02.02.2025 உலக ஈர நில நாள் (World Wetlands Day) சிறப்பு கட்டுரை:
நீல கார்பன் சூழல் அமைப்புகள் (Blue Carbon Systems)
– முனைவர் பா. ராம் மனோகர்
இயற்கை சுற்றுசூழல் அமைப்பு மிகவும் அழகு!நாம் அதனை ரசிக்கிறோம்!அதன் குளுமை, வீசும் காற்றின் தென்றல் அனுபவித்து மகிழ்கிறோம்!எனினும் சூழல் அமைப்பில் உயிரினங்கள் சுவாசித்து, வெளியிடும் கார்பன் என்ற கரிம வாயுவினை, தாவரங்கள் உள்ளிழுத்து, உணவாக மாற்றி, ஆக்சிஜன் தரும் அறிவியல் முறைகளை இயற்கை மேற்கொள்ளும் நிலை சிக்கலானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய சூழல் அமைப்பு, நம் மனித குலத்தின் செயல்பாடுகளால், நவீன அறிவியல் தொழில் நுட்பம், தொழில் வளர்ச்சி, நாகரீக வாழ்க்கை மூலம் கரிம வாயுவினை அதிக அளவில் உமிழ்ந்து, கார்பன் காலடி தடம் (CARBON FOOT PRINT)அதிக அளவில், புவியில் வசிக்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டுள்ளது.
இதனால் புவி வெப்ப மயமாதல் (GLOBAL WARMING) நிலை ஏற்பட்டு பருவ கால செயல்பாடுகளில், (CLIMATE CHANGE) தொடர்ந்து மாற்றங்கள் உருவாகி வருகிறது. இதனால், மனித குலம் இயற்கை பேரிடர்களை, துன்பங்களை சந்தித்து வருவதும் நாம் அறிகிறோம் அல்லவா!? இந்நிலையில் வளி மண்டல கார்பன் அளவினை குறைக்க இயற்கையே, நம்மிடம் ஒரு வரம், தந்துள்ளது, அதுவே வெப்ப மண்டல காடுகள் ஆகும். அவை வெகுவாக கரியமில வாயு உட்கிரகிக்கும் தன்மை கொண்டவை. எனினும் கடல் சூழல், மிக விரைவில் அதிகமான கார்பன் உள்ளிழுக்கின்றன. குறிப்பாக, உலக மெங்கும் காணப்படும் அலையாத்தி (MANGROVES) காடுகள் மற்றும் கடல் தாழைகள் (SEA GRASS), உப்பளங்கள் (SALT MARSHES) என்ற” நீல கார்பன் சூழல் அமைப்புகள் “ (Blue Carbon Systems) இந்த கார்பன் உள்ளிழுத்தல் செயல்பாட்டுக்கு அதிகம் தேவைப்படுகின்றன.
நீல கார்பன் சூழல் அமைப்புகள் (Blue Carbon Systems), கடற்கரை சதுப்பு நிலங்கள் இணைந்த அலையாத்தி காடுகள் (Mangrove forests), வெப்ப மண்டல காடுகள், உள்ளிழுக்கும் கார்பன் அளவினைவிட கூடுதலாக 10 மடங்கு கார்பன் அல்லது கரியமில வாயுக்களை உள்ளிழுக்கின்றன. இது சாதாரணமாக, வெப்ப மண்டல காடுகள், (TROPICALFOREST) உள்ளிழுப்பதைவிட 4 முதல் 5 மடங்கு கார்பன் அளவு ஒரு குறிப்பிட்ட பகுதியில் சேகரிக்கிறது. 2024 ஜூன் மாதம் வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி, ஒரு ஹெக்டருக்கு 1000 டன்கள் அளவுக்கு கார்பனை உள்ளிழுக்கிறது. இந்த அரிய அலையாத்தி காடுகள் (Mangrove forests) மண் அரிப்பு தடுத்து, மண்ணின் உறுதி தன்மை நிலைக்க செய்து, சுனாமி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களை பாதுகாக்கிறது. மேலும் வேறுபட்ட தாவர, உயிரினங்களுக்கும், புகலிடம் ஆக விளங்குகிறது.

அலையாத்தி காடுகள் (Mangrove forests) “கரிம பஞ்சு “, CARBON SPONGE “, எனவும் அழைக்கப்படும். இவை 10%அழிந்து போன நிலையில், 1.6 மில்லியன் டன்கள் கார்பன் உள்ளிழுக்கும் தன்மை வாய்ந்த இயற்கை அதிசயம் என்று, தென் கிழக்கு ஆசிய சூழல் மேலாண்மை பங்கு தாரர் (PEMSA )அமைப்பு கூறுகிறது. மயான்மர் நாட்டில் 5,00000 ஹெக்டர் அலையாத்தி காடுகள் கடந்த 35 ஆண்டுகளில் அழிந்து விட்டதாக கிறிஸ்டோபர் சொக்லெர் என்ற விஞ்ஞானி கூறுகிறார். குறிப்பாக ஆயியார்வாடி டெல்டா பகுதியில் 64% அழிந்து விட்டது.
விவசாயம், நீர் உயிரின வளர்ப்பு, கடற்கரை வளர்ச்சி திட்டங்கள், மக்கள் தொகை பெருக்கம்,நெல் வயல்கள், இறால் பண்ணை ஆகிய தொழில் மூலம் தொடர்ந்து இந்த இயற்கை பாதிக்கப்பட்டு வருகிறது. கடல் தாழை என்ற கடற் புற்களும் கார்பன் உள்ளிழுக்கும் தன்மை கொண்டவை. அலையாத்தி, கடற்கரை சூழல்
ஆகிய இந்த நீல கார்பன் சூழல் அதிக அளவுக்கு, நம் இயற்கை சம நிலை பேணுவதில் முக்கிய பங்கினை தொடர்ந்து வகித்தாலும், பருவ கால மாற்றத்திற்கு தீர்வுகள் தரக்கூடியது என்பதை நாம் உரிய முறையில் புரிந்து கொள்ளவில்லை.
கார்பன் சந்தை என்ற புதிய சூழல் முதலீட்டு முறை, நம் நாட்டில் ஆற்றல் பாதுகாப்பு (திருத்தம்)மசோதா, 2022 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.ஐக்கிய நாடுகளின் பருவ கால மாற்றம் மாநாட்டிற்கு பிறகு இந்த திட்டம் துவக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது. கார்பன் உள்ளிழுக்கும் அளவிற்கு இயற்கை மீட்பு செய்து, படிவ எரிபொருட்கள் பயன்படுத்தி கார்பன் உற்பத்தி குறைக்கும் முறையில், பொருளாதார சலுகைகள் பெறவும் கார்பன் சந்தை உதவுகிறது என்றால் மிகையில்லை. எனினும் இந்த திட்டத்தில் உலகில் நீல கார்பன் சூழல் அமைப்பு (Blue Carbon Systems) மூலம் உள்ளிழுக்கும் கார்பன் அளவு, கணக்கு பற்றிய செயல்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.
ஆஸ்திரேலியா நாட்டில் மட்டுமே அதிக அளவில் கார்பன் குறைப்புக்காக, கடற்கரை சதுப்பு நில முதலீட்டு முறை ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டு வருகிறது. மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் இந்த கடற்கரை சூழல் மீட்பு திட்டங்கள் செயல்படும் நிலை காணப்படுகிறது.
பன்னாட்டு அளவில், பருவ கால மாற்ற சவால்களை எதிர் கொள்ளவும்பொருளாதார நிலையில், வளர்ந்து வரும் நாடுகள், நீடித்த நிலை வளர்ச்சி பெற” நீல கார்பன் சூழல் அமைப்புகள் (Blue Carbon Systems) “மூலம் கார்பன் சந்தை மேம்படுத்தலாம். 2030 ஆண்டில் 50 பில்லியன் டாலர் அளவிற்கு இதில் முதலீடு வரும் வாய்ப்புகள் உள்ளதாக, நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் கடற்கரை பகுதியில் மீன் பிடி தொழில், சுற்றுலா, வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் நிலை ஏற்படும்.இந்தியாவிலும் “இந்திய கடற்கரை சுற்றுசூழல் ஒழுங்கு முறை மண்டல கொள்கை -2023” உருவாக்கபட்டுள்ளது.

உலக பொருளாதார அமைப்பு, கடற்கரையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)15% ஆக வருவதை உறுதி செய்ய முடிவு எடுக்கப்பட்டது. கடற்கரை வாழிடங்கள் பகுதியில் அலையாத்தி காடுகள் (Mangrove forests) உருவாக்கும் திட்ட ம் (MISHTI) 2025- 2028) நமது நாட்டின ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒன்றிய எல்லை பகுதிகளில் 540 சதுர கிலோமீட்டர் பரப்பில் ஏற்படுத்தி, இதுவரை 250 சதுர கிலோமீட்டர் பரப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. உலக பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சி அமைப்பு -OECD) நீல கார்பன் சந்தை முதலீடு மூலம் குறைந்தது ஒரு டாலர் முதலீடு செய்து அதற்கு 6 டாலர் ஈட்ட முடிவு செய்துள்ளது.
கடற்கரை பகுதியில், உரிய சூழலுக்கு ஏற்ப அலையாத்தி காடுகள் (Mangrove forests) உருவாக்குவது அவசியம் ஆகும். பங்களாதேஷ் நாட்டில் சுந்தர வன பகுதியில், கடந்த 30 ஆண்டுகளாக, அலையாத்தி காடுகள் (Mangrove forests) அழிந்து வருகிறது. தமிழ் நாட்டில், பிச்சாவரம், முத்துப்பேட்டை, பகுதியில் இருக்கும் அரிய அலையாத்தி காடுகள் (Mangrove forests) நம் மாநில அரசு வனத்துறை மூலம் சிறப்பாக பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
கார்பன் உள்ளிழுத்தலில் முக்கிய பங்கு வகிக்கும் நீல கார்பன் இயற்கை சூழல் அமைப்பின் அறிவியல் செயல்பாடுகளை, எதிர் கால இளம் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும். உரிய பாதுகாப்பு விழிப்புணர்வு பெறவேண்டும். உலக சதுப்பு நில (அ) ஈர நில நாள், 02.02.25 அன்று குளம், ஏரி, ஆறு, ஆகிய நன்னீர் சதுப்பு நிலங்கள் பற்றிய உரிய விழிப்புணர்வு பெறுவது அவசியம் ஆகும்.
மேலும் கடல், அலையாத்தி காடுகள் (Mangrove forests) போன்றவை இயற்கை உயிர் சூழல் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கிறது.அதன் அவசியம் பற்றி அறிந்து எதிர் கால தலை முறை சந்ததி சிறப்பாக வாழ அறிவியல் பூர்வ விழிப்புணர்வு அனைவரும் பெறவேண்டும்.
எழுதியவர் :
– முனைவர். பா. ராம் மனோகர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

