இந்திரா பார்த்தசாரதி எழுதிய “ராமாநுஜர்” நாடகம் புத்தகம் | Writer Indira Parthasarathy's Ramanujar Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இந்திரா பார்த்தசாரதியின் “ராமாநுஜர்” நாடகம் – நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: ’ராமாநுஜர்’, இந்திரா பார்த்தசாரதியின் நாடகம். சாதியற்ற சமுதாயத்தை; அனைவருக்குமான வைணவத்தை நிறுவ விரும்பிய ஓர் ஆச்சாரியாரின் வரலாறு.

– பெ.விஜயகுமார்.

1930இல் சென்னையில் பிறந்து. கும்பகோனத்தில் வாழ்ந்த பார்த்தசாரதி தன் மனைவி இந்திராவின் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டு இந்திரா பாத்தசாரதி என்ற புனைபெயரில் எழுதுகிறார். குடந்தை அரசு கல்லூரியில் பட்டப் படிப்பையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப் படிப்பையும் முடித்துவிட்டு, மூன்றாண்டுகள் திருச்சி தேசியக் கல்லூரியிலும், நாற்பதாண்டுகள் டில்லி பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார்.

ஐந்தாண்டுகள் போலந்தின் வார்சா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியாரகவும் இருந்துள்ளார். நிறைய சிறுகதைகள், 19 நாவல்கள், 15நாடகங்கள் எழுதியுள்ளார். சாகித்ய அகாதமி விருது, சங்கீத் நாடக அகாதமி விருது, பாரதிய பாஷா பரிஷத், பத்மஸ்ரீ விருது, தி இந்து லிட் ஃபார் லைஃப் – வாழ்நாள் சாதனையாளர் விருது, போன்ற விருதுகள் பெற்றுள்ளார். சாகித்ய அகாதமி ஃபெல்லோஷிப் என்ற கௌரவமும் கிடைத்துள்ளது.

சரஸ்வதி சம்மான் விருது பெற்ற ராமாநுஜர் நாடகமும், நந்தன் கதை நாடகமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. ஒரு நாடகத்தின் வெற்றி அது மேடை ஏறுவதில்தான் உள்ளது என்பது இவரின் கருத்து. தான் எழுதிய நாடகங்கள் பலவும் மேடையேறவில்லை என்ற ஆதங்கமும் இவருக்குண்டு. ராமாநுஜரின் வாழ்க்கை வரலாற்றை ’மதத்தில் புரட்சி செய்த மகான்’ என்ற தலைப்பில் கலைஞர் உருவாக்கிய ஆவணப்படத்தை கலைஞர் டி.வி. தொடராக வெளியிட்டது.

ராஜேந்திர பால் என்பவர் டில்லியில் நாடகங்களை மட்டுமே வெளியுடுவதற்காக ‘Enact’ என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடத்தி வந்தார். இந்தப் பத்திரிகை மூலமே இந்தியாவின் சிறந்த நாடகாசிரியர்களான விஜய் டெண்டுல்கர், பாதல் சர்க்கார், கிரிஷ் கர்னார்டு, மோகன் ராகேஷ் போன்றவர்கள் பிரபலமானார்கள். இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்கள் பலவும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு இப்பத்திரிகையில் வெளிவந்துள்ளன. இவரின் நந்தன் கதையும், ஒளரங்கசீப்பும் தமிழில் மேடை ஏறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஹிந்தியில் மேடை ஏறியுள்ளன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராமாநுஜர் எப்படி நமக்குச் சமகாலத்தவராக இருக்கிறார் என்பதே ’ராமாநுஜர்’ நாடகத்தின் நோக்கம். ராமாநுஜரின் வாழ்க்கை வரலாறு ‘ராமாநுஜ திவ்ய சரிதம், ராமாநுஜ சம்பு, குருபரம்பரைப் பிரபாவம், யதிராஜ வம்ஸதி போன்ற பல நூல்களில் எழுதப்பட்டுள்ளன. ராமாநுஜர் வைணவ சமயத்தைத் தொடக்கியவர் அல்ல. அவர் காலத்திற்கு முன்பே பனிரெண்டு ஆழ்வார்கள் எழுதிய திவ்ய பிரபந்தங்களால் ஈர்க்கப்பட்டு நாதமுனி, உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார் போன்றவர்கள் வைணவ கருத்துகளுக்கு அடிகோலினர். ராமாநுஜர் இதற்கு ஒரு வடிவம் கொடுத்து ரகஸ்யார்த்தமாயிருந்த கோட்பாடுகளை சாதாரண மக்களுக்கு திருக்கோஷ்டியூரில் நடந்த நிகழ்வில் வழங்கினார்.

சாதி வேறுபாடு வைதீக மதத்தின் சாபக்கேடு. பிறப்பினால் ஏற்படும் உயர்வு, தாழ்வு கர்ம பலனினால் ஏற்படுகிறது என்று கூறிய சனாதனம் அதைவிடக் கொடுமையானது. ராமாநுஜர் சாதி வேறுபாடுகளை அடியோடு நிராகரித்தார், அவருடைய முதல் குருவே வைஸ்ய குலத்தைச் சேர்ந்த திருக்கச்சி நம்பி. சாதி வேறுபாடுகளை ஒழிக்கும் வகையில் ராமாநுஜர் வைணவம் அனைவருக்கும் உரித்தானது என்றார். சமூக விளிம்பில் இருந்த பஞ்சமர்களை வைணவர்களாக்கி அவர்களை திருக்குலத்தார் என்றார். இங்கே மகாத்மா காந்தி பஞ்சமர்களை ஹரிஜனங்கள் என்றழைத்ததை நினைவில் கொள்ளலாம்.

மேல் கோட்டையில் திருமால் கோயில் கட்டுவதற்கு திருக்குலத்தார்கள் ராமாநுஜருடன் தோளோடு தோள் கொடுத்து நின்றார்கள் என்பதை ஆங்கில வரலாற்றாளர் புக்கனன் (Buchannan) தனது வரலாற்றுக் குறிப்பில் ஆதாரப் பூர்வமாக விவரித்துள்ளார். மேலும் மேல் கோட்டை, ஸ்ரீரங்கப் பட்டணம், பேலூர் ஆகிய கர்நாடக மாநிலத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் திருக்குலத்தார்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்ததையும் புக்கனன் குறிப்பிடுகிறார்.

அன்று கோயில்களில் சமஸ்கிருதத்தில் மட்டுமே தெய்வவழிபாடு இருந்தது. இந்நிலையை மாற்றி பெரும்பான்மை மக்களாயிருந்த எளியவரும் வணங்குவதற்கு ஏற்றவாறு தமிழை ஆண்டவனின் கருவறையில் அரியாசனம் ஏற்றியவர் ராமாநுஜர். அதானல்தான் சாதி வேறுபாடின்றி அனைவரும் வைணவத்தில் சேர முடிந்தது. ஆண்களுக்கு நிகரான சம அந்தஸ்தைப் பெண்களுக்கும் கொடுத்து அவர்களையும் தம்முடைய சீடர்களாக ஏற்றுக்கொண்ட பெருமையும் ராமாநுஜருக்கு உண்டு. அவருடைய மடத்தில் கூரேசர் மனைவி ஆண்டாள், பொன்னச்சி, கொங்குப்பிராட்டி, திருவெட்டாறு அம்மை போன்ற பெண்கள் இருந்தனர் என்பதை இந்நாடகம் தெளிவாக்குகிறது.

ராமாநுஜர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்பதால் கொட்டிக்கிடக்கும் கட்டுக்கதைகளிலிருந்து அவர் வாழ்க்கை வரலாற்றை அவ்வளவு துல்லியமாகப் பெறமுடியவில்லை. ராமாநுஜர் வரலாற்றில் மற்றுமொரு முக்கியமான நிகழ்வைம் இந்நாடகம் காட்சிப்படுத்துகிறது. மேல் கோட்டை கோயிலில் இருந்த உற்சவ மூர்த்தியான சம்பத் குமாரை துருக்க அரசனிடமிருந்து ராமாநுஜர் மீட்டுவந்ததையும் நாடகத்தில் இந்திரா பார்த்தசாரதி சேர்த்துள்ளார்.

இன்றும் பல பெருமாள் கோயில்களில் துருக்க நாச்சியார் சன்னதி உள்ளதை அறிவோம். ஸ்ரீரங்கம் கோயிலில் மார்கழி மாதம் ஏகாதசித் திருவிழாவின்போது பெருமாள் முஸ்லீம் போன்று லுங்கி கட்டிக்கொண்டு துருக்க நாச்சியாருக்குக் காட்சி தரும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வரும், மதநல்லிணக்க அடையாளமாகும். ராமாநுஜர் வரலாற்றை எழுதிய வில்லி கோவிந்தாச்சாரியர் இம்மரபுக் கதையை மிகவும் நயம்படச் சொல்லியுள்ளார். இத்துருக்க மன்னனை ’எம்மாடு ராயன்’ என்று குறிப்பிடுகிறார். ‘ராயன்’ என்றால் அரசன். ’எம்மாடு’ என்பது ’முகம்மது’ என்பதின் திரிபாக இருக்கலாம். துருக்க மன்னன் என்றால் டில்லியில்தான் இருந்திருக்க வேண்டும் என்பதில்லை. அக்காலத்திலேயே துருக்கர்கள் ஆட்சி ஹொய்சாலா தேசம் வரை பரவியிருந்தது,
அக்காலத்தில் உலகமெங்கும் எல்லா நாடுகளிலும் மதமும், அரசியலும் இணைந்திருந்தன. அரசனுடைய ஆட்சி பலம், சமயப் பெரியோர்களின் ஆதரவைச் சார்ந்திருந்தது. ராமாநுஜரின் கொள்கைகள், மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த சமயத் தலைவர்களின் கொள்கைகளுக்கு முரணாக இருந்தன.

ராமாநுஜரின் கொள்கைகள் சமயச் சடங்கு நியதிகளையும், சாதியப் படிநிலைகளையும் கெடுத்துவிடக்கூடும் என்ற அச்சம், மரபு சார்ந்த வைணவர்கள், சைவர்கள் ஆகிய இரு சாரருக்குமே இருந்தது. சமயப் பெரும்பான்மையோரை எதிர்த்துக்கொண்டு அரசன் அரசாள முடியாது என்பதும் வரலாற்று உண்மை. அன்றிருந்த சோழ மன்னனுக்கு ராமாநுஜர் விவகாரம் பெரிய பிரச்சனையாக இருந்திருக்க வேண்டும். ராமாநுஜரை வைணவர்கள் மட்டுமின்றி சைவர்களும் எதிர்த்தனர். இச்சூழலில் மன்னன் என்ன செய்வதென்று அறியாமல் குழப்பத்துடன் இருந்திருக்க வேண்டும். ஆகவே சோழ அரசனை ஈவிரக்கமற்ற அரசனாகச் சித்தரிப்பதை நாடாகாசிரியர் தவிர்த்துள்ளார்.

அதீத கற்பனை சம்பவங்கள் நிறைந்த ராமாநுஜர் வரலாற்றை நாடகம் ஆக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ராமாநுஜர் அற்புதமான சிந்தனையாளர் மட்டுமல்ல. மாபெரும் செயல் வீரரும்கூட என்பதை இந்நாடகத்தின் வழி அறிகிறோம். ’ராமாநுஜர்’ நாடகத்தை அரங்கேற்ற பெரிய அலங்காரங்கள் கொண்ட செட் எதுவும் தேவையில்லை. நாடகத்தின் காட்சிகள் காஞ்சி, திருவரங்கம், நீலகிரி காடு, மேல் கோட்டை, முஸ்லீம் மன்னர் ஆளும் நாடு ஆகிய இடங்களில் இடம்பெறுகின்றன. நாடகத்தில் நாற்பதுக்கும் மேலான கதாபாத்திரங்கள் உள்ளனர்.

‘ராமாநுஜர்’ நாடகம் முறையாகத் தொடங்குவதற்கு முன்னர் ஆழ்வார்கள் எவ்வாறு மனிதநேயத்துடன் வாழ்ந்தனர் என்பது காட்சிப்படுத்தப்படுகிறது. வைணவத்தின் முதலாழ்வார்களான பொய்கை, பூதம், பேய் ஆகிய மூவரும் ஒவ்வொருவராக மேடையில் பாடிக்கொண்டே நுழைகின்றனர். பெரும் இடியுடன் கூடிய மழை பெய்கிறது. நாடகத்தின் முதற்காட்சி நாடகம் பார்க்க வந்திருக்கும் பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும். இதுவொரு நாடக உத்தி. ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் கடைப்பிடித்த இந்த உத்தியை இந்திரா பார்த்தசாரதியும் கடைப்பிடிக்கிறார். இடிச் சத்ததுடன் நாடகம் தொடங்குகிறது.

முதலில் பொய்கை ஆழ்வார் ஒரு சிறு திண்ணையில் மழைக்கு ஒதுங்கி படுக்கிறார். அடுத்து பூதத்தாழ்வார் வருகிறார் இருவரும் படுக்க இடமின்றி உட்காருகின்றனர். அதற்கடுத்து பேயாழ்வார் நுழைகிறார். மூவரும் உட்கார இடமின்றி நிற்கிறார்கள். நான்காவது ஆளாக ஒளி வடிவில் வரும் இறைவனைக் கண்டு மூவரும் பூரிப்படைகிறார்கள். மனிதாபிமானத்தை உணர்த்தும் வைணவத் தத்துவம் இதுதான். முதலில் பன்னிரெண்டு ஆழ்வார்கள், அவர்களுக்குப் பிறகு ஆச்சாரியார்கள். அவர்களில் முதல்வர் நாதமுனி. அடுத்து உய்யக்கொண்டார், அவருக்குப்பின் மணக்கால் நம்பி, அவரைத் தொடர்ந்து ஆளவந்தார். ஆளவந்தாருக்குப் பின்னர் வரும் ராமாநுஜரின் வாழ்க்கை வரலாறே இந்நாடகத்தின் கருப்பொருளாகும்.

அடுத்து முறையான நாடகம் தொடங்குகிறது, ஐந்து அங்கங்களாக விரிந்து செல்லும் நாடகம் அரங்கத்தில் பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யமானதாகவும். புத்தகத்தில் படிப்பவர்களுக்கு நெஞ்சை நெகிழச் செய்வதாகவும் இருப்பதுறுதி. ஆளவந்தார் மரணம் அடையும் தருவாயில் சீடர்கள் புடைசூழ அமர்ந்திருக்கிறார். கண்கள் மூடியுள்ளன. இன்னிசையுடன் பாடல் ஒலிக்கிறது. பாடல் நின்றதும் ஆளவந்தார் கண்கள் திறக்கின்றன. ‘’இறுதிதான் உறுதி. இதுதான் வாழ்க்கை. நான் எண்ணியவை பல; ஆனால் பண்ணியவை சில. சாதியற்ற சமுதாயம் நாதியற்றவர்களுக்கு நற்கதி. இது என் முதல் ஆசை. குறுகிக் கிடக்கும் வைணவ தர்மம் எல்லை கடந்து விரிய வேண்டும். இது என் இரண்டாவது ஆசை. வைணவப் பார்வையில் பிரம்மசூத்திரத்துக்கு உரை எழுத வேண்டும் இது என் மூன்றாவது ஆசை இம்மூன்றும் என் வாழ்வில் நிறைவேறாமல் போயின.” என்று சொல்லி தன் மூன்று விரல்களையும் மடக்கி வைத்துக்கொள்கிறார்.

”அன்று காஞ்சியில் பேரருளாளன் சொன்னான். ஆளவந்தாரே! உம் வாரிசு ராமாநுஜம் என்று. ராமாநுஜனுக்கு என்ன தோற்றம்! என்ன பொலிவு! ராமனின் இளவல் ராமாநுஜம்! ராமாநுஜத்தை அழைத்துவர என் சிஷ்யர், சேரிவாழ் நம்பி மாறேனர் நம்பியை அனுப்பியிருக்கிறேன். தொடர்ச்சியே வாழ்க்கையின் தத்துவம்” என்று சொல்லி கண்களை மூடிக்கொள்கிறார். ‘சூழ் விசும்பு’ பாடச் சொல்லி தன் சீடர்களை வேண்டுகிறார். ஆளவந்தாரின். மூன்று கை விரல்கள் மூடியபடியே இருக்கின்றன. ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கிறார். ராமாநுஜத்தை அழைத்துக் கொண்டு நம்பி மாறேனர் உள்ளே நுழைகிறார். ராமாநுஜர் நெடிது வளர்ந்து கம்பீரமாக இருக்கிறார். முகத்தில் இளைமையும், தெளிவும், உறுதியும் தெரிகின்றன. ஆளவந்தார் அருகில் சென்று ராமாநுஜர் அவரை உற்று நோக்குகிறார். அனைவரும் புரிந்துகொள்கின்றனர். பெரிய நம்பியால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ராமாநுஜர் அவர் கைகளைப் பற்றிக் கொள்கிறார். ‘’ஆளவந்தார் அடையாளப்படுத்திக் காட்டிவிட்டார். நீங்கள்தான் அவர் வாரிசு”! என்று சீடர்கள் முழங்குகின்றனர்.

ஆளவந்தாரின் மூன்று விரல்கள் மூடிக் கிடப்பதேன் என்று ராமாநுஜர் கேட்டதும், சீடர்கள் ஆளவந்தாரின் மூன்று நிறைவேறா ஆசைகளைச் சொல்கின்றனர். ‘’ஆளவந்தார் ஆசைகளை நிறைவேற்றுவது அடியேன் கடமை. அவை நிச்சயமாக நிறைவேறும்’’ என்று ராமாநுஜர் சூளுரைக்கிறார். அருகில் இருக்கும் திருக்கச்சி நம்பியின் பாதங்களில் விழுந்து வணங்க முற்படுகிறார். ”அந்தணர் வணக்கம் அடியேனுக்கு ஏன்”? என்று சொல்லி திருக்கச்சி நம்பி அதனைத் தடுத்துவிடுகிறார். ’’அந்தணர், வைஸ்யர் எனும் பேதம் வைணவருக்கில்லை” என்று சொல்வதுடன், நாளைக் காலை உங்களுக்கு என் வீட்டில் அமுது’’ என்கிறார். என்ன விஷேசம் என்றதும்; நீங்கள் என் வீட்டில் அமுதுண்ண வருவதுதான் விஷேசம் என்கிறார்.

அடுத்த காட்சி நெஞ்சை நெகிழச் செய்யும் காட்சியாகும். ஆளவந்தார் வீட்டுக்கு அமுதுண்ணச் சென்ற திருக்கச்சி நம்பியை ராமாநுஜரின் மனைவி தஞ்சம்மா அவமதித்துவிடுகிறார். திண்ணையில் வைத்து அமுது படைக்கிறார். அவர் சாப்பிட்ட இடத்தை நீர் ஊற்றிக் கழுவுகிறார் மனைவியின் ஆச்சாரம் ராமாநுஜத்துக்குப் பிடிக்கவில்லை. ராமாநுஜர் உணவளிக்கச் சொன்ன மற்றுமொரு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு வீட்டில் உணவிருக்கும்போதே, தஞ்சம்மா உணவில்லை என்று சொல்லி உணவு கொடுக்க மறுத்துவிடுகிறார். இதனைப் பொறுக்காத ராமாநுஜர் தீர்க்கமான முடிவெடுக்கிறார்.

”எனக்கென்று எதுவும் இனி இல்லை. உன் பாதையில் நீ போ; நான் குறுக்கிட மாட்டேன்’’. என்று மனைவியிடம் சொல்லி வீட்டைவிட்டு வெளியேறுகிறார். ‘’இறைவா! என் குறிக்கோள் சமுதாயப்பணி. இல்லறத்தில் இது இயலாது. அனைவருக்கும் சமநீதி என்பதே வைணவத்தின் உயிர்நாடி. இவ்வைணவம் நிறுவ எனக்குக் கொள்கைத் துணிவும், மன வலிமையும் வேண்டும். என் துறவிலே மனித உறவைக் காண்பேன்; இது உறுதி என்று சொல்லி மனைவி தஞ்சம்மாவை நிரந்தரமாகப் பிறிகிறார்.

நாடகத்தின் இரண்டாம் அங்கத்தில் திருவரங்கம் கோயில் நிர்வாகம் ராமாநுஜர் வசம் வரும் கதையைக் காட்சிப்படுத்துகிறார் இந்திரா பார்த்தசாரதி. ‘’கோயில் நிர்வாகம் நம் கையில் வந்தால்தான் நாம் கனவு காணும் வைணவ சமுதாயம் உருவாகும்” என்று ராமாநுஜர் சொல்லி முடிக்கும்போது திருவரங்கத்தின் முதனார் அமுதனார் அங்கு வருகிறார். ராமாநுஜரிடம் ஒரு சாவிக் கொத்தைக் கொடுக்கிறார். ‘’நேற்று கூரேசர் என் வீட்டுக்கு வந்திருந்தார். கோயில் நிர்வாகம் உங்களிடம் இருக்க வேண்டும் என்னிடம் வேண்டினார். நான் உடனே ஒப்புக்கொண்டேன். இதுவரை பேருக்குத்தான் நிர்வாகம் என்னிடத்தில் இருந்தது. சுய நலமிகளைக் கட்டுப்படுத்தும் சக்தி எனக்கில்லை. இனி நீங்கள் கோயில் சீர்திருத்தத்தைத் தொடங்குங்கள். நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்கிறார் திருவரங்கம் கோயில் முதனாராகச் செயல்பட்ட அமுதனார்.

கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற ராமாநுஜர், எதிர்ப்புகள் பல வரக்கூடும் என்றறிந்திருந்தார். எதிர் நீச்சல் போடத் தயாராக இருந்தார். அமுதனார் வடிவில் வந்து திருவரங்கன் தனக்குத் தரும் கோயில் நிர்வாகத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார் ராமாநுஜர்.

கோயில் நிர்வாகத்தில் தான் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்து அமுதானரிடம் பட்டியலிட்டுக் கூறுகிறார். ‘’கோயில் சீரமைப்பு என் முதல் கவனம். இனி ஒவ்வொரு நாளும் கோயில் திருவிழா நாள்! அனைத்து சாதியினரும் பங்கு கொள்ளும் பெருவிழா நாள்! திருவரங்கத்தின் எல்லா வீதிகளிலும் உற்சவர் உலா வருவார். இறைவன் திரு முன் உயர்வில்லை. தாழ்வில்லை. கர்ப்ப கிருஹத்தில் வேதங்களுக்கு இணையாக ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் ஒலிக்க வேண்டும். தமிழ், சமஸ்கிருதம் இரண்டு வேதங்களையும் உணர்ந்தவனே உபய வேதாந்தி. நாலாயிரத்தை நவில் தொறும் புதுப்புது அர்த்தங்கள் புலப்படும். விளக்கம் கூற அனைவருக்கும் உரிமை. இதுதான் நான் காணும் வைணவம் என்று ராமாநுஜர் வாக்குறுதி அளிக்கிறார்.

வைணவ ரகஸ்யார்த்தங்களை இதயத்தில் பூட்டி வைத்திருப்பவர் திருக்கோஷ்டியூர் நம்பி. ஆனால் அவரைச் சொல்லவைப்பது எளிதில்லை என்று அமுதனார் கூறியதும். முயற்சி திருவினையாக்கும் என்று பதிலுரைக்கிறார் ராமாநுஜர். திருக்கோஷ்டியூர் நம்பியின் இல்லம் தேடிச் செல்கிறார். கல்வியின் சாகரம் நீங்கள்.

எனக்கு அருள் புரிய வேண்டும். ஆளவந்தாரின் நிறைவேறாத ஆசையான வியாஸ சூத்திரங்களுக்கு விஸிஷ்டாத்வைத வியாக்கியானம் எழுத உறுதி பூண்டுள்ளேன். தகுதி இல்லாத என்னைத் தகுதியுடையவனாக்க வேண்டும் நீங்கள் என்று கெஞ்சுகிறார். திருக்கோஷ்டியூர் நம்பி பதினெட்டு முறை அலையவிடுகிறார். நீங்கள் மட்டும் தனியே வர வேண்டும். விருப்பமிருந்தால் சொல்லுங்கள். இப்போதே பாடம் கேட்கலாம் என்கிறார். உடன்வந்தவர்களை அனுப்பிவிட்டு ராமாநுஜர் மட்டும் பாடம் கேட்கிறார்.

”இந்த ரகஸ்யார்த்தங்கள் உங்களுக்கு மட்டுந்தான். வேறு யாருக்காவது சொன்னீர்கள் என்றால் அது குருத்துரோகம். நரகத்துக்குப் போவீர்கள். புரிகிறதா? என்று எச்சரிக்கை செய்துவிட்டு ராமாநுஜருக்கு ரகஸ்யார்த்தங்களைச் சொல்லிக் கொடுக்கிறார். ஆனால் அடுத்த நொடியில் ராமாநுஜர் ”யான் பெற்ற இன்பத்தை உங்களுடன் பகிர்வதே என் நோக்கம். இறைவன் இல்லாத இடமே இல்லை. காணுமிடம் எல்லாம் வைகுண்டன் என்றால் காண்பவற்றுள் உயர்வு, தாழ்வு இல்லை.

நால்வகைச் சாதி இறைவனுக்கு இழைக்கும் அநீதி. அவன் வழி நின்று செயல்படுவது நம் கடமை. செயல். செயல். செயல். இதுவே நம் தாரக மந்திரம். இறைவனைப் பற்றுக்கோடாகக் கொண்டு சமூகக் கைங்கர்ய பணி செய்வோம்! ஓம் நமோ நாராயணாய! என்று அவர் உரக்க நாராயண சப்தத்தைக் கூறுகிறார். அவரெதிரே பல தரப்பட்ட மக்கள் சாதி வேறுபாடின்றி நிற்கிறார்கள். அவர் உரக்க நாராயண சப்தத்தைக் கூறியதும், கூட்டம் எதிரொலிக்கிறது.

இதைக் கண்டதும் திருக்கோஷ்டியூர் நம்பி மிகக் கோபமாக விரைந்து வந்து ராமாநுஜரிடம், ‘’இது குருத்துரோகம் ராமாநுஜரே” என்று கத்துகிறார். ராமாநுஜர் புன்னகையுடன் ’’யாருக்கும் ரகஸ்யார்த்தத்தை சொல்லக்கூடாது என்றீர்கள். சொன்னால் நான் நரகத்துக்குப் போவேன் என்றீர்கள். குருநாதரே! ரகஸ்யார்த்தம் கேட்டு இத்தனைப் பேர் வைகுண்டம் போக இருக்கிறார்கள். நான் ஒருவன் மட்டும் நரகம் போவதினால் என்ன பெரிய நஷ்டம்? பொலிக, பொலிக, பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்’’ என்று நாம் மகிழ வேண்டாமா?

திருக்கோஷ்டியூர் நம்பியும் ’மகிழ்வோம்’ என்கிறார். நீங்கள் இப்போது சொன்ன ஆழ்வார் அருளிச் செயலை முழுவதும் பாடுங்கள் என்று நம்பி கேட்டதும் ராமாநுஜர் பாட்டினை முழுவதும் பாடுகிறார். அனைவரும் ஓம் நமோ நாராணாய என்கின்றனர். ராமாநுஜரை இறுக ஆலிங்கனம் செய்துகொண்டு, ‘’இனி உங்கள் பெயர் எம்பெருமானார் என்று வழங்கட்டும் என்று ஆசிர்வதிக்கிறார் திருக்கோஷ்டியூர் நம்பி.

ராமாநுஜர் சாதி வேறுபாடின்றி அனைவரையும் சமமாகப் பாவிப்பதை ஊரில் இருக்கும் அந்தணர்களும், கோயில் அர்ச்சகர்களும் எதிர்க்கிறார்கள். ஒரு பிராமணர், ராமாநுஜரைப் பார்த்து,”நாங்கள் பிராமணர்கள், நீங்கள் என்ன சாதி?”. என்று கேட்கிறார்கள். ராமாநுஜர், ‘’நான், பெரிய நம்பி, மாறனேர் மூவரும் மனுஷ சாதி. நீங்க மனுஷ சாதி இல்லையா? என்கிறார். இதனால் கோபமுற்ற பிராமணர்,’’உங்க சிஷ்யர் பெரிய நம்பி கோயிலின் முதல் தீர்த்தம் இனிமேல் சேரி ஜனங்களுக்குத்தான் என்று சொல்கிறாரே. இது உங்களுக்கே அடுக்காது ராமாநுஜரே! அவர்கள் சாதியில் இழிந்தவர்கள் அல்லவா? என்று கேட்டதும், ராமாநுஜர்.’’ யார் இழிந்தவன், ஸ்வாமி? வேதம் வகுத்த வியாசர் செம்படவர்தானே! இராம கதை சொன்னவர் வேடர்தானே! என்று ராமாநுஜம் சொல்லி வாதத்தை முடிக்கிறார்.
வாதம் முடிந்து பிராமணர்கள் சென்றதும் ஒரு பெண்மணி ஒரு பாத்திரத்துடன் வந்து ராமாநுஜருக்கு அன்னமிடுகிறார். அவர் கைகள் நடுங்குகின்றன.

கண்களிலிருந்து நீர் பெருகி ஓடுகிறது. ராமாநுஜர் திகைத்துப்போய் உணவை மோந்து பார்க்கிறார். உணவில் நஞ்சு கலந்துள்ளது. அதைக் கண்ட ராமாநுஜரின் சிஷ்யர் பெரிய நம்பி வேதனைப்படுகிறார். ராமாநுஜர் சிரித்துக்கொண்டே,’’மனிதப் பிறவி எனக்கு மிகவும் பிடிக்கிறது. அவ்வளவு சுலபமாக நான் சாக மாட்டேன். அர்ச்சகர்கள் தோற்றுவிட்டனர் என்கிறார்”

தன் சிஷ்யர்களுடன் ராமாநுஜர் திருவேங்கடத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். வழியில் வரதன் என்ற பிராமணரின் குடில் தென்படுகிறது. அங்கு சற்று இளைப்பாறிவிட்டு பயணத்தைத் தொடர நினைக்கின்றனர். வரதன் வீட்டில் ’பருத்திக் கொல்லை’ என்ற பெண்மணி கதவைத் திறக்கிறாள். வரதனை மணந்துள்ள அந்தப் பெண் அந்தணர் குலம் அல்ல. ஒரு பணக்கார வணிகன் அவளை மணக்க விரும்பினான். அவள் அதை மறுத்துவிட்டு தான் காதலித்த ஏழை வரதனையே மணக்கிறாள். ராமாநுஜர் சாதி மறுப்புத் திருமணம் செய்த அத்தம்பதிகளை மனமாற வாழ்த்துவதுடன்,’’இவர்கள் தாம்பத்தியத்தின் மேன்மையை நீங்கள் உணர வேண்டும்; இன்று இவர்கள் இல்லத்தில் நமக்கு உணவு’’ என்று ராமாநுஜர் சொல்கிறார். தம்பதிகள் பெரு மகிழ்ச்சி கொள்கின்றனர். இந்த இருபத்திரோம் நூற்றாண்டிலும் சாதி மறுப்புத் திருமணம் கொலையில் முடிவதைப் பார்க்கிறோம். அதனைக் கௌரவக் கொலை என்று சொல்லி நியாயப்படுத்தும் ஆதிக்க சாதியினரையும் பார்க்கிறோம். பத்து நூறாண்டுகளுக்கு முன்னரே சாதி மறுப்புத் திருமணத்தை ஆசிர்வதித்துள்ளார் ராமாநுஜர்.

அடுத்த காட்சியில் ஆளவந்தார் முடிக்காமல்விட்ட திருப்பணியான பிரம்ம சூத்திரத்துக்கு வியாக்கியானம் எழுதும் பணியில் ராமாநுஜர் ஈடுபட்டிருக்கிறார். கூரேசர் வீட்டில் இப்பணி நடக்கிறது. ராமாநுஜர் வியாக்கியானத்தைச் சொல்லிச் செல்ல கூரேசர் எழுதுகிறார். எங்கேனும் பிழை ஏற்படும்போது கூரேசர் எழுதுவதை நிறுத்திவிடுகிறார். இடையில் கூரேசர் மனைவி ஆண்டாளும் திருத்தம் சொல்கிறார். அந்த அம்மாள் சாத்திரங்களை எல்லாம் கரைத்துக் குடித்திருந்தார். கூரேசருக்கு ஏற்ற அறிவார்ந்த மனைவி. ராமாநுஜர் அகங்காரங்கள் ஏதுமின்றி இருவரின் ஆலோசனைகளையும், திருத்தங்களையும் ஏற்றுக்கொண்டு பிரம்ம சூத்திரத்துக்கு வியாக்கியானம் எழுதும் பணியை வெற்றிகரமாக முடிக்கிறார்.

ஆளவந்தாரின் அடுத்த ஆசையான குறுகிக் கிடக்கும் வைணவ தர்மம் எல்லை கடந்து விரிய வேண்டும் என்பதை ராமாநுஜர் மறக்கவில்லை . ராமாநுஜர் திருவரங்கம் கோயில் பொறுப்பேற்றதிலிருந்து இப்பணியும் சிறிது சிறிதாக நிறைவேறிய வண்ணம் உள்ளது. இதோ! இந்த பிரமாணர்களின் வார்த்தைகள் வழி அதை அறிவோம், ‘’சோழ நாடு, பாண்டிய நாடு எல்லா இடங்களிலும் ராமாநுஜன் பெயர்தான் கொடிகட்டிப் பறக்கிறது. பாண்டி நாட்டில் பல சைவர்கள் பெருமாள் பக்தர்களாகி விட்டார்களாம். பஞ்சமருக்கும் பூணுல் போட்டு விடுகிறாராமே ராமாநுஜர்? பாண்டிய நாட்டில் திருப்புளியங்குடியில் ஒரு பஞ்சமப் பெண் காலில் விழுந்தானமே ராமாநுஜன். அப்பெண் திருவாய் மொழியிலிருந்து ஒரு மேற்கோள் எடுத்துக்காட்டினாளாம்!

நிலைமை அவர்களை மீறிச் செல்வதால் திருவரங்கப் பிராமணர்களும், கோயில் அர்ச்சகர்களும் சோழ அரசனிடம் முறையீடு செய்கிறார்கள். ராமாநுஜரை கைது செய்து சோழ நாட்டுக்குக் கொண்டுவரச் சொல்லி தன் அமைச்சர் நல்லூரானுக்கு ஆணையிடுகிறார் சோழ மன்னன். ராமாநுஜரைத் தப்பிக்க வைத்துவிட்டு அவருக்குப் பதில் கூரேசரும், பெரிய நம்பியும் கைதாகிறார்கள். நல்லூரான் இருவரது கண்களையும் குருடாக்கும் தண்டனை அளிக்கிறான் வீரர்கள் கொண்டுவரும் கொள்ளிகளை இருவரும் வழியச் சென்று பெற்று தாங்களே தங்கள் கண்களைக் குருடாக்கிக் கொள்கிறார்கள். இருவரையும் ஊருக்கு வெளியே விட்டுவிடும்படி காவலர்களுக்குக் கட்டளையிடுகிறான் நல்லூரான். காட்டு வழியில் செல்லும்போது பெரிய நம்பி வலி பொறுக்காமல் மரணத்தைத் தழுவிகிறார். கண்களை இழந்த கூரேசர் மட்டும் திருவரங்கம் திரும்புகிறார்.

இக்கொடூரத்தை அறியாத ராமாநுஜர் நீலகிரி மலைக்குச் செல்கிறார். வழியில் தொண்டனூர் அரசர் பிட்டலதேவனைச் சந்திக்கிறார். பிட்டலதேவன் ஒரு சமணர். அவர் மனைவி சாண்டல தேவி. அவர்கள் புதல்வி அரசிளக்குமரி நீளாதேவி. பாவம்! அவளை ஒரு பேய் பிடித்து ஆட்டுகிறது. ராமாநுஜர் அவளைப் பேயின் பிடியிலிருந்து மீட்டெடுக்கிறார். பெரு மகிழ்ச்சி அடைந்த பிட்டலதேவன் சமணத்திலிருந்து விலகி வைணவம் தழுவுகிறார். அவரை விஷ்ணுவர்த்தன ராயர் என்று நாமம் சூட்டுகிறார் ராமாநுஜர். அவரிடமிருந்து விடைபெற்றுப் பயணத்தைத் தொடர்கின்றனர்.

அடுத்து யதுகிரி காட்டில் சுற்றி அலைகிறார்கள். அங்கே வைணவச் சின்னம் ’திருமண்’ கிடைக்கலாம் என்று தேடுகிறார்கள். அங்கிருந்த பஞ்சமர்களுடன் சேர்ந்து திருமாலின் அடையாளத்தை ராமாநுஜர் தேடுகிறார். பஞ்சமர்கள் கைகளில் அமுதம் கிடைக்கிறது. ‘’உங்களை பஞ்சமர்கள் என்று சொல்பவர்கள் பாவிகள். நீங்கள் திருமாலைக் கண்டெடுத்த திருக்குலத்தார் என்று ராமாநுஜர் அவர்களைப் பாராட்டுகிறார். மேல் கோட்டைக்கு இனி திரு நாராயணபுரம் என்று பெயரிடுவோம். விஷ்ணுவர்த்தன் இங்கு ஒரு கோயில் கட்டுவார். இங்கு திருக்குலத்தார்களான உங்களுக்கே முதல் மரியாதை என்கிறார்.

மூலவர் திருமால் கிடைத்துவிட்டார். உற்சவர் சிலை எங்கே என்று கண்டுபிடிக்க வேண்டும். உற்சவர் சிலை அப்பகுதியை ஆளும் துருக்க மன்னனிடம் உள்ளது என்கிறார்கள். துருக்க மன்னனின் மகள் இளவரசி ரசியா அதைப் பொம்மையாக வைத்து விளையாடுகிறாள் என்பதை அறிந்து அங்கு செல்கிறார்கள். துருக்க மன்னர் ராமாநுஜரை அன்புடன் வரவேற்கிறார். ராமாநுஜரின் அன்பும், அரவணைப்பும் ரசியாவை ஈர்க்கின்றன. ரசியாவை தன்னுடன் அழைத்துச் செல்ல ராமாநுஜர் முடிவெடுக்கிறார். இவளை என்னுடன் அனுப்புங்கள். என் மகள்போல் வளர்ப்பேன். நிச்சயம் மதம் மாற்றம் செய்யமாட்டேன் என்று துருக்க மன்னருக்கு ராமாநுஜர் வாக்குறுதி கொடுக்கிறார். சிறுமி ரசியாவும் ராமாநுஜருடன் செல்ல விரும்புகிறாள். ’’இவளைத் துருக்க நாச்சியார் என்றழைப்போம். எங்கள் ஆண்டாளுக்கு இருப்பதுபோல் துருக்க நாச்சியாருக்கும் எங்கள் கோயில்களில் சன்னதி இருக்கும்’’ என்று உறுதியளிக்கிறார். துருக்க நாச்சியாருடன் ஊர் திரும்புகிறார்.

திருவரங்கம் திரும்பிய ராமாநுஜர்; கூரேசரும், பெரிய நம்பியும் குருடர்கள் ஆக்கப்பட்டதையும், வலி பொறுக்காமல் பெரிய நம்பி இறந்ததையும் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். கூரேசரின் கண்களைத் திரும்பப்பெற காஞ்சி சென்று வரதனைப் பிரார்த்திக்க வேண்டும் என்று ராமாநுஜர் சொல்கிறார். ’’நான் என் அகக் கண்ணால் திருமாலைக் காண்கிறேன். இது எனக்குப் போதும் என்கிறார் கூரேசர். ராமாநுஜர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே காஞ்சி புறப்பட வேண்டும் என்கிறார்.

திருவரங்கப் பெருமாளே என் கண்களைக் குணப்படுத்துவார் என்ற கூரேசர் கூற்றை ஏற்று திருவரங்கம் கோயிலுக்குச் செல்கின்றனர். கோயிலில் கூரேசர் தனக்கு மட்டும் வேண்டிக்கொள்ளாமல் தனக்குத் தீங்கிழைத்த நல்லூரானும் நன்மைகள் பெறட்டும் என்று வேண்டுவது அனைவர் நெஞ்சையும் நெகிழச் செய்கிறது. பெருமாள் அருளால் கூரேசர் கண்களை மீண்டும் பெறுகிறார்.

ஆளவந்தாரின் நிறைவேறாத மூன்று ஆசைகளையும் தான் நிறைவேற்றிய திருப்தியில் மகிழ்ச்சி அடைகிறார் ராமாநுஜர். எனக்குப் பின் திருவரங்கப் பணிகளை கூரேசரின் புதல்வன் பராசுரன் செய்வான். அவன் என் வாரிசு என்று சொல்லி கண்களை மூடுகிறார். திரை கீழே விழுகிறது.

இந்திரா பார்த்தசாரதியின் இந்நாடகம் ஆன்மீகத் தளத்தையும் தாண்டி சமூகப் பிரச்சனைகளையும் தொட்டுச் செல்வது நாடகத்தின் பலம். ஆளவந்தாரின் மரணத்தில் தொடங்கி, ராமாநுஜரின் மரணத்தில் முடிகிறது நாடகம். இருவரும், ‘’சாதியற்ற சமுதாயம். நாதியற்றவர்க்கும் நற்கதி’’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கொண்டிருந்தனர். இன்று ஹிந்து மதத்தை அதன் ஆன்மீகத் தளத்திலிருந்து விலக்கி, இந்துத்துவா என்ற அரசியல் சித்தாந்தாமாக ஆர்எஸ்எஸ் மாற்ற நினைக்கும் சூழலில் இந்நாடகம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ராமாநுஜர் தான் அரசியல் அதிகாரம்பெற வேண்டுமென்றோ, சோழ மன்னனின் ஆதரவைப் பெற்று சமணர்களைக் கழுவேற்றவோ, இஸ்லாமை அழித்து ஒழிக்கவோ நினைக்கவில்லை. துருக்க நாச்சியாருக்கு அனைத்து வைணவக் கோயில்களிலும் இடமளித்து, மதநல்லிணக்கம் சமுதாயத்தில் செழிக்க வழிவகுத்துள்ளார். இந்நாடகம் நாடெங்கிலும் அரங்கேற வேண்டிய தருணமிது.

📚 நூலின் விவரங்கள்:
தலைப்பு விவரம்
நூலின் பெயர்: “ராமாநுஜர்” நாடகம்
ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு:
காலச்சுவடு
விலை: ₹.130
அறிமுகம் எழுதியவர்:  
பெ.விஜயகுமார்

மதுரை – 18
இமெயில்: vijayakumarmuta@gmail.com

 

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *