தமிழின் முதற் சிறுகதையாளர், அறியப்படாத எழுத்தாளர் அம்மணி அம்மாள் (Writer Ammani Ammal) எழுதிய 'லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம்' சிறுகதை

எழுத்தாளர் அம்மணி அம்மாளின் ‘லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம்‘ சிறுகதை

எழுத்தாளர் அம்மணி அம்மாளின் ‘லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம் ‘ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

பண்புகளைப் பழக்க ஓர் பள்ளி

– மணி மீனாட்சிசுந்தரம்.

வழக்கமான கல்விமுறையைத் தவிர்த்து, மாற்றுக் கல்வி முறையைச் செயல்படுத்தும் பள்ளிகள் இக்காலத்திலும் அருகியே உள்ள நிலையில், தமிழில் அது குறித்த சிந்தனை ஒரு சிறுகதையின் வாயிலாக அன்றே வெளிப்படுத்தப்பட்டிருப்பது வியப்பைத் தருகிறது.

அறியப்படாத எழுத்தாளரான அம்மணி அம்மாள் என்பவர் 1933 ஆம் ஆண்டு கலைமகள் இதழில் எழுதிய ‘ லக்ஷ்மி அம்மாள் பள்ளிகூடம் ‘ என்னும் சிறுகதையே அது. எழுத்தாளர் அம்மணி அம்மாளே தமிழின் முதல் சிறுகதையை எழுதியவர் (1913) என்ற கருத்தும் ஆய்வாளர்களிடம் உண்டு.

கதையின் தலைப்பில் பள்ளிக்கூடம் என்ற பெயரைப் பார்த்ததும் எழுத்தாளர் மு.சுயம்புலிங்கத்தின் ‘பள்ளிக்கூடத்தில் ஒருநாள்’ சிறுகதை என்னுடைய நினைவுக்கு வந்தது.

மிகச் சிறிய கதையான அது இக்காலக் கல்விமுறை குறித்த விமர்சனமாகவே அமைந்திருக்கும். கிராமங்களில் பல்வேறு இன்னல்களுக்கிடையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் விரும்பிப் படிக்க ஏற்ற பாடங்களும், கற்பித்தல் முறையும், ஆசிரியர்களும் இல்லாத நிலையிருப்பதாக அக்கதை குறைபட்டுக் கொள்ளும்.

/ பொஸ்தகத்தப் பார்த்து வரிவரியா வாசிக்கிற வேலை ஆசிரியர்களுக்கு.
பொஸ்தகத்தப் பார்த்து எழுத்து விடாம மனப்பாடம் பண்ணுகிற வேலை மாணவர்களுக்கு /

என்ற வரிகள் ஒட்டுமொத்த கற்பித்தலையும்,கற்றலையும் பகடி செய்வதாக அமைந்திருக்கும். படிக்காவிட்டால் மாணவர்களை அடிக்கிறார்கள்.அடி என்பது கற்றலை உற்சாகப்படுத்தும் செயலா? என்று கேள்வி எழுப்பும் அச்சிறுகதை.

அம்மணி அம்மாளின் சிறுகதையும் அக்கால பள்ளிக்கூடம் ஒன்றைப் பற்றிய கதையாக இருக்கலாம் என்றே எண்ணி வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால், அது ஒரு மாற்றுக் கல்வி முறையைச் செயல்படுத்தும் பள்ளி குறித்த கதையாக இருக்கிறது.

கதைசொல்லி, லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைப் பார்ப்பதற்காகச் செல்கிறார்.பள்ளியின் நுழைவாயிலை அடுத்து முன்பகுதியில் ஒரு தோட்டம் இருக்கிறது. கதைசொல்லி வண்டியை விட்டு வாசலில் இறங்கும்போது
கண்களைக் கட்டிய நிலையில் உள்ள ஒரு சிறுமியை ஒரு சிறுவன் கையைப் பிடித்து உள்ளே அழைத்துப்போய்க் கொண்டிருக்கிறான்.

/ வண்டிச் சத்தம் கேட்டவுடன் அப்பெண் நின்று ,” யார் வந்தது?” என்று கேட்டதாகத் தோன்றிற்று. அச்சிறுவன் என்னைப் பற்றி அவளுக்குச் சொல்லியிருப்பான் என்றும் தோன்றிற்று. பிறகு அவர்கள் போய்விட்டார்கள்.நான் உள்ளே போனதும் அங்கிருந்த ஓர் அழகிய பெண் என்னை லக்ஷ்மி அம்மாளிடம் கொண்டு போய் விட்டுவிட்டுப் போய்விட்டாள்./

கதைசொல்லியிடம் லக்ஷ்மி அம்மாள் தன் பள்ளிக்கூடத்தைப் பற்றி இப்படி விவரிக்கிறார்.

/ பாருங்கள், நாங்கள் இங்கே அதிகமாய் ஒன்றும் பாடம் கற்றுக் கொடுக்கிறதில்லை. இங்கே என்னிடம் வருகிற சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் கட்டாயப் பாடங்கள் மிகவும் கொஞ்சம் ; கூட்டல், கழித்தல், பெருக்கல், எழுதுதல், படித்தல் முதலிய சாதாரணப் படிப்பு மாத்திரம்தான் கற்றுக் கொடுக்கப்படுகிறது. /

/ ஆனால், இந்தப் பள்ளிக்கூடத்தின் முக்கிய நோக்கம், எந்த விஷயத்தையும் தனதாகப் பாவித்து நடக்கும் யோசனா சக்தியை விருத்தி செய்வதே. நல்ல பிரஜையாக இருக்கவேண்டும். தயவுள்ளவனாயிருக்க வேண்டும்.எல்லாரையும் தன்னைப் போலப் பாவிக்க வேண்டுமென்று புத்தகங்களில் படித்தால் நடத்தையில் காண முடியாது. நடத்தையில் அவற்றின் கருத்தைக் காண்பிக்க வேண்டுமென்று யோசித்து, நான் இதை ஆரம்பித்திருக்கிறேன்./

பாடங்களைப் பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடமாக இல்லாமல் பண்புகளைச் செயல்வழியில் கற்றுக்கொடுக்கும் வித்தியாசமான பள்ளியாக ‘லக்ஷ்மி அம்மாள் பள்ளிகூடம்’ இருக்கிறது. லக்ஷ்மி அம்மாள் கதைசொல்லிக்குப் பள்ளிக்கூடத்தைச் சுற்றிக் காண்பிக்கிறார். அழகான தோட்டத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

கதைசொல்லி, லக்ஷ்மி அம்மாளிடம் தான் வரும்போது பார்த்த, கண்கள் கட்டப்பட்ட சிறுமியைப் பற்றியும், விளையாடும் குழந்தைகளில் ஒரு சிறுமி நடக்க முடியாதவள் போல் கைக்கடியில் கட்டை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பதைப் பற்றியும் கேட்கிறார்.அதாவது, உடல் ஊனமுற்ற மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளா இவர்கள்? என்பது அவரது கேள்வி.

/ லக்ஷ்மி அம்மாள் சிரித்துக்கொண்டு, “இல்லை, இல்லை ; நிஜமாய் அவள் நொண்டி இல்லை. இன்றைக்கு அவள் நொண்டியாய் நடிக்கும் நாள்.நீங்கள் பார்த்த மற்ற குழந்தைகளும் குருடு இல்லை; இன்றைக்கு அவர்கள் குருடாய் நடிக்கும் நாள்” என்றாள்./

குழந்தைகள் மாற்றுத் திறனாளர்களாக நடிக்கும்போது உண்மையில் அந்நிலையால் ஏற்படும் சிரமங்களை உணர்ந்துகொள்கின்றனர். மற்ற குழந்தைகள் மாற்றுத்திறனாளர்களுக்கு எவ்விதம் உதவலாம் என்பதையும் இங்கு கற்றுக்கொள்கின்றனர்.

/ இது குருடாய் நடிக்கிறவர்களுக்கும், உதவி செய்பவருக்கும், அநுபவ ரூபமாய் நல்ல அறிவை உண்டு பண்ணுகிறது./ என்கிறாள் லக்ஷ்மி அம்மாள்.

கதைசொல்லிக்கு இந்த நடைமுறை வியப்பையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர ஏற்படுத்துகிறது. அங்கு விளையாடும் குழந்தைகளிடம் அவர் பேச்சுக் கொடுக்கிறார். அச்சிறுமி, கண் தெரியாதவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அப்படி இருப்பதன் சிரமங்களைக் கண்ணைக் கட்டிக் கொண்டு நடிக்கும் போது முழுமையாக உணர்கிறேன் “ என்கிறாள்.

கதை சொல்லி அச்சிறுமியிடம் “நீ இப்படி இருக்கும்போது மற்றவர்கள் எல்லோரும் உன்னை அன்பாக நடத்துகிறார்களா? அது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்கிறார்.

அதற்கு அந்த குழந்தை கூறும் பதில் நுட்பமானதாகவும், லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடத்தின் செயல்வழியில் பண்பு வளர்க்கும் இக்கல்விமுறையை நியாயப்படுத்துவதாகவும் இருக்கிறது.

அச்சிறுமி சொல்கிறாள், /” சுமாராய் நடத்துகிறார்கள். என்னுடைய முறை வரும்போது நான் எப்படி நடப்பேனோ அவ்வளவு ஜாக்கிரதையாய் இல்லை.
ஒரு தரம் குருடாய் அனுபவித்தவர்கள் ஜாக்கிரதையாய் நடத்துவார்கள்”/ என்கிறாள்.

மாணவர்கள் மாற்றுத்திறனாளர்களாக நடித்து அந்த அனுபவத்தைப் பெறுவதன் மூலம், மாற்றுத் திறனாளர்களுக்குரிய சிரமங்கள், அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்கான‌ தேவைகள் அல்லது உதவிகள் ஆகிய இரண்டு விசயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர் என்பதையே அச்சிறுமியின் சொற்கள் உணர்த்துகின்றன.

இதைப் படிக்கும்போது எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ‘ நொண்டிக் குழந்தை’ சிறுகதை உங்கள் நினைவுக்கு வரலாம்.அக்கதையில், நடக்க முடியாமல் குழந்தைகள் விளையாடுவதை ஏக்கத்துடன் பார்க்கும் சிறுவனான ஞானத்தை, விளையாட்டுக்குள் இழுத்துவிடும் மீனாவைப் போன்று, மற்ற குழந்தைகளையும் மாற்றிவிட ‘ லஷ்மி அம்மாள் பள்ளிகூடம் ‘ ஆசைப்படுகிறது.

கதைசொல்லி தான் தேடிவந்த பள்ளிக்கூடத்தைப் பற்றி நன்கறிந்துகொண்ட திருப்தியோடு வீட்டுக்குப் போகிறார்.அப்போது அவருக்கு நினைவுக்கு வருகிறது இக்குறள்.

“ அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை”

(ஈ.வி.லூகாஸ் என்பவர் எழுதிய ‘ School for sympathy’ என்பதைத் தழுவி எழுதப்பட்டது) என்ற பின் குறிப்பைக் கொண்ட இக்கதை அக்காலத்திலேயே ஒரு மாற்றுச் சிந்தனையை முன்வைத்த வகையில் போற்றத்தக்க சிறுகதையாகிறது.

உதவிய நூல்கள் :

1.விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் -2 ( தேர்வும் தொகுப்பும் : அரவிந்த் சுவாமிநாதன்), யாவரும் பதிப்பகம், சென்னை – 600042

2. ஒரு பனங்காட்டுக் கிராமம் – மு.சுயம்புலிங்கம், உயிர்மை பதிப்பகம்,
சென்னை – 600077

3.சி.சு.செல்லப்பா சிறுகதைகள்- (தொகுப்பாசிரியர் – காவ்யா சண்முகசுந்தரம்),
காவ்யா, சென்னை -24

கட்டுரை ஆசிரியர் குறிப்பு :

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் (Thi. Janakiraman) முள்முடி சிறுகதை சுருக்கம் (Moolmudi Short Story) | சிதறல்கள் சிறுகதை கட்டுரை

மணி மீனாட்சி சுந்தரம், மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. Amutha

    ஏட்டுக்கல்வியைத் தாண்டிய கல்விக்கான அவசியத்தை எடுத்துக்கூறும் அருமையான கட்டுரை👌👌👏👏👏👏

  2. நாகேந்திரன் இ

    மாற்றுக் கல்விமுறை சிந்தனை அக்காலத்தில் தோன்றியது தான் சிறப்பு. அதன் மூலம் தங்களது பார்வையும் அருமை. வாழ்த்துகள் ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *