நூல் அறிமுகம்: இந்துத்துவத்தின் பாசிசக் கூட்டணிகள் – மு.சிவகுருநாதன்

நூல் அறிமுகம்: இந்துத்துவத்தின் பாசிசக் கூட்டணிகள் – மு.சிவகுருநாதன்

 

 (.மார்க்ஸ் எழுதிய அடையாளம் வெளியீடான  இந்துத்துவமும் சியோனிசமும்’  எனும்   நூல் பற்றிய  பதிவு இது.)

பகுதி: ஒன்று 

நூலுக்கு போகும் முன்பு 10 ஆம் வகுப்பு சமூக அறிவியலில் உள்ள சீயோனிய இயக்கம், பாலஸ்தீன பிரச்சினை குறித்த சில வரிகளைக் கவனிப்போம். ‘சீயோனிய இயக்கம்’ என்ற பெட்டிச் செய்தியாக,

“யூதர்களின் பூர்வீகப்பகுதியான  பாலஸ்தீனத்தில் 1900 இல் ஆயிரம் யூதர்களே குடியிருந்தனர். இவ்வினத்தின் பதினைந்து  மில்லியன் மக்கள் ஐரோப்பாவிலும் வடக்கு  அமெரிக்காவிலும் பரவிக்கிடந்தனர்  (இதுவே ‘புலம்பெயர்‘ சமூகம் என்று  குறிக்கப்படுகிறது). இந்த யூத இனம் திட்டமிட்ட கொடுமைப்படுத்தலுக்கு காலம்காலமாக  உட்படுத்தப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு  உள்ளாகியிருந்தார்கள். பத்தொன்பதாம்  நூற்றாண்டின் பிற்பகுதியில் இத்தகைய  கொடுமைகள் ரஷ்யாவிலும் (உலக யூத  ஜனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர்  இங்கு வாழ்ந்து வந்தார்கள்) பிரான்ஸிலும்  ஜெர்மனியிலும் உச்சத்தை அடைந்தது. சில  யூதர்கள் பாலஸ்தீனத்திற்குச் சென்றபோது  வேறுசிலர் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும்  பிரிட்டனுக்கும் சென்றனர். வியன்னாவில்  பத்திரிகையாளராக இருந்த தோடோர்  ஹெர்சல் யூத நாடு என்ற பெயரில் 1896 ஆம்  ஆண்டு ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டார்.  அதற்கு அடுத்த ஆண்டு (1897) உலக சீயோனிய  அமைப்பு உருவாக்கப்பட்டது”. (பக்.64, 10 சமூக அறிவியல் தொகுதி 01)

‘அரேபிய தேசியவாதம்’ என்ற பெட்டிசெய்தி பின்வருமாறு உள்ளது.

“இருபதாம்  நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து சிரியாவிலும் ஈராக்கிலும் தேசிய உணர்வு வளர ஆரம்பித்தது.  அதன் நீட்சியாக எகிப்திலும் தேசிய உணர்வு  சுடர்விட்டுப் பரவியது. அரேபிய கூட்டமைப்பு  மார்ச் 1945 இல் கெய்ரோவில் உருவாக்கப்பட்டது.  அதைத் தோற்றுவித்த உறுப்பினர்களாக எகிப்து,  ஈராக், சிரியா, லெபனான், சவுதிஅரேபியா,  ஜோர்டான், ஏமன் ஆகிய நாடுகள் வீற்றிருந்தன”. (பக்.64, மேலது)

‘பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு’ என்ற தலைப்பில்,

“இஸ்ரேல் என்ற தேசம் 1948இல்  உருவாவதற்கு முன் பாலஸ்தீனில்  வாழ்ந்த அரேபியர்களுக்கும் அவர்கள் வம்சாவளியினருக்குமாக உருவாக்கப்பட்ட ஒரு பரந்த அமைப்பு இதுவாகும். இரகசியமாக  செயல்பட்டுவந்த எதிர்ப்பு இயக்கங்கள் தங்களை ஒருங்கிணைக்க 1964இல் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். எனினும் 1967 ஜுனில் நடந்த அரபு இஸ்ரேல் போருக்குப் பின்பே இவ்வமைப்பு  கவனத்தை ஈர்க்கலாயிற்று. இவ்வமைப்பு 1960கள், 70கள், 80களில் – இஸ்ரேலுக்கு  எதிராக நேரடி கொரில்லாப் போரை நிகழ்த்தி  வந்தாலும் 1990களில் அந்நாட்டோடு அமைதி  உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டது.  இவ்வமைப்பின் முக்கிய தலைவர் யாசர்  அராபத் ஆவார். (பக்.65, மேலது) (அது என்ன நேரடி கொரில்லாப் போர்? மறைமுக கொரில்லாப் போரும் உண்டோ?)

Yasser Arafat - - Biography

‘யாசர் அராபத் (1924-2004)’ பற்றிய அறிமுகக் குறிப்பில்,

“யாசர் அராபத் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் செயற்குழுவிற்கு  1969 இல் தலைமையேற்று  2004 இல் அவர் இறக்கும்  வரை அப்பொறுப்பில்  வீற்றிருந்தார். அவர் அனைத்துப் பாலஸ்தீன அரபு  கொரில்லாப் படைகளுக்கும் முதன்மைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.  இக்கால கட்டத்தில் பாலஸ்தீனியப் பிரிவினைவாதிகள் மன்னர் ஹுசைனின் அரசைக் கவிழ்க்க முயன்றதோடு பாலஸ்தீன விடுதலை அமைப்பு  ஜோர்டான் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டது.  எனினும் அராபத்தும் அவர்தம் பாலஸ்தீன  விடுதலை அமைப்பும் பெய்ரூட்டைச் சென்று  சேரவும் அந்நகரம் 1982 வரை இஸ்ரேலுக்கு எதிரான செயல்பாடுகளுக்குத் தளமாகவும்  அமைந்தது. ஒரு தலைப்பாகையுடனும் மறைவாக அவர் வைத்திருந்த துப்பாக்கியும்  ஆலிவ் மரக்கிளையின் பகுதியும் அவர்தம் இராணுவச்சீருடையும் காண்போர் மனதில் பாலஸ்தீனப் பிரச்சனையின் தீவிரத்தை நினைவூட்டுவதாக அமைந்தது (பக்.66, மேலது)

“1945 அக்டோபர் கடைசியில் யூதத் திரைமறைவு அமைப்புகளான இர்கூன் ஸ்வாய்  லூமி (சீயோனியத் துணை இராணுவ அமைப்பு)  ஸ்டென் காங்கும் (சீயோனிய பயங்கரவாத அமைப்பு)  தொடர்ச்சியாக பயங்கரவாதத் தாக்குதல்களை பெருமளவில் தொடுத்தன. இருப்புப்பாதைகள்,  பாலங்கள், விமானத்தளங்கள், அரசு அலுவலகங்கள்  போன்றவை வெடிவைத்துத் தகர்க்கப்பட்டன”. (பக்.66, மேலது) என்று மட்டும் ஓரிடத்தில் போகிற போக்கில் சியோனிசத் தீவிரவாதம் சுட்டப்படுகிறது.

இங்கு இந்துத்துவம் ஒரு வாழ்க்கைமுறை என்ற பரப்புரைகள் நடப்பதுபோல், பாடநூலும் சியோனிசத்தைக் கணிக்கிறது. நேரடியாகச் சொல்லாவிட்டாலும் தொனி அப்படித்தான் உள்ளது. யூத இனவாதத்தை பரிதாபத்திற்குரிய ஒன்றாகவும் அரபு தேசியவாதம் பயங்கரவாதமாகவும் சித்தரிக்கும் போக்கு காணப்படுகிறது. சியோனிசம் குறித்த பரிதாபப் பார்வையின் பின்னணி என்ன?

பகுதி: இரண்டு

இந்துத்துவத்தையும் சியோனிசத்தையும் ஒப்புநோக்கி ஆராயும், 12 கட்டுரைகள் அடங்கிய பேரா. அ.மார்க்சின் இச்சிறு நூல், அன்றிலிருந்து இன்றுவரை தொடரும் இதன் உறவுகளைப் ஆராய்கிறது. அயல்நாடுகளில் வாழும் மேட்டுக்குடி இந்தியர்களின் வெளிப்படையான பாசிச உறவுகளை அடித்தட்டு, தலித் தோழர்கள் அம்பலப்படுத்துவதையும் எதிர்த்துப் போராடுவதையும் அ.மார்க்ஸ் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

இன்று இந்துத்துவவாதிகள் தங்களது கருத்தியல் பாசிசம் என்றோ சியோனிசம் என்றோ அடையாளப்படுத்திக் கொள்வதில் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை. சியோனிய அரசியலே இஸ்ரேலுக்கும் இந்தியாவிற்கும் பொருத்தமானது. சியோனிஸ்டுகளுடன் கருத்தியல் அடைப்படையில் இணைந்து செயல்படவேண்டும் என்று வெளிப்படையாக இயங்கும் போக்கையும் நவீன தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி அவர்கள் செய்யும் பரப்புரைகளையும் ‘ஸ்வராஜ் மேக்’ இணையதளத்திலுள்ள 11 கட்டுரைகளையும் அ.மா. எடுத்துக்காட்டுகிறார். (பக்.03)

“இந்துத்துவம் சியோனிசத்தை அனைத்து அம்சங்களிலும் வழிகாட்டு நெறியாகக் கொள்ள வேண்டும்.

இந்தியா இஸ்ரேலுடன் நெருக்கமாக உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.

இஸ்ரேலின் அரசியலையும், அதன் வளர்ச்சி குறித்த அணுகல் முறைகளையும் இந்தியா அப்படியே பின்பற்ற வேண்டும்”, (பக்.03&04)

என்பதே இவர்கள் முன்வைக்கும் கருத்துகளின் சாரமாக இருப்பது எடுத்துக்காட்டப்படுகிறது. “மதம், இனம் அல்லது ஒரே இரத்தம் என்கிற அடிப்படையில் ஒரு தேசியச் சமூகத்தைக் கட்டமைக்கும் வகையில் சியோனிசமும் இந்துத்துவமும் ஒன்று”, எனவும் பொது எதிரியான முஸ்லீம்களைக் கையாள்வதில் இந்தியாவிற்கும் இஸ்ரேலியர்களுக்கு ஒரு இயல்பான நெருக்கம் உள்ளதை இவர்கள் இனங் காண்கின்றனர். (பக்.05)

By 2047, Sangh would become indistinguishable from Indian society ...

இவ்விரண்டு தேசியங்களும் பலவீனமான தமது மண்ணையும் (யூதர்கள்) உரிமையையும் (இந்துக்கள்) இழந்து நின்றன.  மதச்சார்பின்மை, புதிய ஜனநாயக அரசு, நவீன சிந்தனைமுறை எல்லாம் இரு சமூகங்களையும் ஒரே மாதிரியாக பாதித்தன. இவை கலாச்சாரத் தேசியத்தை வலியுறுத்தினாலும் அதற்குள் பன்மைத்துவத்தையும் வெளிப்படைத் தன்மையையும் முற்றாக மறுக்கவில்லை, என்பதே இவர்கள் அடையாளங் காணும் ஒற்றுமைகளாகும். (பக்.05-07)

மதச்சார்பின்மை, பன்மைத்துவம், தாராளவாதம், குடிமைத் தேசியம், சம உரிமைகள், விஞ்ஞானப்பார்வை போன்றவற்றால் தேசம் தாழ்ந்து கிடப்பதாகப் புலம்பும் இவர்கள், ஜனநாயகம், சமத்துவம், தீண்டாமை மற்றும் பெண்ணடிமை குறித்து கள்ள மௌனம் காப்பதை அம்பலப்படுத்துகிறார். (பக்.08) இவற்றை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில் இருக்கும் தயக்கமே காரணம் என்கிறார்.

சாவர்க்கர், தயானந்த சரஸ்வதி, பக்கின் சந்திரர், விவேகாநந்தர், அரவிந்தர், திலகர் போன்றோரைத் தலைவர்களாக ஏற்கும் இவர்கள், காந்தி, நேரு, அம்பேத்கர், தாகூர் போன்றோரை முற்றாக நிராகரிக்கின்றனர். இந்து மதத்திற்குள் நின்று அதில் சீர்திருத்தங்களை வலியுறுத்திய ராஜாராம் மோகன்ராயையும் புறக்கணிப்பதன் வாயிலாக இவர்களது அரசியல் தன்மையை தீவிரத்தை உணரமுடிகிறது. (பக்.08)

ஆர்.எஸ்.எஸ்ஸை. தோற்றுவித்தவர்களின் ஒருவரான மூஞ்சே இத்தாலிய ஃபாசிஸ்ட் முசோலினியை சந்தித்து, அங்குள்ள ராணுவப்பள்ளிகளைப் (பலில்லா) பார்வையிட்டு பாராட்டியதோடு அதேபாணியில் இங்கு பள்ளிகளைத் தொடங்கியதும் அப்படித் தொடங்கிய ‘போன்சாலா இராணுவப் பள்ளி’க்கும் மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு தீவிரவாதச் செயல்களில் உள்ள தொடர்பையும் கோட்சே, சாவர்க்கர் ஆகியோரின் கொள்ளுப்பேத்தி ஹிமானி சாவர்கர் இப்பள்ளியை நடந்தி வந்ததும் சுட்டப்படுகிறது. (பக்.10)

முசோலினியின் பாசிச அறிக்கையை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டதும் சுபாஷ் சந்திர போசை ஹிட்லரிடம் கொண்டு சேர்ந்ததில் உள்ள பங்கையும் குறிப்பிடுகிறார். (பக்.10) இவர்கள் பேசும் சுதேசியம் எப்போதும் விதேசியமே. “யாரெல்லாம் இனவாதத்தையும் மானுட வெறுப்பையும் அந்த அடிப்படையில் கொலை பாதகச் செயல்களையும் இயக்க அடிப்படையில் முன்னெடுத்தார்களோ அவர்களே இவர்களுக்கு வழிகாட்டிகள், குருநாதர்கள். சுதந்திரப் போராட்ட காலத்தில் லண்டனில் செயல்பட்ட ;இந்தியா ஹவுஸ்’ உட்பட எல்லாவற்றையும் நாம் இந்தக் கோணத்திலிருந்துதான் பார்க்க வேண்டும்”, (பக்.10) என்கிறார்.

காந்தி மற்றும் அவர்களது கொள்கை மீதான வெறுப்பால் அவரது படுகொலை நடக்கிறது. இதனால் இந்தியாவில் ஒடுங்கியிருந்த பாசிச சக்திகள் பாரதீய ஜனசங், பா.ஜ.க. என புதிய முகமூடிகளை மாட்டிக்கொண்டு இன்று பெரிய அளவில் வளர்ந்துள்ளனர்.

“விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட ‘யூதர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இஸ்ரேல்’, எனும் கருத்தாக்கம்தான் சியோனிசம் தனக்கு ஆதரவாக முன்வைக்கும் ஒரே ஆதாரம்”, (பக்.13) இதைப்போலவே ‘அகண்ட பாரதததின்’ பூர்வகுடிகளாக இந்துத்துவம் தன்னைக் கற்பிதம் செய்துகொள்கிறது.

காந்தி, நேருவின் அணுகுமுறை, இந்துத்துவ அணுகுமுறை என சியோனிசம் குறித்த இருவேறு அணுமுகுறைகள் இருந்ததைக் குறிப்பிட்டு, பாலஸ்தீனம் அரேபியர்களுடையது. அங்கு யூதர்களை குடியமர்த்துவதை ஏற்க முடியாது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளை நம்பியிருப்பதைவிட அரேபியர்களிடம் சமாதானமாகப் போவதே மேல். யூதர்களின் நடவடிக்கையை பயங்கரவாதம் என்பதே காந்தியின் கருத்தாக இருந்ததை விளக்குகிறார். (பக்.19)

நேருவின் கருத்தும் இதேதான். அதனால்தான் எகிப்தின் நாசருடன் அணிசேரா இயக்கம் என்ற கோட்பாட்டை முன்னெடுத்தார். அரபு நாடுகளுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இஸ்ரேலுடன் உறவாடவில்லை. மாறாக காவி பயங்கரவாதம் முசோலினி, ஹிட்லர் போன்ற பாசிஸ்டுகளுடனும் சியோனிஸ்டுகளிடனும் தன்னை அடையாளங் கண்ட போக்கை இந்நூல் எடுத்துரைக்கிறது. (பக்.20)

சஹாரா தமிழ்] காவி பயங்கரவாதத்தின் ...

யூதர்களின் பாலதீன ஆக்ரமிப்பைக் கொண்டாடிய கோல்வால்கர், நாஸி ஜெர்மனியின் யூத அழிப்பையும் வெளிப்படையாகப் பாராட்டினார். ஹிட்லரின் இன அழிப்பை ஒரு ‘தூய ஆரிய’ தேசத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இன அழிப்பை ‘இன வேட்கை’யாகவும் (race spirit) கொண்டாட முடிந்தது. (பக்.21) இதைப்போல “கடந்த பல நூற்றாண்டுகளில் இங்கு உயிர்க்கொண்ட இதர மதப் பண்பாடுகளின் அடையாளங்களை ஒழித்து இந்து இந்தியாவை தூய்மை செய்யவேண்டும்”, (பக்.22) என்கிற ஆரிய இனவெறியைக் கொண்டு, அதன்படி செயலாற்றுகின்றனர்.

இஸ்ரேலின் ‘அலியாஹ்’ (aliyah) எனப்படும் ‘திரும்புதல் சட்டத்தை’ இந்துத்துவவாதிகள் அப்படியே ஏற்கிறார்கள். (பக்24) அந்நிய நாடுகளில் துன்புறுத்தப்படும் இந்துக்களுக்கு அடைக்கலம் வழங்கப்படும் என்கின்றனர். குடியுரிமைச் சட்டங்கள் அதற்கேற்றவாறு திருத்தம் செய்யப்படுகின்றன.

“இஸ்ரேலுக்கு வெளியில் உள்ளவர்களால்தான் ஆபத்து. இந்தியாவுக்கோ அதன் உள்ளே வசிப்பவர்களாலேயே ஆபத்து உள்ளது”, (26) என்று சொல்வதன் வாயிலாக இந்து அல்லாத மக்களை எதிரிகளாகக் கட்டமைப்பதும் அவர்களை மிரட்டுவது ஒரே கலாச்சாரத் தேசியத்தின் கீழ் ஒருங்கிணைப்பதான பாசிச வெறி செயல்படுத்தப்படுகிறது.  “சுமார் 120 மில்லியன் முஸ்லிம்களால் இஸ்ரேல் இன்று சூழப்பட்டுள்ளது. இந்தியாவோ 120 மில்லியன் முஸ்லிம்களை (தனக்குள்ளேயே) கொண்டுள்ளது”, (பக்.41) என்ற ஒரு குரல் தன்மையிலிருந்து அமெரிக்க, இஸ்ரேல், இந்தியக் கூட்டணியின் (பாசிசம், சியோனிசம், இந்துத்துவம்) கருத்தியல் ஒன்றிப்பு புலப்படுவதாகக் கொள்ளலாம்.

பகுதி: மூன்று

“பல்வேறு இன மக்கள், மதக் கருத்தியல்கள், வழமைகள், மொழிகள், கலை இலக்கியங்கள், உணவுகள், புவி அமைப்புகள் (landscapes) ஆகியவற்றின் மத்தியில் இயல்பாக முகிழ்க்கும் ஒரு cosmopolitan உணர்வையும் அனுபவத்தையும்,  அவற்றின் ஊடாக உருப்பெறும் மேன்மையான மானுட விகசிப்பையும் கருக்கிச் சாம்பலாக்கி இவர்கள் மத்தியில் குறுகிய மத அடையாளத்தை உருவாக்குவது”, (பக்.15) இந்துத்துவ அணுகல்முறையாக உள்ளதும், அதற்கு ஏதுவாக உயர்த்தப்பட்ட சாதி இந்துக்கள் மனதில் திரண்டு வரும் ஒருவகையான புலம்பெயர் குற்ற உணர்வு (Diasporic guilt) சாதகமாக இருப்பதும் கட்டுரைகளில் விளக்கப்படுக்கிறது. (பக்.35) இதன் மறுபக்கம் வெளிப்படும் இஸ்லாமிய வெறுப்புணர்வை கல்வியிலும் பாடநூல்களிலும் கலந்துவிடுகின்றனர். இதே அணுகுமுறை இந்திய, தமிழகப் பாடநூல்கள் தயாரிப்பிலும் இருப்பது கொடுமையானது.

மேலைச் சுகங்களை அனுபவிக்கும் இவர்களது உள்ளத்தில் சீழ்க்கட்டியாக இந்த குற்ற உணர்வு இருப்பதை எடுத்துகாட்டுகிறார். இவர்கள் இங்கு இந்துக் கலாச்சார சுகங்களை வருணப் பாதுகாப்பையும் அனுபவித்தவர்கள் ஆயிற்றே. மணிமேகலைக் காப்பியத்தில், காம வேட்கையுடன் அடையத் துடிக்கும் உதயகுமாரனை மணிமேகலை புறக்கணித்து ஒதுங்கும்போது, “ஒரு தாசி குலத்தில் பிறந்தவள்; வருணப் பாதுகாப்பு இல்லாதவள். இவளுக்கு இத்தனை திமிரா? இவளது பாட்டியை அணுகி இவளை நான் அடைவேன்”, என்று சூளுரைத்ததை எடுத்துக்காட்டி விளக்குகையில் அ.மார்க்சின் எழுத்து வன்மை பளிச்சிடுகிறது. (பக்.35)

இந்துத்துவ அமைப்புகளுக்கு நிதிகள் எப்படிக் குவிகிறது? என்கிற வினாவிற்கு விரிவான விடை கிடைக்கிறது. கடல்கடந்து மேலை நாடுகளில் குடியேறியுள்ள இந்திய மக்களிடம் குறுகிய இந்துத்துவ உணர்வை  ஊட்டி பெருமளவு நிதி திரட்டப்படுகிறது. அமெரிக்காவில் அற நிறுவனங்களாகப் பதிவு செய்து வரிவிலக்கு பெற்றுள்ள ஆர்.எஸ்.எஸ்., வி.இ.ப. போன்றவற்றின் அமைப்புகள் பேரளவு நிதியைத் திரட்டி அவற்றின் துணை அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கின்றன. (பக்.27-30)

காவி பயங்கரவாதம் – புதிய கலாச்சாரம் ...

இந்தியாவில் ஏற்படும் பேரிடர்களுக்கென வசூலிக்கப்படும் நன்கொடைகள் இந்துத்துவ வெறியூட்டல்களுக்கும் இஸ்லாமியர்களுக்க்கு எதிராகப் பயன்படுத்துவது அந்தக் கொடையாளிக்கே தெரிய வாய்ப்பில்லை என்பது அதிர்ச்சி தகவலாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய்ச் சேரும் என நம்பியிருக்கும் மக்கள் அச்சத்திலும் வெறுப்பிலும் உறைந்திருப்பர், என்ற ‘ஆவாஸ்’ அறிக்கையை மேற்கோள் காட்டி விளக்குகிறது. (பக்.31-34)

நவீன உலகின் இண்டர்நெட் இந்துத்துவவாதிகளுக்கு தொழில்நுட்பம் வாய்த்திருக்கிறது. எனவே சிந்துவெளி முத்திரைகளில் உள்ள எருதை குதிரையாக்கி இணையவெளியில் உலவ விடமுடிகிறது. வலதுசாரி மதவாத சக்திகளின் தொடர்புகள் யூத சியோனிஸ்டுகள், கிருஸ்தவ சியோனிஸ்டுகள் என்பதாக நீண்டுள்ளதையும் ஒரு கட்டுரை விரிவாக எடுத்துக்காட்டுகிறது. (பக்.45-50)

இண்டர்நெட் இந்துத்துவவாதிகளுக்கு உலகளவிலான வளர்ப்புப் போக்கையும் ஏகாதிபத்திய பொருளாதாரத்தில் எற்பட்டுள்ள மாற்றத்தை உய்த்துணரும் ஆற்றல் இல்லை. இவர்களது வரலாறு, மொழி ஆய்வுகளனைத்தும் சிறுபிள்ளைத்தனமானவை; கல்வியாளர்களால் எள்ளி நகையாடப்பட்டவை (பக்.54) என்பதையும் கட்டுரை சுட்டுகிறது.

இறுதியாக, “இஸ்லாமிய வெறுப்பு, பொருளாதார அடிமைத்தனம், இராணுவமயமான அரசியல் இவை அற அடிப்படையில் ஏற்க இயலாதாவை மட்டுமல்ல; அரசியல் அடிப்படையிலும் முட்டாள்தனமானவையும்கூட”, (பக்.55) என முத்தாய்ப்பாக முடித்து வைக்கிறார்.

உலகின் வளர்ச்சிப் போக்கை உணராமல் அமெரிக்கா, இஸ்ரேல் பின்னால் போவது போன்ற முட்டாள்தனமான வழிகளைத்தான் இந்துத்துவவாதிகள் கண்டடைய முடியும்.  அவர்களது மூளையின் புத்திசாலித்தனம், அவ்வளவுதான்!

பேரா. அ. மார்க்ஸ் இந்த்துத்துவ பாசிச எதிர்ப்பில் பல்லாண்டாக முன்னணியில் இருப்பவர். ஓய்வறியாச் செயல்பாடாக இத்தகைய பாசிசக் கூறுகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். அவரது நீண்ட நெடிய போராட்டப் பாதையில் இக்குறுநூலும் ஒரு மைல் கல்லாகும்.

இந்துத்துவமும் சியோனிசமும் | Buy Tamil ...

நூல் விவரங்கள்:

 இந்துத்துவமும் சியோனிசமும்  

 .மார்க்ஸ்

  முதல் பதிப்பு:  2018

பக்கங்கள்: 56

விலை: 50    

 வெளியீடு:அடையாளம்,

1205/1, கருப்பூர் சாலை,

புத்தாநத்தம் – 621310,

திருச்சிராப்பள்ளிமாவட்டம்.

 பேச:   04332 273444, 9444772686

மின்னஞ்சல்: [email protected]

 

 

 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *