நூல் அறிமுகம்: “வாழ்க வாழ்க” – இரா.சசிகலா . 

     தேர்தல் கூட்டங்கள் நடக்கும் பொழுது திரளான மக்கள் குழுமியிருப்பதையும், புகைப்படக்காரர் தங்கள் பக்கம் திரும்புகிறார் என்று தெரிந்தால், சிரிப்புடன் கையசைக்கும் மக்களையும் தேர்தல் ஒளிபரப்புக் காட்சிகளில் கண்டிருப்போம். ஆனால் அவர்கள் உண்மையில் மகிழ்ச்சியானவர்களா என்ற கேள்விக்குப் பதிலாக எழுத்தாளர் இமையத்தின் சமீபத்திய குறுநாவல் ” வாழ்க வாழ்க” க்ரியா பதிப்பகத்தின் வெளீயிடாக வந்திருக்கிறது. இது கொரோனா காலத்தில் வெளிவந்திருக்கும் சம கால அரசியலைப் பேசும் முதல் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.
    தன் பேரனின் மருத்துவச் செலவிற்காக ரூ 500 பெற வேண்டி, ஒரு புகழ் பெற்றக் கட்சியின் தலைவி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லும் ஆண்டாள் என்ற பெண்ணின் வாழ் நிலையிலிருந்து தொடங்குகிறது கதை.  கதைப்படி, விருத்தாசலத்தில் நடக்கும் தேர்தல்  பிரம்மாண்டத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைக் காட்டுவதற்காக அதன் பக்கத்தில் உள்ள ஊர்களிலிருந்து பெண்களையும், ஆண்களையும் அழைத்து வரும் பொறுப்பின் மூலம் கட்சியில் ஒரு மாவட்ட செயலாளராவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் வெங்கடேசப் பெருமாளை சுற்றியும் இந்தக் கதைப் பின்னப்பட்டிருக்கிறது. அவனுக்கும்,  இன்னொரு பிரதான எதிர்கட்சியினருக்கும் இடையே நடக்கும் உரையாடல், நிகழ்கால அரசியல் சூழ்நிலையை அச்சு அசலாகப் பிரதிபலிக்கிறது.ஒரு MLA M.P. பதவிக்காக கட்சித் தலைவியின் காலில் விழுவது தவறில்லை என்ற வெங்கடேசப்பெருமாளின் கூற்று மிகையல்ல என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.  சமீபத்தில் ஒரு மாவட்டச் செயலாளரானதற்காக, ஒரு தமிழ் தினசரியில் அரைப்பக்க விளம்பரமாக ஒரு அமைச்சர் கொடுத்திருப்பது, மாவட்டச் செயலாளர் பதவி எவ்வளவு வலு மிக்கது, விலை மதிக்கத்தக்கது என்பதைக் காட்டுகிறது. அந்தப் பதவியைக் கைப்பற்றி, ஒரு மந்திரியாக் கூட ஆகலாம் என்ற வெங்கடேசப்பெருமாளின் கடும் முயற்சிகள் வெறும் கதை நிகழ்வுகளாகக் கருதமுடியாது என்பதை மிக யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இமையம்.
     அதிகாரத் தோரணையுடன் வலம் வரும் வெங்கடேசப்பெருமாளைப் பொதுவாக யாருக்கும் பிடிக்காது எனினும், பெரியகண்டியாங்குப்பத்திலும், சின்னக் கண்டியாங்குப்பத்திலுள்ள மக்கள் அவனை எதிர்க்காததற்குக் காரணம் அவன் தங்கள் சாதியை சேர்ந்தவன் என்ற காரணத்திற்காக மட்டுமே என்று கதையில் அழுத்தந் திருத்தமாக சொல்லப்பட்டிருப்பது  சமுதாயம் சாதியின் பிடியில் சிக்கி எவ்வாறு சின்னாபின்னமாயிருக்கின்றது என்பதைக் கதைப் போக்கிலேயே சொல்லிச் சொல்கிறது நாவல்.
எழுத்தாளர் இமையம் - Buy Tamil Books Online ...
     இமையத்தின் பெரும்பாலான நாவல்களும், சிறுகதைகளும், சமுதாயத்தில் பெண்ண்டிமைத்தனத் தாலும், ஒடுக்குமுறைகளாலும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் பெண்களை, குறிப்பாக அடித்தட்டுப் பெண்களை மையப்படுத்தியே இருக்கும் என்பது அவரது கதைகளைப் படிக்கும் அனைவரும் அறிந்ததொன்று. இமையத்தின் இக் கதையும் அதற்கு விதி விலக்கல்ல. 500 ரூபாய்க்காக விருத்தாசலத்தில் வெட்ட வெயிலில் நடக்கவிருக்கும் பொதுக் கூட்டத்திற்காக ஆண்டாள் போலவே கோமதி, கண்ணகி, சொர்ணம் போன்ற இன்னும் நிறையப் பெண்களும், ஏன், அவர்களது பிள்ளைகளும் செல்லக் கூடிய சூழலில்தான் சாதாரண ஏழை மக்களின் நிலை இருக்கிறது என்பது அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழி நெடுகிலும் தென்படுகிற கொடித் தோரணங்களும், டிஜிடல் பேனர்களும் ஏற்படுத்தும் பிரமிப்பும், ஆச்சர்யமும் பெண்களை ஆட்கொள்வது மிகவும் யதார்த்தமாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
சுடும் வெயிலில் நாற்காலிகள் பெற வேண்டி வெங்கடேசப்பெருமாளின் உத்தரவுப்படி அப்பெண்கள் நாற்காலிகளில் இடம் பிடிப்பதற்காக  ஓட்டமும் நடையுமாகச் செல்வதை விவரிக்கப்பட்டிருப்பதைப் படிக்கும் பொழுது மனம் கலங்குகிறது. நாற்காலிகளில் இடம் பிடிப்பதற்காக நடைபெறும் தள்ளுமுள்ளுகள் , அதையொட்டி நடக்கும் சண்டைகள், வீசப்படும் வசவுகள் அனைத்தும் நம் கண் முன்னே நடப்பது போலவே காட்சிகள் சித்தரிக்கப்பட்டிக்கின்றன. அந்த உரையாடல்கள் சமூக அவலங்களையும், அவர்களது சொந்த வாழ்க்கையின் வேதனைகளையும் சுட்டிக் காட்டிய போதும், அதனுடைய தீவிரத்தன்மை மாறாது நகைச்சுவையுணர்வு ஆங்காங்கே இழையோட, உரையாடல் வழியே கதையை நகர்த்தும் பாணி சிறப்பம்சமாக நாவலெங்கும் வெளிப்படுகிறது.” இதோ, தலைவி வருகிறார்” என்ற அறிவிப்புகள் மட்டுமே தொடர்ந்த வண்ணம் இருக்க, கசகசக்கும் வியர்வையுடன் பெண்கள் படும் சிரமங்களை எழுத்தாளர் விவரித்ததைப் படிக்கும் எவரும் மனம் பதைக்காமல் இருக்க முடியாது.
ஏற்கெனவே சுட்டெரிக்கும் வெயிலில் போதிய உணவு, நீரின்றி தவிக்கும் அப்பெண்களுக்குத் தலைவி படம் பொறித்த தொப்பிகளும்.கையில் பதாகைகளும் கொடுத்து கீழே விழாமல் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற தண்டனையும் வந்து சேர்கிறது . இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்க இடமின்றி அவதிப்படும் பெண்களின் நிலை சற்றும் மிகையின்றி சித்தரிக்கப்
பட்டிருக்கிறது. 400 , 500 ஏக்கரில் கூட்டத்திற்கான அனைத்து அலங்கார வசதிகளும், மேடை அலங்காரங்களும் செய்யப்படும் பொழுது இப்பெண்களுக்கு கழிவறை வசதி கூட இல்லாத நிலை அவலம்தான்.
எழுத்தாளர் இமையத்தின் கட்டுரை ...
      ஒரே கட்சி, ஒரே ஊராக இருப்பினும், தலித் சமூகத்தைக் சேர்ந்த பெண்கள் எனில், மற்ற சாதிப் பெண்கள் அவர்களை இழிவாக நடத்துவதை கூரிய சொல்லாடல்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
உதாரணத்திற்கு:
  ” ஒரே ஊருக்காரின்னு கூடப் பாக்காம என்னைக் கீழத் தள்ளிட்டீங்க இல்லையா?
” நீ ஊரு இல்ல. பறத் தெரு “
” நானும் பவழங்குடிதான் “
” பவழங்குடியா இருந்தாலும் நீ பறத் தெரு.”
ஆண்களோ பெண்களோ, சமூகம் இன்னும் சாதி எனும் இழிநிலையிலிருந்து விடுபடவில்லை என்கிற உண்மையை  இவ்வளவு எளிதாக வாசகர்களுக்கு உணர்த்த முடியுமா ? என்ற ஆச்சரியத்தையும் , அதிர்ச்சியையும் அவர்களின் வசவுகளுடன் அமைந்த உரையாடல் வெளிப்படுத்துகிறது.
     நாற்காலிகளில் அமர்வதற்கு அரசியல் வட்டாரத்தில் என்றுமே போட்டிதான் என்பதைக் கண்ணகி கதாபாத்திரத்தின் மூலம் போகிற போக்கில் சொல்வது போல் மிக அநாயசமாக சொல்லி விட்டுப் போகிறார் எழுத்தாளர்.
” ஊரான் வூட்டு நாற்காலில செத்த நேரம் ஒக்காருறதுக்கே ஜனங்க இம்மாம் அடிச்சிக்கிதுவோ. எம்.எல்.ஏ, வா மந்திரியா இருக்குறனுவோ ஏன் ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சிக்க மாட்டானுவோ?” என்ற இந்த வரிகள் சாமான்யப் பெண்களுக்கும் அரசியல் உணர்வு உண்டு என்பதைக் காண்பிப்பதாக உள்ளது.
கடும் வெயிலில் மணிக்கணக்காக அமர்ந்திருந்த பெண்கள் தங்கள் வேதனைகளை, குடும்பச் சுமைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு முடிந்தும் தலைவி வந்தபாடில்லை. எல்.இ.டி. திரையில் தலைவி கூட்டங்களில் பேசியதைத் திரும்ப திரும்பக் கேட்டு பெண்களுக்கு அலுப்புத் தட்டினாலும் அந்தத் தலைவியின் அதட்டலானப் பேச்சும், ஆணித்தரமான வார்த்தைகளும், வசீகரமானத் தோற்றமும் பெண்களை வியப்படையச் செய்தன.
     ஒரு வழியாகத் தலைவி ஹெலிகாப்டரிலிருந்து இறங்கி கார் மூலம் மேடையைச் சென்றடைந்தார்.
” பெண்கள் பகுதியில் ஏற்பட்டிருந்த கூச்சல், குழப்பம், துயரம் எதுவும் தெரியாமல் த.உ.மு. கழகத்தின் தலைவி ” என் கண்ணினும் கண்ணான, என் உயிர் மூச்சினும் மேலான வாக்காளர் பெருமக்களே ” என்று கையில் வைத்திருந்த காகிதத்தைப் பார்த்து பார்த்துச் சத்தமாகப் படித்துக் கொண்டிருக்கிறார்.
தேர்தல் சமயங்களில் கூட்டம் சேர்ப்பதற்காக எவ்வாறு பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள், அங்கே அவர்கள் படும் துன்பங்கள் என்பது போன்ற மனங் கனக்கும் செய்திகளை இவ்வளவு எளிமையான நடை,சொற்கள் மூலம் எவ்வாறு எழுத்தாளர்  வாசகர்களுக்குக் கடத்துகிறார் என்பது வியப்புக்குரியதாகவும், அதே சமயம் பாராட்டுக்குரியதாகவும் இருக்கிறது.
  பல இன்னல்களையும், பசி, தாகம் போன்ற  உடல் உபாதைகளையும் தாங்கிக் கொண்டு தாங்கள் வாங்கும் சொற்பப் பணத்திற்காக இப்பெண்கள் எழுப்பும் ” வாழ்க, வாழ்க” கோஷம் தான் வெங்கடேசப்பெருமாள் போன்ற சுயநல அரசியல்வாதிகளை வாழ  வைக்கிறது என்பதைத்தான் நாவல் உணர்த்துகிறது.
இது எழுத்தாளர் இமயத்திற்கு இன்னுமொரு மைல்கல்.
வாழ்க வாழ்க
இமையம்
முதல்பதிப்பு : ஜீன் 2020
க்ரியா பதிப்பகம்
விலை : 125