நூல் அறிமுகம்: எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் “கங்காபுரம் நாவல்” – கருப்பு அன்பரசன்

Writer A. Vennila in Gangapuram Novel Book Review by Karuppu Anbarasan. Book day Website is Branch of Bharathi Puthakalayam


பள்ளியில் பயின்ற காலமதில் வரலாற்றுப் பாடத்தினுள்  மீதான ஈர்ப்பு எப்போதுமே உண்டு. கரிகால் சோழனும், ராஜ ராஜனும், கல்லனையும்.. பெரிய கோயிலின் நந்தியும்  கல்விச் சுற்றுலா சென்ற பிறகு நினைவிற்குள் முழுவதுமாய் இறங்கி நின்றார்கள். வயதும் அனுபவமும் கூடிட, நினைவிற்குள் இருந்த சோழ அரசர்களின் மறைக்கப்பட்ட, குழப்பம் மிக்க, சுயநலம் சூழ்ந்த அதிகாரப்பசியின் சூழ்ச்சி மிக்க கொலைகளும் இழுத்து வெளியே போட்டது
கல்லனையின் உறுதியையும், பெரிய கோவிலின் பிரமாண்டத்தையும், அழகியலையும் மனசிற்குள் அப்படியே விட்டுவிட்டு.
கொஞ்சம்  “மாத்தியோசிக்கும்” புத்தியும் நம்மை விரல்பிடித்து இழுத்துப்போக  தேவரமும், பதிகங்களும் ஒலித்து வந்த சோழ நாட்டின் திருக்கோவில்களின் கருவரைக்குள் எவருக்கும் புரியாத மொழியில் மந்திரங்களை ஓதிட, வடஇந்திய பார்ப்பனர்களை அழைத்து வந்து, சாதியால் பிளவு பட்டுக் கிடந்தாலும் கோவிலின் திருப்பணிகளுக்குள் ஒற்றுமையாய் இருந்து வந்த மண்ணின் மனிதர்களை வெளியேற்றியதும் மகா சோழர்களின் ஆட்சியில்தான் என்பதை அறிந்ததாலும் சோழ சாம்ராஜ்ஜியத்தின் மேல் இருந்த பிடித்தமெல்லாம் சிதறிவிழத் தொடங்கியது. இந்த ஒரு மனநிலையிலேயே நான் பயணிக்க.. கைகளில் தோழர் அ.வெண்ணிலா அவர்களின் எழுத்தாளுமையில் “கங்காபுரம்” நாவல் வந்தமர்ந்து வாசித்துப்பார் என்றது.
நாவலின் பக்கமெங்கிலும் மூன்றாண்டுகால வெண்ணிலாவின் உழைப்பானது, கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்திட அரசன் ராஜேந்திரன் மேற்கொண்ட கண்மூடாதிருந்து அலைந்த..ஓடிய.. திரிந்த.. பெரும் உழைப்பை ஒத்ததாக இருக்கிறது. வார்த்தைகளின் வசீகரம், சொல்ல வந்ததைக் காட்சிப்படுத்துவதில் வளமையும் வடிவுமான சொற்களின் கோர்வை.. புனைவினூடாக முதல் நாவலிது என்பதாக உணரமுடியவில்லை என்னால். பேரன்பும் வாழ்த்துகளும் தோழர் வெண்ணிலா. சோழர் கால வரலாற்றை இன்னொரு தளத்தில் அணுகி தமிச் சமூகத்திற்கு கொடுத்திருக்கிறீர்கள் நீங்கள்.  எழில்கூட்டிடும் அட்டைப்பட வடிவமைப்போடு கொண்டு வந்திருக்கும்
அகநி வெளியீட்டிற்கும் வாழ்த்துகள்.
மணம் செய்து கொண்டாலும் இறுதிவரையிலும் அரண்மனை வாழ்வினை உதறிவிட்டு படைவீரர்களோடு மட்டுமே வாழ்ந்து வந்த வீரமாதேவி, சக்ரவர்த்தி ராஜேந்திரனின் கடைசி மனைவி. 82 வயது ராஜேந்திரனின் மறைவைத் தாங்கமுடியாத வீரமாதேவி உடன்கட்டையேறி தானும் அவனோடு மரணத்தை தழுவிய போதில், “மரணத்தன்றும் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டான் ராஜேந்திரன்” என்கிற வார்த்தைகள்தான் இந்த நாவல் முழுக்க வரலாற்றுப் புனைவாகப் படைக்கப்பட்டிருக்கிறது. தன்னுடைய முதல் படையெடுப்பில் தொடங்கிய  வெற்றியைத் தொடர்ந்து  தந்தை ராஜ ராஜ சோழனின் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திட  50 வயதைக் கடந்தபிறகும். படைத்தலைவனாகவே தொடர்ந்திட.. அவனுக்கான  பட்டாபிஷேகம் என்பது தந்தையால் நடத்தப்படுவதென்பதற்கு குடும்ப நெருக்கடிகளும் புறச் சூழலுமே காரணமாகிறது. இளவரசனாக பட்டம் சூட்டவேண்டிய வயதில் தன் மகனும் வளர்ந்திருக்கும் இருக்கும் நிலையில்,  தனக்கு  இத்தனை காலதாமதாமாக சோழ சாம்ராஜ்ஜியத்தின் அரசனாக பட்டம் சூட்டப்படக் காரணம் தன் மூத்த அண்ணை லோகமா தேவியும்.. அவரின் நடவடிக்கைகளுக்கு நியாயம் சேர்ப்பித்துடுமாறு நடந்து வரும் ராஜ ராஜனின் செயல்களும் அவனுக்குள் ஒரு பிடிமானத்தளர்வை விதைத்துவிட..
தான் சக்ரவர்த்தியாக பொறுப்பேற்ற பிறகும், சோழ சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகளை விரிவுபடுத்திட போர்பல நடத்தி கிடைத்த வெற்றிகள், கொண்டு வரப்பட்ட பொன் ஆபரணங்கள் அனைத்தும் தன் ஜெயத்தின் வழி என்பதை அறிந்தாலும், தந்தையின் ஆறாண்டுகால கடும் உழைப்பே மாபெரிய தஞ்சை திருக்கோவில்.. ஆனாலும் அதில் இருக்கும் லிங்கமும், நந்தியும் உருவாமாகிட நார்தாமலை மக்களின் நியாயம் தாங்கிய எதிர்ப்பு தடையாகி நின்றபோது தன்னுடைய நேரடி தலையீட்டில்  நந்தியும், லிங்கமுமிருக்கும் கோவில் நிமிர்ந்து வளர்ந்திருந்தாலும் தன்னை சாம்ராஜ்ஜியத்தின் தனிப்பெரும் சக்கரவர்தியாக பார்க்காமல் ராஜராஜனின் மகனாகவே குடும்பத்தினர் உள்ளிட்ட குடிகள் அனைவராலும்  பார்ப்பதென்பது, தன்னுடைய தனித்தன்மையும், அடையாளமும் ராஜ ராஜனின் பெரும்புகழுக்குள் அமிழ்ந்து கிடப்பதாகவும், ஒழிந்து மூழ்குவதாகவும் ஏங்கி தனக்கானதொரு தனித்துவத்திற்கான மன எழுச்சிக்குள் ஆட்படுகிறான்.  ராஜேந்திரனின் இந்த உளவியல் களத்தில் தனது கங்காபுரத்தை நிர்மாணித்திருக்கிறார் ஆசிரியர் வெண்ணிலா.
ராஜராஜனின் அடையாளத்தில் இருந்து தன்னை வெட்டியெடுத்து தனியானதொரு, தனக்கானதொரு அடையாளமும் பேசபடவேண்டும் என்பதற்காக  ராஜேந்திரனின் தனித்துவ நிகழ்வுகளை நாவல் கதையூட்டத்தினூடாக பல இடங்களில் இயல்பாக பதிவாக்கி இருக்கிறார் நாவலாசிரியர்.  இது ராஜ ராஜன் உயிரோடு இருக்கும் காலத்தில், ராஜேந்திரனின் பிறந்த நாளில் நடைபெற்ற ராஜ குடும்பத்தினர் எவருமே பங்கேற்காத  தில்லையம்பனின்  வீதி உலா–மக்கள் திரளுக்குள் முகிழ்ந்தெழும் குழப்பம்– மனித உயிர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பில் இருந்து தொடங்கிடுகிறது நாவலின் எதிர்ப்பார்ப்பு.  ராஜராஜனின் படையெடுப்பு மான்ய கடகத்தில் தோல்வியில் முடிந்து, அதற்காக அரண்மணைக்கு வெளியே குடிசைப்போட்டு தான் வெற்றி பெறாமல் இனி அரண்மனைக்குள் நுழையமாட்டேன் என  சூளுரையை நிகழ்த்தியவேளை, மான்ய கடாகத்தின் மேல் தனது தலைமையிலான போரை நிகழ்தி வெற்றிபெற்று  தனது தந்தையை அரண்மனைக்குள் அழைத்துச் சென்று அவரின் சபதத்தை முடித்து வைத்தார்.
Writer A. Vennila in Gangapuram Novel Book Review by Karuppu Anbarasan. Book day Website is Branch of Bharathi Puthakalayam
ராஜேந்திரன் என்றும்.. மன்னன் ராஜ ராஜனின் கடும் உழைப்பால் , சோழ சாம்ராஜ்ஜியத்தின் அடையாளத்தில் ஒன்றாக இருந்திட வேண்டும் என்பதற்காக கலையம்சம் மிளிரும் பெரிய கோவிலை இருநூற்று பதினாறு அடியில் நிர்மாணித்து பணிகள் நடைபெற்று வரும் வேளையில், நார்தாமலை குடிவாசிகள் கோவில் கட்டுமானத்திற்கு அளித்துவந்த பாறைகளை அனுப்பாமல் நிறுத்தி வைக்க; அறிந்த ராஜேந்திரன் தனது நேரடித் தலையீட்டால் அவர்களுடைய  கோரிக்கைகளான  மக்களின் வாழ்நிலை அறியாமல் அரசு அதிகாரிகள் கடுமையான அடுக்குமுறை வழியாக வரிவசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்கிற உறுதிமொழியளித்த பிறகே பாறைகள் தஞ்சை நோக்கி அனுப்பினார்கள்  என்று பதிவாக்கி, ராஜ ராஜன்–அரசு அதிகாரிகள்–குடி மக்களுக்குமான இடைவெளியை ராசேந்திரனின் தலையீட்டைச் சொல்லி இயல்பாய் பதிவாக்கி இருக்கிறார் நாவலாசிரியர்.
வாழ்வின் சாரிபாதியை ராஜேந்திரன் கடந்த பின்னர், சோழ சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி எனும் முடி சூட்டல் நிகழ்வே குடும்ப அங்கத்தினர்களின் நெருக்கடிகளும், குடிமக்களின் பரவலான எதிர்பார்ப்பு என்கிற நிர்பந்தமும்தான் காரணம் என ராஜேந்திரன் உணரும் தருவாய், “உரிமையிருக்கும் இடத்தில் அங்கீகாரம் இல்லாமலோ அல்லது மறுக்கப்பட்டோ இருக்கும் மரணவலி.. வீரனை அவனுடைய ஆயுதத்தால், எதிரி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் கண்ணெதிரில் கொல்வதற்கு சமமாகும்” என்கிற நினைவுகளில் பதிவாக்கி,” தான் விடும் மூச்சுக்காற்றுக்கூட தனதாக இல்லையே” என ஏங்கிடும் தருவாயில் ராஜேந்திரனின் உளவியலை, ராஜ ராஜனின் மரணத்திற்குப் பிறகு பதிவாக்கி  அவனின் மனதிற்குள் தனித்துவம் என்கிற  அவதானிப்பின் முளைவிடுதலை பதிவாக்கியிருக்கிறார் நாவலாசிரியர்.
“நான் நானாக இருக்க ஓரிடம் வேண்டும், தந்தையை நினைவுபடுத்தாத, தந்தையைப் போல என்ற சொல்ல வாய்ப்பில்லாத ஓரிடத்திற்கு செல்ல வேண்டும்” என்கிற முனைப்போடு தன் சக்ரவர்த்தி பயணத்தை தொடங்கிய ராஜேந்திரன் உப்புவணிகத்தை இனி அரசே எடுத்துக் கொள்கிறது, உப்பு காய்ச்சுவர்கள் இனி அரசு அனுமதி இன்றி ஈடுபடக் கூடாது என்கிற ஆணை பிறப்பிக்கிறார். உப்பு குடிகளிடையே பண்ட மாற்றாகவும், வியபாரிகளுக்கு விலையாகவும் விற்கப்பட்டு சாம்ராஜ்ஜியம் முழுவதும் வியபாரிகளின் தனித்தனி விலை விற்பனைக்கு முடிவுகட்டியது.. எல்லோருக்கும் ஒரே விலையிலான உப்பு என்கிற வழியினை உருவாக்கியது என்று  ராஜேந்திரனின் அரசு என்கிற பதிவும், அதே நேரத்தில்; பெருவுடையாரின் கழுத்தில் அணிவிக்கப்பட்ட விலையுயர்ந்த மாணிக்க கல் பதித்த ஆபரணம் காணாமல் போனதை காரணமாக வைத்து அதை கண்டு பிடிக்க முடியாத ராஜேந்திரன் அரசு எல்லோரும் உரிமையோடு புழங்கி வந்த கோவில் நிர்வாகத்திற்குள் சொந்த நிலம் வைத்திருபவர்களும், பார்பனர்களும் மட்டுமே இனி வருங்காலத்தில் நிர்வாகிகளாக வர முடியும் என்கிற பார்பனர்களின், உடமையாளர்களின் சூழ்ச்சிக்குள் ஆட்பட்டுக் கிடந்தான் என்பதையும் பதிவாக்கி எவரின் பக்கம் சோழ சாம்ராஜ்ஜியம் நடைபோடத் தொடங்கியது என்பதை சொல்லி இருக்கிறார் நாவலாசிரியர்.
இராஜ ராஜன் ஆட்சிக் காலத்திலே இத்தகைய சூழ்ச்சிவலை எப்படி பார்ப்பனர்களால் கோவில் கருவறைக்குள் நிகழ்த்தப்பட்டது.. அதை எதிர்த்து ராஜ ராஜனோ, ராசேந்திரனோ ஏதும் செய்ய முடியாக மயக்கத்தில் இருக்க வைத்தது, மொழி புரியாத வேதங்களின் ஒலி என்பதையும் பதிவாக்கி, சோழ அரசர்கள் வேத பாடசாலைகள் நடத்திட மெனக்கெட்டு ஆட்சிபுரிந்ததையும் வீரமா தேவியின் அறிமுகத்தில் காட்சிப்படுத்தி இருப்பார் நாவலுக்குள் ஆசிரியர். வீரமா தேவியின் பெண்கல்வி உரிமைக்கான இடத்தில் நடைபெறும் உரையாடலில் ஆசிரியர் வெண்ணிலா, தோழர் வெண்ணிலாவாக பார்க்க முடிகிறது. அருமையான உரையாடல்.. வாழ்த்துக்கள் தோழர்.
அதே நேரத்தில் உழைக்கும் எளிய சாதிமக்களுக்கு எதிராக  தொடர்ந்து தங்களின் மேலாதிக்கத்தைப் பார்ப்பனர்கள் தொடர்ந்தபோது வெகுண்டெழுந்துக் கிளம்பிய இளைஞர்கள் சிவன் கோவிலில் நுழைந்து பார்ப்பனர்களுக்கு  என்று சோழன்  ஒதுக்கிய நில உரிமைக்கான செப்பேட்டினை  உடைத்து நொருக்கி, தங்களின் கால்நடைகளை காயப்படுத்தியதற்கு காரணமான பார்பனர்களையும் காயப்படுத்தி ஈடு செய்த சேதியினை ஜெயம்கொண்டானின் உடையாளூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் வாயிலாக பதிவாக்கி இருக்கிறார் வெண்ணிலா.
ராஜகுருக்களாக இருந்து அரசனை, ஆட்சியை தங்கள் வழி நடத்துவதில் குயுக்தியும், சூழ்ச்சியும், சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி எத்தனை பேரு பெற்றிருந்தாலும் தங்களுக்கான சமன்செய்ய முடியாத மேலான இடத்திலே இருப்போம் என்பதை முரன்பாடுகள் கொண்ட கரூவூர் தேவரின் உரையாடலிலும்,  சர்வசிவ பண்டிதரின் உரையாடலிலும் காணப்பெறலாம் நாவலுக்குள்.
சோழ சாம்ராஜ்ஜியத்தின் சொத்துக்கள் அனைத்துமே சிற்றறசுகளின் மேல் படை நடத்தி அவர்களிடம் இருந்து எடுத்துவரப்பட்ட விலை உயர்ந்த பொருட்களின் அடையாளங்களே.. அத்தனையும் கோவிலுக்குள் அடைக்கப்பட்டு சிலைகளாகவும், கலைகளாகவும் பரிணாமம் அடைந்திருக்கிறது என்பதையும், ஒவ்வொரு போரின் போதும் தோற்றவர்களும், வென்றவர்களும் மீண்டெழுவதற்கான காலஅவகாசமென்பது இரண்டு மூன்றாண்டுகளாகும் என்பதையும் , ஒவ்வொரு மன்னனின் மாட்சிமைத் தாங்கிடவும் வல்லமையைப் பறைசாற்றவும் நடத்திடப்பட்டது என்பதை; அதனில் இயல்பு வாழ்க்கை இழந்து நின்றது.. செத்தது.. மன்னனின் அதிகார வேட்டையில் எளிய மக்கள்தான் என்பதை இன்னும் ஆழமாக பதிவாக்கி இருக்கலாமோ தோழர் வெண்ணிலா என்கிற உணர்வு  எனதின் அடி மனசில் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தது நாவல் வாசித்திடும் போதினில்.
தஞ்சையும், பெரிய கோவிலும், சோழ நாட்டின் அமைச்சர்கள் தொடங்கி குடிமக்கள் வரை ராஜ ராஜனின் பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டு இருக்கிறதே, தந்தையைவிட வெற்றிகள் பல பெற்ற தனதின் தனித்தான அடையாளத்தை சொல்வதென்றாலும் கூட ராஜ ராஜனின் பெயர், மாண்புகள் உச்சரித்தப்பிறகே உச்சரிக்கப்படுவதால் தனதின் சுயம் நிலை நிறுத்தப்படவேண்டும் என்கிற மனநிலை உந்தித்தள்ள, குடும்பத்தினர்கள் அனைவரின் எதிர்ப்பையும் மீறி தலைநகரை தஞ்சையில் இருந்து  ஜெயங்கொண்டம் பகுதிக்கு மாற்றிட ஆலோசித்து முடிவு செய்கிறான். நகர் நிர்மாணிக்கும் பொருளாதாரத் தேவைக்காக படை நடத்தி வெற்றி காண்கிறான். கங்கையை வெற்றி கொண்டதின் அடையாளமாக கங்கை கொண்ட சோழபுரத்தை ஒரு ஆண்டுக்குள் நிர்மாணிக்கிறான்..


காவிரின் கரையோரம் இருக்கும் தஞ்சையைப் போன்றே நீர்வளம் எப்போதும் குறையாதிருக்க  “சோழ கங்கா” என்கிற மிகப்பெரிய ஏரியை உருவாக்கி தான் குடங்களில் கொண்டுவந்த கங்கை நீரை அதில் கலக்கிறான்.  தஞ்சை பெரிய கோவிலைப்போல யோசித்து; அந்த உயரத்திற்கு தாங்கிடும் மண் வளம் ஜெயங்கொண்டானில் இல்லை என்பதால் அழகியலோடும் கலைநயத்தோடும் உருவாக்கிட பெரு முயற்சி செய்து உருவாக்கியும் முடிக்கிறான். ஆனாலும்
அவனுக்குள் வெறுமையும், முற்றுப்பெறாத ஒப்பீடுகளும், மன உளச்சலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  தனதின் தனித்த அடையாளத்திற்காக முற்றுப் பெறும் நிலையில் உள்ள கோவிலின் மேற்பரப்பையும் கூட எதிர்பாராத விபத்தொன்றில்  காதல் கைகூடியும் வாழ்க்கையில் இணைய முடியாமல் செத்துப்போன  தில்லை அழகி-ஆதித்தியன் நினைவாக மாற்றியமைக்கிறான்..
ஆனாலுமென்ன ராஜேந்திரனை உச்சரிக்கும்போதெல்லாம் ராஜ ராஜனின் பெயர் உச்சரித்தபிறகே வருவதென்பதை தனது தனித்த ஒளியை மீறி இருக்கும் பெரு ஒளியாகவே பார்க்கிறான்.. அந்தப் பெரு ஒளிக்கும்கூட தான் மட்டுமே காரணம் என்கிற மனச் சிக்கலுக்குள் ஆட்படுகிறான். இப்படிப்பட்ட மனநிலையிலேயே ராஜேந்திரனின் 82ம் வயதிலான மரணம் குறித்து சோழ சாம்ராஜ்ஜியமே சோகத்தில் பேசிக் கிடந்தபோது வீரமாதேவியின் உடன் கட்டை ஏறிய நிகழ்வு ராஜேந்திரனின் மரணத்தையும் பின்னுக்குத் தள்ளி வீரமாதேவி உடன்கட்டையேறி உயிரை மாய்த்துக் கொண்டதைப் பேசியது, அவனின் இறப்பிலும் முறுப்பெறாதா பெரும் துயரமே.
“கங்காபுரம்” நாவல், நேரத்தில் அங்கீகரிக்கப்படாத, நெருக்கடியால் அங்கீகரிக்கப்பட்ட வெற்றியாளனின் மன உளவியலில் இருந்து பார்க்கப்பட்டு ராஜேந்திரனின் பெருமைகள், கங்கை கொண்ட சோழபுரத்தின் அவதனிப்பு எதில் இருந்து உருவாகி பிரமாண்டமாக பார்க்கப்பட்டது.. பார்க்கப்பட்ட பெருநகரம் பேசப்படாமலேயெ போனதற்கான உளவியல் தன்மைகள் எவையெவையென விரிவாக.. நிஜங்களை கொண்ட.. நியாயங்களடங்கிய உண்மைகளை புனைவுகளாக்கிப் படைத்திருக்கிறார் நாவலாசிரியர் வெண்ணிலா.  ஆதித்திய கரிகாலன் கொலையானதற்கு நுண்ணிய, நுட்பம் மிகுந்த வேராக இருந்த, சூழ்ச்சிமிக்க ஆட்களாக இருந்த பார்ப்பனர்கள் அடையாளப்படுத்தப்பட்டும், அரசனே கொலை செய்யப்பட்டாலும் பார்பனர்களுக்கான தண்டனை என்பது ஊரில் இருந்து விரட்டியடிக்கப்படுவது மட்டுமே என்ற மநுநீதி சோழர்கள் காலத்தில் எப்படிக் கோலோச்சியது.. அரச கொலை புரிந்தவர்களுக்கே அரசர்கள் எப்படி அடங்கி ஒடுங்கிக் கிடந்தார்கள் என்கிற மெய்யான உண்மையையும், பார்ப்பனர்களின் சூதினையும்;
வாழ்விடம், வாழ்நிலை சார்ந்து இயங்கிடும் எளிய மக்கள் அரசனும், ஆட்சியாளர்களும் எத்தனை மாபெரும் சட்டம், ஆணையுமிட்டால்கூட அவர்களின் வாழ்முறைக்கு துரோகமிழைக்காமல் இயல்பாக எதிர் கொண்டு கங்கை கொண்ட சோழபுரத்திற்கு ஒரு பயணியைப் போலவே வந்து சென்று தம் இடம் சார்ந்திருப்பார்கள் என்றும்,  எல்லா நிலையிலும் தன்னில் ஒப்பீட்டிற்கு ஆளானவன் தன் மரணம்மட்டும் எப்படியெல்லாம் மன உளச்சலுக்கு ஆளாகியேக் கிடப்பான் என்பதையும் சதுரத்தடிகள் என்கிற புனைவுப் பாத்திரத்தின் வழியாக தோழர் வெண்ணிலா இப்புதினத்தில் பேசியிருப்பார். மன்னர்களின் வாழ்முறையையும்.. எளிய மக்களின் வாழ்நிலையையும் சதுரத்தடிகளை இன்னும் ஒரு சில அத்தியாயத்தில் நடக்கவிட்டு பேசி இருக்கலாமோ மாபெரும் ராஜ்ஜியங்களின் மற்றுமொரு அதிகார வெறி கொண்ட பக்கத்தை என நினைக்கத் தோன்றியது எனக்குத் தோழர் வெண்ணிலா.
மலைக்கிராம பழங்குடி மக்கள் சூழ ஆட்சி நடத்தும் ஆதி நகரின் மேல் படை நடத்தி வெற்றி காண்பதென்பது எந்த ராஜ ராஜனாக இருந்தாலும், ராசேந்திர ராஜனாக இருந்தாலும் அவர்களின் நோக்கமென்பது  இன்னொரு நாட்டை வெற்றி கொள்வதிலான எளிய மக்களின் வாழ்நிலையை முற்றாக அழித்தொழித்து தம் அதிகாரப் பசியை தீர்த்துக் கொள்வதென்பதுவே என்பதை ராஜேந்திரனின் பெருமை வழியாக அவனின் அதிகார வேட்கையை வெளிக் கொணர்கிறார் நாவலாசிரியர்.
Writer A. Vennila in Gangapuram Novel Book Review by Karuppu Anbarasan. Book day Website is Branch of Bharathi Puthakalayam
தனக்கான வாரிசு இல்லாமை என்பது ஆண், பெண் இருவருக்குமான ஏக்கமாகவே இருப்தென்பது பொதுவனது. அப்படி இருக்க லோகமா தேவியை மட்டும் உளவியல் தளத்தில் அனுகாமல் ராஜ ராஜனையும், ராஜேந்திரனையும் பெருமைப்படுத்துவதற்காக அப் பெண் கதாப்பாத்திரத்தை சிறுமைப்படுத்திடும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக, அதையும் அவர் வாயிலிருந்தே தெரிவித்திருப்பது தோழர் வெண்ணிலாவிடம் எதிர்ப் பார்க்கவில்லை. அங்கு அரச புகழ் பேசிடும் வழக்கமான வரலாற்று நாவலாசிரியர் வெண்ணிலாவே தெரிகிறார்.
தோழர் வெண்ணிலா.. உங்களின் மூன்றாண்டுகால உழைப்பு என்பது மெச்சத் தகுந்தது.. மரியாதைக்குறியது.. அதற்கான முழு வெற்றியையும் நீங்கள் கங்காபுரம் வரலாற்று நாவலை ராஜேந்திரனின் வெற்றியில் இருந்து படைக்காமல் அவனின்  உளவியல் தளத்தில் இருந்து கொடுத்திருக்கிறீர்கள். பல வராலாற்று புதினங்கள் அரசனின்…அரசியின் புற நிலையில் இருந்தும், மேல் நிலையில் இருந்தும் படைக்கப் பட்டிருக்கும் போது..  நீங்கள் அக நிலையில் இருந்து,  உளவியல் தளத்தில் இருந்து ராஜேந்திரனின் வரலாற்றை பேசி இருப்பது அருமை.. வாழ்த்துக்கள்.
நங்கையும்..
போந்தனும்..அவன் மனைவியும்
அழகிய குழந்தைகளும்..
தில்லை அழகியும்..
ஆதித்தியனும்..
சரஸ்வதி சிலை புடவை மடிப்பில்
இருக்கும் உளியும்..
ராஜேந்திரனின் அதிசயமும்..
நார்தாமலையின் சுனை நீருக்குள்
இறங்கி நிற்கும் வீரமாதேவியும்..
கங்காபுரத்தை வாசித்து முடித்ததும்
வந்து கொண்டே இருப்பார்கள்
உங்களோடு..
என்னோடு எப்போதுமே வீரமாதேவி.
வரும் பக்கமெல்லாம்
உற்சாகத்தை மட்டுமே கொடுத்திடுவாள்.
கருப்பு அன்பரசன்இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.