கபிலரும் தமிழரும் நூல் அறிமுகம்
சங்க இலக்கியத்தில் கபிலர்:
********************************
இன்னொரு பரிணாமமாய்…
*******************************
கபிலரும் தமிழரும்…
***********************
கபிலர் சங்க காலப் புலவர். சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்களை இயற்றியவர் இவரே. பாண்டி நாட்டுத் திருவாத ஊரில் பிறந்தவர். துறவு வாழ்க்கை வாழ்ந்த அந்தணர் என்பதே இவரின் சிறப்பு.இவரை வாய்மொழிக் கபிலர், பொய்யா நாவிற் கபிலன், என்பதோடு நல்லிசைக் கபிலன், புலனழுக்கற்ற அந்தணாளன்,என்றெல்லாம் சங்கப் புலவர்களால் பாராட்டப்பட்டவர். கபில பரணர் என்னும் தொடரில் இவருக்கும் பரணருக்கும் இடையே இருந்த நட்பினை விளக்கும் சொற்றொடர் எனலாம். கபிலர் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை 235.இவற்றில் குறிஞ்சித் திணையைப் பற்றிய பாக்கள் 193,( நூற்று தொண்ணூற் று மூன்று) சிறப்பாகவும் மிகுதியாகவும் குறிஞ்சித் திணைப் பாடல்கள் பாடியதால் ‘குறிஞ்சி பாடக் கபிலன்’ என்ற மூதுரை தோன்றியது எனலாம்.கபில முனிவர்,தொல் கபிலர்,கபிலதேவ நாயனார், என்போர் வெவ்வேறு காலத்தவர்கள் ஆவர். இவரே சங்க காலத்தவர் ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அகப் பொருள் மாண்பை உணர்த்த இவர் பாடியது குறிஞ்சிப் பாட்டாகும்.
இவரின் பதிற்றுப்பத்து செய்யுட்களைக் கேட்டு மகிழ்ந்த சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் அளித்த நூறாயிரம் பொன்னையும் நன்றா என்னும் குன்றேறி நின்று கண்ணுக்குத் தென்பட்ட மலை வரையில் வாரித்தந்த நிலத்தையும் மக்களுக்குக் கொடுத்து மீண்டும் பரிசிலராகவே வாழ்ந்தவர் கபிலர் என்பது அவருக்கான சுருக்க வாழ்வியல்.
இந்நூலாசிரியர் பொருளாதாரப் பேராசிரியராக தன் பணியைத் துவக்கி இருந்தும்…தமிழ் இலக்கியத் தளத்தில் முக்கிய ஆய்வாளராக தமிழுக்குப் பல அரிய ‘காலந் தோறும் பிராமணியம்’ உள்ளிட்ட ஆய்வு நூல்களைத் தந்தவராகவும்,. முற்போக்கு இலக்கிய அரசியல் மேடைகளின் மூத்த அறிஞர்களில் இவரும் ஒருவராவார். தமுஎகச வின் முன்னணித் தலைவர்.
இவர் தனது முன்னுரையில் இந்நூல் எழுதிடக் காரணமாக இருந்தது எது?எனக் குறிப்பிடுகையில்,… ” தொல்காப்பியம் நூலை எழுதி வரும்போது ஆய்வறிஞர் எஸ் வையாபுரி பிள்ளையின் “தமிழ்ச் சுடர் மணிகள் “நூலின் தொல்காப்பியர் கட்டுரையைப் படித்தேன். அதற்கும் திருவள்ளுவர் பற்றிய கட்டுரைக்கும் இடையே கபிலர் எனும் சிறு கட்டுரை சிக்கியிருந்தது. அதைப் படித்த போது சங்க இலக்கியத்தில் அதிகம் பாடியவர் அவரே என்பது புலப்பட்டது. அவர் எழுதிய 200க்கும் மேற்பட்ட பாக்களைப் படித்த போது அவற்றில் ஆகப் பெரும்பாலானவை குறிஞ்சி நில மக்களைப் பற்றியவை என்பதும் வெளிப்பட்டது. இதனால் உற்சாகம் கொண்டு இந்த நூலை எழுதினேன் எனப் பதிவிட்டுள்ளார்.
அகுதை, இருங்கோ வேள்,ஓரி,நள்ளி,மலையமான்.. எனப் பல அரசர்கள் பற்றி கபிலர் பாடினாலும், பாரி பற்றியே அதிகம் பாடி அவரது புகழை தமிழ் மண்ணில் நிலை பெறச் செய்தவர் கபிலர் ஆவார். அவரின் பாடல்கள் மூலம் கபிலர் பாரியின் மீது உயிரையே வைத்திருந்தார் என்று கூறும் அளவிற்கு அவரின் பாடல்கள் அமைந்தது எனலாம்.
குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்தவர்களே பழங்குடி மக்கள் எனலாம்.. இவர்களே ஆதிக் குடியின மக்களாகி . . நாகரீகம் வளர்வதற்கான முன்னோடி இனத்தவராக இருந்து, மானுட வாழ்வியலை ஆராய்வதற்கான முதல் புள்ளியாக இருந்தவர்கள் எனலாம். களவியல்,கற்பியல்.. வாழ்வின் ஊற்றாய் சங்க இலக்கியம் இருந்தது.. இருக்கிறது எனலாம்.
சங்க இலக்கியம் என்றாலே காதல்,ஒருதலை, இருதலை, முத்தலை, என முற்றி காமத்தின் கரை புரளும் கலங்கரை விளக்கம் அது என்று சொன்னாலும் மிகை அல்ல.தலைவன், தலைவி, தோழி,தாய்,செவிலி, நண்பர், பாணர்,என பாத்திரங்கள் பல்கிப் பெருகித் தமிழின் இலக்கிய சுவைக்கு மெருகூட்டியது சங்க இலக்கியம். தமிழர் வாழ்வியலின் மிகப் பெரும் புதையல் இது எனலாம்.
ஆதியில் விலங்கினங்கள்.. காடு..மலைகளில் வாழ்ந்தன என்பதும்… மானுடம்..மனித இனம், தமிழர்களின் மனம்.. வாழ்வு எல்லாமே மலையில் இருந்து தான் தோன்றியிருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து. மலைவாழ் வேட்டை சமுதாயம், எனலாம். இதில் தாய் வழி சமுதாயம் மனித குலம் கண்ட முதல் சமுதாய உறவு என்றும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
குறிஞ்சி .. மலை என்றாலே…சந்தனம் மணக்கும்..தேனும் இனிக்கும்.. காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கும்.. வள்ளிக்கொடி படர்ந்த மயிலாடும்.. குறவன் குரல் கொடுக்க வானம் இறங்கி மழை கொடுக்கும்.. புல் வேய்ந்த குடிசை எல்லாம் வாழ்விடமாகும்.. மலர்களில் 99 வகை யாவும் மாலை சூடும். காதலர்க்கு தனியாய்ப் பிச்சி மலரும் பீஷ்மம் நான் எனச் சொல்லும் …வேட்டை வரும்..விவசாயம் வரும். தினைப்புனம் காக்கும் பெண்கள் வரும்..பட்சிகள் வரும் பறவைகள்… விலங்கினங்கள்.. எல்லாம் வரும்.வரும் தான்..!
வேங்கை பூத்திருக்கும்.. வளர்பிறையும் திருமணத்திற்கு ஏற்ற நேரம் என்பதையும் கணியராகிச் சொல்கிறது சங்க இலக்கியம்..அது ஒரு மகா அழகின் பிரபஞ்சம் ஒன்றின் படப்பிடிப்பு எனலாம்.
பக்கத்து மலை நாட்டின் தலைவனைக் காதலிப்பதும், காதலியின் காதலை தோழி மட்டும் அறிந்திருப்பதும், தலைவியின் நோய்க்கு தாய், முருகன் சாமியிடம் குறி கேட்பதும், சோழிகளை உருட்டிவிட்டு குறி சொல்லி,,நோய்க்கு தாயத்து தருவதும்..
தன் தலைவனை சேர்ந்திடத் துடிக்கும் தலைவிகளின் இதயங்களும் குறிஞ்சி பாடல்களை குதூகாலமாக்கும் .சங்க இலக்கியம் படிக்க மணக்கச் செய்யும்.
தலைவன் அகன்ற மார்பின் அழகனாகவும், நறுமண மாலை அணிகலனாகவும், வில் அம்புடன் பெரிய கைகளில் விளையாடுபவனும்,கால் அணிகளைத் தங்கத்தில் அணிந்தவனும்,, மலைவாசிகளில் பெரிய வீட்டுப் பிள்ளை,என அவனது கச்சைக் கழலும் சூழலும் வண்ணம் கற்பனை சிறகு பறக்கும்.
இவனது நாட்டில் அருவியின் ஓசை உலகின் மத்தளத்தின் இசையாகவும், கலைமான்களின் குரல் தூம்பின்- கெம்பின் இசையாகவும், வண்டின் ஒலி யாழின் இசையாகவும்,இருந்தது. இசையில் மயில் ஆடும் போது களத்தில் புகுந்து ஆடும் விறலியின் நடனம் போல் இருந்தது. மலைவாசிகள் ஆதித்தமிழர்களின் வாழ்வு கடினமாக இருந்தாலும் அவர்கள் இசையோடும் நடனத்தோடும் வாழ்வை சுவைத்தார்கள். நிகழ்த்து கலைகளின் ஆதித்தோற்றமும் இங்கிருந்தே வந்தது என்பதை ஆசிரியர்(பக்: 51)குறிப்பிடுகிறார்.
மிளகுக் கொடிகளின் தளிரைத் திறளாக சேர்ந்து உண்ணும் குரங்குகள் உள்ள பெரிய மலை நாடன் என்பார்கள். வேரில் பழுத்த பலா நிறைந்த நாடு தலைவனின் நாடு..
தலைவி வாழும் பூமியில் வேட்டுவர்கள் வாழ்வார்கள்.. அதை” உடும்பு சொரீ,விரி நுனல் அகழ்ந்து,, நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயில் கொன்ற எல்லு முயல்…… மன்புலக் கூட்டு நாட்டு அதுவே என்றான்” என்கிறது பாடல்.
பெரும்பாலும் தந்தை பாத்திரம் இதில் நுழைந்து சரித்திரம் படைக்கவில்லை.. தாய் மட்டுமே தன் மகளைத் தேற்றி கரை சேர்க்க மகளின் தோழியை மறக்காமல் நாடுபவள்..!சங்க இலக்கியத்தின் சாட்சிகள் இவர்கள்தான்.! வேட்டையாடி பின் விவசாயம் செய்து வாழ்வின் பரிணாமத்தை உணர்த்தியதும் சங்க இலக்கியம் தான்.
இந்நூல் ஆசிரியர் 156 பாடல்களை மேற்கோளிட்டு அதன் உரையினையும் தந்து கபிலருக்கு மட்டுமல்ல நூலுக்கும் மெருகேற்றி உள்ளார்..
இருப்பவன் இல்லாதவன் எனும் வர்க்க வேறுபாடுகள் சங்க இலக்கியம் தொட்டே இருந்துள்ளது என்பதும் பல பாடல்கள் இதில் சாட்சியமாகியுள்ளது. இவையே சிறுகுடி,பெருங்குடி, ஏழை- பணக்காரன் எனும் வர்க்க வேறுபாடுகள் வகை வகையாய் இருந்ததையும் சங்க இலக்கியத்தில் உணர முடிகிறது எனும் உண்மைகளை இந்நூல் ஆசிரியர் பல பாடல்கள் மூலம் விளக்கியுள்ளார்.
தலைவன் தலைவி காதலை இந்நூல் மேலும் விரிவாய் விளக்குகிறது..தோழி தலைவனிடம் தன்னை உயிரென நினைக்கும் தலைவிக்கு நீ துரோகம் செய்யக்கூடாது என்பதை சாட்சியாக நின்று கூறுகிறாள்.. தலைவன் தலைவியின் கூடுதலுக்கு சாட்சியாய் மரங்களும்.. ஒற்றைக் கொக்குமே சங்க இலக்கியம் தந்துள்ளது சிறப்பு என்கிறது.சிறிய கிளையில் பெரிய பலாப்பழம் தூங்குவது போல தலைவியின் உயிர் சிறிது. அவளது ஆசையோ மிகப்பெரியது எனக் கூறுவாள் தோழி..குறிஞ்சி நில மக்களுக்கு பலா சிறந்த உணவாகும்.இது முக்கிய உணவும் எனலாம்..
வேட்டையாடும் சமூகத்திற்கு விலங்குகளும் உணவாகின.. பன்றிகள் அதில் முதலிடம். நற்றிணைப் பாடல் ஒன்றில் மலைக்கு மாயோனும்.. அருவிக்கு வாலியோனையும்..அப்போதே வேத சமயக் கடவுள்கள் ஆக்கி இருந்ததும் தெரிய வருகிறது. நீரின்றி அமையாது உலகம் நீரும் மேலாண்மையும் இருந்த காலம்.. என்கிறது.
பால் என்றால் ஊழ்வினை. அதில் நல்வினை தீவினைகள் என இரண்டு உண்டு. இவர்களை முற்பிறப்பில் நல்வினை செய்தவர்கள் அதனால் தான் நல்ல தாயார்கள் கிடைத்தார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது..
இது சமணக் கோட்பாடு (பக்கம் 41) என்கிறார். யதார்த்தத்தில் இது சமணக் கோட்பாடு மட்டுமல்ல தமிழரின் கோட்பாடும் எனலாம். மானுடப் பிறப்பே வினைப் பயன் தொடர்ச்சி தான் என்கிறது பக்தி நூல்கள். இதைக் கர்மா என்பார்கள். தன் பெற்றோர்கள் செய்த கர்மா வினைப் பயனில்தான் ஒரு பிறப்பு மண்ணில் பிறக்கிறது. அது தனது கர்மாவை அனுபவித்தே தீரும் என்பது பிறப்பின் உண்மை என தமிழ் பக்தி இலக்கியங்களும் பறைசாற்றுவது இங்கு குறிப்பிடத்தக்கது. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்கிறது சிலப்ப திகாரம். எல்லா சமயமும் இதை அங்கீகரிக்கிறது.
கால காலமாய் இதைக் காத்தும் வருகிறது. பெரும்பான்மை நம்பிக்கையின் இந்த யதார்த்தத்தை நாம் புறம் தள்ளி விட முடியாது. பாரியைக் கடவுள் போன்றவன் என்கிறார் கபிலர். தானம் கேட்டு வருகிறவரின் தன்மையை ஆராய்பவன் அல்ல பாரி. அவர்கள் அறிவில்லாதவராக, அற்ப குணம் கொண்டவராக இருந்தாலும் அள்ளித் தருவான். அதற்கு எடுத்துக்காட்டாய் கபிலர் சொன்னது யாரைத் தெரியுமா? என்பதற்கான விடையும் கூறுகிறார். மேலும்,
” நல்லவும் தீயவும் அல்ல குவி இனர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும்
உடையவை
கடவுள் பேணம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கை வன்மையே ”
இதில் மாலை சூட்டிக் கடவுளை வணங்கும் வழிபாட்டு முறை இருந்ததாகவும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். மலை மக்களின் எளிய வாழ்வு தான் பறம்பிலும் நடந்தது. காய்ச்சிய மதுவைப் புதைத்து வைத்து பிறகு எடுத்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து குடிக்கிற பழக்கம் இருந்தது எனவும், இந்த மலையின் தலைவனாக பாரி இருந்தான் என்றும் கபிலர் கூறுகிறார். பறம்பு மலை 300 ஊர்கள் கொண்டது பறம்பின் நாடு என்றும் குறிப்பிடுகிறார். இயற்கை சீற்றங்கள் வந்தாலும் பறம்பின் வளம் குறைவதில்லை என்கிறது சங்க இலக்கியம்.
வானில் வால் நட்சத்திரம் முளைத்தால் வரும் இயற்கை சீற்றங்களையும் கபிலர் குறிப்பிடுகையில்” கை மீன் புகையினும், தூமம் தோன்றினும் /தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும் /வயலகம் நிறைய, புல் பூ மலர “என்கிறார்.
புகையைக் கக்கிக் கொண்டு எரிமீன் விழுந்தாலும், வால் நட்சத்திரங்கள் முளைத்தாலும், வெள்ளிக்கிரகம் சுக்கிரன் தென் திசையில் நகர்ந்தாலும், நாட்டுக்குக் கேடு என்பது அக்கால நம்பிக்கையினையும் இக்காலமும் உணர்ந்திட தெரிவிக்கிறது.
இப்படி குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல், என கபிலரின் பாடல்கள் தமிழரின் தொன்மை நாகரிகத்தின் ஊற்றுக் கண்ணைத் திறந்து வைக்கிறது எனலாம் ..
பாரி மீது தனக்கு இருந்த காதலால், மூவேந்தர்களின் சூழ்ச்சியால் இறந்து போன பாரியை எண்ணி மனம் கலங்கியவராய் வாழ்ந்தார் கபிலர் என்றும் கூறலாம். பாரி இறந்த பிறகு தான் பாரியின் குடும்பத்தில் ஒருவராக இருந்து பாரியின் இரு மகள்களுக்கும் திருமணம் செய்து பாரியின் கடமையைத் தானே நிறைவேற்றினார் கபிலர். இது தாயுள்ளம் கொண்ட புலவர்க்கு கடனாகும். அதை தமிழருக்கு உணர்த்திய மிகப்பெரும் பாவலர் கபிலர்.
இவரது பாடல்கள் திருவள்ளுவர் தொல்காப்பியர் இளங்கோ கம்பர் முதலிய சான்றோர்களின் வரிசையில் இவரையும் இடம்பெறச் செய்யலாம்.. என்கிற தோற்றத்தை இந்நூல் கூடுதல் ஆக்கிக் காட்டுகிறது எனலாம். .
கபிலரின் 235 பாடல்களில் நற்றிணை- 20,குறுந்தொகை- 29, ஐங்குறுநூறு(குறிஞ்சி )-100, பதிற்றுப்பத்து ( ஏழாம் பத்து)10, அகநானூறு- 18, புறநானூறு- 28, குறிஞ்சிப்பாட்டு- 1, கலித்தொகை ( குறிஞ்சிக்கலி )-29. ஆக 235 பாடல்களில் இந்நூல் ஆசிரியர் 204 மட்டும் குறிப்பிடுகிறார். குறிஞ்சிக்கலிப் பாடல்களையும்,குறிஞ்சிப் பாட்டினையும் குறிஞ்சிக்கலி கபிலர் இயற்றியது என்பதற்கு தக்க ஆதாரம் இல்லை எனும் ஆய்வறிஞர் எஸ் வையாபுரி பிள்ளையின் கூற்றின் படி நான் கூறவில்லை என்கிறார்.. இது மேலும் மேலும் ஆய்வுக்கு உரியது எனலாம்..
மேலும், திரைப்படப் பாடல் ஆசிரியர்களுக்கும் காதலை கனி சுவை தரும் பாடலாக மாற்ற சங்க இலக்கியம் உதவியிருக்கிறது எனலாம்…” பனி விழும் மலர்வனம்..உன் பார்வை ஒரு வரம்.. தேவரும் முனிவரும்.. தடுமாறும் கனி மரம்”எனப் பெண்களைப் போதைப் பொருளாக்கி கவிஞர் வைரமுத்துவைப் பாடல் எழுத வைத்ததும் இதன் தோற்றுவாய் தான் எனலாம்.
ஒரு நூல் படிப்பவர்களுக்கு மிக்க பயனைத் தர வேண்டும். அந்த வகையில் கபிலரும் தமிழரும் எனும் இந்நூல் படிப்பவர்களுக்கு, இரு வகையில் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது எனலாம். @ சங்க இலக்கியம் படிக்காதவர்களுக்கு சங்க இலக்கியத்தைப் படிக்கத் ( வைக்கும்)தோன்றும் நூலாகவும், @படித்தவர்களுக்கு சங்க இலக்கியத்தை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தி பல ஆய்வு நூல்களை இன்னும் இன்னும் உருவாக்கிடவும் உதவி செய்யும் நூலாகவும் கபிலரும் தமிழரும் நூல் இருக்கிறது எனலாம்…
இன்னும் பல பொக்கிஷ நூல்களை சங்க இலக்கியத்தில் இருந்து தமிழுக்குத் தந்திட தமிழ் வாசகர்கள்.. தமிழ் அறிஞர்கள்.. இந்நூல் ஆசிரியரிடம் எதிர்பார்ப்பார்கள் என்பது நிச்சயம்..
அதை ஆசிரியர் தமிழ்ச் சமூகத்திற்கு இன்னும்.. இன்னும். செய்திடுவார் என்று எதிர்பார்க்கலாம். கபிலரும் தமிழரும்… கனிந்த வாழ்வினைத் துணிந்து சொல்கிறது.. துயரமற்று இருக்க உதவிடுகிறது..!
நூலின் விவரம்:
நூல்: கபிலரும் தமிழரும்
ஆசிரியர்: அருணன்
பதிப்பகம் : வசந்தம் வெளியீட்டகம், மதுரை -625001
பக்கங்கள்:96
விலை: ₹100/-
தொடர்புக்கு:9384813030
நூல் அறிமுகம் எழுதியவர் :
– ஆரிசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

