தமிழக வரலாற்றில் சோழ மன்னர்களின் வரலாறு முக்கியமானது. சோழ மன்னர்களில் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரன் வரலாறு மிக முக்கியமானது. ராஜ ராஜ சோழனின் மகன் என்றாலும் ராஜ ராஜ சோழனின் வெற்றிக்கும் புகழுக்கும் பெருமைக்கும் காரணம் என்றாலும் இளவரசர் என்னும் பட்டம் தராமலே காலம் கடத்துகிறான் ராஜ ராஜ சோழன். இதனால் மனமுடைந்த நிலையிலேயே இருக்கிறான் மதுராந்தன் என்று பட்டம் சூட்டப் படும் முன்பு அழைக்கப் பட்ட ராஜேந்திர சோழன். சகோதர குந்தவை மூலம் மகனின் மனமறிந்த தந்தை ராஜ ராஜன் மதுராந்தகனுக்கு ராஜேந்திர சோழன் என்று பட்டம் சூட்டுகிறான். ராஜ ராஜ சோழன் மரணமடைந்த பின்பு பட்டம் சூட்ட தாமதமானதற்குக் காரணம் ராஜ ராஜ சோழனின் முதல் மனைவியே காரணம் என்று தெரிய வருகிறது. காரணம் மதுராந்தகன் மற்றொரு மனைவியின் மகன். ராஜேந்திரன் ஒவ்வொரு செயலையும் ராஜ ராஜனுடன் ஒப்பிட்டே பேசப்படுகிறது. தந்தையின் நிழலிருந்து விலகி தன் நிஜத்தை நிறுத்த, நிறுவ ராஜேந்திரன் தஞ்சையைப் போல் ஒரு பெரு நகரை உருவாக்குகிறான்.
கங்கைக் கொண்ட சோழ புரம் என்று அடையாளப் படுத்துகிறான். நகரை மாற்றுகிறான். தஞ்சைப் பெரிய கோ விலைப் போல் ஒரு கோயிலைக் கட்டுகிறான். நீர் நிலைகளை ஏற்படுத்துகிறான். சீர் திருத்தங்கள் செய்கிறான். தந்தை தனக்கு தாமதப்படுத்தியது போல் அல்லாமல் தன் மகனுக்கு ராஜாதி ராஜன் என்னும் பட்டத்தைச் சூட்டி இளவரசன் ஆக்கி விடுகிறான். ஆயினும் எதுவும் ராஜராஜன் போலவே செய்துள்ளான் என்றே பேசப் படுகிறது. சுயமே இல்லை என்று கூறப்படுகிறது. மனம் வருந்திய ராஜேந்திரன் மரணம் எய்துகிறான். அவனுடன் உடன் கட்டை ஏறுகிறாள் வீரமாதேவி. உடன்கட்டை ஏறியதைப்பற்றியே மக்கள் பேசியதால் அவனின் மரணமும் இரண்டாம் பட்சமாகி விட்டது. ராஜேந்திரனுக்கு வாழும் போதும் முதலிடம் கிடைக்க வில்லை. இறப்பிலும் கிடைக்க வில்லை.
கங்கை கொண்ட சோழபுரம் கோவில்
கங்காபுரம் நாவல் முழுக்க ராஜேந்திர சோழனின் வாழ்க்கைக் குறித்தே பேசுகிறது. ராஜ ராஜ சோழன் என்பவரின் நிழலாகவே இருக்க வேண்டியது குறித்து ராஜேந்திரன் மனம் புழுங்கியதை உணர முடிகிறது. ராஜேந்திரனின் வரலாற்றை மட்டுமல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னா தமிழக வரலாறையும் கூறியுள்ளது. ஆனால் நாவலில் தொடக்கம் தவிர தொடர்ந்து காலம் குறிப்பிட வில்லை.
வரலாற்று நாவல் எழுதுவது என்பது பெரும் மெனக்கெடலாகும். கங்கா புரம் என்னும் நாவலுக்குக் கவிஞர் அ. வெண்ணிலாவின் கடினமான உழைப்பை உள்வாங்கியுள்ளதைத் தொகுப்பு மூலம் அறிய முடிகிறது.
ஒரு வரலாற்று நாவலில் இரண்டு முக்கிய மரணங்கள். முதல் மரணம் ராஜராஜ சோழனுடையது. இரண்டாம் மரணம் ராஜேந்திர சோழனுடையது. மகன் ராஜேந்திர சோழனுக்கு பட்டம் சூட்டாமல் தாமதப் படுத்தியதற்கு மனம் வருந்தி மரணம் எய்துகிறான் ராஜராஜ சோழன். தந்தையைத் தாண்டி, தந்தையை மீறி எது செய்தாலும் ராஜராஜ சோழன் போலவே என்று பேசப்படுவதற்காக மனம் புழுங்கி மரணம் அடைகிறான் ராஜேந்திர சோழன். இரண்டு மரணங்களும் இதயத்தை கலங்கச் செய்யும் விதத்தில் எழுதியுள்ளார் கவிஞர் அ. வெண்ணிலா.
ராஜ ராஜ சோழன் காலத்திலேயே பார்ப்பனர் வருகை நிகழ்நதது என்பதை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். நிலம் தானம் வழங்கப் பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். பார்ப்பனர் ஆதிக்கத்தால் தமிழ்ப் புறக்கணிக்கப்படுவதை அறிந்தும் ராஜ ராஜன் தடுக்கவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார். ஆனால் ராஜேந்திர சோழன் பார்ப்பன விசயத்தில் முரண்பட்டுள்ளார் என்பதையும் நாவலினூடே காண முடிகிறது. கோயிலுக்குள் அனுமதிக்காத பறையை ராஜேந்திரன் அனுமதித்துள்ளார்.
வரலாற்றுப் பெயர்கள், வரலாற்று நிகழ்வுகள் ஆகியவையே வரலாற்று நாவல் என்பதை வாசிக்கும் போது உணரமுடிகிறது. தவிர்த்து நாவலை வாசிப்பதில் தடையேதுமில்லை. வாசிப்புக்கு ஏற்ற மொழியையே கவிஞர் அ. வெண்ணிலா பயன்படுத்தியுள்ளார். வாசிப்பதற்கு உதவும் சொல் விளக்கத்தையும் தந்துள்ளார்.
கங்கா புரம் என்னும் இந்த வரலாற்று நாவல் அறுபது அத்தியாயங்களைக் கொண்டது. ஐம்பத்தெட்டு அத்தியாயங்களில் எழுதப் பட்ட வரலாற்றின் சுருக்கமாக ஐம்பத்தொன்பதாம் அத்தியாயம் உள்ளது. ராஜேந்திர சோழன் மனசாட்சி பேசுவதாக, நினைவுக் கூர்வதாக இந்த அத்தியாயம் உள்ளது. ராஜேந்திர சோழன் மீது இரக்கம் இதயத்தில் தானாகவே ஏற்பட்டு விடுகிறது.
கங்கா புரம் என்னும் நாவல் ஏன் எழுதப்பட்டது, எழுதப் படும் போது ஏற்பட்ட அனுபவங்கள், எழுதிய பின் ஏற்பட்ட உணர்வுகள் ஆகியவற்றை கவிஞர் அ. வெண்ணிலா ‘ நினைவுப் பறவைகளின் வானம்’ என்னும் முன்னுரையில் தெளிவாகக் கூறியுள்ளார். ” வரலாற்றின் அரிச்சுவடியே தெரியாமலிருந்த நான் இன்று பிற்காலச் சோழர்களைப் பற்றிய நாவலொன்றை எழுதி முடித்திருக்கிறேன் என்பது பிறரைப் பொறுத்தவரை ஓர் ஆச்சர்யம். எனக்கோ கூடுவிட்டு கூடு பாய்ந்த உயிர்வதை” என்று கூறியிருப்பதன் மூலம் அதன் அவஸ்தையைத் தெரிவித்துள்ளார்.
மேலும்” தொப்புள் கொடியை வெட்டி விட்டு பிறந்த குழந்தையைத் தாயிடமிருந்து பிரித்தெடுக்கும் வலி ” என்று நாவலை முடிக்கும் தருவாயில் ஏற்பட்ட வலியையும் வெளிப்படுத்தியுள்ளார். நாவலை வாசித்த பின் கவிஞர் அ. வெண்ணிலாவின் கூற்று உண்மை என்பதை உணர முடியும். சோழப் பிரதேசத்தில் ஒரு பெண்ணாகவே நாவல் எழுதும் காலம் முழுவதும் வாழ்ந்துள்ளார் கவிஞர் அ. வெண்ணிலா என்பதை நாவல் மூலம் உணர முடிகிறது.
” ராஜராஜன் என்ற சூரியனுக்கடியில் கரு நிழலென மறைக்கப்பட்டது ராஜேந்திரனின் தன்னொளி ” என்னும் ஒற்றை வரியில் கங்கா புரம் நாவலின் மையக் கருத்தைக் கூறியிருந்தாலும் வரலாற்று நாவலுக்கான பெரும் மெனக்கெடலைக் கவிஞர் தந்திருப்பது பாராட்டுக்குரியதாகும். நாவலின் இறுதி அத்தியாயமான அறுபதின் இறுதி வரியும் நாவலின் மைய இழையை வெளிப்படுத்தியுள்ளது.” மரணத்தன்றும் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப் பட்டான் ராஜேந்திரன்” இவ்வரிகள் நாவலின் உச்சம் மட்டுமல்ல, கவிஞர் அ. வெண்ணிலாவின் எழுத்தின் உச்சமும் ஆகும்.
” மார்கழி திருவாதிரை – தில்லை ஆடவல்லான் ஆலயம்” என்று தொடங்கும் கங்கா புரம் நாவல் நிறைவு செய்யும் போது திருவாதிரை நாள் என்று ஆசிரியர் மகிழ்வுடன் பதிவுச் செய்துள்ளார். எதேச்சையாக நிகழ்ந்திருந்தாலும் ஆசிரியரைப் பொருத்தவரை ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது.
கங்கா புரம் கவிஞர் அ. வெண்ணிலாவின் முதல் நாவல். ஒரு வரலாற்று நாவலையே முதல் நாவலாக எழுதி வரலாறு படைத்துள்ளார். வாழ்த்துகள்.
நூல்: கங்காபுரம் (Gangapuram)
ஆசிரியர்: அ. வெண்ணிலா
வெளியீடு: அகநி வெளியீடு
3 பாடசாலை தெரு
அம்மையப்பட்டு
வந்தவாசி – 604408
விலை: ரூ. 450/-
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments