“சாலாம்புரி” நாவல்-லில் இருந்து….
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல், சிறு பத்திரிகை என பன்முகத் தளங்களில் இயங்கிவரும் இந்நூலாசிரியர் அ. வெண்ணிலா அவர்களின் படைப்புகள், ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வந்தவாசியைப் பிறப்பிடமாகக் கொண்ட தோழர், முதுகலையில் கணிதம் மற்றும் உளவியல் படித்தவர். 2009-2010ஆம் ஆண்டு தமிழகத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழுவில், ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பங்களிப்பு நல்கியிருக்கிறார்.
வெண்மையில் கருப்பும் சிவப்பும் வண்ணமேறிய துணிக்குச் ‘சாலாம்புரி’ என முன்னுரையில் தலைப்பின் பொருளறிந்து வாசிக்கத் தொடங்கிய எனக்கு, வாசித்து முடித்தவுடன், ‘திராவிட கழகத்திலிருந்து’ பிரிந்த ‘திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் 1957ஆம் வருட கதைக்களம் என்பதால் ‘சிவப்பையும், கருப்பையும்’ ஒரு குறியீடாகவே உணர்த்திியிருக்கிறார் என்பது விளங்குகிறது.
அக்காலக்கட்டத்தில், நெசவாளர் குடும்பங்கள் அதிகமிருந்த அம்மையப்பநல்லூர் எனும் அழகான கிராமத்தில் எளிய மனிதர்களின் வாழ்வியலில் நடந்தேறிய அரசியல் சார்ந்த மாற்றங்களையும், கொள்கைச் சார்ந்து அப்போதுதான் வேர் பிடிக்கத் தொடங்கியிருந்த நாத்திகம், பகுத்தறிவு, சுயமரியாதை, கருத்தியல்களின் அறிமுகங்களைக் கிராமத்து வெள்ளந்தி மனங்கள் எதிர்கொண்ட போது நிகழ்ந்த தடுமாற்றங்களையும் பொருளாதாரத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான அவர்களின் போராட்ட நகர்வுகளையும் குறுக்குவெட்டுத் சித்திரமாக பதிவுச் செய்திருக்கிறது இந்நாவல்.
முக்கிய கதாபாத்திரம் தொடங்கி துணைப் பாத்திரங்கள் வரை அனைவரிடையே நிகழும் உரையாடல்களே கதைக்குப் பலம். ஊர் என்பதே தன் அடையாளம் என்ற சமூகப் பிரக்ஞையுடன் தன் குடும்பத்திற்கு உழைத்தும், அவர்களின் நம்பிக்கையைச் சிதைக்காமல் கட்சியின் கொள்கைகளைப் பரப்பும் பிரயத்தனங்களை மேற்கொள்ளும் அக்கால இளைஞர்களின் வாழ்வியலை மையமாக வைத்து நெசவுத் தொழில் பின்னணியில் விரியும் கதையில் நடராஜனே முக்கிய பாத்திரம்.
இளவயதிலேயே தந்தையை இழந்த நடராஜனுக்கு இரண்டு தங்கைகள், இரண்டு தம்பிகள். உணவகம் நடத்திக் கொண்டிருந்த அவரது தந்தைக்கு, நடராஜனுக்குப் படிக்கும் ஆர்வமிருந்தும், படிக்க வைக்க மனமில்லை. அதற்கு அவர் சொல்லும் காரணம், படித்து அரசாங்க வேலைக்குச் சென்று கிடைக்கும் ஊதியத்தை விட, சுயதொழிலின் வழிவரும் வருமானம் பல் வகையிலும் மேலானது என்பதே. இதிலிருந்தும், தனக்குக் கீழ் இரண்டு தங்கைகளிலிருந்தும், பதினெட்டு வயதிலேயே நடராஜனுக்குத் திருமணம் முடித்தது அக்கால பண்பாட்டு சூழலைத் தெளிவாக விவரிக்கிறது.
நடராஜனின் பெரியப்பா வடிவேலு முதலியார் ஊரில் முக்கியமான மனிதர். அரசியல் சார்ந்து வெளியாகும் பத்திரிக்கைகளைப் படிக்க தூண்டுவதிலிருந்து, நுட்பமான அரசியல் பாடங்களைக் கடத்திய பொறுப்பு இவருக்கென்றால், கிராமத்து மனிதர்களின் மனங்களைப் படிக்கவும், ஊரின் நெளிவு சுளிவு போக்குகளை அனுசரித்து, அனைவரையும் அன்பால் அரவணைக்கும் மனித மாண்பைக் கற்றுத் தருவது ராஜு முதலியார்தான். அக்கால வழக்கப்படி பெயருக்குப் பின் சாதியை இணைத்துக் கூப்பிடும் வழக்கத்தையும் உள்ளபடியே உணர்த்துகிறார் ஆசிரியர்.
பொது சேவையில் முழுதும் ஈடுபட, தன் தொழில் தடையாக இருப்பதாகச் சிந்தித்துக் கொண்டிருந்த நடராஜனுக்குச், சூழல் சாதகமாகிக் கடையை மூடும் நிலைக்கு அவனைக் காலச்சூழல் உந்தித் தள்ளுகிறது. பின் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட அவனுக்கு உழைப்பு சுரண்டலின் சதி புலப்படுகிறது. கூட்டுறவு சங்கத்தின் மூலமே, மக்களுக்கு நியாயம் வழங்க முடியும் என கண்டறிந்து முழுமூச்சாகத் தன் கட்சி வெற்றிபெற தீயாய் களமிறங்குகிறான்.
அக்கால பெண்களின் நிலையை நாவலின் பல பக்கங்களிலிருந்து புரியலாம். நடராஜனின் அம்மா கன்னியம்மாள், தன் கணவனின் இறப்பிற்குப் பின், வெளியில் செல்வதைக் குறிப்பாக தங்கள் உணவகத்திற்குக் கூட செல்வதைத் தவிர்க்கிறாள். வீட்டிலிருந்தபடியே சட்னி, சாம்பார் தயாரித்து உதவுகிறாள். தன் அண்ணன் மகளான தேவியை பருவமெய்தும் முன்பே தன் மகனுக்கு மணமுடிக்கிறாள். வறுமை சூழலை முன்னிறுத்தி தன் மகளான ருக்குவின் சம்மதத்தைக் கேட்காமலேயே அவளுக்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறாள். ஏகாம்பரி போன்று இளவயதிலேயே கணவனை இழந்து தனித்து வாழும் பெண்கள் தங்களது மன ஆற்றலுக்கும், தனிமை விரட்டலுக்குமாக, ஊரில் பல்வேறு குடும்பங்களில் நடக்கும் சுக துக்க நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து, தங்கள் சொந்த நிகழ்வுகளாக பாவித்து அனைத்து வேலைகளிலும் தங்களை அர்ப்பணித்து வாழ்தலை இலகுவாகியிருக்கிறனர்.அரசியல் கள நுட்பங்களை அழகியலோடு இடைச்செருகலாக பதிவு செய்திருக்கிறார்.
நூலின் விவரம்:
“சாலாம்புரி” நாவல்
எழுத்தாளர் அ. வெண்ணிலா
சமூகப் புதினம்,
அகநி வெளியீடு,
நவம்பர் 2020,
448 பக்கங்கள்,
ரூ 400/-
நூல் அறிமுகம் எழுதியவர் :
பா. கெஜலட்சுமி,
திருவெற்றியூர்
சென்னை – 19.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.