாகச் சேர்ந்து பிரிவினை செய்து கொள்ள சர்வ தேச சங்கம் முழு ஒத்துழைப்பைக் கொடுத்தது. செக். நாட்டு பிரிவினை ஏற்பாட்டுக்கு போலந்தும் துணை போனது. மற்ற கூட்டணி நாடுகளுக்கெல்லாம் முன்னதாக , எந்தெந்த பகுதிகளை பங்கிட்டுக் கொள்ளலாம் என ஜெர்மனியும் போலந்தும் முன்னரே பேசி வைத்துக் கொண்டன.

Mussolini and Hitler: The Forging of the Fascist Alliance, by ...

1938 செப். 30ல் போலந்து வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த போலந்தின், ஜெர்மன் தூதர் லிப்ஸ்கி , ” போலந்திற்கும் செக். நாட்டிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டால் ஜெர்மனி போலந்துக்கு ஆதரவு தரும் என்று ஹிட்லர் உறுதி அளித்துள்ளார்.” என்று வெளிப்படையாக அறிவித்தார். ஹிட்லரின் துணையின்றி தான் ஆக்கிரமிப்பு செயல்களில் இறங்க முடியாது என்பதை போலந்து அறிந்திருந்தது. 1938 அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெற்ற இதே தலைவர்களின் சந்திப்பில் , “மியூனிச் மாநாட்டில் போலந்தின் விருப்பங்களுக்கு ஜெர்மனி கொடுத்த அதிகாரபூர்வ ஆதரவுக்கும் குறிப்பாக செக். விவகாரத்தில் தங்களுக்கு துணை நிற்கும் ஜெர்மனி அரசுக்கும் நன்றி தெரிவித்ததுடன், ஹிட்லரின் நிலைப்பாட்டை தமது அரசும் மக்களும் பாராட்டுவதாக” அறிவித்தார் போலந்து அமைச்சர். செக்கோஸ்லோவாக்கிய பிரிவினை கொடூரமானதும், மிக இழிவான செயலுமாகும். இதன் மூலம் மியூனிச் மாநாட்டில் பெயரளவுக்கு தரப்பட்ட உத்தரவாதம் கூட சிதைக்கப்பட்டது. மேலும் பரஸ்பர ஒப்பந்தங்கள் பயனற்றவை என்பதையும் இது காட்டியது. இந்த ‘மியூனிச் துரோகம்’ தான் ஐரோப்பாவில் மிக பெரும் போரை தூண்டிவிட காரணமாக இருந்தது.

இன்று ஐரோப்பிய அரசியலாளர்களும், குறிப்பாக போலந்து தலைவர்களும் இந்த ‘மியூனிச் துரோகத்தை’ முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது போல் மறைக்க பார்க்கிறார்கள். ஏனெனில், ஏற்றுக்கொண்ட கட்டுப்பாடுகளை அவர்களே மீறி , ‘மியூனிச் துரோகத்தை’ ஆதரித்ததோடு தாங்களும் ஜெர்மனியோடு கூட்டு சேர்ந்து செக். நாட்டை கூறு போட்டுக்கொள்ள முயன்றார்கள் என்பதையும் , இந்த காலகட்டத்தில் சோவியத் யூனியன் மட்டுமே செக். நாட்டுக்கு ஆதரவளித்தது என்பதையும் மறைப்பதற்காகத்தான்.

உலக நாடுகளின் நன்மைக்காக சோவியத் யூனியன் பிரான்சுடனும் செக். உடனும் உடன்படிக்கை செய்து கொண்டு இந்தத் துயரம் நடக்காமல் தடுக்க முயன்றது. இதே சமயம் போலந்து தனது சுய நலனுக்காக ஐரோப்பாவில் கூட்டு பாதுகாப்பு அமைப்பு உருவாவதை தடுத்தது. இது பற்றி போலந்து வெளியுறவு அமைச்சர் தங்கள் ஜெர்மானிய தூதருக்கு 1938 செப்.19ம் நாள் எழுதிய கடிதத்தில், ” கடந்த காலத்தில் செக். பாதுகாப்பில் பன்னாட்டு தலையீடு ஏற்படுவதை நான்கு முறை போலந்து தடுத்துள்ளது” என கூறியுள்ளார்.

செக். மக்களுக்கும் ஸ்லோவாக்கிய மக்களுக்கும் நண்பனாக வேடமிட்டிருந்ந இங்கிலாந்தும் பிரான்சும் தங்கள் உறுதி மொழியை கைவிட்டு விட்டு அந்த மக்களை அநாதைகளாக்கி விட்டு ஓடிவிட்டனர். இப்படிச் செய்வதன் மூலம் ஹிட்லரின் கவனத்தை கிழக்கு ஐரோப்பா பக்கம் திருப்பிவிட்டு தாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்றும், இதனால் சோவியத் யூனியனும் ஹிட்லரும் மோதி இரத்தகளரி ஏற்படுத்திக் கொள்ளும் என கனவு கண்டனர்.

இதுவே மேற்கத்திய நாடுகளின் சரணாகதி கொள்கையின் சாராம்சம் ஆகும். இது ஜெர்மனியின் மூன்றாம் பேரரசு (Third Reich) என அழைக்கப்பட்ட ஹிட்லருக்கு மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு எதிரான கூட்டணி என்ற ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருந்த இத்தாலிக்கும் ஜப்பானுக்கும் ஆதரவான கொள்கை ஆகும். இதே கொள்கை 1939ல் ஏற்பட்ட ஆங்கிலோ ஜப்பான் உடன்பாட்டிலும் ஒளிந்திருந்தது. இதன்மூலம் சீனாவை ஜப்பான் ஆக்கிரமிக்க இங்கிலாந்து உதவியது. ஜெர்மனி மற்றும் அதன் நாசகார கூட்டணி நாடுகளால் உலக நாடுகள் பெரும் போரை சந்திக்க வேண்டிவரும் என்ற அபாயத்தை அங்கீகரிக்கக் கூட அவை மறுத்துவிட்டன. அதோடு அப்படியே போர் வந்தாலும் தங்கள் நாடு பாதிக்கப்படாது என கனவும் கண்டனர்.

Who was the worst out of Hitler, Mussolini and Stalin? - Quora

மேற்கத்திய நாடுகள் சோவியத் யூனியனை ஒதுக்கிவிட்டு தங்களுக்குள் பாதுகாப்பு ஏற்பாட்டை செய்து கொள்ளவும், இன்னும் ஒருபடி மேலே போய் தேவைப்பட்டால் சோவித் யூனியனுக்கு எதிராக ஒரு தனி அணியை உருவாக்கவும் திட்டமிட்டிருந்ததை ‘மியூனிச் துரோகம்’ மூலம் சோவியத் யூனியன் நன்கு அறிந்திருந்தது.

மேற்கத்திய நாடுகள் இவ்வாறு இரட்டை வேடம் அணிந்து சோவியத் யூனியனுக்கு எதிராக நின்றபோதும் சோவியத் யூனியன் ஹிட்லருக்கு எதிராக ஒரு கூட்டமைப்பை உருவாக்க தன்னால் இயன்றவற்றை எல்லாம் செய்தது. எடுத்துக்காட்டாக 1939ல் இங்கிலாந்து ஜெர்மனி யுடன் திரைமறைவு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டிருப்பதை உளவுத்துறை சோவியத் அரசுக்கு தெரிவித்தது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அவை நடைமுறையில் இருந்ததோடு ஏற்கனவே பிரான்சு, சோவியத், இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே செய்து கொண்டுள்ள முக்கூட்டு உடன்படிக்கையை போன்றே அது இருந்தது. ஆனால் தெரிந்தும், வேண்டுமென்றே மேற்கத்திய நாடுகள் அதை மூடி மறைத்தன. 1939 ல் மாஸ்கோ வந்த பிரிட்டிஷ் இராணுவ குழுவிற்கு பிரிட்டிஷ் அரசு அனுப்பியிருந்த ஒரு ஆவணத்தில், பேச்சுவார்த்தையை மிக மெதுவாக நடத்தவும், தற்போது இங்கிலாந்து எந்த ஒரு போர் நடவடிக்கையையும் முன்னெடுக்க தயாராக இல்லை என்றும், எனவே குழு எந்த சூழ்நிலையிலும் சுதந்திரமாக எந்த முடிவையும் எடுக்க கூடாது எனவும் வலியுறுத்தி இருந்தது. ஆனால் பிரான்சு இங்கிலாந்து குழுவைச் போலன்றி சோவியத்தின் செம்படை தளபதிகளுக்கு, மூன்று நாடுகளும் இணைந்த இராணுவ பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்த முழு சுதந்திரத்தை சோவியத் யூனியன் வழங்கி இருந்தது.

இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைய போலந்து தனது பங்கை ‘சிறப்பாக’ செய்தது. ஏனெனில் எந்த வகையிலும் இதனால் சோவியத் யூனியன் எந்த பயனும் பெற்றுவிடக் கூடாது என்பதில் அது உறுதியாக இருந்தது. தனது மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தையும் மீறி , செம்படையுடன் இணைந்து ‘வேர்மாக்ட்’ (Wehrmacht- ஜெர்மானிய படை) ஐ எதிர்த்து போரில் இறங்க மறுத்து விட்டது .

இந்த இக்கட்டான சூழலில்தான் ஐரோப்பிய நாடுகளில் கடைசி நாடாக சோவியத் யூனியன் ஜெர்மனியுடன் ‘ஆக்கிரமிப்பு செய்யா உடன்பாட்டை’ செய்தது. இது உண்மையில் மேற்கில் ஜெர்மனியுடனும் கிழக்கில் ஜப்பானுடனும் இருமுனை போர் அபாயம் இருந்த சமயத்தில், அதுவும் கால்கின்கோல் ஆற்றுக்காக போர் நடந்து கொண்டிருந்த நிலையில் கையெழுத்தானது. ஜெர்மனி மற்றும் அதன் கூட்டு நாடுகளுடனான போரில் சோவியத் யூனியன் தனித்து விடப்படும் என்பதை உணர்ந்தே, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த சிறிது அரிய கால அவகாசம் தேவைப்பட்டதை அறிந்து இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.

Wehrmacht | History, Branches, & Definition | Britannica

இன்று பல்வேறு மேற்கத்திய நாடுகளும் இந்த உடன்படிக்கை குறித்து சோவியத் அரசு மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றன. ஆனால் இதற்கு முன்பே அவர்கள் அனைவரும் இரகசியமாக ஜெர்மனியின் காட்டுமிராண்டி தனமான ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக பல்வேறு உடன்படிக்கைகளை செய்து கொண்டதை மிக வசதியாக மறந்துவிட்டனர்.

1938 செப். 20ல் போலந்து நாட்டின் ஜெர்மனிக்கான தூதர் ஹிட்லருடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது, “ஹிட்லர் யூதர்கள் பிரச்சினையை முடித்ததை பெருமைப்படுத்த வார்சாவில் ஒரு நினைவுச்சின்னம் கட்டுவோம்.” என்று கூறியதை யாரால் மறுக்க முடியும்?

மீண்டும் இரண்டாம் உலகப்போர் நிகழ்வுகளுக்கு செல்வோம். ஹிட்லரின் படை செக். நாட்டை ஆக்கிரமிப்பதோடு நின்றுவிடும் என மேற்கத்திய நாடுகள் முட்டாள்தனமாக நினைத்தன. ஆனால் இம்முறை அவன் தாக்கியது தனது கூட்டாளியான போலந்தை. ஹிட்லரின் படை டான்சிக் நகரை கைப்பற்றி துவம்சம் செய்தது.

1939 செப். 8ம் நாள் மின்னல் வேகத்தில் நாஜிப்படை போலந்தில் நுழைந்தது. போலந்து வீரர்கள் தீரமாக எதிர்த்து நின்றனர். அடுத்த ஒரு வாரத்தில் அதாவது செப்.17ல் நாஜிப்படை வார்சாவை நோக்கி வந்தது. மேற்கத்திய நாடுகளின் உதவி கிடைக்கும் என்ற போலந்து படையின் நம்பிக்கை வீணாணது. அதே நேரம் ஜெர்மனிக்கு எதிராக ஒரு கூட்டு பாதுகாப்புப்படை அமைவதை தடுத்த போலந்து தலைவர்களோ மக்களை அந்த கொடுங்கோலர்கள் கையில் விட்டுவிட்டு ருமேனியாவுக்கு தப்பி ஓடிவிட்டனர். மறுபுறம் ஜெர்மனிக்கு எதிராக நேச நாடுகள் போரை அறிவித்து பிரான்சு படைகள் ஜெர்மனிக்குள் சில மைல் தூரமே சென்றிருந்தன. மிகப் பெரும் தாக்குதல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப். 12ல் கூடிய ஆங்கிலோ பிரான்ஸ் போர் கவுன்சில், போலந்து தாக்குதலைக் கண்டு நடுநடுங்கி , பிரான்ஸ் படைகளை பின்வாங்க உத்தரவிட்டுவிட்டது. இப்படித்தான் மேற்கத்திய நாடுகளின் கேலிக்குரிய போலி யுத்தம் துவங்கியது. போலந்துக்கு கொடுத்த வாக்குறுதிகளை கைகழுவி விட்டு பிரான்சும் இங்கிலாந்தும் துரோகம் இழைத்தன. இது பற்றி பின்னர் நடந்த நியூரம்பர்க் விசாரணையின் போது பதிலளித்த ஜெர்மன் படைத்தளபதி,”நாங்கள் 1939 துவக்கத்தில் பெரும் எதிர்ப்பை சந்திக்கவில்லை. ஏனெனில் நாங்கள் 23படை பிரிவுகளுடன் போலந்திற்குள் நுழைந்த போது, மேற்கில் ஆங்கில பிரான்சு நாடுகளின் 110 படை பிரிவுகள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.” என்று கேலியாக கூறினார்.

1939ல் போரை துவக்கிய ஜெர்மனி, சோவியத் படைகளையும் அதனுடன் இணைந்து கொள்ள பலமுறை வற்புறுத்தியது. எனினும் சோவியத் அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. பிரிட்டனும் பிரான்சும் போலந்துக்கு ஆதரவாக தங்கள் படைகளை அனுப்பப் போவதில்லை என்பது உறுதியான பின்புதான், நாஜிப்படைகள் போலந்தை முழுமையாக கைப்பற்றி எல்லையில் உள்ள மின்ஸ்க் நகரை நோக்கி வந்த போதுதான் கிழக்கு எல்லைக்கு தன் செம்படையை சோவியத் அனுப்பியது. அவ்வாறு. செய்திராவிட்டால், வலுவற்ற நிலையில் இருக்கும்போது தேவையின்றி நாஜிப்படைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்திருக்கும். இதனால் யூதர்கள் உட்பட பல லட்சக்கணக்கான மக்களின் உயிரை நாஜிப்படைகளுக்கு பலிகொடுக்க நேர்ந்திருக்கும்.

Amazon.com: Watch World War II: The Wehrmacht | Prime Video

நெருக்கடியான சூழலில் உளவு துறை தகவல்களின்படி சோவியத் ஒரு மாபெரும் மனித குல எதிரியை எதிர்த்து தனித்து போரிட வேண்டிய இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டே, ஜெர்மனியோடு செய்து கொண்ட உடன்படிக்கையில் இருந்த ‘நட்புறவு’ என்பதை அணுகியது. அதே சமயம் இந்த உடன்படிக்கையை காட்டி சோவியத்திற்கும் பிரிட்டனுக்கும் இடையே பிளவை உண்டாக்க பலவகையில் ஹிட்லர் முயன்றான். ஆனால் சோவியத் அதற்கு உடன்படவில்லை.

சோவியத்தை தங்கள் நாசகார கூட்டணியில் இணைத்துக் கொள்ளும் கடைசி முயற்சியாக மால்டோவின் பெர்லின் சந்திப்பை ஹிட்லர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தான். ஆனால் மால்டோவ், ஸ்டாலினின் சீரிய வழிகாட்டுதலின்படி அந்த சந்திப்பில் பொதுவான பேச்சுவார்த்தை மட்டும் நடத்தி எந்த உடன்படிக்கையிலும்கையெழுத்திட மறுத்து விட்டார்.

ஜப்பானும் ஜெர்மனியும் சோவியத்தை இந்திய வளைகுடாவை நோக்கித்தள்ள முயன்றனர். ஆனால் அதனை அடியோடு மறுத்த மால்டோவ் நாஜிக்கள் ஏற்கமுடியாத நிபந்தனைகளை விதித்தார். அதன்படி பின்லாந்திலிருந்து நாஜிப்படைகள் பின்வாங்க வேண்டும் என்றும், பல்கேரியாவுடன் சோவியத் பரஸ்பர நட்புணர்வு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரினார். இதன் மூலம் ஜெர்மனியின் உடன்படிக்கையில் சேர முடியாது என்பதை தெளிவாக்கினார். இதுவே ஹிட்லரை சோவியத் மீது படை எடுக்க தூண்டியது. மாஸ்கோவின் உண்மையான நோக்கங்களையும், நகர்வுகளைமும் தற்போது புரிந்து கொண்டதால், கிழக்குப் போர் முனையில் சோவியத் மட்டுமே தன்னை எதிர்க்க முடியும் என்பதையும், அந்த போரே இந்த உலகப்போரின் முடிவை தீர்மானிக்கும் என்பதையும் நன்கு உணர்ந்தது ஜெர்மனி. இதனால் ஏற்கனவே இருமுனை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த ஹிட்லர் பார்பரோசா (தாக்குதல்) திட்டத்தை அறிவித்தான்.

உலக வரலாற்றில் ஏற்பட்ட இந்த மாபெரும் துயரத்திற்கு, அரசுகளின் தற்பெருமையும், கோழைத்தனமும், ஆக்கிரமிப்புகளுக்கு துணை போனதும், ஒரு சமரசத்திற்கு உடன்படும் மனநிலை இல்லாததும், சுயநலமும், பேராபத்திலிருந்து தாங்கள் தப்பித்தால் போதும் என்கிற குறுகிய மனப்பான்மையும், ஒரு கூட்டு பாதுகாப்பு அமைப்பு உருவாக்குவதை ஏற்க மறுத்ததுமே முக்கிய காரணங்களாகும். தற்போது அனைவரும் கடந்தகால நிகழ்வுகள் பற்றி நேர்மையான, உண்மையான பரிசோதனை செய்வதன் மூலமே மீண்டும் அத்தகைய துயரம் நேரிடாமல் தடுக்க முடியும்.

Vladimir Putin: The Real Lessons of the 75th Anniversary of World ...

இன்று இரண்டாம் உலகப் போரின் 75ம் வெற்றி தினத்தில் அந்த போரின் நினைவுகளை பற்றி பேசுவதற்கு உள்நோக்கம் கற்பித்து, வரலாற்று பாடத்தை கற்று கொள்ள மறுத்தால் பின்னாளில் நாம் மிகப் பெரும் விலை தரவேண்டி இருக்கும். இன்று இரண்டாம் உலகப் போரைப் பற்றிய உண்மை ஆவணங்கள் ஒன்று திரட்டப்பட்டு வருகின்றன. அவையும் , இந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஆவணங்களும் ஒன்று கூட சோவியத் யூனியன் ஜெர்மனிக்கு எதிராக போரிட தயங்கியதாக காட்டவில்லை. அந்த போரின் கசப்பான உண்மைகளை, ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை பதிவிட போர்முனையிலும், சிறைகளிலும், பதுங்குகுழியிலும் புகுந்து பணியாற்றியவர்களை இங்கு நினைவுகூர்வது நமது கடமையாகும்.

இன்று போரில் உயிர்நீத்த தியாகிகளுக்காக எழுதப்பட்ட, ‘ரசோவ் நகரில் கொல்லப்பட்ட போது’ என்ற கவிதை வரிகளை நினைவு கூர்கிறேன். சோவியத் ஜெர்மன் எல்லையில் உள்ள அந்த ரசோவ் நகரில் 1941 முதல் 1943 வரை கடும் போர் நடந்தது. அதில் நமது செம்படையின் 11,54,698 வீரர்களை இழந்தோம். அந்த ஒவ்வொரு வீரனின் பெயரையும் தேடி பதிவு செய்வது அவர்களுக்கு செலுத்தும் மரியாதையாக கருதுகிறேன்.

சோவியத்துக்கு எதிரான போரில் ஜெர்மனி சோவியத் படைகளைப் போல பத்து மடங்கு அதிகமான படைகளை பயன்படுத்தியது. “இந்த போரில் 75% எதிரிகளை சோவியத் மட்டுமே அழித்தது ” என்று அமெரிக்க அதிபர் 1942, ஏப்ரல் 28ம் நாள் , கூறினார். இரண்டாம் உலகப் போரின் போது போர் முனையிலும், எதிரிகளின் சிறையிலும் குறிப்பாக ஹிட்லரின் கொலை முகாம்களிலும், பசியிலும் சுமார் 70லட்சம் மக்களை சோவியத் மட்டும் இழந்துள்ளது. அவர்கள் ஒவ்வொருவரின் தியாகத்தையும் இன்று நாம் நினைவு கூர்கிறோம். சோவியத், தனது மக்கள் தொகையில் ஒவ்வொரு ஏழு பேருக்கும் ஒருவரையும், பிரிட்டன் 127 பேருக்கு ஒருவரையும் , அமெரிக்கா 320 பேருக்கு ஒருவரையும் இழந்துள்ளனர்.

உலகப் பொது எதிரியை எதிர்த்த போரில் உலகநாட்டு மக்கள் அனைவரின் முயற்சியால் வெற்றி பெற்றோம். இங்கிலாந்து மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் வட ஆப்பிரிக்கா போர் முனையில் நாஜிப்படைகளை முறியடித்தது. அமெரிக்க பிரிட்டன் ராணுவம் இத்தாலியை விடுவித்தது. அமெரிக்கா பசிபிக் கடல் பகுதியில் ஜப்பானை வீழ்த்தியது. ஜப்பானிய படைகளை விரட்ட சீன மக்கள் ஆற்றிய மகத்தான பணியை மறக்க முடியுமா? பிரான்சின் தீரமிக்க வீரர்களை மறக்கமுடியுமா?

Parade in Moscow marks Russia's first defeat of German army in ...

சோவியத் யூனியன் மீது தாக்குதல் துவங்கிய பின்தான் ஹிட்லருக்கு எதிரான கூட்டணி உருவாக ஆரம்பித்தது. 1943ல் ஸ்டாலின், ரூஸ்வெல்ட், சர்ச்சில் மூவரும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன்படி ஆங்கிலோ அமெரிக்கப் படைகள் நார்மண்டியில் இறங்க செம்படை உதவியது. 1945ல் மேற்கு முனையில் நாஜிப்படைகளின் முன்னேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அடுத்த மூன்று மாதங்களில் செம்படை ஜெர்மனியை தோற்கடித்து , ஜப்பானை தாக்க புறப்பட்டது.

சோவியத் தலைமை அப்போது, “நமது நோக்கம் பாசிச படைகளை நமது பகுதிகளிலிருந்துமட்டும் விரட்டுவது அல்ல. முழு ஐரோப்பாவையும் ஜெர்மனியின் பிடியிலிருந்து விடுவிப்பதே ஆகும்” என்று அறிவித்தது. 1944 ல் சோவியத் நாட்டிலிருந்து முற்றிலுமாக நாஜிப் படைகள் விரட்டப்பட்டன. விடுவிக்கப்பட்ட நாடுகளின் பசியைப் போக்கவும் அவர்களது பொருளாதார வளர்ச்சிக்கும் சோவியத் யூனியன் உதவியது.

அன்று சோவியத், பிரிட்டிஷ், அமெரிக்க தலைவர்களான ஸ்டாலின், சர்ச்சில், ரூஸ்வெல்ட் ஆகியோர் தங்கள் வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, உலக அமைதிக்காக ஒரு பொது எதிரியை விரட்ட ஒன்றிணைந்து ஒரு ஒப்பந்ததந்தை ஏற்படுத்தினர். அதன் மூலம் உலகில் மீண்டும் அமைதியை ஏற்படுத்தினர். அதற்கு பிறகு யால்டா, டெஹ்ரான், சான் பிரான்சிஸ்கோ உடன்பாடுகளும், பிற பரஸ்பர நல்லெண்ண நடவடிக்கைகளும் தான் இன்று கடந்த 75 ஆண்டுகளாக, பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் போதும் மீண்டும் ஒரு உலகப்போர் நடைபெறாமல் தடுத்திருக்கின்றன. இரண்டாம் உலகப்போரின் முடிவின் 75ம் ஆண்டு நினைவுநாளை கொண்டாடும் இவ்வேளையில் மேலும் வலுவான ஒரு உலக பாதுகாப்பு அமைப்பை உருவாக்கு வதற்கான பணிகளை செய்ய வேண்டியது நமது கடமையாகும்.