இ.பா.சிந்தனின் “முதல் ஸ்டெதஸ்கோப் பெண்கள்” புத்தகம் | Writer Chinthan EP's Muthal Stethoscope Pengal Tamil Book Review | நளினி மூர்த்தி | www.bookday.in

இ.பா.சிந்தனின் “முதல் ஸ்டெதஸ்கோப் பெண்கள்” – நூல் அறிமுகம்

“முதல் ஸ்டெதஸ்கோப் பெண்கள்” – நூல் அறிமுகம்

இ.பா.சிந்தன் அவர்கள் எழுதிய ஜானகி அம்மாள், பல்வங்கர்பலூ, அப்பா ஒரு கதை சொல்றீங்களா, நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும் போன்ற நூல்களை வாசித்திருக்கிறேன். இந்த அனைத்து புத்தகங்களுமே வரலாற்றில் மறைக்கப்பட்ட ஆளுமைகளை அல்லது ஒரு வரலாற்றை நமக்கு எடுத்து கூறுகிறது. அதன் தொடர்ச்சியாக தான் முதல் ஸ்டெதஸ்கோப் பெண்கள் புத்தகத்தை வாசிக்க கையில் எடுத்தேன்.

புத்தகத்தின் அட்டைபடமே புத்தகத்தில் உள்ள பாதி கதையை சொல்லி விடுகிறது. பெண் குழந்தைகள் புத்தகத்தின் மீது ஏறி நின்று ஸ்டெதஸ்கோப் மீது பயணம் செய்து ஒரு பெண் மருத்துவராக மாறி இருப்பது போன்று ஒரு அட்டைப்படம். பார்ப்பதற்கே அழகாக இருந்தது.

புத்தகத்தின் தலைப்பை பார்க்கும் போதே உள்ளே இருக்கும் நமக்கு தெரியாத அந்த “முதல்” நபர்களை தோழர் நமக்கு அறிமுகம் செய்ய போகிறார் என்ற ஆவலோடு புத்தகத்தை வாசிக்க துவங்கினேன்.

“முதல்” என்னும் வார்த்தை அவ்வளவு எளிதல்ல என்பதை புத்தகத்தை வாசிக்கும் போது நாம் அனைவருமே உணர்வோம். “முதல்” என்பது அது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. பல வருடங்களாக நம்மால் முடியாது, நாம் இதை செய்யக்கூடாது என்று அடக்கி வைக்கப்பட்டிருந்த பல தடைகளை உடைத்து, “முடியாது” என்னும் வார்த்தையை “முடியும்” என்று சாதித்து காட்டிய பெண்களின் வரலாறு தான் முதல் ஸ்டெதஸ்கோப் பெண்கள்.

பெண்கள் ஒரு காலத்தில் பள்ளிக்கே செல்லமுடியாது. அப்படியே சென்றாலும் உயர்கல்வி எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத காலம். அப்பேர்ப்பட்ட பெண்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் முடியுமா? முடியாது. இராணுவத்தில் பெண்கள் சேர முடியுமா? முடியாது. அன்றைய சூழலில் தான் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு மார்கரட் என்னும் பெண் குழந்தை அயர்லாந்தில் பிறந்தது. இராணுவத்தில் சேர வேண்டும் என்னும் ஆசை இருந்தாலும் பெண் என்னும் காரணத்தினால் மார்கரட் இராணுவத்தில் சேர முடியவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக தன் தாயுடன் லண்டன் புலம்பெயர்கிறார்.

அங்கே தன் மாமாவின் நண்பர்கள் மூலமாக படித்து முடித்து மருத்துவர் ஆகவேண்டுமென்று ஆசையோடு இருக்கிறார். ஆனால் அன்றைய கால கட்டம் பெண்கள் பள்ளிக்கே செல்ல முடியாது. தவிர மருத்துவம் படித்த பெண்கள் என்று உலகில் யாருமே இல்லாத காலகட்டம். மார்கரட் ஆண் வேடமிட்டுக்கொண்டு தன் பெயரை ஜேம்ஸ் மிரண்டா பேரி என்று மாற்றிக்கொண்டு மருத்துவ கல்லூரியில் சேர்கிறார். பட்டம் பெற்று மேல்படிப்பும் படிக்கிறார். எந்த இராணுவத்தில் பெண்களுக்கு இடமில்லை என்று சொன்னார்களோ அதே ராணுவத்தில் மருத்துவராக இருந்தார். மருத்துவத்துறையில் பல சாதனைகளை படைத்தார். குறிப்பாக பெண்களுக்கு சிசேரியன் மூலம் குழந்தையும் தாயையும் காப்பாற்றிய முதல் மருத்துவர் இவர். உலகிலேயே முதல் பெண் மருத்துவர் . கடைசி வரை தான் ஒரு பெண் என்பதையே காட்டிக்கொள்ளாமல் தன்னுடைய கடைசி நொடி வரை மருத்துவம் பார்த்து சாதித்த சிங்கப்பெண் ஜேம்ஸ் பேரி.

தன் தோழிக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரை காண சென்ற இடத்தில் தோழி சொல்கிறார் மருத்துவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருப்பதால் என்னோட பிரச்சனை அவர்களுக்கு புரிவதில்லை. ஒரு பெண் மருத்துவர்கூட இல்லையே, நீ தான் நல்லா படிப்பியே நீயே டாக்டர் ஆய்டேன் என்று தோழி கூற அதற்காகவே மருத்துவம் படிக்க வேண்டும் என்று 29 கல்லூரிகளுக்கு கடிதம் எழுதினார் எலிசபெத். 29 கல்லூரிகளும் அக்கடிதத்தை நிராகரிக்க கடைசியாக 30வது கல்லூரியில் இடம் கிடைத்து மருத்துவமும் முடித்து விட்டார். ஆனால் அவரை யாரும் மருத்துவராக ஏற்கவில்லை. எங்கெங்கோ அலைந்து திரிந்து கடைசியில் ஏழை எளிய மக்களுக்கு வைத்தியம் பார்க்கிறார். அதுமட்டுமின்றி அமெரிக்காவில் பெண்களுக்கென்று தனி மருத்துவமனையை உருவாக்கி பல பெண் மருத்துவர்களை உருவாக்கினார் அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவர் எலிசபெத்.

அதே போல் இந்தியாவின் அபலா போஸ் சென்னை மருத்துவக் கல்லூரியில் பல தடைகளை தாண்டி சேர்ந்தார். ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படிப்பை தொடரமுடியாமல் போனது. ஆனால் 200க்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்து பல பெண் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர்.

தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார். கோவில் குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கு படிப்பு மறுக்கப்பட்டது. கோவில் குடும்பத்தை சேர்ந்த முத்து லட்சுமி அம்மையாருக்கு தன் தந்தை வீட்டிலேயே பாடம் எடுத்தார். பள்ளிக்கு போக கூடாது என்று எத்தனையோ எதிர்ப்புகளை எதிர்கொண்டார். மருத்துவத் துறையில் ஆப்ரேஷன் செய்யும் துறை தான் வேண்டும் என்று விரும்பி படித்தார். ரத்தமும், கத்தியும் பார்த்தால் பெண்கள் ஓடி விடுவார்கள் என்று நினைத்தவர்களுக்கு அறுவை சிகிச்சை பாடத்தை நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்தார். அடையார் புற்றுநோய் மையத்தை உருவாக்கி இருக்கிறார். பெண் குழந்தைகளை கோவிலுக்கு கொடுக்கும் வழக்கத்தை ஒழித்தார்.

இது போன்ற எண்ணற்ற பெண்களின் வரலாறுகளை கூறும் நூல் இது. எங்கள் வீட்டிலும் ஒரு பெண் இப்போது மருத்துவம் படித்துக்கொண்டு இருக்கிறார். எனக்கு தெரிந்து எங்கள் ஊரை சுற்றி உள்ள பகுதிகளில் மருத்துவம் படிக்கும் முதல் பெண் அவள் தான். அதிலும் கத்தியை பார்த்தால் பயம், இரத்தத்தை பார்த்தால் பயம் என்று சொல்லி கொண்டிருக்கும் அறுவை சிகிச்சை துறையை தேர்ந்தெடுத்து படித்துக் கொண்டிருக்கிறாள். 200 ஆண்டுகளுக்கு முன்பு அல்ல. இன்றும் பெண்கள் மருத்துவம் படிப்பதற்கும் குறிப்பாக அறுவை சிகிச்சை துறையை தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கான எதிர்ப்புகள் இருந்து கொண்டு தான் உள்ளது.

தடைகளை உடைத்து சாதனை படைக்கும் பெண்களுக்காக எழுதப்பட்ட ஒரு வரலாற்று புத்தகம். தன் மகளை மருத்துவம் படிக்க வைக்க என்னும் ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய புத்தகம். மருத்துவ துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் வாசிக்க வேண்டிய புத்தகம். அனைவரும் வாசியுங்கள்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:
ஆசிரியர்: 
வெளியீடு:
விலை: 5% சலுகை விலையில்
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 நளினி மூர்த்தி

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *