Writer A. Vennila in Gangapuram Novel Book Review by Rathika vijayababu. Book day Website is Branch of Bharathi Puthakalayam



நேற்று கங்காபுரத்தை வாசித்து முடித்தேன். ஏராளம் சொல்ல வேண்டி யிருக்கிறது எதை முதலில் எழுதுவதென்று யோசிக்கிறேன். முதலில் வாழ்த்துக்களை சொல்லிவிடுகிறேன். முதல் நாவல் என்று சொல்லிவிடவே முடியாதபடிக்கு நல்ல செறிவான கதையோட்டம், சிக்கலான பழைய வரலாற்றை சொல்லும் நூலென்றாலும் அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் புரியும்படியான அதிகம் அடர்த்தியில்லாத எளிய மொழி நடை. அருமையான வர்ணனைகள் மற்றும் கதாபாத்திர சித்தரிப்புக்கள், வரலாற்றுக்கதைகளில் வாசகர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் வீரம், காதல், இறைமை, அரசியல் புகைச்சல், போட்டிகள், சதி, உளவு என அனைத்தையும் சரி விகிதத்தில் கலந்து திகட்டாமல் கொடுத்து மிகச்சிறப்பானதொரு தொடக்கத்தை அளித்து விட்டிருப்பதற்காக. வாழ்த்துக்கள் வெண்ணிலா!

எனக்கு வரலாற்று நாவல்களில் எப்போதுமே தனிப்பட்ட பிரியமுண்டு. அம்மா வரலாற்று ஆசிரியை அப்பா தமிழாசிரியர். எனக்கும் அக்காவிற்கும் சங்கமித்திரை லோகமாதேவி என்றே பெயர்களாக இருந்ததால் சிறுமியாக இருக்கையிலேயே எனக்கு வரலாறு, குறிப்பாக சோழப்பேரரசுடையது பரிச்சயமாயிருந்தது. முன்பும் இவ்வரலாற்றை வாசித்தறிந்திருக்கிறேன் என்றாலும் கங்காபுரம் சோழப்பேரரசின் மற்றோரு பரிமாணத்தை காட்டியது. அதுவும் மிக சுவாரஸ்யமாக!

பேரரசி லோகமாதேவியின் நானறியாத முகமொன்றை முதன்முதலில் கங்காபுரத்தில் தான் காண்கிறேன். பிள்ளைப்பேறற்றவர் என்னும் கரிசனமும் ராஜேந்திரனின் அரசியல் வாழ்வில் அவர்களால் ஏற்பட்ட தொய்வுமாய் அவர்மீது கலவையான, கசப்பும் விருப்பும் கனிவும் கலந்த ஒரு அபிப்பிராயம் உண்டாயிருந்தது.

பல வர்ணனைகள் உவப்பாக இருந்தன வெண்ணிலா, குறிப்பாக பெண்களின் உடை ஆபரணங்கள் மலர் சூடிக்கொள்ளுவது, இறையுருவங்களின் அலங்காரங்கள் இவையெல்லாம். ஆர்வமாக வாசித்தேன் 82 ,83 ஆம் பக்கங்களை மீள் மீள வாசித்தேன. நங்கை குளித்து விட்டு கரையேறுகையில் குளமும் கூடவே வரும் அந்த கற்பனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

சதுரத்தடிகளார் பச்சிலையில் விளக்கேற்றும் காட்சியும் அப்படித்தான் எனக்கு மனதிற்கு மிகவும் நெருக்கமானதொன்றாகிவிட்டது வீட்டில் ஒரு மூலிகைத்தோட்டம் இருக்கிறது அதில் இருக்கும் பேய்மிரட்டி என்னும் துளசிக்குடும்பத்தைச்சேர்ந்த ஒரு செடியின் பசும் இலைகளில் திரியைப்போலவே விளக்கேற்றுவோம். மரங்களின் வகைகளை தெரிவு செய்யும் முறைகள் உள்ளிட்ட பல தாவரஅறிவியல் தகவல்கள் ஆர்வமூட்டின. மிகமுக்கியமான தாவரவியல் தகவல்கள் இருந்ததால் கங்காபுரம் எனக்கு பிரியப்பட்டதொன்றாகி விட்டது. மரங்களில் மலரமைப்பின் இனப்பெருக்க உறுப்புக்களல்லாது ஆண் பெண் என இனம் கண்டுகொள்ளுவது, திரிபழங்கள் எனப்படும் கடுக்காய் நெல்லி தான்றிக்காய்களை கொண்டு செப்யப்பட்ட பல தயாரிப்புக்கள் உள்ளிட்ட 377 ,378 379 பக்கங்களில் சொல்லப்பட்டிருப்பவற்றை நான் குறிப்பெடுத்து கொண்டிருக்கிறென். அவற்றைக்குறித்து இன்னும் விவரங்கள் அறிந்துகொண்டு கட்டுரை எழுத உத்தேசித்து இருக்கிறேன்.



புஷ்பவிதி என்றோரு நூலிருக்கிறது பூசனைகளுக்கு பயன்படுத்தப்படும் தோஷமற்ற மலர்களைக்குறித்தானது. அதில் சொல்லியிருப்பவற்றை மிகச்சரியாக சொல்லி இருந்தீர்கள். கங்காபுரம் மிக முக்கியமான ஒரு ஆவணம். இதன் பின்னிருக்கும் உங்களின் ஏராளமான உழைப்பையும் யூகிக்க முடிந்தது

ஜெ அவர்களின் குருநித்யா கூடுகையொன்றிற்காக ஊட்டி வந்திருந்தபொது அறிமுகமான சிற்ப சாஸ்திர நிபுணர் திரு சுவாமிநாதன் அய்யா அதன்பிறகு எனக்கும் பலவற்றை கற்றுக்கொடுத்திருந்தார். குறிப்பாக கோவில் கட்டுமான விதிகளை. அவற்றைக் குறித்து கொஞ்சம் தெரிந்திருந்ததால் கங்காபுரத்தின் அந்த இடங்கள் எனக்கு வாசிக்க விருப்பதுக்குகந்தைவையாக இருந்தன. ஜெ தளம் வாயிலாக நான் உங்களைப்போல பல முக்கியமான ஆளுமைகளை அறிந்து கொண்டிருக்கிறேன். அவருக்கு என் வாழ்நாள் முழுவதுமே நன்றி சொல்லிக்கொண்டிருப்பேன் போலிருக்கிறது.

தஞ்சைப்பெரிய கோவிலைக்குறித்து பலநூறு நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. தஞ்சை பெரிய கோவிலால் மறக்கப்பட்ட புறக்கணிக்கப்ட்ட கோவிலொன்றக்குறித்தும் அதிலிருந்து துவங்கி சொல்லப்பட்ட சோழப்பேரரசின் கதையையும் இப்போது தான் கங்காபுரத்தில் அறிந்து கொண்டேன். ராஜேந்திர சோழனின் மனைவியின் பெயர் சுத்தமல்லி என்பதுவும் எனக்கு இதுவரை தெரிந்திருக்கவில்லை. எத்தனை அழகிய பெயர்!

அரசகுடும்பத்தினர், அமைச்சர்கள் பேசுகையில் வரும் சொல்லாட்சி குடிமக்கள் அவர்களுக்கிடையில் பேசுகையில் தேவைக்கேற்ப மாறுவதே தெரியாத நுட்பமான மாறுதல்களுடன் இருந்தது, ராஜேந்திரர் வீரமாதேவியிடன் பேசுகையிலும் அப்படியே. பெரிதாக வாசிப்பவர்களுக்கு வித்தியாசம் தோன்றும்படி இல்லாது கதையோட்டத்திலேயே நாங்களும் இழுத்துக்கொண்டு போவதைப்போல இணைந்திருக்க முடிந்தது.

அட்டை வடிவமைப்பும் மிக நேர்த்தி. இறுதியில் glossary இருந்தது வசதியாக இருந்தது. பண்டாரம் என்னும் சொல்லுக்கெல்லாம் பொருளறிந்து கொண்டபின் வாசிப்பு இலகுவானது. இண்டை என்னும் சொல்லுக்கு பொருளை தேடி அறிந்துகொண்டேன் வழக்கத்துக்கு மாறான நீண்ட தண்டான ’இண்டு’ உடைய தாமரையே ’இண்டை’ என புதிதாக அறிந்துகொண்டேன். இப்படி பல புதிய திறப்புக்களும் கங்காபுரம் எனக்களித்தது. இரண்டாம் பாகம் சடுதியில் முடித்துவிட்டீர்களோ என்று தோன்றியது. இன்னும் சிலரை குறித்து விவரமாக சொல்லி இருக்கலாமே என்று நினைத்தேன். குறிப்பாக அழகி.

கங்காபுரம் வாசித்துமுடித்த பின்னர் லோகமாதேவியைக் குறித்தே அதிகம் நினைத்துக்கொண்டிருந்தேன் பிள்ளையில்லாதவர் என்னும் உண்மை என்னை என்னவோ கஷ்டபடுத்தியது. மிகப்புதிதாக தெரிந்துகொண்ட இந்த பெரிய விஷயம் எப்படியோ இருந்தது. மறுபிறப்புக்கள் இருந்திருந்தால் அவர் மீண்டும் மீண்டும் பிறந்து பேரன்னையாகவே வாழ்ந்திருப்பாரெண்ணிக்கொண்டே உறங்கிய அன்று அதிகாலை கனவொன்று கண்டு விழித்தேன் பெரும்பாலும் கனவுகள் நிறைய வரும் எனக்கு, அவை மறக்காமல் நினைவிலும் இருக்கும் என் கனவுகளை நோட்டுப்புத்தகங்களில் எழுதிவைத்திருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.



அன்றைய கனவில் அரண்மனையைப்போலவோ அல்லது ஷாப்பிங் மாலைப்போலவோ ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தின் திறந்தவெளி முற்றத்திலிருந்த நீள அகலமான படிக்கட்டில் என் மூத்த மகனுடன் அமர்ந்திருக்கிறேன் அறிமுகமற்ற இரு ஆண்கள் என்னிடம் பேச வருகிறார்கள். அந்த வழியே வந்த ஒரு பெரிய ஆடம்பரக்காரில் இருந்த புஷ்டியான ஒரு இளம்பெண் செல்வந்தர்வீட்டுபெண்போன்ற தோற்றம் உடையவர் எங்களைக் கூப்பிட்டு தன் சித்தியான ராணி தற்போதுஅங்குதான் இருப்பதாகவும் நாங்கள் கொஞ்சம் தள்ளிப்போய் பேசும்படியும் சொல்லுகிறாள். நான் மனம் குன்றிப்போகிறேன் ஆனாலும் உடனே விலகிச் செல்கையில் கால்களை ஒருகளித்து அமர்ந்தபடி ஒரு முதியபெண் சற்றுத்தொலைவில் திண்ணைபோன்ற உயரத்திட்டில் சற்று இருட்டில் அமர்ந்திருக்கிறார். நல்ல களை முகத்தில் கேரள தரவாட்டு மூத்தம்மையைபோல, வெள்ளிநிறக்கூந்தல் அலையலையாக நெளிந்துபடிந்திருக்கிறது.

தந்த நிற தூய புடவை அணிந்திருக்கிறார். என்னை அவரருகில் அமரும்படி சைகை காட்டுகிறார் அமர்கிறேன் அவர் பாதங்களை கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டும் போலிருக்கிறதெனக்கு செய்கிறேன் அவர் மலர்ந்துபுன்னகைதபடி ’’இந்தா நல்லா ஆசிவாங்கிக்கோ’’ என்று தன் கால்களைநீட்டுகிறார். வெண்ணிற சிறிய சுருக்கங்கள் நிறைந்த பாதங்கள் பாதங்களின் நடுவில் நாட்டியமாடுபவர்களைப்போல குங்குமத்திலகமிருக்கிறது. மெட்டியைப்போல சிறு வளையமும் ஒரு விரலில். நான் பாதங்களை தொட்டு வணங்குகையில் உடைந்து கதறி அழுகிறேன், அழுதபடியே இருக்கையில் என் பாரங்கள் குறைவது போலிருக்கிறது, விழித்துக்கொண்டேன். லோகமாதேவியிடம்தான் ஆசிவாங்கினேனா என காலையில் நினைத்துப்பார்த்தேன் .

என்னை பாதித்த, கடைசிக்கணம் வரையிலும் நினவிலிருக்கும் கதைகளில் கங்காபுரமும் உண்டு..

உங்களை கங்காபுரம் வாயிலாக அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி வெண்ணிலா.

இன்று முழுநிலவு. பவளமல்லிகள் உதிரத்துவங்கியிருக்கும் நறுமணமிக்க இந்த பின்னிரவில் தென்னைகளின் அடியில் அமர்ந்து நிலவின் புலத்தில் உங்களுக்கு கடிதம் எழுதுவதை கங்காபுரத்தை உணர்வு பூர்வமாக வாசித்ததைபோலவே மனநிறைவுடன் செய்கிறேன்

கங்கபுரத்திற்கும் பிரியமாய் என் மின்மடலுக்கு மறுமொழி அளித்ததற்குமான வந்தனங்களும் அன்புமாய்

லோகமாதேவி

நூல்: கங்காபுரம் (Gangapuram)
ஆசிரியர்: அ. வெண்ணிலா
வெளியீடு:
அகநி வெளியீடு

3 பாடசாலை தெரு
அம்மையப்பட்டு
வந்தவாசி – 604408
விலை: ரூ. 450/-



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *