எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நூறு நாற்காலிகள் சிறுகதை தொகுப்பு நூல் அறிமுகம்
புத்தகத்தின் பெயர் : நூறு நாற்காலிகள்
ஆசிரியர் : ஜெயமோகன்
பக்கங்கள் : 80
பதிப்பகம் : விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ்
விலை : 50
தலைப்பு : சிறுகதை
அம்மா ஆறடிக்கு மேல் உயரம் . சிறுவயதில் கரிய வட்ட முகத்தில் பெரிய வெண்பொற்களுடன் பெரிய கை, கால்களுடன் பனங்காய்கள் போல திடமான முலைகளுடன் இருப்பாள். உரத்த மணிக்குரல் அவளுடையது.
இதோ இன்று…
வயிற்றில் வாந்திக்காக உலுக்க வைக்கும் கடும் நாற்றம் நிறைந்த இடத்தில் , அழுகும் மனிதச்சதை மட்கும் துணிகளும் , மலமூத்திரங்களும் கலந்த நெடி உள்ள இடங்களில் ஈக்கள் சுழன்று எழுந்து அடங்கிய இடத்தில்..
பெரும்பாலும் நிர்வாணமாக , கரிய வயிறு பெரிதாக உப்பி எழுந்து ஒரு பக்கமாக சரிந்திருக்க , கைகால்கள் வீங்கி தோல் சுருக்கங்கள் விரிந்து பளபள வென்று இருக்க, முலைகள் அழுக்குப் பைகள் போல இரு பக்கமும் சரிந்து கிடக்க, வாய் திறந்து கரிய ஒற்றைப்பல்லும் தேரட்டை போன்ற ஈறுகளும் தெரிய , தலையில் முடி சிக்குப் பிடித்து சாணி போல ஒட்டிக் கிடந்தாள்.
அவள் எப்படி இவளாக மாறினாள். இல்லை இதுதான் அவளா..!
தெரிந்து கொள்ளலாம் அதற்கு முன்னர் இவள் யாருடைய அம்மா என்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா..?
“ஆஸ்பத்திரி வாசலில் என் கார் நின்ற போது பரபரப்புடன் முன்னால் சென்ற சிப்பந்திகள் உள்ளே ஓடினார்கள் . அங்குமிங்கும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் ஒலிகள். சிலர் ஓடும் சத்தம் . உள்ளிருந்து இரு டாக்டர்கள் என் காரை நோக்கி ஓடி வந்தார்கள்.” – இது போதும் நான் யார் என்று தெரிந்து கொள்ள , ஆம் நான் ஒரு “கலெக்டர்”. பிறர் முன் கம்பீரமாக ஒரு நாற்காலியில் உட்காருவதற்காக உருவெடுத்த மாவட்ட ஆட்சியர். அங்கே கிடத்தப்பட்டிருப்பவளும் என் அம்மா தான்.
இந்த ஒரு சூழ்நிலை போதும் ஆஸ்பத்திரி எந்த வகை ஆஸ்பத்திரி என்று சொல்ல. அதேபோல ஒரு மாவட்ட ஆட்சியரின் அம்மா அரசு ஆஸ்பத்திரியில் குப்பை மாதிரி கிடக்கும் நிலையில் அந்த கலெக்டர் மேல் இயல்பாக வரும் கோபம் எனக்கும் வந்தது . இப்படி ஒரு மாவட்ட ஆட்சியரின் தாய் கவனிப்பு இல்லாமல் ஏதோ தெரு நாய் போல அரசு மருத்துவமனையில் கிடக்கின்றாளே என்று…!
ஏன் அரசு மருத்துவமனையில் குப்பைகள் மாதிரி பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று ஆட்சியர் கேள்வி கேட்பதற்கு முன்னரே …
“சார் , நான் கோட்டால வந்தவன். என்னைய மாதிரி ஆளுங்களுக்கு இங்க இடமே இல்லை சார், அருவருப்பா ஏதோ பூச்சிய பாக்குற மாதிரி பாக்குறாங்க. 18 வருஷம் ஆகுது. நான் சீனியர் தான் . ஆனா இப்ப வரைக்கும் எனக்கு கௌரவமாக உட்கார்ந்து நோயாளிகளை பாக்குறது மாதிரி ஒரு வேலை எங்கேயுமே கொடுத்தது கிடையாது . சர்வீஸ் முழுக்க போஸ்ட் மார்டம் பண்ண தான் விட்டு இருக்காங்க என்று சொல்லும் பொறுப்பு மருத்துவரும்..
“வேற வேலைக்கு வந்தாலும் இதே கதி தான் . சிவில் சர்வீஸ் எழுதி என்னை மாதிரி ஆனா மட்டும் என்ன ? . நான் எங்க டிபார்ட்மெண்ட் தோட்டி “ , என்று டாக்டரிடம் கூறும் கலெக்டரும் இந்த மொத்த கதையையும் சொல்லிவிட்டார்கள் ஓரிரு வரிகளில். தனக்கு கிடைக்காத மாவட்ட ஆட்சியர் நாற்காலி எங்கே என்று எதிர்த்து கேட்க முடியாத ஊமையாக இருப்பதற்கு காரணம், பகல் முழுக்க காட்டுக்குள் புதர்களுக்குள் குழி பறித்து அதற்குள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் பன்றிகள் போல ஒடுங்கிக் கொண்டு தூங்கிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாயாடி சாதியில் பிறந்தது தான் என்கிறார் கலெக்டர்.
அவர் எப்படி தன் தாயைப் பிரிந்து ஆட்சியர் ஆனார் என்பதை கதையை வாசித்து தெரிந்து கொள்ள சுவாரஸ்யம்.
ஆட்சியருக்கான நேர்முகத் தேர்வில் அதிகாரியின் கேள்விகளுக்கு சாதூர்யமான பதில்களை சொல்லிவிட்டு மனதுக்குள் நிறைவுடன் நேராகச் சென்று சிறுநீர் கழித்த போது , உடலுக்குள் கொந்தளித்த அமிலமே ஒழுகிச் செல்வது போல் இருந்தது என்ற வரிகள், என்னே.. ஒரு உணர்வை பிரதிபலித்தது.
சமத்துவம் தான் விழுமியங்களிலேயே மகத்தானது புனிதமானது . ஒரு நாயாடியையும் (ஒரு சாதிப்பிரிவு) இன்னொரு மானுட உயிரையும் இரு பக்கங்களில் நிறுத்தினால் , சமத்துவம் என்று தர்மத்தின் அடிப்படையில் அப்போதே நாயாடி மாபெரும் அநீதி இழைக்கப்பட்டவனாகிறான். இந்த வரிகள் பிற ஜாதிகளுக்கும் பொருந்தும் தானே.
வினாக்கான விடையை வியந்து பார்த்த அதிகாரி ஒருவர், “இளைஞனே , நீ நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும். ஏராளமான மன முறிவுகளும் சோர்வும் வரும். இந்த வேலைக்கு வந்ததற்காக வருத்தப்படவே உனக்கு வாய்ப்புகள் அதிகம். இருந்தாலும் வாழ்த்துக்கள் “, என்று கூறி…
“ என்னை மனிதாபிமானி , முற்போக்கு எண்ணங்கள் கொண்டவன் என்று பிறர் நினைக்கவே உன்னை தேர்வு செய்தேன்” என்கிற வரிகள் அதிகாரியின் அந்தஸ்தையும் அப்படியே தரை மட்டமாக்கியது.
அதை உண்மை என நிரூபிக்கும் வகையில் ஒவ்வொருவரின் பார்வையிலும் , இல்லாமல் போன நாற்காலியிலும் , மித மிஞ்சிய பணிவிலும் , செயற்கையான சரளத் தன்மையிலும் , அக்கறையற்ற பாவனையிலும் பின் நாட்களில் மாவட்ட ஆட்சியர் உணர்கிறார்.
கனமான வரிகளில் மனதை இலகுவாக்கும் விதமாக ஆட்சியரின் மனைவி சுபா அவ்வப்போது வந்தாலும், ஒரு மகத்தான வன மிருகத்திடமிருந்து உண்ணப்படாத ஒரு உணவை பிரித்து எடுத்து வந்தது போல் , சுபாவிடமும் மற்றும் சமூகத்தின் மீதும் கோபம் கொள்ளும் ஆட்சியரின் தாய் சுபாவுக்கு எதிரி ஆகிறாள்.
தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட மகனை திரும்ப தன்னோடே வைத்துக் கொள்ளும் விதமாக அவள் மொழிகளில் கெஞ்சும் போதெல்லாம் , பச்சை பச்சையாக பேசும் நேரமெல்லாம், நாற்காலியே வேண்டாம் என்று தன் சாக்கடை வாழ்க்கைக்கு அழைக்கும் போதெல்லாம் , ஏனோ நமக்கும் அவளை வதைத்து துன்புறுத்த வேண்டும் என்றே தோன்றுகிறது. இப்படி அந்த தாய் ஆனதற்கு காரணம் ஒரு நாற்காலி மட்டும் கிடைத்தது தான். இன்னும் அத்தனை தாபங்களும் மக்கி மண்ணாக வேண்டும் என்றால் 100 நாற்காலிகள் இல்லை நூறாயிரம் நாற்காலிகளாவது தேவைப்படும்.
எத்தனை நாற்காலிகள் வந்தாலும் , முதுகுக்கு பின்னால் முளைக்கும் கண்கள் விழித்துக் கொண்டே இருந்தாலும் , இச்சமூகம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டே தான் இருக்குமே ஒழிய தட்டிக் கேட்டு சம நீதி தராது.
ஆசிரியர் ஜெயமோகனின் வரிகளில் கதை படு சுவாரசியம். இந்த காலத்தில் இன்னுமா இப்படி எல்லாம் நடக்கிறது என்று கேட்பவர்களுக்கு , “ இது நம் கண் முன்னால் நிகழ்ந்த வாழ்க்கை . நம் காலடியில் எங்கெங்கோ இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை என்று கூறி முடிக்கிறார் ஆசிரியர். இதில் மாற்றுக் கருத்து இல்லை என்பதும் என் கருத்து.
நூல் அறிமுகம் எழுதியவர்:
பா விமலா தேவி
பட்டுக்கோட்டை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.