நூல் அறிமுகம்: *”நிலம் பூத்து மலர்ந்த நாள்”* – பா. அசோக்குமார்“நிலம் பூத்து மலர்ந்த நாள்”
மலையாள மூலம் : மனோஜ் குரூர்
தமிழில் : கே.வி. ஜெயஸ்ரீ
வம்சி பதிப்பகம்
பக்கங்கள் : 312
₹. 300

முகநூலில் புத்தக விமர்சன பதிவுகள் வாயிலாக நல்விமர்சனம் பெற்றமையால் படிக்க நினைத்திருந்த இந்நூல் நண்பர் கார்த்திக் அவர்களால் வாங்கப்பட்டு வாசித்த பின் பெரிதும் அவரால் பரிந்துரைக்கப்பட்டு இரவலாக வாங்கி வாசித்த நூலே இது. மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல் என்பதும் இதன் தனிச்சிறப்பே ஆகும்.

மலையாளப் பதிப்பிற்காக படித்து வியந்து பரவசத்துடன் சிறந்த முன்னுரை வழங்கியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள். அத்துடன் நிற்காமல் கே.வி. ஜெயஸ்ரீ அவர்கள் இந்நூலை மொழிபெயர்ப்பு செய்ய தூண்டுகோலாகவும் இருந்துள்ளார் என்பதை அறிந்து வியந்தேன். மலையாள நாவலில் தமிழ் இலக்கியத்தின் சாராம்சத்தை உச்ச நிலையில் கண்ட பிரமிப்பின் வெளிப்பாடாகவே இதனைக் கருதுகிறேன்.

தமிழ் பதிப்பிற்காக (2016) நாஞ்சில் நாடன் அவர்கள் முன்னுரை வழங்கியுள்ளார். அதனை அணிந்துரை என்பதா…. பாராட்டுரை என்பதா… விமர்சனம் என்பதா என்பதை அடியேன் அறியவில்லை. மிக நேர்த்தியாக மிக நுணுக்கமாக அணுஅணுவாக ரசித்து சிலாகித்து அழகான மேற்கோள்களுடன் அவர் எடுத்தியம்பியுள்ள கருத்துக்கள் ஒவ்வொன்றும் இலக்கிய நயம் வாய்ந்ததே. நாவலை வாசித்தப் பின் இதனை படித்ததால் கூடுதல் பெருமிதமும் கிடைக்கப் பெற்றேன் என்பதே உண்மை.

நாவலில் அடியேன் படித்து வியந்த தரவுகளையும் மேற்கோள்களையும் சுட்டிக் காட்டி மனதில் எழுந்த சந்தேகங்களையும் (ஒற்றறிதல்) நிவர்த்தி செய்யும் வண்ணம் அமைந்த அவரின் வாழ்த்துரை மிக மிக நுட்பமானதே. இதனைவிட சிறந்த விமர்சனம் இந்நூலுக்கு கிடைக்குமா என்ற சந்தேகமே என்னுள் வியாபித்துக் கிடக்கிறது. நாஞ்சில் நாடன் அவர்களுக்கு மிக்க நன்றி.

பள்ளி பருவத்தில் தமிழ் பாடத்தில் படித்த செய்திகளை மீண்டும் அசை போடக் கிடைத்த அற்புத படைப்பே இந்நூல். அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தறிந்த தகவல்களை முறையாக கோர்த்து கால வகைப்பாட்டை மிக சாதூர்யமாக பொருத்தி அற்புதமான நாவலாக வடித்து தந்துள்ளார் எழுத்தாளர் மனோஜ் குரூர் அவர்கள். மலையாள இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவரின் கைகளால் மிக அழகாக எழுதப்பட்ட சங்க இலக்கியம் சார்ந்த நூலே இதுவென்பது ஆச்சரியமளிக்கக்கூடியதே…

வறட்சியில் வாடி உணவுக்காக அல்லல்பாடும் பாணர் கூட்டம் இரவல் தேடியும் சிறுவயதில் கூத்து நடத்தி இரந்து யாசகம் பெறும் வாழ்வை வெறுத்து ஓடிய பாணர் கூட்ட சிறுவனை தேடியும் கிளம்பும் கூட்டம் பெறும் பயண அனுபவங்களே இந்நாவல் என்று சுருங்கி கூறிவிட முடியுமா??? துயரத்துடன் தொடங்கும் நாவல் எடுத்தியம்பும் பாவங்கள் ஒவ்வொன்றும் நவரசத்தை ஊட்டக்கூடியவையே…

எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு ...

‘கொலும்பன்’ என்ற பாணனின் குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டு சங்கச் சித்திரங்களை நம்கண்முன் கொண்டு வந்து அசத்தியுள்ளார் எழுத்தாளர் அவர்கள். கொழும்பன், மனைவி நெல்லக்கிளி, அவர்களின் புதல்வர்கள் மயிலன், சித்திரை, உலகன் , சீரை, பெரும்பாணன், மயிலனின் வயதையொத்த சந்தன், மகீரன் ஆகியோரை பிரதான பாத்திரங்களாகக் கொண்டதே இந்த நாவல் என்று எண்ணிவிட முடியுமா???

சங்க இலக்கியத்தில் ஒரு சில பாடல்கள், கதைகள் (அடியேன்) வழியாக படித்து வியந்த பரணர், கபிலர் மற்றும் ஔவையார் போன்ற புலவர்களும் வேள்பாரி, நன்னன், எயினன், அதியமான் முதலான சிற்றரசர்களும் கதாபாத்திரங்களாக நம்முடன் உலா வரும் நாவலே இது. பாடப்புத்தகத்தில் படித்து வியந்த “ஆட்டனத்தி ஆதிமந்தி” கதையும் இந்நாவலில் இடம்பெற்றதை அறிந்து வியந்தேன்.

உடன்கட்டை ஏறுவதின் சிறப்பாக ஒரு பெண், புலவருக்கு பாடுவதாக அமைந்த பாடலை நாவலுடன் இணைந்த விதம் போற்றுத்தலுக்குரியது. இங்ஙனம் தேவையான இடங்களில் கனக்கச்சிதமாக சங்கப் பாடல்களை இணைந்து மிக லாவகமாக கதையை நகர்த்திய பாங்கு பிரமிக்கத்தக்கது. இதுகாறும் வரை ஔவையார் மீது யாம் கொண்டிருந்த பிம்பத்தை சற்று உரசி பார்ப்பதாகவே இப்புனைவு பின்னப்பட்டுள்ளதாக உணர்கிறேன்.

நாவலில் கதை சொல்லல் பாங்கிலும் தனிப்பாணியைக் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார் எழுத்தாளர் அவர்கள். நாவலை மூன்று பகுதிகளாக பிரித்து ‘கொழும்பன்’, ‘ சித்திரை’ மற்றும் ‘மயிலன்’ வாய்மொழியாக கதை கூறும் வண்ணம் அமைத்த உத்தி சுவாரஸ்யம் கூட்டுவதாகவே அமைந்துள்ளது. இறுதியில் ‘மயிலன்’ இறந்துவிடுவான் என்ற எமது அனுமானச் சிதைவிற்கும் இந்த யுக்தி தான் காரணமோ என்ற எண்ணமே உதிக்கிறது. பாணர் கூட்டத்திற்கும் உதவுபவர்கள் என்ற முறையில் வேட்டையர், குறவர், உழவர், கோவலர் என அக்காலத்தில் வாழ்ந்த இனக்குழுக்களின் வாழ்வியலும் இந்நாவலில் விரவியுள்ளது. மறவரும், உமணரும் மீனவரும் மயிலனின் வாழ்வில் மறக்க இயலாத இடத்தில் உதவும் இனக்குழுக்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

பாடப்புத்தகங்கள் வாயிலாக நாம் கற்று உணர்ந்த பாரியின் கொடைத்திறம், பாரி கபிலர் நட்பு, அதியமான் ஔவையாரின் நெல்லிக்கனி உறவு, அதியமான் – தொண்டைமான் போரினைத் தடுத்தல் நிஙழ்வு, போர்வை ஈந்த பேகன் வரலாறு, பேகன் -பரணர் உறவு, நன்னன் கதை , வெட்சிப் போர் , பறவைகளிடமும் கனிவுள்ளவனாக இருந்த ஆய் எயினன் வரலாறு, எல்லாளனின் (மனுநீதிச் சோழன்) நீதிக் கதை முதலான பல தகவல்களை, பாடல்களை அசை போட்டப்படியே படித்து இன்புறச் செய்கிறது இந்நாவல். ஏறு தழுவுதல் குறித்த தகவலும் “பெருந்திணை”, “மடலேறுதல்” மற்றும் “வள்ளைப்பாட்டு” குறித்த பதிவும் மிக அருமை.

வெறும் செய்திகளாக, தகவல்களாக நாம் தேர்வுக்காக மட்டுமே படித்த நிகழ்வுகளைக் கொண்டு அவற்றின் தரவுகளை துல்லியமாக சேகரித்து நிகழ்விடங்களையும் காலவோட்டத்தையும் சரியாகக் கணித்து நாவலாக புனைந்த எழுத்தாளர் மீதான பிரமிப்பு அகலவே இல்லை. “கொலும்பன்’ வாய்மொழியாக பகிரப்படும் முதல் பகுதியிலேயே (100 பக்கங்களில்) கதையை நிறைவு செய்துவிட்டு அடுத்த இரண்டு பகுதிகளிலும் சுவாரஸ்யம் குன்றாமல் கதையை நகர்த்திய துணிச்சல் பாராட்டுதலுக்குரியது.பரணர், பாணர் கூட்டத்தை நன்னனால் கொலை செய்யப்பட்ட பெண் கோவிலுக்கு அழைத்துச் செல்லும் இடம் அமானுஷ்யமானது. நீதிக்கல்லில் மிளகு அரைத்து பூசும் காட்சி சுட்டும் நிகழிடம் நிகழ்காலத்திலும் உண்டுதானே. எதற்கு இக்காட்சி தேவையில்லாமல் என்று முதலில் தோன்ற வைத்து பின் அதனை மையமாகக் கொண்டே நாவல் பயணிக்கிறது என்பதை அறிந்து அனுமானிக்க முடியாத எமது அறிவைக் கண்டு வெட்கினேன் என்பதே மெய். பாரியின் மறைவு குறித்த தகவல் அடியேனுக்கு புதிதே. அதற்கான காரணமாக கபிலருக்கும் மயிலனுக்குமிடையே நடைபெறும் உரையாடல் சிந்திக்க வைக்கக்கூடியதே.

படித்து வியந்த வரிகளோ ஏராளம். அவற்றுள் சில துளிகள்:

# குழல்களுக்கு உள்ளேயிருந்த வெற்றிடங்களில் மரங்களின் விசும்பல்கள் கனத்தன.

# கொடுமையும் கனிவும் ஒரே வயிற்றில் பிறந்த இரட்டையர்களே

# பிறந்து விழுந்த குழந்தையின் கண்கள் உலகத்தைப் பார்ப்பது போல வெளிச்சம் நீர்ப்பரப்பின்மீது சுழன்று நடந்தது.

# பறவைகளைப் போலக் காற்றுவெளிகளில் பறப்பதற்கிடையில் இறகுகள் கொண்டு நாம் உயிரினை எழுதிச் செல்கிறோம்.

# புண் வந்த உறுப்பை வெட்டி எறியாமல் சேர்த்துக் கட்டத்தானே வேண்டும்.

# தென்னை மடலிலிருந்து நாரைக் கிழித்தெடுக்கும் போதான ஓசையில் ஓர் அழுகை உள்ளிருந்து எழுவதை நான் அடக்கினேன்.

# பொருளறியப்படாத எழுத்துக்கள் நிறைந்த சுவடிகளாக இருக்கலாம் நாங்கள்.

# போர்க்களக் குருதியின் வாசமே அரசனின் வேர்வைக்கும் உள்ளதென….

# கொலையானையை கடவிற்கு(?) அனுப்பும்போது பறையறிந்து தெரிவிப்பார்கள்.

மூலம் மலையாளம் என்று எந்தவொரு இடத்திலும் உணராவண்ணம் தேர்ந்த மொழிநடையில் மிகச் சிறப்பான முறையில் தமிழ் நாவலாக எண்ணி படிக்கும் வண்ணம் நாவலை மொழிபெயர்ப்பு செய்த எழுத்தாளர் கே‌.வி. ஜெயஸ்ரீ அவர்களுக்கும் அரியதொரு நூலைப் பதிப்பித்து தமிழ் இலக்கியத்தின் பால் மோகங்கொள்ள உதவிய வம்சி பதிப்பகத்திற்கும் மிக்க நன்றி.

நல்லதோர் அனுபவம் கிட்ட தீந்தமிழின் சுவை பருக நினைப்பவர்கள் நிச்சயமாக வாசிக்க முயலுங்கள். நன்றி.

பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.