அதீத தாழ்வு மனப்பான்மையும் அங்கீகாரத் தேடலும் -இரா முருகவேள்

அதீத தாழ்வு மனப்பான்மையும் அங்கீகாரத் தேடலும் -இரா முருகவேள்

ஜெயமோகனுக்கு ஒரு பதில் எழுதியே ஆக வேண்டுமா என்ன?
ஆனால் அது நிகழ்ந்தே விட்டது என்று நண்பர்கள் போனிலும் முகநூலில் சொல்லி ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதால் இந்தப் பதிவு. தவிர நான் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பரபரப்பு எழுத்தின் ரசிகன் என்பதால் நண்பர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதைக் கடமையாகக் கருதுகிறேன்.
ஒரு பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பு ஜெயமோகன் அண்மைக்கால வரலாற்றை எழுதினாலும் சரி, பண்டைய இலக்கிய இதிகாசங்களை எழுதினாலும் சரி போதுமான அளவுக்கு உழைப்பதில்லை. சொந்த அறிவைக் கொண்டு இண்டர்பிரட் செய்வதில்லை. கேட்டதையும் படித்ததையும் அப்படியே வாந்தி எடுக்கிறார். எனவே வெள்ளையானை, கொற்றவை அண்மையில் வெளிவந்த பத்து லட்சம் காலடிகள் போன்றவை ஆழமான, தேடலோ, ஆய்வோ அற்ற மேலோட்டமான எழுத்துக்கள் என்று எழுதியிருந்தேன்.
இப்போது ஜெயமோகன் எனது பிள்ளையார் கதையை குப்பை, தரமற்றது என்று பொங்கித் தள்ளியிருக்கிறார்.
இது நடந்து கொண்டுதான் இருக்கும். பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.
——-
கடுப்பு என்னவெனில் புதுமைப்பித்தனுடனும்,  ஜெயகாந்தனுடனும் பேச்சுவாக்கில் சுந்தர ராமசாமியையும் தன்னையும் க நா சுவையும் இணைத்துக் கொள்வதுதான்.
புதுமைப்பித்தனை இடதுசாரிகள் விமர்சிப்பார்கள், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.
ஆனால் ஸ்டாலினுக்குத் தெரியும் எழுதியவருடன், விலங்குப் பண்ணையை மொழிபெயர்த்தவரையும், ஜே ஜே சில குறிப்புகள் எழுதியவரையும், பின் தொடரும் நிழலின் குரல் என்ற அபத்தத்தை எழுதிக் குவித்தவரையும், ஒரே தட்டில் வைக்கும் முயற்சி பரிதாபகரமானதாகத் தோன்றுகிறது. இதிகாசம்,    ஏகாதிபத்தியம் பற்றிய புதுமைப் பித்தனின் பார்வையும், ஜெயமோகன் வகையறாவின் கரடுதட்டிய வலதுசாரி, வைதீகப் பார்வையும் எங்கே ஒட்டும்?
மகாபாரத காலத்தின் பலகணவ முறை அல்லது குழு மணமுறையைக் கூட ஏற்றுக் கொள்ள இயலாத ஜெமோ  இடதுசாரி வரலாற்று ஆய்வாளர்களைப் பின்பற்றுவதாக  ஏன் அலட்டிக் கொள்கிறார்? அல்லது அப்படிப்பட்ட ஆய்வுகள் இருப்பதே தெரியாதா? ஜெயமோகன் அல்லவா அங்கீகாரத்துக்கு அலைகிறார்?
மாபியாக்களையும், கடத்தல் தொழிலையும் பற்றிய  குறைந்த பட்ச அறிவு,  இணையத்தில் கொஞ்சம் தேடும் முனைப்பு கூட இல்லாத ஒருவர் பத்து லட்சம் காலடிகள் என்ற புராணகால அபத்தத்தை எழுதுவதற்குத்தான் அசட்டுத் துணிச்சல் வேண்டும். மிகச் சாதாரணமாகப் பக்கத்து வீட்டில் நடக்கும் பிள்ளையார் கதை எழுத அது தேவையில்லை.
JEYAMOHAN | வ.மு.முரளி
வரலாறு, சமூகம், அரசியல், பொருளாதாரம் குறித்தெல்லாம் குறைந்த பட்ச அறிவுகூட இல்லாத ஜெயமோகன் தன்னை மதிப்பீடு செய்பவராகக் காட்டிக் கொள்வதே தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுதான்.
ஒரு முறை ஈரோடு புத்தகக் கண்காட்சியில் பேச வந்த ஜெயமோகன் எத்தனை முறை நான் என்ற சொல்லை உச்சரித்தார் என்று நண்பர் ஈரோடு கதிர் எழுதியிருந்தார். ஜெமோ அதற்கும் மூன்று கட்டுரைகள் எழுதினார். வலிந்து தன்னை முன்னிறுத்திக் கொள்வது, தன்னை மையமாகக் கொண்டே சிந்திப்பது என்பது அதீத தாழ்வு மனப்பான்மையையும், ஏதாவது ஒரு முறையில்  அங்கீகாரம் தேடுவது என்பதையுமே வெளிப்படுத்துகிறது.
                               ————-
      ஜெயமோகன் குறித்த பல தோழர்களின் பார்வையுடன் எனக்கு எப்போதுமே உடன் பாடு இருந்ததில்லை. அவர்கள் ஜெயமோகனின் தீவிர வலதுசாரி நிலைபாடுகளை அம்பலப்படுத்த வேண்டும், முனைப்புடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்துக் கொண்டுள்ளார்கள்.
   என்னைப் பொறுத்தவரை ஜெயமோகன் அவ்வளவு முக்கியமானவர் அல்ல. தமிழ் சமூகத்திலும், அறிவுலகிலும், இலக்கிய உலகிலும் அவரது தாக்கம் அற்பமானதே.  தாக்கம் செலுத்தக் கூடிய அளவுக்கு கூர்மையான அரசியல் அறிவு கொண்டவரோ, இலக்கியப் பங்களிப்பு செய்தவரோ  அல்ல அவர்.
   சாதியம் கூர்மையாக இருக்கும் இன்றைய காலத்தில் சாதிய அமைப்பைப் பற்றிப் படமெடுக்க ஒருவர் விரும்பினால் பூமணிதான் தேவைப்படுகிறார். 20,000 பக்கம், 30,000 பக்கம் எழுதிக் குவித்த ஜெயமோகனில் தமிழ் சமூகம் ஒரு துளியளவு கூட இல்லை. முருகதாஸின் கதை இலாகாவில் வேலை செய்து  அவரது தகிடுதத்தங்களை  நியாயப் படுத்த வேண்டிய நிலையில் தான் இருக்கிறார் ஜெயமோகன்.
    எனவே ஜெமோ  தனிச்சிறப்பானவர் அல்ல. மிகச்சாதாரணமானவர் என்பதை அவருக்கும் அவரது மாணவர்களுக்கு உணர்த்தினால் போதும் என்பது என் கருத்து.
                                —————
   இடதுசாரி இலக்கியம் குறித்து ஜெயமோகனுக்கு என்ன தெரியும்? கவிதைகள், தன்வரலாறு, நாவல்கள், விமர்சனம், ஆய்வு என்று பரந்து விரிந்திருக்கும் இடதுசாரி அறிவுப்புலத்தை நான்கைந்து பெயர்களை வைத்துக் கொண்டு அளந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ள அசாத்திய முட்டாள்தனம் வேண்டும்.
   சுவருக்குள் சித்திரங்களையும், கம்பிக்குள் வெளிச்சங்களையும் மேரி டெய்லரின்  மை இயர்ஸ் இன் ஏன்  இண்டியன் பிரிசன் நூலுடன் இணைத்துப் பார்க்க முடியுமா ஜெயமோகனால்? அந்த அளவுக்கு அரசியலும், வரலாறும், அரச பயங்கரவாதம் குறித்த புரிதலும் உண்டா அவரிடம்?
ஸ்டெல்லா புரூஸ் வரை பட்டியலிடத் தெரிகிறது. தூக்குமர நிழலில் நாவல் பற்றி ஒரு இரண்டு வரி எழுத முடியவில்லை பட்டியல் விமர்சகர் ஜெயமோகனுக்கு.
சரி. 50களின் சிறை, விவசாயிகளின் வாழ்க்கை  குடு்ம்ப உறவுச் சிக்கல்கள்   பற்றி இலக்கிய சாட்சியமாக இவரது முன்னோர்கள் என்ன எழுயிருக்கிறார்கள்? ஏதாவது தெரிந்தால்தானே எழுதுவதற்கு. எனவே எழுதியவரை இருட்டடிப்பு செய்துவிடுவது  நல்ல தந்திரம்தானே.
உலோகம் எழுதிய மட்டி மண்டைக்கு புதியதோர் உலகம் நாவலைப் புரிந்து கொள்ள முடியுமா?
இந்த திருட்டுத்தனத்தை வைத்துக் கொண்டுதான் இடதுசாரிகளுக்கு முத்திரை குத்த வருகிறார் அண்ணன்.
  அடிமைகள், கானல், பஞ்சமர் நாவல்களை உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி ஜெயமோகனுக்கு இருக்கிறது என்பதற்கு, கழிவுகளைக் கொட்டுவதற்காக இந்தியத் துறைமுகங்களில் வந்து நிற்கும் கப்பல்கள் கொள்ளும் அளவு குப்பைகளை எழுதிக் குவித்த ஜெமோவின் எழுத்துக்களில் இருந்து ஒரு பத்தியை ஆதாரமாகக் காட்ட முடியுமா?
நடை பற்றிய பொத்தாம் பொதுவான ஓரிரு வரிகள் விமர்சனம் அல்ல. அந்தக் கால கட்டத்தையும், அப்போது வாழ்ந்த மக்களையும், புவியியல் பரப்பையும் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டே ஒரு எழுத்தை விமர்சிக்க வேண்டும். ஜெமோ எல்லாத் தளங்களிலும் தோல்வியே அடைகிறார்.
ஒளி நாடா | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil ...
 அன்புள்ள முருகவேள்,
 உங்கள் கதையை குப்பை என்று அவர் சொன்னது குறித்து நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே?
                                                       பூமார்க்கெட் கோவிந்தசாமி
அன்புள்ள பூமார்க்கெட் கோவிந்தசாமி அவர்களுக்கு,
அதனால் என்ன? அது அவர் கருத்து. அவர் கருத்தைச்  சொல்ல அவருக்கு உரிமை உண்டு. என்னுடைய கதை குப்பை என்று மட்டும் அவர் சொல்லிவிட்டுப் போயிருந்தால் நான் இதை எழுத வேண்டிய அவசியமே இல்லை. எனது கதையைக் கொண்டு எல்லா இடதுசாரிகள் மேலும் முத்திரை குத்த முயற்சி செய்ததால் தான் இந்தப் பதிவு.
தவிர ஒரு சிலவிதங்களில் எழுத்தும் வக்கீல் தொழிலைப் போன்றதுதான். நூறு பேர் புகழ்ந்தால் இகழவும் நூறுபேர் இருக்கத்தான் செய்வார்கள். ஜெமோவும் அவரது மாணவர்கள் சிலரும் அதைக் குப்பை எனலாம்.
சுமார் நூறு பேர் இணையதளத்திலும், முகநூலிலும் அந்தக் கதைக்கு விருப்பக் குறி இட்டிருக்கிறார்கள். அதில் பாதிப்பேர் நட்புக்காக சொல்கிறார்கள் என்றாலும் மீதிப்பேருக்கு அது பிடித்திருக்கிறது. எனவே எல்லாம் தான் இருக்கும்.
இந்தக் கதையை இப்போது எழுதாமல் எப்போது எழுத வேண்டும்? எழுபதுகளில் தமிழக் கோவில்களில் காவிக் கொடி பறந்ததா? எண்பதுகளில்? தொண்ணூறுகளில்?
இலக்கியம் காலத்தைப் பிரதிபலிக்க வேண்டும். வார்த்தை ஜாலங்கள் இலக்கியம் அல்ல. அந்தரத்தில் கற்பனையில் இயங்குவது இலக்கியம் அல்ல. அப்படிப்பட்ட இலக்கியம் ஒரு பொழுதுபோக்குக் கருவி.
இந்துமதத்தை ஒற்றைப் பரிமாணம் கொண்ட சீரான மதநிர்வாக அமைப்புக்குள் கொண்டு வர    ஒரு அமைப்பு முயன்று கொண்டு இருக்கும் சூழலைச் சொல்கிறது அந்தக் கதை. அதை இப்போதுதான் எழுதுவோம். எழுதுவதும் பதிவு செய்வதும் ஒரு எழுத்தாளரின் கடமை.
அதே போல பல்வேறு சமூக சட்டங்கள், விதிகள், மரபுகள் கொண்டிருந்த இந்திய சமூகத்தை இந்துத்  திருமணச் சட்டம், வாரிசுரிமைச் சட்டம், போன்ற பொதுவான சட்டவரையறைக்குள் 1956ல்  நேரு அரசு கொண்டு வந்த போது அதன் நல்லது கெட்டது பற்றி ஜெயமோகனின் முன்னோடிகள் சுந்தர ராமசாமி, க ந சு ஏதாவது எழுதியுள்ளார்களா? கிடையாது.
இன்றைய கேடுகளுக்கு அஸ்திவாரம் அன்றுதான் போடப்பட்டது என்ற  விவாதம் குறித்து இந்த வகையறாவுக்கு ஏதாவது கருத்து இருக்கிறதா?இவர்கள் எழுதவில்லை என்றால், எழுதியவர்களைக் குற்றம் சொல்ல இந்த சுத்த இலக்கியவாதிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது?
சரி ஜெயமோகன் சமகால சம்பவங்களை எழுதக்கூடாது என்ற ஒன்னாம் நம்பர் முட்டாள்தனத்தை கோட்பாடாக வைத்து இருக்கிறார். கடந்த காலத்தை இவராவது எழுதி இருக்கிறாரா? அது என்ன வென்று புரியுமா இவருக்கு?
வாழ்க்கையையும், சமூக நடப்புகளையும் பற்றிய அறிவு கடுகளவும் இல்லாத கிணற்றுத் தவளை இந்த ஜெயமோகன். சமூக வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் ஒரு அறிவு முதிர்ச்சி வேண்டும். கற்பனையையே ரசித்து புசித்து மோகித்து வாழ்ந்து வரும் கிணற்றுத் தவளையிடம் அதை எதிர்பார்க்க முடியாதுதான்.
எரியும் பனிக்காடு: 10 ஆண்டுகள்... 10 ...
இவர் கிண்டல் செய்யும், பொறாமைப் படும் வணிக எழுத்தாளர்கள் குறிப்பாக பெண் எழுத்தாளர்கள்  வரதட்சிணைக்  கொடுமை பற்றிய கதைகளை எழுதிக் குவித்து இருக்கிறார்கள்.
 , வரதட்சணைக் கொடுமையின் வேர் பெண் சொத்துரிமையை உறுதிப் படுத்தாத, மரபுரீதியிலான சீதன உரிமையை சட்டபூர்வமானதாக அங்கீகரிக்கத் தவறிய இந்துத் தொகுப்புச் சட்டங்களில் இருக்கிறது.
பெண் எழுத்தாளர்கள் தாங்கள் நேரில் கண்ட சமூக எதார்த்தத்தைப் பிரதிபலித்தார்கள்.
அண்ணன் ஜெமோ அறிவுக் கொழுந்து அல்லவா? இவர் எதார்த்தத்தை மட்டுமல்லாமல் காரணத்தையும் ஊடுருவிப் பார்த்திருக்கலாம் இல்லையா? இவர் சொன்ன அபத்த முப்பது ஆண்டுகள்தான் ஓடிவிட்டனவே? அவர்களைத் திட்டும் இவர் ஏன் அந்த விஷயங்கள் குறித்து ஆழமாக அழகாக எழுதவில்லை?
சமூக எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு  அரசியல் ஆர்வம் இல்லையென்றாலும், துயரத்தைப்  உணர்ந்து கொள்ளூம் நுண்ணுணர்ச்சியாவது இருக்க வேண்டும். அது லஷ்மிக்கும், அனுராதா ரமணனுக்கும் இருந்தது.
ஜெயமோகனுக்கு சமூக, அரசியல் அறிவும் இல்லை. நுண்ணுணர்ச்சியும் இல்லை.
கதை சொல்லப்பட்ட நடையின் அடிப்படையில் சொல்கிறேன் என்றால் ஜெயமோகனின் ஆடம்பர, அலங்கார,  உள்ளீடற்ற வெற்று நடையையும், அதை அடிப்படையாகக் கொண்ட விமர்சனத்தையும் நான் அடியோடு நிராகரிக்கிறேன்.
இரா.முருகவேள்
Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *