வரலாற்றின் திசைகளில் பொதிந்துகிடக்கும் தமிழ் நிலத்தின் தடங்களைச் சொல்லும் எழுத்தோவியங்கள் பாட்டும் தொகையும் ஆகும்.நூற்றுக்கணக்கான ஆய்வுக்களங்களுக்கு தோற்றுவாயிலாக இருக்கும் இந்த வரலாற்றுப் பெட்டகங்களைத் தொற்றி எழுந்த வரலாற்றுப் புனைவிலக்கியங்கள்  வரிசையில் சமீபத்தில் நிற்கிறது மலையாள மொழிப்பெயர்ப்பு நாவல் நிலம் பூத்து மலர்ந்த நாள். ஒன்றிணைந்த தமிழ்நிலம் மூவேந்தர்களின் பூசல்களில் கண்ட அரசியல் நிகழ்வுகளை புனைவுகளின் ஊடே ஈராயிரம் ஆண்டுகளுக்கு நம்மை அழைத்துச் சொல்லும் மொழிப்பெயர்ப்பாய் இந்த மாணவ மனதிற்கு விரிகிறது. “எத்திசை செலினும் அத்திசைச் சோறே” என்று நகரும் புலவர்களின் வாழ்வியல் அறிவுத்திறத்தை அங்கீகரிக்கும் அரசர்களின் கொடைத்தன்மையில் இருக்கிறது.தொல்காப்பியம் குறிப்பிடும் மெய்ப்பாடுகளில் சொல்லப்படும் பெருமிதம்  மெய்ப்பாட்டின் நிலைகளன் கல்வி,தறுகண்,இசைமை,கொடை ஆகியவற்றாலே மன்னன் நிலைபேற்றை அடைந்தான் என்பதை அறியலாம்.பெருமித உணர்வுடன் புலவர் பெருமக்களைப் போற்றி மதிப்பளித்த மன்னர்களின் வரலாற்றை சுவைபட இந்நாவல் எடுத்துரைக்கின்றது.

பாணர் குல மக்களின் வாழ்வாதாரம் மக்களை மகிழ்விக்கும் கலையில் இருக்கிறது. கலைஞர்களின் வாழ்வியல் எத்துனை துன்பகரமானது‌ என்பது சொல்லி மாளாத துயரகரமான செய்தியாகும்.நாடோடிகளாய் வழியற்று இன்னல்களை தீர்த்துக்கொள்ள நடந்துகொண்டே இருக்கும் அவர்களின் கால்கள் நாவலின் இறுதிவரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பாணர்களை ஆற்றுப்படுத்தும் நம் மரபார்ந்த இலக்கியங்களின் தரவுகளோடு சுவைபட புலவர்களின் பெரும்பணியான ஆற்றுப்படுத்தும் பணியினை எடுத்தியம்புகின்றது.  பாணர் வாழ்வைத் துறந்து தான் விரும்பிய வாழ்வை அமைத்துக் கொள்ளச் செல்லும் மயிலனைத் தேடிப்போகும் பாணர் கூட்டத்தின் தொடர்கதையாய் விரிகிறது நாவல். ஊர்சுற்றும் பாணன் ஒருவன் நன்னன் நாட்டில் தன் மகனை கண்டதாகச் சொல்ல சொன்னவரின் சொல்படி கொலும்பன் முன்னிலையில் பெரும்பாணன் தலைமை வகிக்க பாணர் கூட்டம் நகர்கிறது.கொலும்பனுக்கும் நெல்லக்கிளிக்கும் மயிலனோடு சித்திரை,உலகன்,சீரை என்ற மக்களும்‌ உள்ளனர்.சந்தன் மயிலனின் உற்ற நண்பன் அவனோ மயிலனின் இருப்பிடம் அறிவதே வாழ்நாள் இலக்காய் கொண்டுள்ளான். சீரை குழந்தைகளுக்கே உரிய குறும்புகளுடன் வலம் வரும் குழந்தை, அண்ணனை தேடிக்காண்பதே நோக்கமாக‌ உலகன் குறிக்கோளாய் உடையவன். இந்தக் குடும்பத்தின் மகிழ்வே மகிழ்வாய் நெல்லக்கிளியும் சித்திரையும் தினம்தினம் சிந்திக்கின்றவர்கள். இவர்களின் வாழ்வும் எப்பாடு பட்டாவது தங்கள் உற்றாத்தாரின் நிலைத்த வாழ்வுக்காகக் கலை ஒன்றையே வாழ்வளிக்கும் சாதனமாய் பற்றிக்கொண்டு நம்பிக்கையோடு பயணிக்கிறார்கள்.

நிலம் பூத்து மலர்ந்த நாள் – Vamsibooks

பயணத்தின் தடங்களில் பரந்துபட்ட இந்தத் தமிழ்மண் அவர்களை அள்ளி அணைத்துக்கொண்டு அவர்கள் மீட்டிய யாழின் மாண்புணர்ந்து பெருவயிறு நிறையப் பசியாற்றுகிறார்கள். தேக்கிலையில் உணவளித்தல், ஏழடி நடந்து சென்று வழியனுப்புதல், உணவுக்கு பின் கள்ளுண்டு களித்தல்,முதலிய நம்மின் மரபார்ந்த விருந்தோம்பல் பண்புகள் காட்சியாகின்றன. இவ்வாறு பயணங்களின் இடையில் பாணர்களின் கலை அவர்களை கைவிடுவதேயில்லை. ஐந்நில மக்கள் வாழ்வியல் இந்நாவலின்  கலைநயம் என்பதில் நாவலாசிரியர் விவரிக்கும் இயற்கை வளங்களே சான்றாய் ஒளிர்கின்றன.இங்கு வரும் கதைமாந்தர்கள் யாவரும் சங்கப்பாடல்களை பாடுவதை தங்கள் மகிழ்வின் கதவுகளைத் திறக்கும் வல்லமை எனப் பெருமிதம் கொள்கின்றனர்.

பெரும்புலவர் பரணரைக் காணும் படலத்தில் தான் இந்நாவலின் உயிர்ப்பு இருக்கின்றது. பரணர் இந்நாவல் சதுரங்கத்தின் காரணராய் இருக்கிறார். ஆட்டனத்தி,ஆதிமந்தி கதை,நன்னன் பெண்கொலை புரிந்த கதை,அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி அளித்த கதை என நீளும் நாவலின் அரசியல் சதுரங்கத்தின் ஆதிப்புள்ளி மயிலன் தான். சித்திரை மகீரன் என்பவனை ஒரு கிராமத்தில் தஞ்சம் புகும் தருணத்தில் காதல் வயப்பட்டு அவளின் காதலே அரசியல் ஆட்டம் என்பதை பின்னர் உணர்ந்து ஒளவையிடம் தஞ்சம் அடைகிறாள். மகீரன் ஒற்றுப்பணி செய்பவன் மூவேந்தர் ஆளுகையே ஓங்கச் செய்ய குறுநில மன்னர்களை வெல்ல மன்னர்களுக்கு உதவிச் செய்யவன். சதிச்செயலுக்கு மயிலனின் மதிநுட்பத்தை விலைக்கு வாங்கி அவனால் சேர நாட்டின் ஆளுகைக்கு ஒட்டுமொத்த குறுநில மன்னர்களையும் கொண்டு வருவதே நாவலின் சாரம்சம். இந்த சதி ஆட்டத்தில் வேள்பாரி, அதியமான் என வீழ்ந்துபோகும் மன்னர்களின் போர்த் திறத்தை நம் இலக்கியச் செய்திகளை வரலாற்றோடு புனைந்து வசீகரிக்கும் கதைகளாக நாவலெங்கும் விரிகிறது. கபிலர் பாரி நட்பு,கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு, ஒளவை அதியமான் நட்பு,மனுநீதிச் சோழனின் பேரன்பு என நாவலெங்கும் இலக்கியத்தரவுகள் தான். மயிலன் பாணர் குலத்தில் பிறந்திருந்தாலும் நாவல் முழுவதும் அவனைச் சுற்றியே வலம் வருகின்றது.

எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு ...

தந்தையான கொலும்பனின் இறப்பை கண்ணெதிரே காணும் தருவாயிலும் அவன் அவனுடைய பிழைப்பையே விரும்பியவன் ஆகிறான்.குடும்பத்தை விட்டு வெளியேறிய அவன் கொள்ளைத் தொழில் புரியும் மறவனாகவும்,பெரும்புலவர்களிடம் கவிபுனையும் ஆற்றல் பெற்று மன்னர்களையே வசப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தும் அவனால் இறுதிவரை அவனின் பாணர் கூட்டத்திற்கு இன்னலே விளைந்தது. வேள்பாரியை வீழ்த்தச் சதிச் செயல் செய்யச் செல்லும் மயிலன்  பாரியைக் காக்க தன் தவற்றை உணர்ந்து கபிலரிடம் உண்மையைக் கூறி மன்றாடியப் போதும் கபிலர் அதைப் பொருட்படுத்தாது இருந்ததைக் கூறி கபிலர் பாரி மகளிரை சேர மன்னனிடம் தஞ்சம் வைத்து அங்கையே அரசவைப் புலவரை இருப்பதை அறியும் மயிலன் அவரை கேள்விக்கனல்களால் உங்கள் மெளனமே வேள்பாரியைக் கொன்றது;என்று நியாயம் கேட்கிறான். மயிலனின் கேள்விகளின் உண்மையுணர்ந்த கபிலர் வடக்கிருத்தல் மேற்கொள்கிறார். கபிலரின் மெளனம் இந்நாவலின் தொடர் பயணங்களுக்கு ஆதாரமாக இருக்கிறது. புலவர்களையும் நியாயமான கேள்விகளின் மூலம் கிரங்கக்கடிக்கச் செய்த மயிலனின் மதிநுட்பத்தில் புலவர்களின் மீதான புனித கட்டுமானம் உடையும் போக்கை நாம் அறியலாம். மகீரனின் நட்பு  நாடற்று அலையும் அவனுக்கு தஞ்சம் கிடைக்கும் எண்ணத்தில் இருந்த மயிலனுக்கு இறுதியில் அவனது பாணர் கூட்டமே வாழ்வளிக்கின்றது. அரசியல் சதுரங்க ஆட்டத்தில் புலவர்களின் பெரும்பங்கினை இந்நாவல் திருப்பங்களோட எடுத்துரைக்கின்றது. சித்திரையின் காதல் மனம் சங்ககாலப் பெண்ணின் மனதினை பிரதிபலிக்கின்றது.தோழி அறத்தோடு நிற்றல்,செலவழுங்கல் துறை முதலியவை எழுத்தால் காட்சியாகின்றன. பூசல்களிலே வாழும் நம் மன்னர்களின் வாழ்வியலின் மற்றொரு பக்கத்தை இந்நாவல் தோலுரிக்கின்றது. யாழ் இசையின் மாண்பு,யாழின் வகைப்பாடுகள்,பறை செய்யும் முறைப்பாடுகள் பறை முழங்கும் தன்மை இவைகளின் எடுத்துரைப்புகள் நம்மை பாணர்களாகவே  உணரச்செய்கின்றன.

திரைப்படமாவதற்கான திருப்புங்களுடன் இருக்கும் இந்நாவல் திரைப்படமாகும் பட்சத்தில் சங்க வாழ்வியலுக்கு நிலம் பூத்து மலர்ந்த நாள் காட்சி வடிவம் கொடுத்திருக்கின்றது என்ற பெருமை வந்துச் சேரும். இந்நாவல் குறித்தான கலந்துரையாடல் கூட்டம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த போது எங்களை நவீன இலக்கிய வாசிப்புக்கு ஆற்றுப்படுத்தும் பேராசிரியர் சுடர் விழி அழைத்துக்கொண்டு சென்றிருந்தார். அப்போது பேசிய நாவலின் மொழிப்பெயர்ப்பாளர் கே.வி.ஜெய ஸ்ரீ என் உழைப்புக்கு பொதுதளத்தில் இருந்து அங்கீகாரம் கிடைப்பதைக் காட்டிலும் கல்விப்புலத்திற்கு கிடைக்கும் இந்த அங்கீகாரம் என்னை நெகிழச் செய்கின்றது என்றார். ஆகவே கல்விப்புலத்தில் இருக்கும் தமிழ் மாணவர்கள் யாவரும் வாசிக்க வேண்டிய நாவல். தமிழ்ச் சமூகத்தின் பெருமிதத்தை மலையாளத்தில் நாவலாக எழுதிய மனோஜ் குரூர்  தமிழ் ஆர்வலர்களின் பாராட்டுக்குரியவர்.பண்டையத் தமிழ்ச் சமூகம் ஒன்றிணைந்த திராவிட  நாகரிகமாய் இருந்ததை நன்குணர்ந்திருக்கும் மலையாள இலக்கிய வட்டத்தில் குறிப்பிடத்தக்கவராக இருக்கும் மனோஜ் குரூர் எவ்வித மொழி கலப்புமின்றி சங்கப்பாடல்களின் செய்திகளைத் தொகுத்து அசல் மணம் மாறாது தமிழ் பண்பாட்டு விழுமியங்களை நாவலாக்கி வெளியிட்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்தவர்கள் என்று கூறி இருக்கிறார். தமிழ் மாணவனாய் இந்நாவலை வாசித்த எனக்கு மனம் பூத்து மலர்ந்திருக்கின்றது.அம்மணத்தை நீங்களும் பெற்றிடுங்கள்…இவ்வாண்டின் சிறந்த மொழிப்பெயர்ப்புக்கான சகாத்ய அகாடமி விருதை இந்நாவல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.இதுபோன்ற மரபார்ந்த நம்  இலக்கியங்களை தரவுகளோடு நவீன இலக்கிய மொழிக்கு புனைவுகளோடு எழுத வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

நூல்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

மலையாள மூலம்: மனோஜ் குரூர்

தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ

விலை: ரூ.250

வெளியீடு: வம்சி புக்ஸ்

 

ஆ.தினேஷ் குமார்,

முதுகலைத் தமிழ் மாணவர்

சென்னைக் கிறித்தவக் கல்லூரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *